Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பெற்ற கடன்
- கௌரி கிருபானந்தன், சாரதா|ஏப்ரல் 2016|
Share:
"திருமண சந்தடி முடிந்து வீடு வெறிச்சோடிவிட்டது இல்லையா?" மனைவி சுமதியிடம் சொன்னார் ராஜன்.

அவர்களுடைய இரண்டாவது மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் முடித்தார்கள். பொறுப்புகள் முடிந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் இருந்தார்கள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்ததால் குழந்தைகளின் படிப்பும், திருமணமும் முடித்தபோதும் கடன் தொல்லை இருக்கவில்லை.

"இனி நீ வேலையை விட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொள் சுமதி" என்றார் ராஜன்.

"வேலையை விட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்துகொண்டால் போர் அடிக்காதா?" சுமதி முறுவலித்தாள்.

"இத்தனை நாளும் கஷ்டப்பட்டது போதும். எங்க அப்பா அம்மாவுக்கும் வயது எழுபதுக்கு மேலாகிவிட்டது. பாவம் பத்து வருடங்களாய் என் தம்பியிடம்தான் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து வந்து நம்முடன் வைத்துக்கொள்வோம். நீ வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டாயானால் உனக்கும் ரெஸ்ட் கிடைத்தாற்போல் இருக்கும். அவர்களைப் பார்த்துக்கொள்வதிலும் சிரமம் இருக்காது."

'அதை நீங்களே செய்து, அந்த ரெஸ்ட்டையும் நீங்களே எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு பணிவிடை நீங்களே செய்யலாமே' என்று ஒருநாளும் சொல்லமாட்டாள் அவள். ஆனால் அவனுடைய இருமனப் போக்கையும், அதற்கு ஆதரவு தரும் இந்தச் சமுதாயத்தின் கோட்பாடுகளையும் அவளால் புரிந்துகொள்ள முடியும். அதனால் உணர்ச்சியற்ற சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து போய்விட்டாள். எண்பது வயது கடந்து எங்கேயோ தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் தாய் நினைவிற்கு வந்தாள்.

சரியாக ஆறுமாதங்களுக்கு முன்தான் இதே போன்ற பிரஸ்தாபனையை இவள் கொண்டுவந்தாள்.

"எங்க அம்மாவுக்கு ரொம்ப வயதாகிவிட்டது. தனியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளை அழைத்து வந்து நம்முடன் வைத்துக் கொள்வோமா?" என்று கேட்டாள்.

"நம்முடனா? எப்படி முடியும்? நீ ஆபீசுக்குப் போய்விட்டால் அவங்க வீட்டில் தனியாக இருக்க வேண்டியிருக்குமே?"

சிரிப்பு வந்தது சுமதிக்கு. "இங்கேயானால் வெறும் எட்டு மணி நேரம்தான் தனியாக இருக்கணும். அங்கே இருபத்திநான்கு மணி நேரமும் தனியாகத்தானே இருக்கிறாள்?"

"நமக்கு குழந்தைகளின் படிப்பும், பணப் பிரச்னையும்...."

"அம்மா பொருளாதாரரீதியாக நம்மைச் சார்ந்திருக்கப் போவதில்லை. அவளுடைய பென்ஷன் அவளுக்கு வரும்." சுமதியின் பொறுமை நசிந்துபோய்க் கொண்டிருந்தது.

"எங்க அம்மா அப்பா என்ன சொல்வார்களோ?"

ஐம்பது வயது கடந்து, இருபத்தைந்து வருடங்களாய் தன்னுடன் குடித்தனம் நடத்தி வந்த கணவனை முதல்முறையாக பார்ப்பதுபோல் பார்த்தாள் சுமதி.

"இதில் அவர்கள் சொல்வதற்கு என்ன இருக்கிறது?"

"அவர்களுக்கும் நம்முடன் வந்து இருக்கணும்னு இருக்காதா?"

