|
|
|
சோழமண்டலத்தில் இவர் ஆராயாத கோயில்களே இல்லை என்னுமளவிற்குப் பல ஆலயங்களைத் தேடிச்சென்று கள ஆய்வு செய்தவர் குடவாயில் பாலசுப்பிரமணியன். வரலாற்றாய்வாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், கல்வெட்டு அறிஞர், கோயிற்கலை நிபுணர் எனப் பல திறக்குகளில் இயங்குகிறவர். இவரது ஆய்வு முடிவுகள் மிக முக்கியமானவை. இவர் எழுதிய 'குடவாயிற்கோட்டம்', 'கருணாகரத் தொண்டைமான்', 'நந்திபுரம்', 'கோனேரி ராயன்', 'கோயிற்கலை மரபு', 'தமிழக கோபுரக்கலை மரபு', 'தஞ்சாவூர்', 'தஞ்சை நாயக்கர் வரலாறு', 'இராஜராஜேச்சரம்', 'தாராசுரம்' போன்ற நூல்கள் வரலாற்றாய்வில் பல புதிய கதவுகளைத் திறந்தவை. அகில இந்திய அளவில் பல கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார். கோலாலம்பூர் மற்றும் தஞ்சையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாடுகளிலும், கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும் சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார். கம்போடியா, ஜாவா, பாலி பகுதிகளில் கள ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது, சேக்கிழார் விருது, திருக்கோயில் கலைச்செல்வர் விருது, இராஜராஜ சோழன் விருது, உ.வே.சா. விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சாஸ்த்ரா பல்கலையின் முதுமுனைவர் விருது உட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். தமிழகம் தேர்தல் பரபரப்பில் இருந்த வேளையில், தஞ்சையில் அவரது இல்லத்தில் ஒரு முற்பகல் நேரத்தில் சந்தித்து உரையாடினோம். அதிலிருந்து...
*****
கே: வரலாற்றாய்வில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி? ப: குடவாயில் கோட்டம் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் தற்போதைய குடவாசலுக்கு அருகே உள்ள பெருமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தேன். அருகிலிருந்த கோட்டவம் என்ற பகுதி மிகப்பெரிய கருவைக்காடு. அங்கே சங்ககாலத்தில் நிதிசேமிப்புக் கிடங்கு இருந்திருக்கிறது. அங்கே மழைபெய்து மண் அரித்து ஓடும்போது கரைகளில் நிறைய நாணயங்கள் கிடைக்கும். தங்கம், வெள்ளி, செப்பு என்று பலவாறாக இருக்கும். சிறுவயதில் சில காசுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் 'உரக' என்று பொறிக்கப்பட்ட தங்கக்காசும் ஒன்று. அது ஈழத்து வெற்றி நினைவாக ராஜராஜன் வெளியிட்ட காசு. அது தவிரச் சங்ககாலச் சோழர்காசு ஒன்றும் கிடைத்தது. சுந்தரபாண்டியன் காலத்துக் காசு ஒன்றும் கிடைத்தது. இந்தக் காசுகள் வரலாற்றின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தின. பள்ளி நூலகத்திலும், குடவாசல் பொதுநூலகத்திலும் படிக்கக் கிடைத்த வரலாற்றாய்வு நூல்களும் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்றபோது பார்த்த கல்வெட்டுக்களும் என்னுள் அலைகளை ஏற்படுத்தின. அவற்றைப் படித்தறிய ஆர்வம் ஏற்பட்டது. கலைக்களஞ்சியத்தில் ஒவ்வொரு எழுத்தும் எப்படி வரிவடிவம் பெற்றது என்பதைப் படத்துடன் பார்த்தேன். அதனை ஒரு நோட்புக்கில் எழுதி வைத்துக்கொண்டு கல்வெட்டு எழுத்துக்களை ஒப்பிட்டு, படித்துப் பார்ப்பேன். அக்காலகட்டத்தில் தினமணிசுடர் இதழில் நிறைய வரலாற்றாய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. அவை எனக்கு இத்துறைமீது ஆர்வத்தைத் தூண்டின. தமிழ்நாடு தொல்பொருள் துறையின் இயக்குநராக இருந்த டாக்டர். நாகசாமி, கோடை விடுமுறைகளில் கல்வெட்டுக்களைப் படிக்க பயிற்சி நடத்துவார். நான் அதில் கலந்துகொண்டேன். அவரையே எனது ஆசானாகவும் வரித்துக்கொண்டேன். பின்னர் கல்லூரிக் காலத்தில் ஆலயங்களுக்குச் சென்று கல்வெட்டுக்களைப் படியெடுப்பேன். சென்னைக்குச் செல்லும்போது நாகசாமி அவர்களிடம் அதைக் காட்டி விளக்கத்தை அறிய முயல்வேன். இப்படித்தான் ஆரம்பித்தது.
கே: உங்கள் முதல் ஆய்வு எது? ப: 1970ல் நான் கும்பகோணம் கல்லூரியில் விலங்கியல் படித்தேன். ஆனாலும் ஆர்வம் முழுவதும் தொல்லியலில்தான். காரணம், குடந்தையைச் சுற்றியுள்ள ஆலயங்கள். எனது ஓய்வுநேரத்தை அங்கேதான் செலவழிப்பேன். அப்போது அடிக்கடி தாராசுரம் கோயிலுக்குப் போவேன். அற்புதமான கோயில் அது. 63 நாயன்மார்களின் வரலாறும் அங்கே சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தைச் சுற்றிப் புதர் மண்டிக் கிராமத்து மக்களால் கழிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது எனக்கு வருத்தத்தைத் தந்தது. தினமணிசுடரில் அதுபற்றி 'கல்லெல்லாம் கதை சொல்லும் தாராசுரம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். அதுதான் எனது எழுத்துலகப் பிரவேசம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்றுவரை தொடர்ந்து தினமணியிலும் மற்றும் பல இதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். டாக்டர் நாகசாமியைப் போலவே சேக்கிழார் அடிப்பொடி தி.நா. ராமச்சந்திரன் அவர்களும் எனது ஆசான்களுள் ஒருவர். எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை அவர் சேகரித்து வைத்திருக்கிறார். சைவம், சமயம், தமிழ் என எல்லாவற்றிலும் மேம்பட்ட விற்பன்னர். தினந்தோறும் அவரைச் சந்தித்து இரண்டு மணி நேரமாவது உரையாடுவேன். சமயம், தமிழ், இலக்கியம் பற்றி நிறைய செய்திகளை அவரிடமிருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன். அவருடைய மாணவன் என்பதில் பெருமையடைகிறேன்.
