Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கவிமாமணி இளையவன்
கமலா லோபஸ்
- வெங்கட்ராமன் சி.கே., மதுரபாரதி|அக்டோபர் 2016|
Share:
ஒரு தமிழ் அன்னைக்கு மகளாக நியூ யார்க்கில் பிறந்து, வெனிஸுவெலாவின் கராகஸ் நகரில் வளர்ந்த கமலா லோபஸ், தீவிரமான பெண்சமத்துவத்துவப் போராளி. அதையே மையக்கருத்தாகக் கொண்டு அவர் எழுதி, இயக்கிய 'Equal Means Equal' என்னும் ஆவணப்படம் (equalmeansequal.com) அமெரிக்காவில் பெண்கள் சம உரிமைகளை அனுபவிப்பதாகக் கூறப்படும் மாயையை, சமரசமில்லாமல், ஆதாரங்களோடு உடைக்கிறது. அதே நேரத்தில் ஆணினத்தைச் சாடாமல், அவர்களையும் தம்மோடு சேர்ந்து போராட அறைகூவுகிறது. இந்தப்படம் 'Best US Documentary Audience Award' என்ற சிறப்பை இந்த ஆண்டில் மைக்கல் மூர் திரைப்பட விழாவில் வென்றது. Heroica Films (heroicafilms.com) என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை இவர் நிறுவி நடத்திவருகிறார். 2009ல் ERA Education Project அமைப்பை (eraeducationproject.com) நிறுவி, பொதுமக்களிடையே மகளிர் சம உரிமை குறித்த விழிப்புணர்வைப் பரப்பி வருகிறார். I Heart Huckabees, Born in East L.A., Deep Cover, The Burning Season உட்பட முப்பதுக்கு மேற்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களிலும் Lie To Me, Alias, Star Trek Voyager, NYPD Blue, It's Garry Shandling's Show உட்பட எழுபதுக்கு மேற்பட்ட டி.வி. காட்சிகளிலும் இவர் நடித்துள்ளார். Ese Beso என்ற ஸ்பானிஷ் குறும்படம் இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளது. தெளிவான, திடமான வாதங்களை அழுத்தமான சொற்களில் நம்மோடு இந்த நேர்காணலில் பகிர்கிறார் கமலா.

*****


தென்றல்: உங்களது தமிழ்த்தொடர்பு பற்றிக் கூறுங்கள்.
கமலா லோபஸ்: என் அம்மா தென்னிந்தியர். நான் இளவயதில் திருநெல்வேலியருகே இருக்கும் அவரது கிராமத்துக்குப் போய், அவர் பிறந்து வளர்ந்த வீட்டில் தங்கினேன். இந்தியாவுக்குப் போனதுமே அது எனக்கு மிகப் பரிச்சயமானதாகத் தெரிந்தது. நான் வெனிஸுவெலாவில் உள்ள கராகஸில் வளர்ந்தவள். இரண்டு இடங்களுக்கும் பலவகை ஒற்றுமைகள். உடனடியாக நான் சௌகரியமாக உணர்ந்தேன். என் திருமணம் கேரளத்தில் நடந்தது. நான் பலமுறை இந்தியாவுக்குச் சென்றிருக்கிறேன். தத்துவரீதியாக நான் இந்தியாவோடு மிகத் தொடர்புடையவளாக உணர்கிறேன். வாழ்க்கை குறித்த இந்தியப் பார்வை எனக்குப் பிடிக்கும்.

தென்றல்: பெண்கள் சமத்துவத்தில் உங்கள் ஈடுபாடு குறித்துக் கூறுங்கள்...
கமலா: ஒரு பெண்ணாக வளர்ந்தால் பல சமயங்களில் முகத்தில் ஐஸ் தண்ணீரைச் சிலீரென்று எறிந்ததுபோல (அதிர்ச்சியாக) இருக்கும். பிறருக்குக் கொடுக்கப்படும், அனுமதிக்கப்படும் பல விஷயங்களைச் சமுதாயம் உங்களுக்கு மறுத்துவிடும்; நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அப்படி நடக்கும்.