"எங்க அம்மா நம்மோடு இருந்தால் அத்தையும் மாமாவும் நம் வீட்டுக்கு வரக்கூடாது என்று அர்த்தமா? பலமுறை கேட்டிருக்கிறேன் நம் வீட்டுக்கு வரச் சொல்லி. அவர்கள்தான் உங்கள் தம்பியிடம் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் மூவரையும் நாம் நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும். எப்படியும் திருமணம் முடிந்து ராதிகா புகுந்தவீட்டுக்குப் போய்விடுவாள். அப்படியும் வீடு போறாது என்று நினைத்தால் இன்னும் பெரியவீடாகப் பார்ப்போம்" உற்சாகத்துடன் சொன்னாள் சுமதி.

"அதெல்லாம் நடக்கிற காரியமாக எனக்குத் தோன்றவில்லை. உங்க அம்மா நம் வீட்டில் இருந்தால் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? உங்க அம்மாவுக்கும் எங்க அம்மாவுக்கும் நடுவில் ஏதாவது சண்டை வந்தால் என்ன செய்வது? எனக்கு இதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. நன்றாக யோசித்துக்கொள்."

அப்படிச் சொன்னாரே தவிர, அதற்கடுத்து ஒரு வாரம் முகம் கொடுத்துப் பேசவே இல்லை. தான் மறுபடியும் அந்தப் பிரஸ்தாபனையை கொண்டுவரமாட்டாள் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் பழைய நிலைக்குத் திரும்பினார்.

"உடன்பிறந்தான் இல்லாத இடத்தில் பெண்ணை எடுத்தால் அந்தப் பெண்ணின் பெற்றோரை தள்ளிவைப்பது கஷ்டம்" மாமியார் சொன்னது நினைவுக்கு வந்து மனம் வேதனையில் சுருண்டுவிட்டது.

"என்ன? கோயம்புத்தூருக்கு மாற்றலாகிவிட்டதா?" வாயைப் பிளந்தார் ராஜன்.

"நான்தான் கேட்டு வாங்கிக் கொண்டேன்." அமைதியாகச் சொன்னாள் சுமதி.

"என்னிடம் கேட்காமல் எதற்காக மாற்றல் வாங்கிக்கொண்டாய்?"

சொன்னாலும் கணவருக்குப் புரியாது என்று நினைத்தாளோ என்னவோ மெளனமாக இருந்துவிட்டாள்.

"இப்போ என்ன செய்வது? எனக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்காது. இங்கே ஒருத்தர் அங்கே ஒருத்தர். எங்க அம்மா அப்பாவைக் கூப்பிடுவோம் என்றால் அம்மாவுக்கோ உடல்நிலை சரியாக இல்லை. எனக்குச் சாப்பாடு எப்படி?"

கணவனை வெறுப்புடன் பார்க்கவேண்டுமென்ற விருப்பத்தை வலுக்கட்டாயமாக அடக்கிக்கொண்டாள். எத்தனை வருடங்கள் குடித்தனம் செய்தாலும் தன்னுடைய மதிப்பு இவ்வளவுதான். தன்னைவிட அதிக வருடங்கள் குடித்தனம் நடத்திய மாமியாரின் மதிப்பு அதேதான். வீட்டில் பெண் என்பவள் இல்லாவிட்டால் சாப்பாடுக்கு என்ன செய்வது என்பதுதானே முக்கியம் எல்லோருக்கும்.

தன்னுடன் வேலை பார்க்கும் சுந்தருடன் சமீபத்தில் நடந்த உரையாடல் அவளுக்கு நினைவு வந்தது.
"உங்கள் மனைவிக்கு பிரசவ சமயம் நெருங்கிக்கிட்டு வருகிறது இல்லையா. யாராவது உதவிக்கு வரப்போறாங்களா, இல்லை, அவங்களே பிறந்தவீட்டுக்குப் போகப் போறாங்களா?" லஞ்ச் நேரத்தில் சுந்தரிடம் கேட்டாள்.

