|
|
|
|
2015 ஜூலை 3, 4, 5 தேதிகளில் வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் தலைமையேற்று நடத்தும் ஃபெட்னா தமிழ்ச்சங்கப் பேரவை விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துவருகின்றன. இயல், இசை, நாடகம் என முத்தமிழ் விழாவாகக் கிட்டத்தட்ட 80 மணிநேரம் உவகையூட்டும் மாபெரும் கலைவிழாவாக இது இருக்கும். தமிழ்நாடு அறக்கட்டளை (TNF-Tamilnadu Foundation), அமெரிக்கத் தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA-American Tamil Medical Association) போன்ற முக்கியமான அமைப்புகள் இதற்குத் தோள்கொடுத்து வருகின்றன.
ATMA அமைப்புடன் இணைந்து மருத்துவர்களுக்கான தொடர்கல்வி அமர்வு (CME - Continuing medical education) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமர்வை Emory University School of Medicine, Atlanta அங்கீகரித்துள்ளது.
கவிமாமணி அப்துல் காதர் தலைமையில் 'ஆர்த்தெழு நீ!' என்ற தலைப்பிலான கவியரங்கத்தில் சுவையான தலைப்புகளில் கவிஞர்கள் கவிபாடவுள்ளனர். கவிஞர் சுமதிஸ்ரீ "தமிழன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமானது மொழியா? கலையா" என்ற தலைப்பில் ஒரு கருத்துக்களத்தை நெறிப்படுத்தி நடத்துவார். இசைமழையில் நனைவிக்க, இசைக்கலைஞர் சௌம்யா வரதன், விஜய் டீவி "சூப்பர் சிங்கர்" புகழ் செல்வி பூஜா, செல்வி பிரகதி ஆகியோருடன் திரையிசைப் பாடகர்கள் ஹரிசரண், ஆலாப் ராஜு மற்றும் ரோஷினி வருகின்றனர். ஹரிசரணின் Bennette and Band குழுவினருடன், தமது புத்தர் கலைக்குழுவின் பறையிசையைச் சேர்த்து, புதுமையான நடனநிகழ்ச்சி ஒன்றைத் தாமே பாடி வழங்குகிறார் "கும்கி" புகழ் மகிழினி மணிமாறன். இசைப்பேரறிஞர் பாபநாசம் சிவன் அவர்களின் 125வது ஆண்டு நினைவாக அவரது பாடல்களை முன்வைத்து ஓர் இசை, வாத்திய நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற திரு. பூமணி, தமிழ்/இந்தியவியல் அறிஞர்கள் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனை. வி.எஸ். இராஜம், வைதேகி ஹெர்பர்ட், பேராசிரியர் மைக்கேல் விட்சல் (ஹார்வர்டு பல்கலைக்கழகம்) போன்றோர் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வு அரங்கேறுகிறது.
நடிகை ஏமி ஜாக்சன் தமிழ்த்திரை விரும்பிகளுக்கு உற்சாகமூட்ட வருகிறார். உலகத் தமிழர்களுக்கிடையே உறவுப்பாலம் அமைக்க "நவீனதிருமணம்" நிகழ்ச்சியை சன்டிவி புகழ் "கல்யாணமாலை" குழு நடத்துகிறது.
"புலம்பெயர்ந்த தமிழர்களின் இன்றைய தலைமுறை எதிர்நோக்கும் பண்பாட்டு முரண்பாடுகள் (cultural conflicts)" என்ற தலைப்பில் ஒருபக்கச் சிறுகதைப் போட்டியும் உள்ளது. அனுப்பி வைக்கக் கடைசித் தேதி ஜூன் 10, 2015. தமிழ் கலாசாரத்தையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் குறும்படப் போட்டி, இளையர்களுக்கான Youth Meet போன்ற நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய வினாடி வினா, தமிழ்த்தேனீ, கவிதை மற்றும் நிழற்படப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட உள்ளன. குறும்படப் போட்டியில் இணைந்து செயல்படுகிறது பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் BenchFlix நிறுவனம். "பீட்சா", "ஜிகிர்தண்டா" படங்கள்மூலம் கவனம்பெற்றவர் கார்த்திக் சுப்பாராஜ். இவரது நிறுவனம் தமிழ் குறும்படங்கள் பொதுவெளியில் அங்கீகாரம் பெற உதவிவருகிறது. பரிசுபெறும் படங்கள் அவர் நிறுவனம்மூலம் தமிழக/இந்திய அளவில் அங்கீகாரம் பெற சாத்தியக்கூறுகள் உள்ளது.