அமெரிக்காவில் பெண்கள் சூழல் நான் வளர்ந்த தென்னமெரிக்காவின் சூழலிலிருந்து மாறுபட்டதாக இருந்தது என்னை ஈர்த்தது. வெனிஸுவெலாவின் கலாசாரம் பாலியல் சார்ந்தது. தங்கள் பாலினக் கவர்ச்சியைப் பயன்படுத்தி ஆண்களைத் தமக்கேற்றபடி வளைக்கப் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இது என்னைச் சங்கடப்படுத்தியது. அத்தகைய நடத்தையில், உறவில் எனக்கு ஆர்வமிருக்கவில்லை.

பின்னொரு சமயத்தில் நியூ யார்க் நகரில் ஒரு பதின்ம வயதினளாக இருந்தபோது அமெரிக்க யுவதிகளும் பெண்களும் தத்தம் விருப்பப்படி "இருக்கலாம், செய்யலாம், கொள்ளலாம்", அவர்கள் அமெரிக்க சமுதாயத்தில் முழுச் சமத்துவம் கொண்டவர்கள் என்ற வலுவான தத்துவம் என்னைக் கவர்ந்தது. ஆனால் இருபதாண்டுகளுக்குப் பின்னால் இது உண்மையல்ல என்று தெரிந்தபோது எனக்கேற்பட்ட ஆச்சரியம், ஏமாற்றம், வஞ்சிக்கப்பட்ட உணர்வை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

நமது அரசியலமைப்பு அடிப்படை மனித உரிமைகளையோ, சிவில் உரிமைகளையோ பெண்களுக்குத் தரவில்லை என்பதைப் பெரும்பான்மை அமெரிக்கர்கள் அறியமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தேன். இது ஆபத்தானது. இந்த விஷயத்தில் அரசு வணிக நிறுவனங்களோடு ஒரு கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கிறது. அதன்மூலம் இருவருக்குமே பல டிரில்லியன் டாலர் மிச்சமாகிறது. இந்தச் சேமிப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளால் ஏற்படுகிறது. இது நீடிக்கமுடியாது. ஐக்கியச் சட்டத்தின்கீழ் அமெரிக்க அரசியலமைப்பில் மகளிரும் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு வெளிப்படையாகச் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்.

'Equal Means Equal' எடுத்ததன் காரணமே, இங்கே மகளிருக்குச் சம உரிமை இருக்கிறதென்று நம்பிக்கொண்டிருக்கும் 96 சதவிகித அமெரிக்கர்களுக்கு உண்மையை உணர வைப்பதற்காகத்தான். அதன்மூலம் புதிய சிவில் உரிமைப் போராட்டம் ஒன்று ஏற்பட்டு இந்த அநீதி சரிசெய்யப்பட வேண்டும்.தென்றல்: ஒரு மகத்தான பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்த விரும்பும் உங்களை வழிநடத்தும் அடிப்படை நம்பிக்கை என்ன?
கமலா: நீங்கள் என்னை இந்தக் கேள்வி கேட்டதை நான் ரசிக்கிறேன். இதைப் பல அமெரிக்கர்களிடம் கேட்டு, அதைப்பற்றி அவர்கள் சிந்தித்தால், அது இந்தச் சமூகத்தை மிகவும் மேம்படுத்தும்.