"இங்கேதான் இருப்பாள். சமையலுக்கு எங்க பக்கத்துவீட்டு மாமி உதவி செய்வாங்க."

நிறைமாதப் பிள்ளைத்தாச்சியான மனைவி பார்த்துப் பார்த்து சமைத்து கேரியரில் அனுப்பிவைத்த சாப்பாட்டை திருப்தியாக சாப்பிட்டுக்கொண்டே சொன்னான் சுந்தர்.

'உன்னுடைய சாப்பாட்டைப் பற்றி இப்போ யார் கேட்டார்கள்?' என்று மனதில் திட்டிக்கொண்டே வெளியில் "பாவம் உங்களுடைய சாப்பாட்டுக்கு பிரச்னைதான். ஆனால் பிரசவம் அவங்களுக்கு இல்லையா. மனதளவிலும் உடலளவிலும் அவளுக்கு ஓய்வு தேவை. அதற்காகக் கேட்டேன்" என்றவள் வெறுப்புக் கலந்த பார்வையை அவன்மீது வீசிவிட்டு எழுந்துபோனாள்.

கோயம்புத்தூருக்கு போய்ச்சேர்ந்த பிறகு தாயுடன் நிம்மதியாக வாழத் தொடங்கினாள் சுமதி. தான் வீட்டில் இல்லாத போது தாயைக் கவனித்துக்கொள்ள ஒரு வேலைக்காரப் பெண்ணை ஏற்பாடு செய்தாள்.

'மாப்பிள்ளையைத் தனியாக விட்டுவிட்டு நீ இங்கே இருப்பானேன்?' என்ற தாயின் முணுமுணுப்பை லட்சியப்படுத்தாமல் இருக்கப் பழகிக்கொண்டாள்.

திருமணமான இத்தனை வருடங்களில் மனைவியின் பிடிவாதத்தை முதல்முறையாக உணர்ந்தார் ராஜன். மனைவி இல்லாமல் காலம் தள்ளுவது ரொம்ப சிரமமாக, கொஞ்சம் தனிமையாக இருந்தது. அன்றைய தபாலில் தன் பெயருக்கு வந்த கடிதத்தைப் பார்த்து வியப்படைந்தார்.

*****


உங்களுக்கு,

நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் இங்கே நலம். ரொம்ப வருடங்கள் கழித்து இப்படிக் கடிதம் எழுதுவது வித்தியாசமாக, நன்றாகவும் இருக்கிறது. இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் நம்மை ஓல்ட் ஃபாஷன் என்று சொல்வார்களோ?

என் பிடிவாதத்தைப் பார்த்து நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்களோ தெரியாது. செய்யும் காரியம் சரியானதாக இருந்தால் யாருக்கும் விளக்கம் தர வேண்டியதில்லை என்பது என்னுடைய கொள்கை.