முதன்முறையாக இந்த ஆண்டு தமிழ்விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்பட விருது வழங்கப்படவுள்ளது. சிறந்த 10 திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழு மும்முரமாகச் செயலாற்றிவருகிறது. அவற்றிலிருந்து சிறந்த திரைப்படம் விழாவுக்கு வருகைதரும் தமிழன்பர்களால் வாக்குச்சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
மேலுமறிய வலைமனைகள்: www.fetna2015.org; www.fetna.org.
மின்னஞ்சல் முகவரி: coordinator@fetna.org அல்லது secretary@sfbatm.org
செய்திக்குறிப்பிலிருந்து
*****
அமெரிக்கத் தமிழ்முன்னோடி விருதுப் பட்டியல்
முனை. ரங்கசுவாமி ஸ்ரீநிவாசன், கண்டுபிடிப்பாளர். இவர் லேசர் கதிரைக்கொண்டு கண்ணறுவை சிகிச்சை செய்யும் முறையினைக் கண்டுபிடித்தவர். திரு. கிருஷ்ணன் சுதந்திரன், தொழிலதிபர், டீம் பெஸ்ட் நிறுவனத் தலைவர். முனை. முத்துலிங்கம் சஞ்சயன், இயற்கை அறிவியலாளர். பேரா. சேதுராமன் பஞ்சநதன், கணிப்பொறியியல். (பார்க்க) பேரா. ப்ரியம்வதா நடராஜன், வானியற்பியல், யேல் பல்கலை. மரு. ராமநாதன் ராஜு, மருத்துவம். திரு பி. பீமன், இசைக்கலைஞர். திரு. அகிலன் அருளானந்தம், பேராசிரியர், வழக்குரைஞர்.
***** |
|
கல்கியின் 'சிவகாமியின் சபதம்' மேடைநாடகம்
ஜூலை 3, 2015 வெள்ளிக்கிழமை அன்று சான் ஹோசே சிவிக் ஆடிடோரியத்தில் 'சிவகாமியின் சபதம்' நடைபெறும். கல்கியின் பொன்னியின் செல்வனை பிரம்மாண்டமான வெற்றிப்படைப்பாக வழங்கிய அமிராமி கலைமன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், வேணு சுப்பிரமணியன் கூட்டணி, சிவகாமியின் சபதத்தை மேடைநாடகமாக வழங்குகிறார்கள்.
கதைச்சுருக்கம்: மகேந்திர பல்லவர், சிறந்த கலைஞராகவும், ரசிகராகவும் திகழ்ந்தவர். 'குணபரன்', 'விசித்திர சித்தர்' என்ற பட்டங்கள் பெற்றிருந்த அவர், காஞ்சிபுரத்தைத் தமிழகத்தின் கலைப்பொக்கிஷமாக மாற்றி இருந்தார். 'நகரேஷு காஞ்சி' என்று புலவர்கள் கொண்டாடினார்கள். மாமல்லபுரத்திலே ஒரு சிற்ப சாம்ராஜ்யத்தையே அவர் உருவாக்க முயன்றார். இவற்றுக்கெல்லாம் மேலாக, ஒரு தலைசிறந்த ராஜதந்திரியாக, மகேந்திரர் திகழ்ந்தார். மகேந்திர பல்லவரின் மகனாகிய நரசிம்ம பல்லவர் 'மாமல்லர்' என்று பட்டம்பெற்ற மகாவீரர். 'சிவகாமியின் சபதம்' கதையில், மகேந்திரர் வளர்த்த காஞ்சிநகரத்தின் மீது அழியாக் காதல்கொண்டு சாளுக்கிய மன்னன் சத்ராச்ரிய புலிகேசி படையெடுத்து வருகிறான். மகேந்திர பல்லவர் ராஜதந்திரத்தினால், புலிகேசி காஞ்சியைத் தாக்கவே முடியாமல் செய்து, அவன் வாழ்வில் முதல்முறையாகத் தோல்விகாணச் செய்கிறார். புலிகேசியோ, அந்த வெறியில் மாமல்லரின் காதலியும், நாட்டின் கலாராணியுமான சிவகாமியைச் சிறையெடுத்துப் போய்விடுகிறான். சிவகாமி, மாமல்லர் போர்தொடுத்து, புலிகேசியின் தலைநகரான வாதாபியை அழிக்கும்வரை ஊர் திரும்புவதில்லை என்று சபதம் செய்துவிடுகிறாள். ஒன்பது ஆண்டுகள் அயராமல் உழைத்து, படைதிரட்டி, பரஞ்சோதி என்ற வீரதளபதியின் உதவியோடு, மாமல்லர், வாதாபிக்கே படையெடுத்துச் சென்று, புலிகேசியை வென்று, சிவகாமியை மீட்டுவருகிறார்.