நீதி, சமத்துவம், அஹிம்ஸை, கருணை என்பவற்றை உறுதிப்படுத்துவதும், அவற்றைக் காக்க எழுவதும்தாம் சமுதாயநீதிப் போராளிகளின் வழிகாட்டித் தத்துவங்களாக இருந்து வந்துள்ளன. மனித பலவீனங்களையும் பேராசைகளையும் எதிர்த்து நிற்க அவர்கள் காட்டிய வழியில் நான் செல்ல முயல்கிறேன். நாசூக்காகச் செய்யாவிட்டாலும் நல்லபடியாகச் செய்பவர்களில் நான் இருக்கிறேன். நல்லதைச் செய்வது சந்தேகத்துக்கு உரியவற்றைச் செய்வதைவிடச் சிறப்பென்றும், பிறருக்கு உதவுவது ஷாப்பிங்கைவிடச் சுவையானது என்றும் நாம் இளையதலைமுறைக்குச் சொல்லவேண்டும்.

தென்றல்: உங்கள் 'Equal Means Equal' வெற்றிகரமாக எதைச் செய்துள்ளதாக நினைக்கிறீர்கள்?
கமலா: பெண்களை பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதைப் படம் வெற்றிகரமாக உணர்த்துகிறது. நாம் சுவாசிக்கும் காற்றே பாலினச்சாய்வு கொண்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது. என் பார்வையில் இந்தப் படத்தின் சாதனை இதுதான். பார்ப்பவர்களை இது அதிரவைக்கும், அவர்கள்மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் என் நம்பிக்கையும் ஆசையும். மக்களிடையே, சமூகத்தினுள்ளே, ஓர் இயக்கத்தைத் தோற்றுவிப்பதே படத்தின் நோக்கம்.

தென்றல்: ஒரே ஒரு மாற்றம் போதும், அதனால் மிக அதிகமான நன்மை விளையும் என்பதாக நீங்கள் கருதுவது எது?
கமலா: அமெரிக்க அரசியமலமைப்பில், சம உரிமை சட்டத்திருத்தம் (Equal Rights Amendment-ERA) கொண்டுவருவது. உலக அளவில் மகளிருக்கெதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான தொடக்கமாக அது ஒன்றே அமைந்துவிடும். அமெரிக்கா இந்தச் சட்டத்திருத்தத்தை அங்கீகரித்துவிட்டால், நமது தொழிலாளர் சட்டத்தில் இருக்கும் குறைந்தசம்பளம் போன்ற சமமின்மைகள் குறிப்பிடத்தக்க அளவில் நிவர்த்திக்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு நாம் காட்டும் ஆரோக்கியமற்ற, தலைநிமிராத பணிவே சமமான சம்பளம் தருவதற்கு எதிராக நிற்கிறதென்று நான் நம்புகிறேன். சட்டபூர்வமாக முழுச் சமத்துவத்தைப் பெண்களுக்குக் கொடுக்காமல் அமெரிக்க அரசு இழுத்தடிப்பதற்குக் காரணம் இதுதானென்று நான் நம்புகிறேன்.

உலக அளவில் மகளிர் பாகுபாட்டுக்கெதிரான தீர்மானம் ஒன்று (CEDAW) நிறைவேற்றப்படாமல் இருப்பதற்குக் காரணமும் அமெரிக்கா இந்தச் சட்டத்திருத்த மசோதாவை அங்கீகரிக்காததுதான் என்பது என் கருத்து. பெண்கொலை, அவர்கள்மீது வன்முறை போன்றவை அதிகம் நடக்கும் நாடுகள் அவற்றைத் தடுக்காமல் தொடர்ந்து செய்வதற்கு இதுவே அவற்றுக்குப் பச்சைக்கொடியாகவும் அமைந்துவிடுகிறது.

