சத்குரு ஜக்கி வாசுதேவ்
|
|
நீச்சல்காரன் (எ) ராஜாராமன் |
|
- அரவிந்த்|நவம்பர் 2016| |
|
|
|
|
"நீச்சல்காரன்" என்ற புனைபெயருக்குள் மறைந்திருக்கும் ராஜாராமன் ஓர் இயற்பியல் பட்டதாரி. 29 வயது இளைஞர். சொந்த ஊர் மதுரை. அப்பா, அம்மா, தங்கை என்று சிறிய குடும்பம். தந்தை ஒரு நிதிநிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சென்னையில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் ராஜாராமன், வலைப்பதிவராக இணையத்தில் நுழைந்தார். அங்கேதான் கணித்தமிழ் இவரை வசீகரித்தது. 'மென்கோலம்' என்ற தமிழ் வரைகலைச் செயலி தொடங்கி, 'வாணி' சந்திப்பிழை திருத்திவரை பத்துக்கும் மேற்பட்ட தானியங்கிச் செயலிகளை உருவாக்கியிருக்கிறார். அத்தனையும் சுயமுயற்சியால் உருவானவை. தமிழ் இந்து, திண்ணை, சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, முத்துக் கமலம், சொல்வனம், வல்லமை போன்ற இணைய இதழ்களிலும்; விஜயபாரதம், வெற்றிநடை, தமிழ் கம்ப்யூட்டர் போன்றவற்றிலும் இவரது எழுத்துக்கள் வெளியாகியுள்ளன. கணினிசார்ந்த ஐயங்களைத் தீர்ப்பதற்காக 'மானிட்டர் உலகம்' என்ற மின்னூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது மென்பொருள் சாதனைகளுக்காகக் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இவருக்கு 'சுந்தரராமசாமி நினைவு (தமிழ்க் கணிமை) விருது' வழங்கியது. அந்தப் பரிசுத்தொகையை இவர் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குக் கொடையாகக் கொடுத்துவிட்டார். வாருங்கள் இந்த இளைஞரோடு பேசலாம்...
*****
கணினித்துறையில் ஆர்வம் வந்தது எப்போது, எப்படி என்று நாம் தொடங்கினோம். "நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கணினி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் அதிசயங்கள் என்னை ஈர்த்தன. மேலும் வேலைவாய்ப்பு மலிந்த துறையாகவும் அது இருந்தது. மென்பொருள் சேவை நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் கணினியுடன் உறவாடல் அதிகமானது" என்றார்.
'நீச்சல்காரன்' என்பதற்கான பெயர்க்காரணம் கேட்டோம். "பொதுவாகக் கற்பனைகளை எல்லாம் பதிவுசெய்யும் முதல் மீடியம் எழுத்தாகவே இருக்கும். நானும் எழுத்தாளனாகவே விரும்பி, வலைப்பதிவுகளை எழுதத் தொடங்கினேன். எழுத்தாளனாகத் தனித்து நிற்க எண்ணி 'நீச்சல்காரன்' என்ற புனைபெயரைச் சூட்டிக்கொண்டேன். அதுவே இன்று என் அடையாளமாகியிருக்கிறது" என்று சொல்கிறார்.
முதன்முதலில் 'மென்கோலம்' என்ற தமிழ் வரைகலைக் கருவியை உருவாக்கினார் ராஜாராமன். நாம் கொடுக்கும் தமிழ் வார்த்தைகளைப் பிற குறியீடுகள் மூலம் வரைந்து கொடுத்துவிடும் புதுமையான வடிவமைப்புச் செயலி அது. சமூகத்தளங்களில் வித்தியாசமாக எழுத விரும்புவர்கள் இம்முறையில் எழுதி அலங்காரப்படுத்தலாம். பல்வேறு நிறங்களில், பல்வேறு அளவுகளில் இதனைச் செய்ய வசதி உள்ளது.
'தென்றல்' என்பதை அச்செயலி எப்படி வடிவமைத்திருக்கிறது, பாருங்கள்!
அடுத்து இவர் உருவாக்கிய செயலி பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆம்! 'கோலசுரபி' கோலம் வரையும் செயலி. இதன் சிறப்பு என்னவென்றால், எத்தனை புள்ளிகள், எத்தனை கோடுகள் வேண்டும் என்பதைக் கொடுத்தால் போதும், கோலம் வரைந்து கொடுத்துவிடும்.சிக்குக்கோலமும், கட்டக்கோலமும் இதன்மூலம் எளிதில் உருவாக்கிக் கொள்ளலாம். வளைவுகள், கோடுகள், சதுரமா, சாய்சதுரமா என்றெல்லாம் தேர்ந்தெடுத்து வரைந்து பார்க்கலாம். கோலத்தைப் பெரிதாக்கலாம்; அச்செடுத்துக் கொள்ளலாம். இதெல்லாம் விளையாட்டாக ராஜாராமன் உருவாக்கியவைதான். ஆனால் அவர் அத்தோடு நிற்கவில்லை.
இவர் எழுதும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்துவந்த நண்பர் ஒருவர், "வலைப்பதிவில் நிறையப் பிழைகளுடன் எழுதுகிறீர்களே, கொஞ்சம் கவனம் செலுத்தக்கூடாதா?" என்று கேட்டிருக்கிறார். ராஜாராமனுக்கு அது 'சுருக்'கென்றது. தமிழில் பட்டக்கல்வி படிக்காததும், இலக்கண அறிவு இல்லாததும்தான் அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார். இலக்கணம் கற்றார். தன்னைப்போலவே வலையுலகில் பலரும் பிழையோடு எழுதி வருவதைப் பார்த்தவருக்கு 'பிழை திருத்தும் செயலி' ஒன்றை ஏன் உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. "நான் கற்ற இலக்கணத்தைக் கொண்டு எனக்குதவும் வகையில் ஒரு சந்திப்பிழை திருத்தியை ஓராண்டுக் காலத்தில் உருவாக்கினேன். அதன் பயனை மற்றவர்களும் அடையக் கருதி, இணையத்தில் 'நாவி' என்ற பெயரில் ஒரு செயலியாக வெளியிட்டேன். முதலில் வலைப்பதிவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதைத் தாண்டி கல்வியாளர்கள் சிலரும் அதனைப் பாராட்டிப் பரிந்துரைத்தனர். அப்போது அவர்கள் வைத்த கோரிக்கையே எழுத்துப் பிழைதிருத்தி ஒன்றைச் செய்யத் தூண்டியது" என்கிறார்.
எழுத்துப் பிழைதிருத்தி உருவாக்குவற்காக ராஜாராமன் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. கல்லூரி அளவில் தமிழோ இலக்கணமோ கற்காத காரணத்தால் அவர் பல சிக்கல்களைச் சந்தித்திருக்கிறார். தமிழ் அகராதியை முழுவதும் திரட்டினார். ஆனாலும் பல முயற்சிகள் தோல்வியையே தந்தன. சளைக்காமல் முயன்று வெற்றிகண்டார். சில ஆண்டுகளில் 'வாணி' எழுத்துப்பிழை திருத்தி உருவானது.
"ஒரு எந்திரத்தைப் பிழை திருத்த வைப்பது பெரிய சவால். அதிலும், தமிழில் மிகப்பெரிய சவால். ஏனென்றால் ஆங்கிலம்போலச் சொற்பட்டியல் மட்டும் கொண்டு உருவாக்குவதானால் 70 மில்லியன் தமிழ்ச் சொற்கள் தேவை. அதைச் சேகரிக்கவும், ஒழுங்குபடுத்தவும் அதீத மனித உழைப்புத் தேவை. அதை இயக்க அதிவேகக் கணினி தேவை. ஆனால், மாற்றுச் சிந்தனையுடன், பிறமொழி திருத்திகள் போலல்லாமல், புணர்ச்சி விதிகளைப் பின்பற்றிப் புதிய கட்டமைப்பை உருவாக்கினால் சவால்களைச் சமாளிக்கமுடியும் என்று தோன்றியது. தொல்காப்பியம் மற்றும் நன்னூல் விதிகளில் தற்காலத்திற்கு ஏற்றவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு சொற்பட்டியல் தயாரித்தால் அரை லட்சம் மூலச்சொற்கள் போதும். அப்படி 40,000 வேர்ச்சொற்களைச் சேகரித்து, வகைப்படுத்தி, அவற்றைக் கணினிக்கு விளக்கி, கணினி தானாகவே அனைத்துச் சொற்களையும் உருவாக்கும் விதத்தில் இச்செயலியை உருவாக்கினேன்" என்று பெருமிதத்தோடு விளக்குகிறார்.
இச்செயலியின் சிறப்பம்சங்கள்: * இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஒரே பிழைதிருத்தி * எட்டுக்கோடி தமிழ்ச் சொற்களை இனங்காணும். * மரபுவழிச் சொற்களைச் சிதையாமல் கணினியே சொற்களை உருவாக்கிக் கொள்ளும். * பயனர் கொடுக்கும் சொல்லைத் தன்னிடமுள்ள வேர்ச்சொல் மூலம் உருவாக்க முடியாவிட்டால், அச்சொல்லை அடிக்கோடிட்டுக் காட்டும். * நாம் அடிக்கடி பிழைவிடும் இடங்களையும் செயலிக்குச் சொல்லிக் கொடுத்திருப்பதால் பிழையான சொல்லைத் திருத்தி மீண்டும் சோதித்துப் பார்த்து, திருத்திய சொல்லைப் பரிந்துரைக்கும். * கவனக்குறைவால் ஏற்படும் எழுத்துப் பிழைகளைச் செயலியின் உதவியோடு விரைவில் திருத்திக் கொள்ளலாம். * 90% பரிந்துரையைக் கொடுத்துவிடும் * தற்காலத் தமிழ்நடைக்கு ஏற்பச் செயல்படும்.
"துறைவாரியான கலைச்சொற்களைச் சேகரித்தும், பரிந்துரையின் துல்லியத்தை அதிகப்படுத்தியும் தொடர்ந்து இச்செயலியை மேம்படுத்தி வருகிறேன். இதற்கான ஆய்வுகள் என்னை எழுத்தாளனாகச் செழுமைப்படுத்தியது அதே வேளையில் கணினியறிவையும் மெருகேற்றியது" என்கிறார் நீச்சல்காரன். மேலும் கேள்விகளைத் தொடர்ந்தோம். |
|
|
தென்றல்: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 'கூகிள் மொழிமாற்றி' மொழிபெயர்க்கிறது. ஆனால் அது பொருத்தமானதாக இல்லை. இதனை மேம்படுத்தும் திட்டம் ஏதேனும் உள்ளதா? நீச்சல்காரன்: கூகிளின் மொழிபெயர்ப்பு ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை மையமாகக் கொண்டது. ஒட்டுநிலை மொழிகளான (agglutinative) இந்திய மொழிகளுக்குள் குறிப்பாகத் தமிழுக்குப் பொருந்துவதில்லை. மேலும் கூகிளின் ஆய்வுகளை நாம் காணமுடியாது என்பதோடு நமது பயன்பாட்டுக்கும் கிடைக்காது. இந்நிலையில் நமக்கான நுட்பம் நம்மிடமே இருப்பது தேவை. அதனாலேயே மொழிபெயர்ப்புச் செயலி ஒன்றை உருவாக்க முயன்று வருகின்றேன். இந்திய மொழிகளுக்குள் எந்திர மொழிபெயர்ப்பு ஒப்பீட்டளவில் மிக எளிது. இந்தி-தமிழ் சார்ந்து பல்வேறு சொற்கூறுகளைத் தொகுத்து வருகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் பிறமொழிக்கும் இடையில் வாக்கிய அமைப்பை (sentence pattern) இணையாக அமைத்துவிட்டால் இலக்கண அடிப்படையில் மொழிபெயர்க்கலாம் எனக் கணிக்கிறேன். மாறுபட்ட சில அனுமானங்களைக் கொண்டு முயலத் திட்டமிட்டுள்ளேன். பின்னர் ஆங்கிலம் உட்பட வெவ்வேறு மொழிகளை இதில் இணைக்கவும் என்ற திட்டமுள்ளது.
ஆங்கிலத்தில் உள்ளதுபோல் speech recognition software தமிழில் இல்லை. அதை உருவாக்கும் எண்ணம் உள்ளதா என்று கேட்டபோது, உரை ஒலிமாற்றி தொடர்பாக சிலர் ஏற்கனவே முயன்று வருவதால் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை என்கிறார்.
அடுத்து ஒரு முக்கியமான கேள்விக்குப் போகிறோம். செல்ஃபோனில் பயன்படுத்தும் தமிழ்ச் செயலிகளை உருவாக்கும் எண்ணம் உள்ளதா என்பதே அது. "இதுவரை இல்லை. ஆனால் நான் உருவாக்கிய கருவிகளை எல்லாம் செல்பேசிக் குறுஞ்செயலிகளாக மாற்றும் ஆர்வமுள்ளது. அதுதொடர்பாகக் கற்று வருகிறேன்" எனத் தெளிவுபடுத்துகிறார்.
விக்கிப்பீடியாவில் பல ஆயிரம் கட்டுரைகளை எழுதியுள்ளவர் நீச்சல்காரன். அது குறித்துக் கேட்டோம். "விக்கிப்பீடியா உலகில் எவரும் தொகுக்கக்கூடிய தகவல் களஞ்சியம். விக்கியில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தொகுப்புகளையும், முன்னூறுக்கு மேற்பட்ட புதிய கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். ஆரம்பத்தில் தமிழில் இல்லாத கட்டுரைகளை அதிகம் எழுதினேன். மேலும் தொடர்ந்து தொழில்நுட்ப உதவிகளைச் செய்து வருகிறேன். விக்கியில் பல்வேறு புள்ளிவிவரச் சேகரிப்பும், துப்புரவுப் பணிகளும் செய்யும் வகையில் ஒரு தானியங்கியை வடிவமைத்துள்ளேன். ஒரு பயனர் ஒவ்வொரு கட்டுரையாகச் சென்று செய்யக்கூடிய சில திருத்தங்களை இக்கருவியே செய்கின்றது. ஒரே நேரத்தில் பல கட்டுரைகளில் தகவலைச் சேர்க்கவும் இந்தத் தானியங்கி உதவுகிறது. தமிழ் விக்கியில் இயங்கிவரும் முக்கியத் தானியங்கிகளில் இதுவும் ஒன்று" என்று அவர் சொல்லும்போது நம்மால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.
வருங்காலத் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், "தமிழ் இணையதளங்கள் ஏறக்குறைய அனைத்தையும் (சுமார் பதினெட்டாயிரம்) சேகரித்துள்ளேன். அவற்றைத் துறைவாரியாகத் தொகுத்துப் பட்டியல் வெளியிட விருப்பம். தானியங்கி கொண்டு சேகரித்தபோதும் தொகுப்பதற்கு நேரமெடுக்கிறது. விரைவில் அது வெளிவரலாம். பொதுவாக மொழிநுட்பம் தொடர்பான சவாலான திட்டங்களை முயற்சிக்க ஆசையுண்டு. தற்போதைக்கு எந்திர மொழிபெயர்ப்பே அடுத்த ஐந்தாண்டு இலக்காகக் கொண்டுள்ளேன். மொழிநுட்பம் தாண்டி, முப்பரிமாணக் கலைக்களஞ்சியம் உருவாக்கவேண்டும் என்பது என் கனவுத்திட்டம்" என்கிறார். இவரது கனவுகள் இணையத் தமிழுக்குக் கிடைக்கும் வரங்களாக அமையப்போவதில் சந்தேகமில்லை.
கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுபற்றிச் சொல்லுகையில் "கணினித்துறையில் தமிழ்க் கருவிகளை விளையாட்டாகத்தான் செய்தேன். ஆனால் தமிழ் இலக்கியத் தோட்ட விருதுக்குப் பின் என் பொறுப்புணர்வு அதிகமாகிவிட்டது. விருதுபெறக் கனடாவிற்குப் போனது என் முதல் வெளிநாட்டுப் பயணம். இரண்டாவது தமிழர் தேசமாக அதைப் பார்க்கமுடிந்தது. அந்நாட்டில் நுழையும்போது கடவுச்சீட்டு அதிகாரி, "இந்த நாட்டில் நண்பர்களோ, உறவினர்களோ இல்லையே! பிறகு எதற்கு வருகிறீர்கள்?" எனக் கேட்டார். இனிமேல் "ரத்தபந்தம்தான் இல்லை ஆனால் உறவினர் உண்டு" எனத் தாராளமாகச் சொல்லலாம். "தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா?" என்ற சொல்லாடல் தமிழகத்தில் உண்டு. ஆனால் தமிழ் படிக்காமலேயே தமிழுக்காக உழைத்தால் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்த்தியது இந்த விருது" என்று நன்றிப் பெருக்கோடு கூறுகிறார்.
