Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
அமெரிக்க அனுபவம்
நிஜமான நினைவுகள்
- கிருஷ்ணா|டிசம்பர் 2015||(5 Comments)
Share:
ஒரு விஷயமாகப் பத்துநாள் சென்னை சென்றேன். இரவு 1:30 மணிக்கு விமானம் சென்னையில் இறங்க, வெளியில் வந்தேன். சுற்றிலும் பார்க்கிறேன். நான் 22 வருடங்கள் வளர்த்த நாடு. "சார் டாக்ஸி" என்றான் ஒருவன். என்னுடன் முதலில் பேசியவன் அவன்தான். சுற்றி பார்க்கிறேன். ஏதோ மன அழுத்தம்.

டாக்ஸியில் ஏறி "அடையார்" என்றேன். இருட்டிலும் சென்னை அழகாக இருந்தது. புதிது புதிதாக ஹோட்டல்கள். "சார் அடிக்கடி சென்னை வருவீங்களா?" என்றான். "2 வருடம் முன்னாடி 1 மாதம் வந்தேன்." "ஏன் சார் ரொம்ப சோகமா இருக்க்கீங்க, எதாவது பிரச்சனையா?" என்றான். அவனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து "இல்லப்பா" என்றேன். பிறகு எதுவும் பேசவில்லை. அடையார் வீட்டை அடைந்தேன். எதிர்வீட்டில் சாவி இருந்தது. அபர்ட்மென்ட்டைத் திறந்து உள்ளே சென்றேன். மதியம் ஏழுமலை வந்து சுத்தம் செய்துவிட்டுப் போயிருந்தான்.

குளித்துவிட்டுப் படுத்தேன். புரண்டு படுத்தேன். இது ஜெட்லேக் இல்லை. 22 வயதில் MS படிக்க அமெரிக்கா சென்று கடந்த 23 வருடங்களாய் அமெரிக்காவில் வாழ்ந்து, வருடம் ஒருமுறை இந்தியா வந்துபோய், குடும்பத்தில் எல்லோருக்கும் கல்யாணம் குழந்தை என்றாகி, 2 வருடங்களுக்கு முன்னால் சிறிய இடைவெளியில் தாய் தந்தையை இழந்து... ஹும்ம்... எவ்வளவு நடந்து விட்டது! பழைய நினைவுகள் மெல்ல வர ஆரம்பித்தன.

சென்னைக்கு வந்து இறங்குகிறேன். வாசலில் வரும்போது "சார் டாக்ஸி" என்று பல குரல்கள். இல்லப்பா பிக்கப் இருக்கு என்று சொல்லும்போதே "கிருஷ்ணா... இங்க" அம்மாவின் குரல்.

பின்னாடி அண்ணா கார் தயாராக இருந்தது. போதாக்குறைக்கு ராஜாமாமா வேறு காருடன் வந்திருந்தார். "சும்மா வீட்டுக்கு வந்தேண்டா. நீ வரேன்னு தெரியும். அதான் அப்டியே நானும் ஏர்போர்ட்டுக்கு வந்தேன்" என்றார். அப்பா வரவில்லை. "தூக்கம் கெட்டுப்போறது. வீட்டுக்கு வரத்தான போறான் எல்லாரும் எதுக்குப் போணும்" அப்டீன்னு சொல்லிட்டாராம். அம்மா சொன்னாள். "உடம்பு ஏண்டா இளைச்சுப் போச்சு?" என்றாள். அம்மாவுக்கு நான் அர்நால்ட் மாதிரி இருந்தாலும் இளைச்சுதான் தெரிவேன் என மனதுள் சிரித்து, வெளியில் அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா என்றேன்.

"நாளைக்கு சந்திரன் சார் வீட்டுக்குப் போகணும். டின்னர் இன்வைட்" என்றாள். "வரதுக்கு முன்னாடியே அஜெண்டா ரெடியா?" என்றேன். அம்மா சிரித்தாள். வீட்டுக்குப் போனதும் சத்தம்போடாமல் உள்ளே பெட்டியைக் கொண்டுவைத்தோம். அப்பா தூங்கிக்கொண்டு இருப்பார் என்று. அருமையான வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு கறி எனக்குப் பிடிக்குமென அம்மா சமைத்து வைத்திருந்தாள்.