தென்றல்: மானுட இனத்தைப் பொருத்தவரை கடவுள் ஒரே ஒரு விஷயத்தை வேறுவிதமாகப் படைத்திருக்கலாம் என்பதாக நீங்கள் கருதுவது எதை?
கமலா: நம்மிடம் இத்தனை பேராசையும் வன்முறைக் குணமும் இல்லாமல் இருந்திருக்கலாம்!தென்றல்: வாக்குரிமையைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம்?
கமலா: வோட்டு என்பது உங்கள் நாட்டுடன் உங்களுக்கிருக்கும் உறவின் செயல்முறை அடையாளம். உங்கள் குடிமைப் பொறுப்பை நீங்கள் ஏற்கிறீர்களா, இல்லை யாரையோ அனுமதித்துவிட்டுப் பின்னர் புலம்பப் போகிறீர்களா என்பதை அது நிர்ணயிக்கிறது. முக்கியமாக, மிகப்பெரிய வோட்டர் எண்ணிக்கையிலிருக்கும் பெண்களுக்கு அதில் மிகப்பெரும் பங்கு உள்ளது. உங்களுடைய பிரச்சனைகளை உங்கள் பிரதிநிகள் சீரியஸாக எடுத்துக்கொள்ளப் போகிறார்களா, இல்லை, கிடப்பில் போடுவார்களா என்பதை உங்கள் வோட்டுத்தான் நிர்ணயிக்கிறது.

ஐ.நா.வில் இருக்கும் நண்பரும் மகளிர் உரிமைப் போராளியுமான ரவி என்னிடம், இளைஞர்களிடம் சவால்களின் பட்டியல் ஒன்றைக் காட்டியபோது, அவர்கள் மகளிர் உரிமைப் பிரச்சனைகளை மிகக்கடைசியில்தான் வைத்தார்கள் என்பதாகக் கூறினார். பெண்களேதான் லகானைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்; தமது பிரச்சனைகளைப் பற்றிப் பிற பெண்களுக்கும் தம்மைச் சுற்றியுள்ள ஆண்களுக்கும் அறிவூட்ட வேண்டும். மாற்றத்துக்கான வழிமுறைகளைத் தொடங்க வேண்டும்.

1787முதல் அரசியலமைப்பின்படி பெண்கள் பெற்றிருக்கும் ஒரே அதிகாரம் வாக்குரிமைதான். பிற உரிமைகளைப் பெறுவதற்கு அந்த உரிமையை அவர்கள் பயன்படுத்தவேண்டும்.

தென்றல்: வரப்போகும் தேர்தல் எந்த வகையில் முன்னைவிட முக்கியமானது?
கமலா: இன்றைய அமெரிக்கத் தொழிலாளர்களில் 47% பெண்கள். பள்ளிசெல்லும் குழந்தைகளின் அன்னையர்களில் 75% பேர் வேலை பார்ப்பவர்கள். அதிலும் ஒற்றைத் தாயார்கள் அதிகமாக உள்ளனர். அதே வேலைக்கு ஆண்கள் பெறுவதைவிட 22-56% குறைந்த சம்பளத்தை இவர்கள் பெறுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் மூன்று பெண்கள் தம் காதலரின் கைகளால் மரணமடைகிறார்கள்.

கற்பழிப்புக் குற்றவாளிகளில் 3 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள்தாம் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான DNA சாம்பிள்கள் பரிசோதனைக்கூடங்களில் உட்கார்ந்திருக்கும் அதே நேரத்தில் வெளியே தொடர்-கற்பழிப்பாளர்கள் தமது கொடுங்குற்றங்களைச் செய்தவண்ணம் இருக்கிறார்கள்.

கருவுற்ற பெண்கள் 8வது மாதத்தில் மேலுமொரு முறை கழிப்பறை செல்ல விரும்பினால் அதற்காக அவர்கள் வேலையைவிட்டு நீக்கப்படுகிறார்கள்.

பெரும்பாலான காப்பீட்டுப் பாலிசிகள் தாய்மைப் பராமரிப்பு, சிறார்நலன் அல்லது கைக்குழந்தை நலனுக்கான ஷரத்துக்களைக் கொண்டிருப்பதில்லை.

சென்ற ஐந்தாண்டுகளில் பெண்களின் கருத்தடை மற்றும் உடல்நலன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்ற புதிய சட்டங்கள் ஆயிரத்துக்குமேல் இயற்றப்பட்டுள்ளன.

