Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தரும(ன்) சங்கடம்
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2017|
Share:
'நீதிநெறி பிறழாதவனான தருமபுத்திரனுக்கும் சூதாடுவதில் விருப்பம் இருக்கிறது' என்பதை ஒத்த ஒரு பேச்சை சென்றமுறை பார்த்தோம். இது வியாச மூலத்திலும் இருக்கிறது என்பதற்கான இடத்தையும் வாக்கியத்தையும் சுட்டினோம். நாம் முன்பு சுட்டிய அந்த வாக்கியமான, "யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ஆசையுள்ளவன். அவனுக்கு ஆடத்தெரியாது. ராஜ சிரேஷ்டனான அவன் நாம் அழைத்தால் வராமலிருக்க மாட்டான்" என்ற குறிப்பு வியாசபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது. (மேற்படி அத்: 75; பக். 234). 'The son of Kunti is very fond of dice-play although he doth not know how to play. That king if asked to play, is ill able to refuse.') என்பதை சகுனி துரியோதனனிடத்திலே சொல்கிறான். ராஜசூய யாகத்தை நினைத்துப் பொறாமைப்பட்டு வேகும் துரியோதனனிடத்திலே சகுனி மேற்கண்டவாறு சொல்லி, 'சூதாடுவோம், அதிலே வெல்வோம்' என்பதை முன்மொழிகிறான். இதற்குப் பிறகுதான் திட்டம் மெல்லமெல்ல விரிவடைந்து, ஒரு மண்டபத்தைக் கட்டுவித்து, அதைப் பார்க்க வருமாறு பாண்டவர்களை அழைத்து — அதுவும் விதுரனைத் தூதனுப்பி வரவழைத்து — அங்கே பொழுதுபோக்குக்காக ஆடுவதைப் போலச் சூதாடத் தொடங்கலாம் என்று திட்டம் படிப்படியாக விரிவடைகிறது.

பாஞ்சாலி சபதத்திலே இதே வாக்கியத்தைப் பேசுபவன் துரியோதனன். திருதிராஷ்டிரன் மீது இனம்தெரியாத பாசம் கொண்டிருந்த பாரதி - ஒருசில கட்டுரைகளிலும் திருதிராஷ்டிரனை வாஞ்சையோடு குறிப்பிடுவதைப் பார்க்கலாம் — அவனை நல்லவனாகச் சித்திரித்திருக்கிறான்; அப்படி வியாசருடன் மாறுபட்டுச் சித்திரித்திருப்பதையும் முன்னுரையில் சொல்லியிருக்கிறான். வியாசரில் இருப்பதைப்போலவே 'போர் வேண்டாம்' என்று கெஞ்சுகின்ற திருதிராஷ்டிரனிடம், 'எனக்கோ அவர்களுடைய வளர்ச்சியைக் கண்டு பொறுக்கவில்லை. அவர்களுடைய செல்வம் முழுவதையும் கைப்பற்றி அவர்களைத் தெருவில் விடவேண்டும். இது நிறைவேற வேண்டுமானால் ஒன்று போர் செய்யவேண்டும். போர் செய்வதையோ நீ தடுக்கிறாய். அதுமட்டுமல்லாமல் போரிட்டால் பல லட்சக்கணக்கான வீரர்களும் மன்னர்களும் மடிவார்கள் என்பதை மட்டும்தான் நிச்சயமாகச் சொல்லமுடியுமே தவிர, அதில் வெற்றி-தோல்வி இன்னாருக்குத்தான் என்பதை நிச்சயமாகச் சொல்லமுடியாது. எனவே சூதாடுவதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவ்வளவு ஏன், தருமபுத்திரனுக்கேகூட சூதாட்டத்தில் அன்புண்டு' என்று துரியோதனன் திருதிராஷ்டிரனிடத்திலே சமாதானமாகச் சொல்லி மண்டபம் கட்டுவதற்கும், பாண்டவர்களை அழைப்பதற்கும் அதற்கு விதுரனைத் தூதனுப்புவதற்குமான அனுமதியைப் பெறவேண்டி சொல்லும் வகையாக இப்படிச் சொல்கிறான்.

போர்செய் வோம் எனில் நீதடுக் கின்றாய்
புவியி னோரும் பழிபல சொல்வார்.
தார்செய் தோளிளம் பாண்டவர் தம்மைச்
சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்
யார்செய் புண்ணியத் தோநமக் குற்றான்
எங்க ளாருயிர் போன்றஇம் மாமன்.
நேர்செய் சூதினில் வென்று தருவான்
நீதித் தருமனும் சூதில்அன் புள்ளோன்


(பாஞ்சாலி சபதம், முதற்பாகம், பாடல் 104)