சட்டென்று காலில் எதோ கடித்ததால் நினைவு கலைந்து நிஜத்திற்கு வந்தேன். எழுந்து கிச்சனில் ஏதாவது இருக்கா எனப் பார்த்தேன். ஏழுமலை கிராண்ட் ஸ்னாக்ஸ் மிக்சர் வாங்கி வைத்திருந்தான். அதைத் தின்றுவிட்டுப் படுத்தேன் மறுபடியும் புரண்டேன். மறுபடியும் நினைவுகள்.

அருமையான வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன். சந்தோஷம். கொஞ்சம் கண்ணயர்ந்தது. கால்மாட்டில் ஒரு உருவம்... தூங்கிக்கொண்டிருப்பதாக நான் நினைத்த அப்பா. "என்னடா, பிரயாணம் எல்லாம் ஓகேவா?" என்றார். "ஆமாம் ஐயாம் ஃபைன்" என்றேன். "தூங்கு. நாளைக்குப் பேசலாம். 2 நாள் ரெஸ்ட் எடு. அப்புறம் அலையலாம்" என்றார்.

காலையில் எழுந்தவுடன். நண்பன் "மச்சான் சாயங்காலம் பாக்கலாம்" என்றான். அம்மா டிஃபன் தயார் செய்தாள். இனம்புரியாத ஒரு பசியில் கண்டதையும் தின்றேன்.


டிங் டாங்... வாசல்மணி என்னை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தது. எழுந்துசென்று. கதவை திறந்தேன். சாந்தி. எங்கள் வீட்டு எஜமானி. வேலைக்காரி என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் அவள் வீட்டுவேலை, சாப்பாடு எல்லாம் செய்துவிட்டு, பல அறிவுரைகளையும் சொல்லுகிற, எதையும் எதிர்பாக்காத, கணவனை இழந்து எங்கள் குடும்பத்துடன் வாழ்ந்த ஒரு நல்ல மனம்.

"நல்லா இருக்கீங்களா தம்பி. ஏழுமலை சொல்லிச்சு இன்னிக்குதான் வர்றீங்கன்னு." "இருக்கேன் சாந்தி." சூடான டீயுடன் எனது நாள் தொடங்கியது. குளிப்பதற்காக ஷவரைத் திறந்தபோது மறுபடியும் நினைவலைகள்.
"டேய் ரொம்ப நேரம் குளிக்காத இன்னிக்குதான் வந்துருக்க. இந்தத் தண்ணி பழகறதுக்கு உனக்கு ரெண்டு நாள் ஆகுமே" என்றாள் அம்மா. வெளியேவந்தால் "அப்பா டேய் ஃபோன்ல நடராஜன்" (அப்பாவின் பால்ய சிநேகிதர்) என்று ரிசீவரைத் தந்தார். "என்ன மாமா, எப்படி இருக்கீங்க?" என்றேன். "நல்ல இருக்கேண்டா. வீட்டுக்கு வந்து சாப்டுட்டுப் போ. நீபாட்டுக்கு கிளம்பிப் போய்டாத. நான் அங்க ஈவனிங் வரேன். வீட்ல இரு. ரெஸ்ட் எடுத்துக்கோ" என்றார்.

வாசலில் செல்ஃபோன் மணி. "தம்பி யாரோ ஃபோன்" என்றாள் சாந்தி. நிஜத்திற்கு திரும்பியவனாய். குளித்துவிட்டு வெளியேவந்து பார்த்தால் நண்பன் அசோக்கிடமிருந்து மிஸ்டு கால். கூப்பிட்டேன். "மச்சி குளிச்சிட்டு இருந்தேண்டா. கண்டிப்பா மீட் பண்ணலாம்" எனச் சொல்லி ஃபோனை வைத்தேன்.

சாந்தி உப்புமா, சட்னி செய்திருந்தாள். சாப்பிட்டுவிட்டு. ஊருக்கு வந்த வேலை விஷயமாக வெளியே கிளம்பினேன். திரும்பியபோது மணி மதியம் ஒன்று. சாந்தி சமைத்துவிட்டு வெளியே சென்றிருந்தாள். தட்டை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டேன். மறுபடியும் நினைவுகள்.

"டேய் இன்னிக்கு ராஜு மாமா வீடு, நாளைக்கு சுதா அத்தை வீடு, மறுநாள்..." என்று அடுக்கிக்கொண்டே போனாள். என்னுடைய சாப்பாடு பலபேர் வீட்டில் பலவிதமாக. அப்பா நடுவில் அவர் நண்பர்களைப் பார்க்க என்னை அழைத்துச் சென்று அங்கும் சாப்பாடு. எண்ணங்கள் அலைமோத கண்ணயர்ந்தேன். மாலையில் எழுந்து தயாராகி நண்பர்களை சந்தித்தேன். இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். தனிமை ஏதோ செய்தது.