ஆண்களைவிட அதிக எண்ணிக்கை விகிதத்தில் பெண்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். அதே குற்றத்துக்கு விதிக்கப்படும் தண்டனை ஆண்களைவிடப் பெண்களுக்குக் கடுமையானதாக இருக்கிறது. சிறையில் வாழ்நாள் தண்டனை அனுபவிக்கும் பெண்கள் செய்த குற்றம் என்னவென்றால் தம்மைக் கொடுமைப்படுத்திய கணவனைச் சுயபாதுகாப்பு கருதிக் கொன்றதுதான்!

இனியும் இப்படிப்பட்ட அமெரிக்காவில் ஒருபெண் வாழ விரும்பவில்லை என்றால் அவர் வோட்டுப் போடவேண்டும். இனிமேல் உச்சநீதிமன்றத்துக்கு வரப்போகிற நீதிபதிகள் பெண்களை அந்தப்புரத்து அடிமைகளாக அல்லாமல் முழுமையான மனிதர்களாகப் பார்ப்பவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் இதுவரையில் இருந்த பிற்போக்கான, பெண்களுக்கெதிரான கொள்கைகள் அடுத்த தலைமுறையிலும் தொடராமல் இருக்கும்.
தென்றல்: உலகில் ஒரு நாட்டின் பெண்தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டால், வேறொரு நாட்டில் பதவியை ஒரு பெண் பிடிக்கிறார். உதாரணமாக பிரேசிலில் தில்மா ரூஸெஃப் அகற்றப்பட்டர்; ஜப்பானில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெண் முதன்முறையாக வந்திருக்கிறார். இதுகுறித்த உங்கள் பார்வை...?
கமலா: பூதம் பாட்டிலைவிட்டு வெளிப்பட்டுவிட்டது; மீண்டும் உள்ளே அடைக்கமுடியாது. நாங்கள் அதிகமாகத்தான் பலம் அடையப்போகிறோம். நாங்கள் எமக்கேயான தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்வோம் என்பது என் நம்பிக்கை. அதிகாரம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான புதிய பிம்பத்தை ஏற்படுத்தப் போகிறோம். இதுவரை ஆண்கள் வகுத்த அதிகாரப் பாதை எதிர்ப்போரின் சடலங்களால் நிரம்பியுள்ளன. அது உலகத்தை அச்சத்தின், வன்முறையின் விளிம்பில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. இதிலிருந்து மாறுபட்டிருக்கும் காரணத்தால் பெண்கள் இந்தக் காலத்துக்கேற்ற புதிய சிறப்பான திறமைகளை மேசைக்குக் கொண்டு வருவார்கள்.