கே: சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து… ப: தொடக்கத்தில் சரஸ்வதி மகால் நூலகத்தின் ஆவணப் பிரிவில் நுண்படத்துறை வல்லுநராகவும் காப்பாட்சியராகவும், பின்னர் வெளியீட்டு மேலாளராகவும் பணிபுரிந்தேன். அங்கு நிறைய பழைய ஓலைச்சுவடிகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னுடன் தெலுங்குப் பண்டிதர் விஸ்வநாதன், மராத்தி பண்டிதர் பீமராவ், சம்ஸ்கிருத பண்டிதர்கள் எனப் பல விற்பன்னர்கள் பணியாற்றினர். சுவடியியல் வல்லுநர்களான அவர்களிடமிருந்து கிடைத்த செய்திகள் எனது ஆய்வுகளுக்கு, தேடல்களுக்குத் துணைநின்றன. கள ஆய்வில் நான் பெற்ற தகவல்களையும் அவர்கள் கூறிய இலக்கிய, வரலாற்றுச் செய்திகளையும் ஒப்புநோக்கி பல அரிய உண்மைகளை அறிந்துகொள்ள முடிந்தது. தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி நூல்களிலிருந்தும் பல செய்திகளை அறிந்துகொண்டேன். பல நூல்களை எழுத அது காரணமானது. அந்த அனுபவங்கள் என் வாழ்வின் பொக்கிஷம்.
கே: உங்களது கண்டுபிடிப்புகள் பற்றி… ப: எனது ஆய்வுகளுள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று 'நந்திபுரம் ஆயிரத்தளி' பற்றியது. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காஞ்சிபுரம் தனக்குப் பாதுகாப்பில்லை என்று கருதிய காரணத்தால், சோழநாட்டில் ஒரு பாதுகாப்புமிக்க தலைநகரை உருவாக்கினான். அதுதான் நந்திபுரத்து ஆயிரத்தளி என்பது. ஆயிரத்தளி என்றால் ஆயிரம் சிவலிங்கங்களைக் கொண்ட பெருங்கோயில். நந்திபுரம் அதன் தலைநகர். பல்லவர், சோழர்களைப் பற்றி ஆராய்ந்த வல்லுநர்கள் எல்லாருமே இந்த நந்திபுரம் பழையாறையை அடுத்துள்ள நாதன்கோயில் என்பதாகத்தான் பதிவு செய்துள்ளனர். பழையாறையில் சோழ அரண்மனைகள் பல இருந்துள்ளன. பல்லவர்களின் அரண்மனையும் அங்கே இருந்திருக்கிறது. அதை வைத்து அவர்கள் அப்படி முடிவுகட்டினர்.
நானும் பல ஆண்டுகள் இதுபற்றி ஆராய்ந்தேன்; கல்வெட்டுச் சான்றுகளைப் பரிசீலித்தேன். Indian National Trust for Art and Culture (INTAC) ஒருமுறை கண்டியூர் கோயிலைப்பற்றி எழுதுவதற்கான ஆய்வுத் திட்டத்தை எனக்கு அளித்தது. நான் கண்டியூரில் கள ஆய்வு செய்தேன். அப்போது தஞ்சையருகில் வீரசிங்கம் பேட்டையில் ஒரு தோட்டத்தில் நிறையச் சிவலிங்கங்கள் உள்ளதாகவும், எங்கு தோண்டினாலும் சிவலிங்கமாக வருவதாகவும் செய்தி கிடைத்தது. உடனே நான் அங்கு சென்று ஆராய்ந்தேன். அதுதான் நந்திபுரத்து ஆயிரத்தளியாக இருந்திருக்க வேண்டும் என்று யூகித்தேன். அதற்கான தேடல்களைத் தொடர்ந்தேன். அரண்மனை, கோயில் இருந்த இடம், ஏன் அந்தக் கோயில் அழிந்தது என்பதையெல்லாம் ஆராய்ந்தேன். மாலிக்காபூர் படையெடுப்பில் அழிந்த கோயில்களுள் அதுவும் ஒன்று. அதற்கான ஆதாரத் தரவுகளைச் சேகரித்தேன். எழுநூறுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால், மேலும் வலுவான சான்று தேவைப்பட்டது. அப்போதுதான் சுந்தர பாண்டியன் கல்வெட்டு ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைத்தது. அதில் ஆதாரம் இருந்தது.
கே: ஓ.. சுவாரஸ்யம். அந்தக் கல்வெட்டில் என்ன இருந்தது? ப: மாறவர்மன் சுந்தர பாண்டியன், சோழநாட்டைக் கைப்பற்றி அதன் பழைய தலைநகரங்களான உறையூர், தஞ்சாவூர், பழையாறை போன்ற நகரங்களை அழித்துவிட்டுவிஜயாபிஷேகம் செய்துகொண்டது நந்திபுரத்து ஆயிரத்தளி அரண்மனை என்று தனது மெய்க்கீர்த்தியில் குறிப்பிட்டிருக்கிறான். வெற்றிக் கொண்டாட்டமாகச் சில ஊர்களையும் ஆலயங்களுக்கு நிவந்தமாக அளித்திருக்கிறான். அதனைப் பற்றி கல்வெட்டில் "சோழமண்டலத்து நித்த வினோத வளநாட்டு, கிழார் கூற்றத்து நந்திபுரத்து ஆயிரத்தளி அரண்மனையில் அமர்ந்து" செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறான். இது ஒரு முக்கியமான ஆதாரம்.
