|
|
|
1970-80களில் பிறந்தவர்கள், பிறந்தநாள் என்றால் புதுத்துணி அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் மிட்டாய் கொடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தோம். இன்றைய குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால் வார இறுதியில் ஒருநாள் அவர்கள் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி, அவர்கள் வயதிற்கேற்ப விளையாட்டுகளை ஏற்பாடு செய்து அன்பளிப்புப் பை கொடுத்துக் கொண்டாடுவது வழக்கம் ஆகிவிட்டது.
எனக்கு ஒரு பிறந்தநாள் அழைப்பு வந்தது. என் இரண்டு வயது மகளை அழைத்துக்கொண்டு சென்றேன். பிறந்தநாள் ஒரு மூன்றுவயதுக் குழந்தைக்கு அவள் வீட்டில் நடந்தது. அதில் கவர்ச்சியான அம்சம் என்னவென்றால், அங்கே பண்ணை விலங்குகளைத் தடவிக்கொடுக்கலாம், குதிரைசவாரி செய்யலாம் என்றும் இருந்தது. மிகுந்த ஆர்வத்துடன் சென்றேன்.
வழக்கம்போல் முதலில் கேக் வெட்டினார்கள். பிறகு குழந்தைகள் எல்லாருக்கும் பிட்சா மற்றும் ஜூஸ் கொடுத்தார்கள். அதற்குள் பண்ணை நிறுவனச் செயலாளர்கள் மூன்றுபேர் வந்து வீட்டின் பின்புறத்தில் வேலி ஒன்று அமைத்து விலங்குகளை அதில் உலவவிட்டார்கள். சாப்பிட்ட பிறகு குழந்தைகள் அந்த வேலியினுள் சென்று விளையாட ஆரம்பித்தனர். விலங்குகள் வேலிக்குள் சுற்றிச்சுற்றி ஓட, குழந்தைகள் இரைச்சலிட்டுக்கொண்டு அவற்றின் பெயரைச் சொல்லித் துரத்த, ஒரே குதூகலம்! பெற்றோர்கள் மொபைலில் புகைப்படமும் வீடியோவும் எடுத்துத் தள்ளினர். |
|
|
வேலிக்கு வெளியில் இளம் குதிரை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதில் குழந்தைகள் ஏறிக்கொண்டு ஒவ்வொருவராக வீட்டைச் சுற்றிவந்தனர். சில குழந்தைகள் இரண்டு, மூன்று முறைகூட சுற்றினர். குதிரையைவிட்டு இறங்கவே மனமில்லை. வேலிக்குள்ளே சில குழந்தைகள் ஆடுகளுக்கு உணவு கொடுத்தனர், முயல்களைத் தூக்கிக் கொஞ்சினர், பன்றிகளைத் துரத்தினர், வாத்துகளைப் பிடிக்கப் பார்த்தனர், கோழிகளுக்கு தண்ணீர் கொடுத்தனர்.
ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை. நேரம் முடிந்ததும் விலங்குகளைக் கூண்டில் அடைத்தபோது குழந்தைகளின் முகத்தில் ஒரே வருத்தம்.
இந்த வித்தியாசமான ஏற்பாட்டில் நான் தெரிந்து கொண்டவை: நாய், பூனைதவிர மற்றப் பிராணிகளிடம் இருக்கும் பயத்தை இது போக்குகிறது. குழந்தைகள் சந்தோஷமாக, சரிசமமாகப் பழகி விளையாடினார்கள். குளிர்காலங்களில் பண்ணைகளுக்கும் பூங்காக்களுக்கும் போவது மிகக்கடினம். ஆனால் சில விலங்குகளை வீட்டுக்குக் கொண்டுவந்து விளையாடுவது மாறுபட்ட அனுபவம்.
என் மகள் இன்றுவரை அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்றால், அந்த அனுபவம் அவள் மனதில் எத்தனை நன்றாகப் பதிந்துள்ளது என்று பாருங்களேன்.
ரம்யா திப்பராஜு, டப்லின், கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|