இந்தப் பூமிக்கோளம் நம் அனைவரின் பொதுச்சொத்து. 'வென்றவர்', 'தோற்றவர்' என்கிற சிறுவர் விளையாட்டுக் கோட்பாடு அதற்குத் தீங்கு செய்துகொண்டிருக்கிறது. "நாம்", "அவர்கள்" என்கிற போர்க்காலப் பரிபாஷை மனிதகுல நாசத்துக்குக் காரணமாக இருந்தது. இன்றைக்கு அதே அதிகாரஅடுக்குப் பிரச்சாரம்தான் பெண்களை ஒடுக்குவதற்கும் மதிப்புக்குறைத்துப் பேசுவதற்கும் ஏதுவாக அமைகிறதென்பதை இந்தப் புதிய பெண்தலைவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். மனித இனத்தையும் பூமிக்கோளையும் பாதுகாப்பதற்கான ஒரு புதிய சமூகச்சூழலை விரைந்து உருவாக்கப் பெண்கள் முன்னிலைப் பதவிகளைத் தமது கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தென்றல்: இளம்பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கமலா: இளம்பெண்களுக்குச் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான்: நீங்கள் வெறும் உடல் அல்ல. முக்கிய ஊடகங்களும் பாப் கலாசாரமும் உங்களை வேறுவிதமாக நம்பவைக்க முயலலாம். உங்கள் தோற்றம் மற்றும் பாலியல் கவர்ச்சியைத் தாண்டி உங்களுக்குப் பெருமதிப்பு இருக்கிறது. (இந்தியப் பெற்றோரால் வளர்க்கப்படும் யுவதிகளுக்கு இதைச் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.) பன்முகத் திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்; உங்களைத் திணறடிக்கும் துறைகளை அலசிப் படியுங்கள். அமெரிக்கப் பத்திரிக்கையில் பார்க்கும்போது கர்டாஷியான்களின் மற்றுமோர் ஆடையற்ற செல்ஃபி கவர்ச்சியாகத் தெரியலாம். ஆனாலும் உங்கள் உடலையோ பாலினப்பண்பையோ சந்தைப்பொருளாக்கச் சம்மதிக்காதீர்கள். நீங்கள் ஒரு வஸ்துவல்ல, மாறாக நம்பற்கரிய, நிரந்தரமான ஜீவன். என்ன விலை கிடைத்தாலும், நீங்கள் விற்பனைக்கல்ல என்று நான் நம்புகிறேன்.

அதிகாரம் பெற்றதாக உணர்வதும் அதிகாரத்திலிருப்பதும் ஒன்றல்ல என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். அதிகார உணர்வு சந்தோஷமானதாக இருந்தாலும், வெறும் உணர்வுதான். சமுதாயத்தில் அதிகாரம் கொண்டிருப்பதென்பது பாதுகாப்புக் குறித்த, மரியாதைகொண்ட, சட்டமும் அதனை அமல்படுத்துவதும் குறித்த, ஓர் எதார்த்த நிலை. ஒரு கல்லூரியில் நுழைந்ததும் இஷ்டம்போல உடையுடுப்பது, விரும்பியதைக் குடிப்பது, வேண்டிய இடத்துக்குப் போவது என்பதாக இருப்பது 'அதிகாரம் பெறுதல்'. ஆனால் உண்மையான 'அதிகாரம்' என்னவென்றால், உன் கல்லூரி இவற்றைச் செய்ய உனக்குப் பாதுகாப்பான சூழலைத் தரவேண்டுமே அல்லாது (இப்போது நடப்பதுபோல) நால்வரில் ஓர் இளம்பெண் கல்லூரி வளாகத்தில் கற்பழிக்கப்படவும் பாலியல் ரீதியாகத் தாக்கப்படவும் கூடாது.

லிஸ் லோபஸ் கமலாவின் தாயார் 'Equal Means Equal' படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர். நியூ யார்க்கின் ஓர் உணவகத்தில் பார்த்த தென்றலின் கடைசிப் பிரதியை ஆர்வத்தோடு எடுத்துச்சென்று படித்தவர், மிகுந்த ஆச்சரியத்தோடு நம்மைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதற்கு அவர் கூறிய காரணம் "அதில் வெளியான ஒவ்வொன்றும் மிகவும் தரமாக இருந்தது" என்பதாகும். அவரிடமும் சில கேள்விகள் கேட்டோம். அவரது பதில்கள் இதோ...

தென்றல்: உங்கள் தமிழ் ஆர்வத்தைக் குறித்துச் சொல்லுங்கள்...
லிஸ்: நான் தமிழச்சி. நான் உலகப்பிரஜை. என்னால் சிறப்பாகச் சிந்திக்க முடிவதற்குக் காரணம் தமிழ். அது மிகவும் ஆழமான மொழி. இளைந்தலைமுறையினர் தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டு, ஆங்கிலம் கலக்காமல் பேசினால் கேட்க நன்றாக இருக்கும். அவர்களுக்கு இரண்டு மொழிகளுமே சரியாகத் தெரிவதில்லை.தென்றல்: நீங்கள் சிறுவயதாக இருந்தபோது உங்கள் பெற்றோர் கூறியதில் மறக்கமுடியாதது எது?
லிஸ்: உண்மை பேசினால் வாழ்க்கை சிறக்கிறது; கோழைகள் பொய் சொல்வர்.

