ஜப்பானிய கொலு
|
|
சிலிக்கான் வேல்லியில் மோதி |
|
- மதுரபாரதி|அக்டோபர் 2015| |
|
|
|
|
|
"உலகெங்கிலும் இன்று இந்தியாவுக்கு ஒரு புதிய பிம்பம், அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகம் இந்தியாவைப்பற்றிய பழைய பிம்பத்தை மாற்றிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், உங்கள் விரல்கள் செய்த மாயாஜாலம்" இதைக் கூறியவர் இந்தியப் பிரதமர் மோதி. அந்த SAP மையத்தில் அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான இந்தியத் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் இதைச் சிலிர்ப்போடு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் யாவருமே மோதி மந்திரத்தால் கட்டுண்டிருந்தார்கள். "ஒரு ராக்ஸ்டாரைப் போல அவர் மேடையில் தோன்றினார்" என்கிறது மோதியின் மேடைப் பிரவேசத்தைப் பற்றி பாகிஸ்தானின் 'Dawn' பத்திரிகை. அதே சமயத்தில் பாக் பிரதமர் நவாஸ் ஷெரிஃபும் அமெரிக்கா வந்திருந்தார். "அவர் அதிபர் ஒபாமாவோடு உருதுவில் பேசியதே ஏதோ சாதனைபோலச் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார். ஆனால் மோதியோ அமெரிக்காவின் மிகச்சக்திவாய்ந்த தொழிலதிபர்களைப் பார்த்து 'இந்தியாவுக்கு வந்து 'Make in India' திட்டத்தின்கீழ் தொழில் தொடங்குங்கள், இந்தியா அதற்குத் தயாராக இருக்கிறது' என்று வரவேற்றார்" என ஆற்றாமையோடு பாகிஸ்தானியர்கள் கூறுவதை ஊடகங்கள் சொல்கின்றன.
அரங்கத்துக்குள் பிரதமர் வருவதற்கு முன்பும், அவர் வந்தபோதும் "மோதி, மோதி!" என்ற உற்சாகக் குரலும் வரவேற்புப் பதாகைகளும் விண்ணோக்கி உயர்ந்தன. அவருடைய கட்-அவுட்டுடன் நின்று படமெடுத்துக் கொண்டவர்கள் பலர். அந்தக் காற்றில் மின்னற்சக்தி விரவியிருப்பது புலப்பட்டது.
மேடையில் பேசும்போது ஜொலிக்கும் மோதியின் தன்னம்பிக்கை, தன்னலமின்மை, கலாசாரப் பெருமிதம், கருத்துவளம், சொல்லழகு ஆகியவற்றில் இந்தியர்கள் மட்டுமல்ல, அனைவருமே மயங்கித்தான் போகிறார்கள். "Brain drain ஆவதை நிறுத்தவேண்டும் என்று பலர் சொல்வதை நான் கேட்கிறேன். அதுவே 'Brain gain' ஆகமுடியும். நான் அதையே 'Brain deposit' என்பதாகப் பார்க்கிறேன். அப்படி முதலீடு செய்யப்பட்ட நமது அறிவு, வாய்ப்புகளைத் தேடுகிறது. வாய்ப்பு வந்ததும் அவை வட்டியும் முதலுமாகத் தாய்நாட்டுக்குப் பயன்படும்" என்பது அவருடைய மாறுபட்ட பார்வை.
"உலகில் இன்றைக்கு இரண்டு சவால்களைப் பார்க்கிறோம். ஒன்று வன்முறை, இரண்டாவது புவிவெப்பமாதல். உலகின் அமைதிச்சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டால், இரண்டையுமே வெற்றிகொள்ளலாம் என்று நான் நம்புகிறேன். இந்தியா இவற்றைச் சந்திக்கத் தயாராக உள்ளது" என்று மோதி கூறியபோது அங்கிருந்தோர் அவரது சிந்தனைத் தெளிவை உணர்ந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஃப்ரீமான்ட் நகர மேயர் அனு நடராஜன் "அங்கிருந்தோரில் நாட்டுப்பற்றைத் தட்டி எழுப்பினார் மோதி. தமது இந்தியத்துவத்தில் ஒரு பெருமை, தாய்நாட்டின்மீது ஒரு பெருமிதம் ஆகியவற்றை உணரவைப்பதில் பிரதமர் வெற்றிகண்டார்" என்கிறார்.