"கவிஞனாக வலைவாழ்க்கை தொடங்கிய என்னைக் கணினியாளனாக அங்கீகரித்தது தமிழ் வலைப்பதிவர்களே. மொழியிலக்கணம் என்று வரும்போது எனது முதல் ஆசான் முனைவர் செங்கைப்பொதுவன். அவரே எனது இலக்கணச் சந்தேகங்களைத் தீர்ப்பவர். அதுபோல இணையத்தில் செலவில்லாமல் கருவியை வெளியிடக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் வலைத்தமிழ்.காம் பார்த்தசாரதி. மேலும் எனது வாசகர்களின் தொடர் கருத்துரைகளே என் முயற்சிகளுக்கு உறுதுணையாக உள்ளன" எனக் கூறும் நீச்சல்காரன் கண்களில் நன்றி ஒளிவீசுகிறது.
தமிழில் தட்டச்சுவதற்கான 'எழுத்தாய்வுச் செயலி', வலைப்பதிவர்களுக்கான 'வலைப்பதிவு திரட்டி' உட்படப் பலவற்றை உருவாக்கியுள்ளார் ராஜாராமன். தமிழ் எழுத்துரு, இணையத் தானியாக்கம், எந்திரப் பிழைதிருத்தம் போன்று ஏற்கனவே முயன்றுள்ள துறைகளில் நண்பர்கள், மாணவர்கள் என ஆர்வமுள்ளவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறார். தொடக்க காலத்தில் கவிதைகள் மட்டுமே எழுதி வந்த இவர், பின்னர் கதை, நகைச்சுவை, கேலிச்சித்திரம் என்று பல்சுவைப் பதிவுகளைத் தனது arts.neechalkaran.com வலைத்தளத்தில் எழுதி வருகிறார். தகவல் தொழில்நுட்பம் தொடர்பாகக் கற்றவற்றைத் தனிப்பகுதியில் tech.neechalkaran.com தருகிறார். "இணைய நுட்பங்களை எளிய தமிழில் எழுதுவதால் பலருக்கு உதவுகிறது. மொழி, பொருளாதாரம், சமூகம் சார்ந்த எனது பார்வையை, தலையங்கங்களை opinion.neechalkaran.com என்ற தனிப் பகுதியில் எழுதி வருகிறேன். இது சமூகப் புரிதல்களை மேம்படுத்தவும், பங்களிக்கவும் உதவியாக இருக்கிறது" என்கிறார்.
அரவிந்த்
*****
ராஜாராமன் உருவாக்கியுள்ள முக்கியச் செயலிகள்:
டிவிட்டர் தானியங்கி (twitter.com/RT_Tamil டிவிட்டரில் தமிழ்ப் பயனர்களை ஊக்கப்படுத்தவும், கருத்துக்களைப் பிரபலப்படுத்தவும் உதவும் ஒரு தானியங்கிச் செயலி இது. ஒவ்வொரு நொடியும் உலகின் எந்த மூலையிலிருந்தும் வெளிவரும் தமிழ்க் கீச்சுகளைச் சோதித்து, தானாக மதிப்பெண் இட்டு, பிரபலமானதைச் சுட்டிக்காட்டி மறுகீச்சு செய்கிறது. இதனை நேரடியாக வாசகர்கள் பின் தொடரலாம். இதன்மூலம் டிவிட்டர் பரிச்சயமே இல்லாதவர்களும் சமூகப் பார்வையை அறியலாம். இதன் கீச்சுகளை 3260க்கும் மேற்பட்டோர் படிக்கிறார்கள்.