மறுநாள் காலை எழுந்து அனந்தபத்மநாபர் கோவிலுக்குப் போனேன். சன்னிதியில் கண்ணை மூடினேன். மறுபடியும் நினைவுகள்... அம்மாவுடன் முண்டக்கண்ணியம்மன் கோவிலுக்கு போனது. அதற்கு இரண்டு வீடு தள்ளி நான் 2 வயதாக இருக்கும்போது இருந்ததாக அம்மா சொல்வாள். சட்டென்று கண்விழித்தேன்.

அனந்தபத்மநாபர் கோவிலிலிருந்து நேராக முண்டக்கண்ணியம்மன் கோவிலுக்குச் சென்றேன். வெளியில் வந்து நான் இரண்டு வயதில் வாழ்ந்த அந்த வீட்டை இரண்டு நிமிடம் நின்று பார்த்தேன். வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குட்டிப்பெண் என்னைப் பிள்ளை பிடிப்பவன்போல் பார்த்து பயந்து உள்ளே ஓடியது.

அடுத்த பத்து நாட்களில் நான் படித்த பள்ளி, கல்லூரி என ஏகப்பட்ட நினைவுகள். எல்லாவற்றையும் பார்த்தேன். நினைவுகள் வரும்போதெல்லாம் அதைச் சுகமாக அனுபவித்தேன்.நண்பர்களை ஓரிருமுறை சந்தித்தேன். ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது.

ஏழுமலையிடமும், சாந்தியிடமும் தலா 5000 ரூபாயை கொடுத்து கைச்செலவுக்கு வைத்துக்கொள்ளும்படியும், வீட்டைப் பார்த்துக்கொள்ளும்படியும் சொன்னேன். அவர்கள் கண் கலங்கியது. சாந்தி "ஊர்ல சின்னம்மாவ கேட்டதா சொல்லுங்க" என்றாள். சரி என்றேன். "இங்க நம்ம அம்மா ஞாபகம் ரொம்ப வரதுங்க" என்றாள். நான் ஒருமுறை சாந்தியைப் பார்த்தேன். என் கண் சிறிது கலங்கியது. சுதாரித்துகொண்டு.அந்த நினைவுகள்தான் இனிமேல் நிஜம் என சொல்லிவிட்டு. சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவதற்கு பெட்டியில் கையை வைத்தேன்.

"டேய் சாமி படத்துக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப் போடா" என்று என் அம்மா எப்போதும் சொல்ல, நான் சட்டென்று அம்மா, அப்பா காலைப் பிடித்து நமஸ்காரம் செய்து பிறகு சாமி படத்திற்கும் நமஸ்காரம் செய்வது ஞாபகம் வர, மெதுவாக சாமி படத்திற்கு நமஸ்காரத்தைச் செய்துவிட்டுக் காரில் ஏறினேன்.

ஃப்ளைட்டில் ஏறி, கனத்த மனதுடன் கண்ணை மூடினேன். மறுபடியும் சுகமான நினைவுகள். ரசித்தேன். அந்தச் சுகமான நினைவுகளை எனக்குக் கொடுத்த அம்மா அப்பாவுக்கு நன்றி கூறினேன்.

தாய் தந்தை நம் சுற்றத்தையும் சூழலையும் சேர்த்து இணைக்கும் ஒரு குடும்பச் சங்கிலி. அது அறுபடுவது காலத்தின் கட்டாயம். ஆனால் அந்தச் சங்கிலி அறுந்தபின்...

சுற்றிப் பார்த்தாலும் சுற்றம் தெரியாது.
சூழல் சுழல்போல் மறையும்.
உறவுகள் இரவுபோல் இருளும்
இரவுகள் பகல்போல் நீளும்
நண்பர்கள் நாசூக்காக ஓரிருமுறை சந்திப்பார்கள்
தனிமை அதிகரிக்கும்
நினைவுகளைத் தேட ஆரம்பிப்பாய்.
நினைவுகள்தான் நிஜமான சுகத்தை தரும்.

சுகமான அந்த நினைவுகளால் மனதை நிரப்பிக்கொள்ள, தாய் தந்தை இருக்கும்போதே தாய்நாட்டுக்கு அடிக்கடி சென்று வா. இதை நான் யாருக்குச் சொல்கிறேன்?

கிருஷ்ணா,
ஆஸ்டின், டெக்சஸ்
Share: 
© Copyright 2020 Tamilonline