சோழநாட்டில் மூன்று நந்திபுரங்கள் இருந்திருக்கின்றன. ஒன்று வேதாரண்யம் பக்கத்தில்; மற்றொன்று பழையாறை அருகில்; மற்றொன்று இந்த நந்திபுரம். பழையாறை நந்திபுரம் திருநரையூர் கூற்றத்தில் இருந்திருக்கிறது. வேதாரண்யம் நந்திபுரம் ஆவூர் கூற்றத்தில் இருந்திருக்கிறது. கிழார்கூற்றத்தில் அமைந்த ஒரே நந்திபுரம், தஞ்சைக்கருகே கண்டியூர் பகுதியில் அமைந்திருக்கும் இதுதான் என்பது உறுதியானது. அதை மெய்ப்பித்து 'நந்திபுரம்' என்ற நூலை எழுதினேன். INTAC அந்நூலை வெளியிட்டது.
கே: நாயக்கர் வரலாறு பற்றியும் நீங்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள் அல்லவா? ப: ஆம். நாயக்கர்களின் வரலாறு முன்னமே எழுதப்பட்டிருந்தாலும் சரியான ஆவணத்தரவுகளின்படி இல்லை. அமரர் விருத்தகிரீசன் அண்ணாமலை பல்கலைக்கழகம் மூலம் ஆங்கிலத்தில் நாயக்கர் வரலாற்றை எழுதியிருந்தார். அவரும் அந்த நூலில் "சமகாலச் சான்றுகள் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் 25-30 ஆண்டுகளாகத் தேடி, ஆராய்ந்து ஆவணங்களைத் திரட்டினேன். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலம் கிடைத்த செய்திகளைக் கொண்டும், சரஸ்வதி மகால் சுவடிகளைக் கொண்டும், தெலுங்கு, சம்ஸ்கிருத, மராட்டிய நூல்கள், வல்லுநர்களின் உதவியைக் கொண்டும் முறையாகத் தொகுத்து நூலாக்கினேன். அதுதான் 'தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு'. அது திருத்தமான, தெளிவான, அதிகாரபூர்வமான வரலாற்று ஆவணமாகும். எனக்குப் புகழ்சேர்த்த நூல்களுள் அதுவும் ஒன்று. |
|
|
கே: பழங்காலக் கோயில்கள் பல இன்னமும் காணப்படுகின்றன. ஆனால் மன்னர்களின் அரண்மனைகள் அதிகம் காணக் கிடைப்பதில்லை. இதற்கு என்ன காரணம்? ப: தஞ்சையில், உறையூரில் அரண்மனைகள் இருந்துள்ளன. பூம்புகாரில் கடல் கொண்டுவிட்டது. கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்பானதொரு அரண்மனை இருந்திருக்கிறது. பழையாறையில் சோழர் வாழ்ந்த 'சோழன்மாளிகை' என்ற இல்லம் இருந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் அழிந்து போய்விட்டன. காரணம், தமிழ் மன்னர்களிடையே நிலவிய பகை. இது சங்ககாலம் முதலே தொடர்ந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டியர் மூவருமே பலமான மன்னர்களாக அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள். சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, பிற்காலச் சோழர்கள் ஆட்சியமைந்தபோது பாண்டியர்கள் வலிமை குன்றினார்கள். சோழர்களின் கை ஓங்கியது. ஏறத்தாழ 430 ஆண்டுகள் சோழர்கள், பாண்டியர்களைத் தமது ஆதிக்கத்தின்கீழ் அரசர்களாக வைத்திருந்தார்கள். அதற்குச் சோழ பாண்டி மண்டலம் என்றே பெயர் இருந்தது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிலைமை மாறியது. பாண்டியர்கள் சோழ ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். இதனால் வெகுண்ட குலோத்துங்கன், பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டியனைத் தோற்கடித்து, அவர்களது அரண்மனையைத் தரைமட்டமாக்கினான். கழுதையைக் கொண்டு, உழுது வரகு தெளித்தான். அரண்மனையிலிருந்து கைப்பற்றிய பெருஞ்செல்வத்தை ஆலவாய் அண்ணல் கோயிலுக்கு எடுத்துச் சென்று, அவர் காலடியில் சமர்ப்பித்து, அவருக்குப் பெருவிழா எடுத்து வீதியில் நின்று இறைவனைச் சேவித்ததாக அவனது மெய்க்கீர்த்தி சொல்கிறது. பின்பு சோழநாடு திரும்பும் வழியில் இருந்த பொன்னமராவதி, குடுமியான்மலை போன்ற ஊர்களில் ஆலயங்களுக்குக் கொடை கொடுக்கிறான். சோழநாட்டுக்கு வந்தபின்பு பாண்டி நாட்டிலிருந்து கொண்டுவந்த நிதியைக்கொண்டு ஆலயங்களுக்குச் சிறப்புச் செய்கிறான். பகை மன்னர்களிடமிருந்து கைப்பற்றிய செல்வத்தை கோயில்களுக்குத்தான் அளித்திருக்கிறான் என்பது அவன் வரலாற்றிலிருந்து தெரியவருகிறது.