ஓவன் dev.neechalkaran.com/p/oovan.html தமிழில் உள்ள பல்வேறு குறியாக்கங்களில் (encoding) சிலவற்றைத் தவிர மற்றவற்றைப் பொதுக்குறியான ஒருங்குறிக்கு மாற்றமுடியாமல் இருந்த நிலையில் அதற்கான தீர்வாக இந்தக் குறிமாற்றி உருவாக்கப்பட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட எழுத்து வகைகளை இதன்மூலம் ஒருங்குறிக்கு (யூனிகோடு) மாற்றமுடியும் என்பது இதன் சிறப்பு..
ஆடுபுலி ஆட்டம் dev.neechalkaran.com/p/aadu-puli.html#.WAnE1-V94dM ஒரு விளையாட்டுச் செயலி. நமது பாரம்பரியத் திண்ணை விளையாட்டை நீங்கள் கணினியில் விளையாடலாம். நண்பர்கள் இருவர் ஆடாகவோ, புலியாகவோ தேர்வுசெய்து விளையாடலாம். ஒருவர் மட்டும் இருந்தால், கணினி புலியாகிவிடும், நாம் ஆடாக விளையாடலாம்.
சொற்புதிர் dev.neechalkaran.com/p/tamil-puzzle.html#.WAt_yOV94dM குறிப்பைக்கொண்டு கட்டங்களுக்குள் ஒளிந்திருக்கும் வார்த்தையைக் கண்டுபிடிக்கவேண்டும். இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்று எப்படியும் அது ஒளிந்திருக்கலாம். கட்டத்தைச் சொடுக்கி, எழுத்துக்களைத் தேர்வு செய்யவேண்டும். சரியான எழுத்துகளைத் தேர்ந்தெடுத்தால், பதில் அறிவிக்கப்பட்டு, ஒரு புள்ளி சேர்ந்துகொள்ளும். வாசகர்களும் புதிர்களை உருவாக்கி விளையாடலாம். மிகச் சுவாரஸ்யமான விளையாட்டு.
இணையப் படிப்பகம் dev.neechalkaran.com/p/periodicals.html#.WAt9zuV94dM இணையச் செய்தித்தாள்கள், அச்சிதழ்கள், இணைய சஞ்சிகைகள், ஆன்லைன் இதழ்களின் தொகுப்பு.
இணைய அகராதி dev.neechalkaran.com/p/dictionary.html#.WAt9zOV94dM பல்வேறு அகராதிகளின் தொகுப்பு. தேவையான சொல்லை உள்ளிட்டு, நமக்கு விருப்பமான பதினைந்துக்கும் மேற்பட்ட அகராதிகளில் தமிழிலோ, ஆங்கிலத்திலோ பொருள் தேடிக்கொள்ளலாம்.
செயலிகள் apps.neechalkaran.com பல்வேறு செயலிகளின் தொகுப்பு இது.
*****
முதல் விருது உலகம் முழுதும் பல நண்பர்கள் எனது கருவிகளைப் பாராட்டியும், பரிந்துரைத்தும் வருகிறார்கள். திரு. த. உதயச்சந்திரன் இ.ஆ.ப. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநராக இருந்தபோது கணித்தமிழ் சார்ந்த பல பணிகளை முன்னெடுக்க முடிந்தது. அரசு அலுவலர், தனியார் அமைப்பிலுள்ளோர் எனத் தனிநபர் ஆதரவும் உண்டு. நிறுவனங்களின் கட்டமைப்பு புத்தாக்கங்களை ஆதரிப்பதாக இல்லை. தமிழிலோ அல்லது கணினியிலோ எனக்கு உயர்பட்டப் படிப்பில்லாததால் இது தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இலவசமாக வெளியிட்டதால் அதன் பின்னாலுள்ள உழைப்பைச் சிலர் அறிவதில்லை. பதிவுக் கட்டணங்களுக்கு அஞ்சி தமிழ் மாநாடுகளிலும் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் கனடா இலக்கியத் தோட்டத்தின் விருதே எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். - ராஜாராமன் |
|
|
More
சத்குரு ஜக்கி வாசுதேவ்
|
|
|
|
|
|
|
|