அப்புறம் என்ன நிகழ்கிறது? 'சிவகாமியின் சபதம்' நாடகத்தைக் கண்டுகளித்தால், முடிவு புலப்படுவதோடு, நாடகத்தை ரசித்து நல்லின்பம் பெறலாம்! பழந்தமிழர் வீரம், நாட்டுப்பற்று, விடாமுயற்சி, கலை, கல்வியறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இக்கதையை நாடகமாக வழங்குவதில் அபிராமி கலை மன்றம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.
கதிரவன் எழில்மன்னன்
*****
அமெரிக்கத் தமிழர் தொழில்முனைவோர் மாநாடு
ஜூலை 3, 2015, வெள்ளிக்கிழமை சான் ஹோசே மேரியாட் (San Jose Marriott) ஹோட்டல் அரங்கத்தில் இது நடைபெறும்.
தமிழ்நாட்டில் இருந்து வேலைதேடிப் புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்து பின்னர் தானே ஒரு தொழிலை ஆரம்பித்து முன்னேறி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இளம் தொழில்முனைவோரை ஒருங்கிணைத்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் உதவவும் ஏதுவாக, தமிழ் தொழில்முனைவோர் அமைப்பு (Tamil Entrepreneurs Forum-TEF) முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை முன்னாள் வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத் தலைவரும், தொழில்முனைவருமான திரு. லேனா கண்ணப்பன் தலைமைப் பொறுப்பேற்று ஆயத்தம் செய்து வருகிறார்.
இதன் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களில் சிலர்: ஆரம்பநிலைப் போட்டி (startup pitch competition) பத்து (Paddhu) கோவிந்தராஜன்; ஆரம்பநிலைப் பயிற்சி வடிவமைப்பு (startup education sessions): பார்த்திபன்; கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு (TAP Awards): சொக்கலிங்கம் கருப்பையா; இளைஞர் தொடர்பு (mentor connect): ராமு வேலு மற்றும் பிருத்திவி குருப்ரஸாத்; விளம்பரம்: சுமி ஷான் (கனடாவிலிருந்து).
புதிய தொழில்முனைவோர்க்கான போட்டியில் (startup pitch competition) தங்கள் நிறுவனம், தொழில்துறை, தொழில்நுட்பம் குறித்துத் தொழில் முதலீட்டாளர்கள் (Venture Capitalist), தொழில் ஊக்குவிப்போர் (Business Accelerators), ஏனைய நிறுவன உரிமையாளர்கள் இடையே 5 நிமிடம் பேசுவார்கள். 10 நிறுவனங்கள் இப்போட்டியில் அனுமதிக்கப்பட்டு வெற்றிபெற்ற நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
புதிய தொழில்கள் 101 (startup 101): இதில் புதிய தொழில்துவங்கப் பதிப்பித்தல், அறிவுசார் சொத்துரிமை (intellectual property rights), முதலீடு பெறும் வழிகள், வியாபார உத்திகள், சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ளும் வழிகள் ஆகியவை குறித்து துறைசார் வல்லுனர்களைக் கொண்டு பயிலரங்குகள், பட்டறைகள் நடத்தப்படும்.
மேலும் விவராங்களுக்கு: www.tef2015.org
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|