சோழர்களுடைய வலிமை மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் குறையும்போது மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டின்மீது படையெடுத்து வந்து அதன் தலைநகர்களை அழித்தான். இதுபற்றி அவன் மெய்க்கீர்த்தியில் "தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி" என்று சொல்கிறான். தஞ்சை, பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனைகளை இடித்தான். கழுதைகட்டி உழுது வரகு தெளித்தான். பின்னர் சோழநாட்டின் நந்திபுரத்து ஆயிரத்தளி அரண்மனையில் விஜயாபிஷேகம் செய்து கொண்டான். அவனும் சோழநாட்டில் கவர்ந்த செல்வங்களைக் கொண்டு சோழ, பாண்டிய நாட்டு ஆலயங்களுக்கு நிவந்தங்கள் அளித்தானே தவிர, சோழநாட்டுக் கோயில்களை அழிக்க முற்படவில்லை. தில்லை கோயிலுக்கு பெருஞ்செல்வத்தை அளித்தான். குலோத்துங்க சோழன் முன்னர் அளித்திருந்த கோயில் அறக்கொடைகளைத் தொடரச் செய்தான். அதற்காக புதிய அறக்கொடைகளையும், தன் பெயரில் நிவந்தங்களையும் அளித்தான். மன்னர்களின் பகையால் அரண்மனைகள் அழிந்தன. ஆனால் ஆலயங்கள் நிலைத்து நின்றன. திருவெள்ளறையில் உள்ள வைணவ ஆலயத்தில் தன் வெற்றிகுறித்த கல்வெட்டு ஒன்றையும் சுந்தர பாண்டியன் பொறித்திருக்கிறான். அதில் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது.
கே: ஓ... சொல்லுங்களேன்? ப: கரிகாற் பெருவளத்தானைப் புகழ்ந்து கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலை பாடினார். அதுகண்டு மகிழ்ந்த அவன், புலவருக்கு பதினாறாயிரம் பொன்னும் பதினாறுகால் மண்டபம் ஒன்றையும் பரிசாகக் கொடுத்தான். சோழநாட்டின்மீது படையெடுத்து வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆலயங்கள் தவிர்த்து அனைத்து அரண்மனைகளையும், மண்டபங்களையும், அரசியல் கேந்திரங்களையும் அழித்தான். அவன் பறிக்காத தூணில்லை. அழிக்காத மண்டபமில்லை. ஆனால் கரிகாலன் புலவனுக்குக் கொடுத்த அந்தப் பதினாறுகால் மண்டபத்தை மட்டும் அழிக்காமல் விட்டுவிட்டான். பகைவனான சோழனைப் புகழ்ந்து பாடியதற்கான பரிசில் என்றாலும், ஒரு தமிழ்ப் புலவன் பெற்றதென்பதால் அதை அழிப்பது தகாது என்றெண்ணி அதைமட்டும் விட்டுவிட்டான். அதுபற்றி அந்தக் கல்வெட்டில், "பறியாத தூணில்லை; கண்ணன்செய் பட்டினப்பாலை கண்டு நெறியான் விடும் தூண் பதினாறும் அங்கு நின்றனவே" என்று சொல்லியிருக்கிறான். மன்னர்கள் தங்களுக்குள் பகைவர்களாக இருந்தார்களே தவிர, அந்தப் பகைமை மக்களோ ஆலயங்களோ அழிவதற்குக் காரணமாக இருக்கவில்லை. அவர்களுக்கு தர்மம் பகையல்ல. இதுதான் நம் தமிழ் மன்னர்களின் தனிப்பட்ட சிறப்பு என்றும் சொல்லலாம்.
கே: வரலாற்றாய்வுகளின் இன்றைய நிலை எப்படி உள்ளது? ப: கல்வெட்டுக்கள், செப்பேடுகளைப் பரிசீலித்து இன்றைக்கு வரலாறுகள் எழுதப்படுகின்றன. ஓலைச்சுவடிகளும் பயன்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆங்கிலேயர்கள் காலத்திலேயே அவை பதியப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றன. முதலில் அவை ஊட்டியில் பாதுகாக்கப்பட்டு வந்தன. நாடு சுதந்திரம் பெற்றபின்னர் நமது அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்காலும் பொறுப்பின்மையாலும் அவை மைசூருக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. அதனால் இன்றைக்கும் ஏதாவது விவரத்தைச் சரிபார்க்க, ஒப்பிட அல்லது மூலப்படியைப் பார்க்க வேண்டுமென்றால் மைசூருக்குப் போகவேண்டியிருக்கிறது. அதிலும் அனுமதி, மொழிப்பிரச்சனை என்று பல்வேறு தடைகள். எல்லா ஆய்வாளர்களுக்கும் அது சாத்தியமில்லை. தற்போதிருக்கும் தொழில்நுட்பத்தில் அந்தப் பதிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து வைக்கலாம். அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்படிப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
உதாரணமாகச் சில விஷயங்கள். 1915-20 காலகட்டத்தில் திருவிடைமருதூர் ஆலயக் கல்வெட்டுகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவுசெய்தனர். அது பராந்தக சோழன் கட்டிய கோயில். நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள். படியெடுத்தவர் ஓர் ஆங்கிலேய ஆய்வாளர். அப்போது அங்கே ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்ய வந்தவர்கள் கல்வெட்டுக்களை அகற்றினர். ஆய்வாளர் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அஞ்சிய அந்த ஆய்வாளர், பல உதவியாளர்களைக் கொண்டு கல்வெட்டுக்கள் அனைத்தையும் பதிவுசெய்து மைசூரில் கொண்டுபோய் வைத்துவிட்டார். அதை அச்சிலும் கொண்டுவந்து விட்டார்கள்.
இன்றைக்குத் திருவிடைமருதூர் ஆலயத்தில் ஒரு கல்வெட்டுகூடக் கிடையாது. அத்தனை சாசனங்களையும் தூக்கி எறிந்துவிட்டு புதிய தூண்களைக் கொண்டுவந்து கட்டிவிட்டார்கள். கல்வெட்டுக்கள் காணாமல் போய்விட்டன. ஒரு கோயிலின் நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்களை ஒரே ஒரு திருப்பணி செய்து நாம் அழித்தோம். இதுமாதிரி பல ஆலயங்களில் நடந்திருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள திருவிடைவாயில் கோயிலில் சம்பந்தர் பாடிய பதிகம் ஒரு கல்வெட்டில் இருந்தது. குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு அது. அது இந்தியத் தொல்லியல் துறையினரால் மைப்படி எடுத்து, மைசூரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது ஆனால். பின்னர் அந்த ஆலயம் புனரமைக்கப்பட்ட போது அந்தக் கல்வெட்டு அழிக்கப்பட்டது. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.