எங்க அம்மாவுக்கு முப்பத்தைந்து வயது ஆகும்போது, திருமணம் ஆன பதினைந்து வருடங்கள் கழித்து இனி குழந்தைகளே பிறக்கமாட்டார்கள் என்ற ஏமாற்றத்தில் இருந்தபோது நான் பிறந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி அதிகநாள் நீடிக்காமலேயே என் தந்தை இறந்து போய்விட்டார். என்னைத் தனியாக வளர்க்கமுடியாது என்ற பயத்தில் என் அம்மா பாட்டியின் வீட்டில் தன்னுடைய அண்ணன்களின் அதிகாரத்திற்குக் கீழே நடுங்கிக்கொண்டே வாழ்ந்துவந்தாள். நமக்குத் திருமணம் ஆகும்போதே இரண்டு மாமாவும் அவர்களின் குழந்தைகளோடு போய்விட்டார்கள், அம்மாவை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடு என்ற அறிவுரையை வழங்கிவிட்டு. அவர்களைக் குறை சொல்லவும் முடியாது. நாளுக்குநாள் விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி இருக்கும் இந்தக் காலத்தில் விதவையாகிவிட்ட தங்கைக்கும், அவளுடைய மகளுக்கும் இருபது வருடங்கள் ஆதரவு தந்ததே பெரிய விஷயம். நமக்குத் திருமணம் ஆனபிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் அம்மா தனியாகவே சின்ன வீட்டில் காலத்தைக் கடத்தினாள். பிறகு தனிமையைத் தாங்கமுடியாமல் பத்து வருடங்களுக்கு முன் முதியோர் இல்லத்தில் சேர்ந்துகொண்டு நாட்களை எண்ணி வருகிறாள். குறைந்தபட்சம் இந்த கடைசி நாட்களிலாவது அம்மாவை என்னுடன் வைத்துக்கொண்டு அவள் மனதிற்கு நிம்மதியைத் தரவேண்டுமென்று விரும்பினேன்.

உங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கு உங்கள் பெற்றோரை உங்களிடம் வைத்துக்கொண்டு அவர்களுடைய நலனை கவனிக்க வேண்டுமென்று நீங்க ஆசைப்பட்டீங்க. அதற்கு என் பங்கிற்கு உண்டான உதவியை நான் செய்ய வேண்டுமென்று விரும்பினீங்க. அப்படியிருக்கும்போது என்னுடைய ஆசை எப்படி அதிகப்படியாக ஆகிவிடுமோ எனக்குப் புரியவில்லை.

எங்க அம்மா என்னை படிக்க வைத்த படிப்பு, அதன் மூலமாய் கிடைத்த வேலை, நான் சம்பாதித்த பணம் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டீர்களே ஒழிய அவளை நம்முடன் வைத்துக்கொள்வோம் என்றால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டீர்களே அது ஏன்?

நம் வீட்டில் மட்டுமே இல்லை. எல்லா இடங்களிலும் அப்படித்தான். தங்கைகளின் திருமணம், தம்பிகளின் படிப்பு போன்ற கடமைகள் இருக்கும் ஆண்மகன் தன்னுடைய திருமணத்தைத் துறக்க வேண்டியதில்லை. கடமைகளில் தன்னுடன் ஒத்துழைக்கும் மனைவியைத் தேடிக்கொள்ளலாம். ஆனால் அதே நிலைமையில் ஒரு பெண் இருந்தால் திருமணம் செய்துகொள்ளாமல் கடமைகளை முடிக்கப் பார்ப்பாள். ஏன் என்றால் தன்னுடன் ஒத்துழைக்கும் கணவன் கிடைப்பான் என்ற நம்பிக்கை இல்லாததால்.

அதிர்ஷ்டவசமாக பொருளாதார ரீதியாகவும் உடலளவிலும் நாம் உங்கள் பெற்றோரையும் என் தாயையும் சேர்த்து ஆதரவு தரக்கூடிய நிலையில் இருக்கிறோம். அப்படி இல்லாத பட்சத்தில் என்ன செய்திருப்போமோ என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை.

வீட்டிலும் வெளியிலும் உங்கள் வேலைகளில், கடமைகளில் நான் மனப்பூர்வமாக ஒத்துழைத்தேன் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை.

என் மனதைப் புரிந்துகொண்டு நீங்கள் ரிடையர் ஆன பிறகு இங்கே வந்தாலும் சரி, இல்லை எல்லோரும் சேர்ந்து இருப்பதற்காக வேறு ஏற்பாடு செய்தாலும் சரி. என்னுடைய ஒத்துழைப்பு என்றும் உங்களுக்கு இருக்கும்.

இப்பொழுதும்
உங்களுடைய
சுமதி.

*****


மூலம்: சாரதா
தமிழில்: கௌரி கிருபானந்தன்
Share: 
© Copyright 2020 Tamilonline