பிறருக்குத் தினந்தோறும் ஏதேனும் செய்வதை அன்றாடப் பழக்கம் ஆக்கிக்கொள்.

கற்பி, கற்றுக்கொள்; கல்வியை உன்னிடமிருந்து யாரும் பறிக்கமுடியாது. அது உன்னுடையது. நீ விசேடமானவள். எவரையும் உன்னை அவமதிக்க அனுமதியாதே. அன்பாக இரு, கருணையோடிரு. வாழ்க்கை ஆனந்தமானது.

தென்றல்: இங்கிருக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தமது பாரம்பரியத்தை விடாமல் ஒன்றியிருப்பதற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
லிஸ்: இங்கே செட்டில் ஆவதற்கான பலத்தை எது கொடுத்ததோ அதை அங்கேயே விட்டுவிடாதே.

நாம் பெரியோரை மதிப்பவர்கள் என்பதை மறக்காதே. அவர்களை இழித்துப் பேசாதே. மிகவும் கவனமாக யோசித்தபின்பே இங்குள்ளவற்றை சுவீகரிக்க வேண்டும். இங்கே நம்மோடு கொண்டுவந்திருக்கும் நம் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பது உலகை உயர்த்தக்கூடும். அப்படித்தான் இந்தப் புதிய வீட்டை நாம் சிறப்பானதாக்க முடியும்.

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன்
தமிழில்: மதுரபாரதி

*****


இளம்பெண்களின் பெற்றோருக்கு
உங்கள் பெண்கள் அனுபவிப்பதுபோன்ற அழுத்தங்களை நீங்கள் ஒருபோதும் அனுபவித்ததில்லை, அதை நீங்கள் கற்பனை செய்யக்கூட முடியாது. அமெரிக்காவில் ஒரு பெண் விலைமாதுத் தொழிலில் ஈடுபடும் சராசரி வயது 12! அவர்கள் அதை விபச்சாரம் என்றுகூட அறிவதில்லை. அவன் பெண்களைக் கடத்துபவன் அல்லது விபச்சாரத் தரகன் என்பதை அறியாமலே அவனோடு உறவுகொண்டு விடுகின்றனர். பல அமெரிக்கக் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை இணையம் சூறையாடிவிட்டது; இதன் விளைவுகள் மிக ஆபத்தானவை. நான் ஒரு தாயல்ல, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை என்னால் சொல்லமுடியாது. யாருடன் உங்கள் மகள் பேசுகிறார், அதுவும் ஆன்லைனில் பேசுகிறார், என்பதை நீங்கள் அறிந்துகொள்ளத்தான் வேண்டும்.

- கமலா லோபஸ்

*****


கமலா லோபஸ் பெற்றுள்ள விருதுகள்
'Best US Documentary Audience Award' in Michael Moore's Traverse City Film Festival 1026
Latino Spirit Award for Achievement in Advocacy and Entertainment (2016) - State of California
Champion of Justice - Equal Rights Advocates
2015 Woman of the Year - Los Angeles County Board of Supervisors and the Women's Commission.
Ese Beso (Spanish movie directed by Kamala) - Audience Award at the Boyle Heights Latina Film Festival (2012)
One of the 21 Leaders for the 21st Century - Women's eNews.
Woman of Courage Award - National Women's Political Caucus
Exceptional Merit Media Award for 'A Single Woman'

நன்றி: Wikipedia.com
More

கவிமாமணி இளையவன்
Share: 
© Copyright 2020 Tamilonline