இன்றைக்கு வரும் முனைவர் பட்ட ஆய்வேடுகளில் பலவற்றின் தரம் கேள்விக்குறிதான். வழிகாட்டிப் பேராசியர்களால் (Guide) பணம் வாங்கிக்கொண்டு எழுதப்படுவதாக அல்லது எழுத வைக்கப்படுவதாகவும், தரக்குறைவானதாகவும் பல ஆய்வேடுகள் உள்ளன. அதுபோலப் பல பேராசியர்களுக்கு நிறைய ப்ராஜெக்டுகள் கிடைக்கின்றன. அவர்களும் ஆய்வு செய்கிறார்கள். ஆனால் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யப்படுபவை வெகு சிலதான். பணம், புகழ், அங்கீகாரத்துக்காகவே பல செய்யப்படுகின்றன. அதனால் தரமில்லாததாக உள்ளன. பல்கலைக்கழக ஆய்வேடுகளை மீண்டும் எடுத்து ஆய்ந்தால் அதில் 25 சதவீதமாவது தேறுமா என்பது ஐயம். அந்த அளவுக்குத் தமிழ்நாட்டின் கல்விநிலை தரந்தாழ்ந்துவிட்டது வருத்தத்திற்குரியது.
கே: ஆலயத் திருப்பணிகளால் பண்டைய சிற்பங்கள், ஓவியங்கள் பாதிக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு குறித்து... ப: உண்மைதான். ஆலயப் புனரமைப்புக்கு நிதி கிடைக்கிறது என்பதற்காகவே முறையற்ற விதத்தில் செலவழிக்கப்படுகிறது. உதாரணமாக, தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை உலக மரபுச்சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அதன் புனர்நிர்மாணப் பணிகளுக்காக நிதி நல்கப்பட்டுள்ளது. துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு அந்தப் பணிகளைச் செய்யாமல் தனியார் ஒப்பந்ததாரர்களைக் வைத்துப் பணிகளைச் செய்கின்றனர். ஆந்திராவில் இருந்து கூலித் தொழிலாளர்களை அழைத்துவந்து ஒரு மண்டபத்தை ஒப்பந்ததாரர் புனர்நிர்மாணம் செய்தார். அந்த மண்டபத்தை முழுவதும் பிரிக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு தூண் மட்டுமே சிதிலமடைந்து இருந்தது. அதை எடுத்துச் செப்பம் செய்தாலே போதும். ஆனால் செலவுக் கணக்கைக் கூடுதலாகக் காட்டி ஆதாயம் அடைவதற்காக மண்டபத் தூண்கள் முழுவதையுமே எடுத்து உடைத்து புதுத்தூண்களை வைத்துவிட்டார்கள். அந்தத் தூண்கள் நான்கில் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் இருந்தன.
தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி பகுதி-2ல் அது பதியப்பட்டும் இருக்கிறது. அதனுடைய மைப்படி மைசூரில் இருக்கிறது. நான்கு தூண்களையும் கீழே தள்ளி தூள்தூளாக உடைத்துவிட்டார்கள். அந்தச் செயலைத் தடுக்க முற்பட்டும் பலனில்லை. அதை நான் நேரடியாக ஆவணப்பதிவு செய்திருக்கிறேன். அதுகுறித்து உயரதிகாரிகளுக்கு நானும் தி.நா. ராமச்சந்திரன் அவர்களும் தகவல் தெரிவித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. கடைசிவரை 'அப்படி ஏதும் நடக்கவே இல்லை' என்று மறுத்தே வந்தார்கள். மேலதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. தற்போதைக்குப் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால், நாம் இழந்தது இழந்ததுதான். பாதுகாக்க வேண்டிய தொல்லியல் துறையே அழிவுக்குக் காரணமாகி விட்டது மிகப்பெரிய அவலம்.
இந்து அறநிலையத் துறையே நமது பாரம்பரியச் செல்வங்களின் அருமை புரியாமல் sand blasting செய்தும், பண்டை ஓவியங்களின் மீது புதிய பெயிண்ட் அடித்தும் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்நியப் படையெடுப்பால் அழிந்ததைவிட, நமது அரசுகள், துறைகளின் அலட்சியத்தாலும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையாலும், திருப்பணி என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களினாலும் அழிந்தவை அநேகம் என்பதுதான் உண்மை.
கே: பாகுபலி படத்தில் வருவதைப் போலவே சிவலிங்கத்தைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு செல்லும் ஒரு சிற்பம் பற்றிச் சமீபத்தில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது குறித்து விளக்கமுடியுமா? ப: பாகுபலி படம் நான் பார்க்கவில்லை. டி.வி.யில் ஒருவர் தோளில் சிவலிங்கம் ஒன்றைத் தூக்கிவரும் காட்சி ஒன்றைப் பார்த்திருக்கிறேன். நமது வரலாற்றிலும் இதுபோன்ற சிற்பம் இருக்கிறது. சோழர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பழுவேட்டரையர்களும், கொடும்பாளூர் வேளிரும். சோழப்பேரரசின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தவர்கள் இவர்கள். இருவருடனுமே சோழ மன்னர்களுக்கு மணவினைத் தொடர்பு இருந்தது.