இப்படி சகுனியும் துரியோதனனும் 'தருமபுத்திரனுக்குச் சூதாடுவதில் விருப்பம் இருக்கிறது' என்று சொல்கிறார்களே தவிர, தருமபுத்திரனுடைய வாய்மொழியாக சூதாட்டத்தில் ஆர்வம் காட்டுவதுபோல ஒரு இடத்தையும், ஒரு சொல்லையும்கூடக் காணமுடியவில்லை. மாறாக, தூதுவந்து பேசுகின்ற விதுரனிடத்திலே அதிர்ச்சியோடு மறுக்கிறான்; துரியோதனனுக்கு இதிலே உள்நோக்கம் இருக்கிறது என்று சொல்கிறான். இதற்கு முன்னால் எத்தனையோ வழிகளில் தங்களை அழிக்க நினைத்ததைப் போலவே இப்போதும் நினைக்கிறான் என்பதில் ஐயமில்லை என்றும் மறுக்கிறான். ஆனால் விதுரனோ, "வித்வானே! சூதானது தீங்குக்கு வேரென்று எனக்குத் தெரியும். அதைத் தடுப்பதற்கு நான் முயற்சி செய்தேன். ஆகிலும் அரசர் என்னை உன்னிடத்திற்கு அனுப்பினார். இதைக் கேட்டபிறகு உனக்கு எது நன்மையோ அதைச் செய்துகொள் என்று சொன்னார்." (பாரதம், தொகுதி 2, ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 83, பக். 262). இதையே பாரதி,

சல்லிஅச் சூதினிலே - மனம்
தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன்.
சொல்லிய குறிப்பறிந்தே - நலந்
தோன்றிய வழியினைத் தொடர்க என்றான்


என்று விதுரனுடைய மறுமொழியாகக் குறிப்பிடுகிறான். "சூதாட்டம் தவறென்பதை நானும் அறிவேன். என்னால் முடிந்தவரையில் சொல்லிப் பார்த்துவிட்டேன். அங்கே ஒன்றும் பலனில்லை. அவர்கள் சொல்லச் சொன்னதை இங்கே வந்து சொல்லிவிட்டேன். இனி உனக்கு எது உசிதம் என்று படுகிறதோ அதன்படிச் செய்துகொள்" என்ற ரீதியில்தான் விதுரனுடைய பதில் அமைகிறது. பாஞ்சாலியைச் சபைக்கு இழுத்து வந்தபோது 'தீங்கு தடுக்கும் திறமில்லேன்' என்று தலைகவிழ்ந்த பீஷ்மனுடைய பேச்சை ஒத்து இது ஒலித்தாலும், விதுரனிடத்தில் ஆரம்பத்திலிருந்தே சூதாட்டத்துக்கு எதிர்ப்பு தென்படுகிறது; சூதாட்டம் நடக்கும்போதும் பலசமயங்களில், 'போதும் சூதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்' என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துவான். ஆகவே, பீஷ்மருக்கு எற்பட்டதைப் போன்ற குழப்பமான மனநிலையன்று இது. Utter helplessness என்பார்களே, அப்படிப்பட்ட நிலையில்தான் விதுரன் இருந்தான்.

இப்படி, மண்டபத்தைப் பார்ப்பதற்காக வரச்சொல்லித் தூதனுப்பி, அவர்கள் வந்ததும் சூதாட்டத்தைத் தொடங்கப் போகிற செயலுக்கு ஆரம்பநிலையில் எதிர்ப்புத் தெரிவித்தாலும் திருதிராஷ்டிரனுக்கு 'தன் மகன் இப்படியாவது பாண்டவர்களை வெல்லவேண்டும்' என்ற ஆர்வமும் இல்லாமலில்லை. அதுவும் பாஞ்சாலியைச் சூதில் வைக்கின்ற சமயத்திலே - அங்கே நடப்பனவற்றை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாதவனாகையாலே - 'ஜயித்தாயிற்றா, ஜயித்தாயிற்றா' என்று பரபரப்போடு பக்கத்திலிருந்தவர்களை அவன் கேட்கும்போது படிக்கிறவர்களுக்கெல்லாம் உடல் கூசுவது நிச்சயம். அரைமனத்தோடு தூதனுப்பிய திருதிராஷ்டிரன்; தனக்குச் சம்மதமில்லாமலும் வேறு வழியில்லாமலும் தூதுவந்த விதுரன்; 'என்ன ஆனாலும் பெரியோர் சொல்லைத் தட்டி நடக்கமாட்டேன்' என்று ('உன் காரணத்தால் குலம் நாசமடையப் போகிறது' என்று வியாசர் சொல்லக் கேட்டும்) சபதம் செய்திருந்த தருமன் என்று பலவகையான காரணிகள் தருமபுத்திரனைச் சூதாட்டத்துக்குள்ளே தந்திரமாக விழவைத்தன. தந்திரம் என்றும் சொல்லலாம் துரியோதனன் தன் திறம் என்றும் சொல்லலாம்.

இனி, அந்தச் சூதாட்ட வைபவத்தில் கவனிக்கவேண்டிய குறிப்புகளைப் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.
ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline