செல்வி. ஜெ. ஜெயலலிதா கவிஞர் இன்குலாப் 'சோ' ராமசாமி
|
|
டாக்டர் வா.செ. குழந்தைசாமி |
|
- |ஜனவரி 2017| |
|
|
|
|
பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மொழியார்வலரும், சிறந்த கவிஞருமாக விளங்கிய டாக்டர் வா.செ. குழந்தைசாமி (87) சென்னையில் காலமானார். வாங்கலாம்பாளையம் என்ற பேருந்துகூடச் செல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்து, விவசாயம் பார்த்து, ஆடு மேய்த்து வளர்ந்த இவர், உழைப்பால் உயர்ந்தவர். கோரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பக் கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் மேற்கல்வி பயின்றவர். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றபின் தமிழகம் திரும்பி, கிண்டி பொறியியற் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பல ஆய்வுகளை மேற்கொண்டார். இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்று அழைக்கப்படுகிறது.
உயர்பதவிகள் இவரைத் தேடிவந்தன. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகப் பணியாற்றினார். உலக அளவில் நீர்வளத்துறையில் பல முக்கியமான பதவிகளை வகித்திருக்கிறார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணி ஆற்றியுள்ளார். சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இவர் இருந்தார்.
'வாழும் வள்ளுவம்' நூலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு 'குலோத்துங்கன் கவிதைகள்' என்ற நூலாக வெளியாகியுள்ளன. 'அறிவியல் தமிழ்', 'உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்' ஆகிய நூல்கள் முக்கியமானவை. தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றவரும் கூட. இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான மாதிரியையும் இவர் உருவாக்கி அளித்திருந்தார். பழக இனியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டமளித்தது. பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகள் பெற்றவர். 2010ம் ஆண்டிற்கான TNF Excellence விருது பெற்றவரும்கூட. 2010ம் ஆண்டில், ஓக் ரிட்ஜ் பகுதியின் சிறப்புக் குடிமகனாக மேயர் டாம் பீஹனால் கௌரவிக்கப்பட்டவர். |
|
தென்றலுக்கு அவர் வழங்கிய நேர்காணல்கள் வாசிக்க
முதல் பகுதி, இரண்டாம் பகுதி
அறிவியல் தமிழருக்குத் தென்றலின் அஞ்சலி! |
|
|
More
செல்வி. ஜெ. ஜெயலலிதா கவிஞர் இன்குலாப் 'சோ' ராமசாமி
|
|
|
|
|
|
|