மேலப்பழுவூரில் அவனிகண்ட ஈசுவர கிரகம் என்ற கோயில் உள்ளது. பொதுவாக சோழர்களின் சிற்பமரபிற்கும், பழுவேட்டரையர், கொடும்பாளூர் மரபுகளுக்கும் சிறு சிறு அழகியல் ரீதியான வேறுபாடுகள் உண்டு. இந்தப் பழுவேட்டரையர் கோயிலின் மேல்மாடத்தில் இருக்கும் ஒரு சிற்பம் தோள்மீது சிவலிங்கத்தைத் தாங்கியிருக்கிறது. 10, 15 ஆண்டுகளாக அதை ஆராய்ந்தும் அது யாரென்று பிடிபடவில்லை. அண்மையில் கொடும்பாளூர் மூவர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த சிற்பங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது மேலே விமானத்தில் பழுவூரில் பார்த்ததுபோன்றே சிவலிங்கத்தைத் தோளில் தாங்கிய சிற்பம் ஒன்று இருந்தது. இரண்டு சிற்பங்களும் ஒரேமாதிரி இருந்தன. அதை ஆராய்ந்து பார்த்தபோது அது சிவன் என்பது தெரிந்தது. மான் ஒரு கரத்திலும், அக்ஷமாலை மற்றொரு கரத்திலும் உள்ளது. சிவனுக்குரிய மற்ற அங்க அடையாளங்களும் இருந்தன. பின்னர் பழுவூர்ச் சிற்பத்தையும் மீண்டும்ஆராய்ந்து பார்த்தபோது அதுவும் சிவனே என்பது தெரிந்தது. இது ஒரு ஆச்சரியமான விஷயம். மேலும் ஆராய்ந்தேன்.
கே: ம்.. சொல்லுங்கள்? ப: சைவசமயத்தில் இருந்த உட்பிரிவுகளில் ஒன்று காளாமுக பாசுபதப் பிரிவு. இப்பிரிவினர் ராஜராஜன், ராஜேந்திரன் போன்றவர்களுக்கு குருவாக இருந்திருக்கின்றனர். இவர்களுக்கு ஆலயங்களை நிர்வகிப்பது, பள்ளிப்படைக் கோயில்களைப் பாதுகாப்பது உட்படப் பல பொறுப்புகள் இருந்தன. அவர்கள் ஆலயப் பொறுப்பில் இருந்தபோது பல சிவ வடிவங்களை நிர்மாணித்தனர். பல்லவர் காலத்து நந்திபுரத்து ஆயிரத்தளியும் அவர்கள் பொறுப்பில்தான் இருந்திருக்கிறது. அங்கே வாகீசசிவ வடிவம் கிடைத்திருக்கிறது. தாமரை மலரில் சிவன் அமர்ந்திருப்பார். நான்கு கரங்களில் ஏட்டுச்சுவடி, சூலம், அக்ஷமாலை, தாமரைமொக்கு ஆகியவற்றை வைத்திருப்பார். அவருக்கு நான்கு தலை இருக்கும். ஆரம்பகால அறிஞர்கள் நான்கு தலையைப் பார்த்து பிரம்மா என்று முடிவுகட்டிவிட்டனர். அவர் வாகீசசிவன். சிவனுக்கு மட்டுந்தான் ஒரு காதில் குழை மற்றொரு காதில் பத்ரகுண்டலம் மற்றும் நெற்றிக்கண் உண்டு. இந்தப் பகுதியில் (கண்டியூர், நந்திபுரத்து ஆயிரத்தளி) மட்டும்தான் அத்தகைய சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன. வாகீசசிவனின் தேவிக்கு வாகீஸ்வரி என்று பெயர். வேள்வி வளர்க்கையில் வாகீஸ்வரன், வாகீஸ்வரியை முன்னிட்டுத்தான் வேட்கவேண்டும். அப்படிக் காளாமுக பாசுபத சைவப் பிரிவினரின் தாக்கத்தைக் கொடும்பாளூர் மற்றும் மேலப்பழுவூர் ஆலயச் சிற்பங்களிலும் காணமுடிகிறது. அதில்தான் சிவன் தன்னைத்தானே பூஜிக்கும் மரபு இருந்திருக்கிறது. திருமந்திரத்திலும் "தன்னை அர்ச்சிக்கத் தான் இருந்தானே" என்பது உட்படச் சில பாடல்களும் இதற்குச் சான்றாக அமைகின்றன.
திருவையாற்றிலும் காளாமுக மரபு இருந்திருக்கிறது. அங்கும் தன்னைத்தானே அர்ச்சிக்கும் விழா இன்றளவும் நடைபெற்று வருகிறது. சிவலிங்கத்தைத் தோளில் வைத்திருக்கும் சிற்பம் உருவம், அருவுருவம், அருவம் என்ற படிநிலைகளைப் பூஜிக்கும் மரபைக் காட்டுகிறது.
கே: தமிழகக் கோயில்களைப் பற்றி நிறைய ஆய்வுகள் செய்தவர் நீங்கள். கோயில்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? பக்திக்காகத் தானா? ப: பக்தி மட்டுமே இல்லை. சமூக உயர்வுக்காகவும் கோயில்கள் அமைக்கப்பட்டன. அவை வெறும் வழிபாட்டுக் கூடங்களாக இல்லாமல் கலை, சமூகம், பண்பாடு போன்றவை வளரக் காரணிகளாக இருந்திருக்கின்றன. பக்தி என்பது ஒரு 20 சதவீதம்தான். மீதி 80 சதவீதம் சமூகம் சார்ந்தது. தனிமனிதனை நெறிப்படுத்துவதிலிருந்து சமூகத்தை வழிநடத்துவதுவரை பலவிதங்களில் ஆலயங்கள் உதவிகரமாக இருந்திருக்கின்றன. கோயில்கள் பல்கலைக்கழகங்களாக, நூலகங்களாக இருந்திருக்கின்றன. தில்லைக் கோயிலில் உள்ள பாண்டியர் கல்வெட்டில் நூலகப்பராமரிப்பு பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. ராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் ஆலயங்களில் வங்கிகள் செயல்பட்டமையை அறியமுடிகிறது. நிதிசேமிப்பு மற்றும் கடன்தரும் நிறுவனங்களாக ஆலயங்கள் இருந்திருக்கின்றன; நீதிமன்றங்கள் அங்கே செயல்பட்டிருக்கின்றன; ஆவணப்பதிவுகள் இருந்திருக்கின்றன; ஊர்ச்சபை அங்கு கூடியிருக்கிறது; கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் ஆலயங்களில் செயல்பட்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. நீர் மேலாண்மைத் திட்டங்கள் பலவும் ஆலயத்தை மையமாக வைத்தே செயல்பட்டிருக்கின்றன. இன்றளவும் கோயில்களை ஒட்டிக் குளங்களைப் பார்க்கலாம். கோயிலின் மழைநீர் முழுவதும் அந்தக் குளங்களில் சேகரமாகும்படி அமைக்கப்பட்டிருக்கும். சமூகச் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை தரும் அனைத்தும் ஆலயத்தை மையப்படுத்தியே நடந்திருக்கிறது என்பது கல்வெட்டுக்கள் சொல்லும் உண்மையாகும்.