சாரடோகா கவுன்சில்மேன் ரிஷிகுமார், "மோதியின் உரை ஒரு தேர்ந்த நாட்டியம்போலச் செறிந்திருந்தது" என்கிறார். "அரசு நிர்வாகத்தைத் தொழில்நுட்ப மயமாக்கி 'டிஜிடல் இந்தியா'வை உருவாக்குவதன் மூலம் லஞ்சத்தை ஒழிப்பது, பொதுவாழ்க்கையில் ஒழுக்கம் என்று பற்பல கருத்துக்களை நேர்த்தியாக எடுத்துரைத்தார். இப்படி ஒரு தலைவர் கிடைத்திருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம்" என்கிறார் அவர். |
|
விரிகுடாப்பகுதி இசைக்கலைஞர் அஷோக் சுப்பிரமணியம் இவ்வாறு கூறுகிறார்: "பகத்சிங்கை நினைவு கூர்ந்ததாகட்டும், கங்கை நதித் தூய்மைபற்றிப் பேசியதாகட்டும், 'அறிவுத்திறன் வறட்சி' என்பது, 'அறிவுத்திறன் முதலீடு' என்றாகும் என்று சரியான விதத்தில் எடுத்துச்சொன்ன பாங்காகட்டும், பாரதம் என்ற சிந்தனையை, கனவை ஒவ்வொரு நொடியும் சுமந்துவந்த மாபெரும் தலைவராகத்தான் மோதி காட்சியளித்தார்".
பின்னர் நடந்த வேறொரு நிகழ்ச்சியில் முகநூலின் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் மோதிக்கிடையே வயதைத் தாண்டிய கெமிஸ்ட்ரி ஒன்றைப் பார்க்கமுடிந்தது. அந்த நெருக்கத்தின் கதகதப்பில் நெகிழ்ந்த மார்க், தான் முகநூலைத் தொடங்கவிருந்த ஆரம்பகாலத்தில், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவுரைப்படி, இந்தியக் கோவிலுக்கு வந்து தெளிவுபெற்றதை முதன்முதலாக உலகுக்குத் தெரிவித்தார்.
மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள், முந்தைய பிரதமர்களின் விஜயங்கள்போலக் கவனிக்கப்படாமல் போகவில்லை. FDI என்று சொல்லப்படும் அன்னிய நேரடி முதலீடுகளைப் பெறுவதில் சீனாவையும் அமெரிக்காவையும் மிஞ்சிவிட்டது இந்தியா என்று ஃபைனான்ஷியல் டைம்ஸ் புள்ளிவிவரம் கூறுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் (POK) பகுதி மக்கள் பாகிஸ்தான் தமக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போர்க்குரல் எழுப்பத் தொடங்கியிருப்பதும் பிரதமரின் அமெரிக்கப் பயணத் தாக்கம்தான் என்பதில் சந்தேகமில்லை.
என்ன செய்தாலும் மோதி தீண்டத்தகாதவர் என்ற கருத்தில் ஊறிக்கிடக்கும் எதிரணியினர்; அவர் செய்யும் சாதனைகளைப் புறக்கணித்து, செய்யாத குற்றங்களைப் புனைந்துபேசும் ஒருசார்புகொண்ட ஊடகங்கள்; லஞ்சம், சோம்பல், மெத்தனம் இவற்றில் மூழ்கிக்கிடக்கும் அரசு எந்திரம்; தேசீயநோக்கில்லாத மாநில அரசியல் - இவ்வாறு மோதி சமாளிக்கவேண்டிய சவால்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. சமாளிப்பார், சந்தேகமில்லை. சிந்தனையில் நேர்மையும், செயலில் ஊக்கமும், தளராத தன்னம்பிக்கையும், நாட்டுப்பற்றும் அவரிடம் உள்ளன.
முத்தாய்ப்பாக அதிபர் ஒபாமாவின் வார்த்தைகளேயே நாமும் சொல்கிறோம், "பிரதமர் மோதியிடம் பழகியதில் நான் சொல்லவேண்டியது ஒன்றுண்டு. அவர் லட்சியங்களை உதட்டளவில் பேசி நிறுத்துவதில்லை, செயல்வடிவம் தருகிறார். அவரது நட்பையும் பங்களிப்பையும் நாம் மிகவும் மதிக்கிறோம்."
மதுரபாரதி |
|
|
More
ஜப்பானிய கொலு
|
|
|
|
|
|
|