அவர் ஒரு கருத்துக் கருவூலம், வரலாற்றுக் களஞ்சியம். எல்லாவற்றையும் ஆதாரத்துடன் விளக்குகிறார். குன்றாத அவரது ஞானத்தைக் கண்டு வியந்தபடி, நன்றிகூறி விடைபெற்றோம்.
சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்
*****
தஞ்சை பெரியகோயில் தஞ்சை பெரியகோயில் பற்றி துல்லியமாகப் பயின்ற அறிஞர்களுள் மிகச் சிறந்தவர் டாக்டர் நாகசாமி. அவரும் நானும் சேர்ந்தே பெரியகோயிலில் கள ஆய்வுகள் செய்து புதிய விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்கிறோம். பெரியகோயில் விமானம் முழுவதும் தங்கத் தகடுகள் போர்த்தியிருந்த செய்தி அடங்கிய ஒரு கல்வெட்டை நாங்கள் கண்டுபிடித்தோம். ஒரு காலத்தில் அது பொற்கோயிலாக இருந்திருக்கிறது. அதுபற்றிய செய்திகள் நம் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. ஆனால் மாலிக்காபூர் படையெடுப்பிலும், பின்னால் வந்த மதுரை சுல்தான்களின் ஆட்சியிலும் அவையும் இன்னும் பிற பெருஞ்செல்வங்களும் கொள்ளை போய்விட்டன. அந்தச் செய்திகளையும், தஞ்சாவூர் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதையும் மையமாக வைத்து உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது 'தஞ்சாவூர்' என்ற நூலை எழுதினேன். பொது சகாப்தம் 650 முதல் 1850 வரையிலான தஞ்சையின் வரலாறு அது. அதில் தஞ்சை கோயில், சோழர்கால அரண்மனை, நாயக்கர் கால அரண்மனைகளைப் பற்றியும் அதில் எழுதியிருக்கிறேன். விஜயநகரப் பேரரசு மட்டும் இல்லையேல் தமிழர்களின் கலைச்செல்வங்களும் மரபுகளும் என்றைக்கோ சுத்தமாக அழிக்கப்பட்டிருக்கும். விஜயநகர அரசர்களும் அவர்களின் பிரதிநிதிகளாக இருந்த நாயக்கர்களும் இந்த மண்ணின் மைந்தர்களாகவே வாழ்ந்ததால்தான் நமது கலைச்செல்வங்கள் மீட்டெடுக்கப்பட்டன. ஆனால் நாமோ அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம்.
- குடவாயில் பாலசுப்பிரமணியன்
*****
இராஜராஜேச்சரம் எனது படைப்புகளுள் சிறந்ததாகப் பாராட்டப்படுவது தஞ்சை பெரியகோயில் பற்றிய 'இராஜராஜேச்சரம்'. அந்த நூல் உருவாக மிக முக்கியக் காரணம் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள். என்னுடைய சகோதரரும் அவரும் வகுப்புத் தோழர்கள். அவருக்கு தஞ்சாவூர்மீதும் அதன் வரலாறு மீதும் மிகுந்த ஆர்வமுண்டு. நான் தஞ்சை பெரியகோயில் குறித்து ஆராய்ந்து சொல்லும் தகவல்களை மிக ஆர்வமாகக் கேட்பார். 2010ம் ஆண்டு தஞ்சை பெருங்கோயிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி அதைப்பற்றிய முழுமையான நூலை வெளியிடக் கூறினார் சுவாமிகள். அதை வெளியிடுவதற்காகவே சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் ரிஷிகேசத்திலிருந்து வந்தார். அந்தப் பெருமன்னனுக்கு அஞ்சலி செலுத்தவும், பெருங்கோயிலுக்கு மரியாதை செலுத்தவும் அவர் தனது உடல்நிலையைப் பொருட்படுத்தாது வந்தார். அதை மிகப்பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அந்த நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதல் பரிசு கிடைத்தது.
- குடவாயில் பாலசுப்பிரமணியன்
*****
காணாமல் போகும் வரலாறு சுதந்திரத்திற்கு முன்னால் ஆங்கிலேயர்கள் நமது கல்வெட்டுக்களையும், சாசனங்களையும், செப்பேடுகளையும் படியெடுத்துப் பாதுகாத்தனர். சுதந்திரத்திற்குப் பின், இதற்கென்று தனித்துறைகள், பல்கலைக்கழகங்கள், ஆயிரம் நிறுவனங்கள் இருந்தும் நாம் அந்த அளவிற்குச் செய்யவில்லை. ஆங்கிலேயர்கள் செய்ததில் 10% கூட நாம் செய்யவில்லை.அவர்கள் பதிவு செய்ததிலும் 30 சதவீதம்தான் அச்சுக் கண்டுள்ளது. இவையெல்லாம் முழுமையாக வெளிவந்தால்தான் தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றை அறியமுடியும். ஆனால் இதற்கு அரசோ, துறைகளோ, பல்கலைக்கழகங்களோ முயற்சிப்பதில்லை.
- குடவாயில் பாலசுப்பிரமணியன்
*****
மிகப்பெரிய கலை இழப்பு சோழர், பல்லவர் என்ற கலைமரபில் முற்காலச் சோழர்களின் கலைமரபு மிகவும் சிறப்பானது. விஜயாலயன், ஆதித்தன் தொடங்கி செம்பியன் மாதேவி வரையிலான முற்காலச் சோழர் கலைமரபு உலக அளவில் புகழ்பெற்றது. வெளிநாட்டிலிருந்து அவற்றைக் கண்டுகளிக்கவே ஆர்வத்துடன் வருவர். அவர்கள் வரும் நான்கு தலங்கள்: 1) கும்பகோணத்தில் கீழ்கோட்டம் என்று சொல்லப்படும் நாகேஸ்வரன் கோயில். 2) தஞ்சையருகே இருக்கும் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில். 3) திருச்சி-நாமக்கல் வழியில் சீனிவாச நல்லூரில் இருக்கும் குரங்கநாதர் சிவாலயம். 4) மயிலாடுதுறை அருகே புஞ்சை ஆலயம். இந்த ஆலயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்ட பிறகுதான் சோழர் கலைக்கு உள்ளேயே வருவார்கள். கீழ்கோட்டம் எனப்படும் நாகேஸ்வரன் கோயில் ஆதித்தன் காலத்துக் கற்றளி. சோழமரபும் பல்லவமரபும் இணைந்த கலை அது. அந்தக் கோயிலில் 56 பேனல்களில் 6 அங்குல நீளம், 4 அங்குல உயரத்தில் ராமாயணம் முழுவதும் மினியேச்சர் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல சிவபுராணம் முழுவதும் செதுக்கப்பட்டிருந்தது. அண்மையில் நடந்த மகாமகத்தின் போது சீரமைக்கிறேன் என்ற பெயரில், இந்துசமய அறநிலையத் துறையினர் sand blasting, water blasting செய்யக்கூடாது என்ற ஆணையை மீறிச் செய்து அத்தனை சிற்பங்களையும் பாழாக்கி விட்டார்கள். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கலை இழப்பு இதுதான்.
- குடவாயில் பாலசுப்பிரமணியன்
*****
கோவிலா? குளியலறையா? தனியார் தரும் நிதியைச் செலவழிப்பதற்காக, நன்றாக இருக்கும் கோயில் சுவர்களை மாற்றி டைல்ஸ் ஒட்டியும், தரைத்தளத்தில் டைல்ஸ், கிரானைட் ஒட்டியும் பாழாக்குகிறார்கள். உண்மையைச் சொன்னால், கோயில்களைக் குளியலறை, கழிப்பறை போன்று ஆக்கி வருகிறார்கள். அதில் முதியவர்களும் குழந்தைகளும் வழுக்கி விழுந்து, காயம்பட்டுக் கொள்கிறார்கள். அறநிலையத் துறை மட்டுமல்ல, மடாதிபதிகளும்கூட தங்கள் நிர்வாகத்தில் இருக்கும் கோயில்களில் இந்த மாற்றங்களைச் செய்வது அவலம். திருவையாறில் ஐயாறப்பர் ஆலயத்துடன் வடகைலாயம், தென்கைலாயம் என்று மொத்தம் மூன்று கோயில்கள். அங்கே வெளிநாட்டில் இருந்துவரும் நிதியைச் செலவழிப்பதற்காக நல்ல கற்களை எடுத்துவிட்டுத் தரையில் கிரானைட்டைப் பதித்திருக்கிறார்கள்; பழைய ஓவியங்களின் வண்ணம் பூசியிருக்கிறார்கள். இப்படிச் செய்கையில் பண்டைக் கல்வெட்டுக்கள் தாமாகவே அழிந்துவிடுகின்றன. எதிரிகளால் அழிக்கப்பட்ட காலம் போய், அலட்சியம், பொறுப்பின்மை, பொருளீட்டும் நோக்கம் போன்றவற்றால் நம்மவர்களாலேயே அழிக்கப்படும் காலகட்டத்தில் இருக்கிறோம். இது கண்டனத்திற்குரியது. இந்த நிலை நீடித்தால் இன்னும் நூறாண்டுகளில் தமிழகத்தில் எந்தக் கலைச்செல்வமும் எஞ்சியிருக்காது.
- குடவாயில் பாலசுப்பிரமணியன்
*****
ஏழு பல்லவச் சிற்பிகள் மகாபலிபுரத்தை அடுத்த பூஞ்சேரி என்ற கிராமத்திலுள்ள "நொண்டிவீரன் குதிரைத் தொட்டி" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பாறையிலும் அதையடுத்துள்ள சிறு சிறு குன்றுகள் போன்ற பாறைகளிலும், கேவாத பெருந்தஞ்சன், சாதமுத்யன், திருவொற்றியூர் ஆபாஜன் என ஏழு பல்லவச் சிற்பிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நான்குவழிப் புறச்சாலை அமைப்பதற்காக இவற்றின்மீது மண்ணைப் போட்டு மூடிவிட்டனர். அப்படிச் செய்ததில் மூன்று சிற்பிகளின் பெயர்கள் மண்ணுக்குள் அமிழ்ந்துவிட்டன. நால்வர் பெயர்கள் கொண்ட பாறைகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. இதையறிந்த நான் தமிழ் இந்து நாளிதழில் கோரிக்கை வைக்க, மண் கொட்டுவதை நிறுத்தியிருக்கின்றனர். ஒருசிலர் மட்டுமே எதிர்ப்புக் குரல் கொடுக்க முடிகிறது. பணபலம், அதிகாரபலத்தின் முன்னால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. திருப்பணி செய்பவர்களின் அறியாமை ஒழிய வேண்டும். அப்போதுதான் நமது கலைச்செல்வங்களை எதிர்காலச் சந்ததியினருக்குக் கொண்டுசெல்ல முடியும்.
- குடவாயில் பாலசுப்பிரமணியன் |
|
|
|
|
|
|
|
|