Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
இப்போது திரும்பிவிடக்கூடாது
கடவுள் இருக்கிறாரா?
- சந்திரமௌலி|ஜூலை 2015||(3 Comments)
Share:
இன்னும் ஐம்பது நிமிஷத்தில் மாலினி இங்கு வந்துவிடுவாள். வந்தாக வேண்டும். அவளுக்காகத்தான் இந்த ஆளரவமில்லாத மகாபலிபுரத்தை ஒட்டிய குளக்கரையில் பாழ்மண்டபத்தில் நான்கு மணியிலிருந்து காத்திருக்கிறேன். சூரியன் தன் அன்றைய டியூட்டிநேரம் முடிந்து மேற்கே கடலில் மறைய எத்தனித்தான். என் ஆயுசில் கடைசி சூர்ய அஸ்தமனம். சாதாரணமாய் இருந்திருந்தால் அந்தக் காட்சியை ரசித்து என் நிக்கான் கேமிராவில் அதை இன்னும் அழகாகப் படமெடுத்திருப்பேன். இந்த இடத்தில் மாலினியை எத்தனை ஸ்டில்ஸ் எடுத்திருக்கிறேன். எத்தனை காதல் சொட்டச்சொட்ட என்னைக் கிறங்கடித்திருக்கிறாள். எல்லாம் நேற்றோடு ஒழிந்தது.

இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது ஒரு இண்டிகா வண்டி அந்தக் குளத்தருகே வந்தது. அதிலிருந்து ஒரு தம்பதியும் அவர்களின் சின்னப் பெண்குழந்தையும் இறங்கினார்கள். இது ஏதடா வம்பாச்சு! மாலினி வரும்போது இவர்கள் இங்கே இருந்தால் என் காரியம் கெட்டுவிடுமே என்று பயந்தேன். "தினேஷ் இந்த எடத்துக்கு எதுக்குக் கூட்டி வந்தீங்க? யாருமே இல்லை…" முடிக்கும்போது பாழ்மண்டபத்தில் வெறித்தமுகத்தோடு இருந்த என்னைப் பார்த்துவிட்டாள். இன்னும் கொஞ்சம் பயங்கலந்த குரலில், "லெட்ஸ் கோ தினேஷ். இட் இஸ் கெட்டிங் லேட்" என்றாள். சீக்கிரம் கிளம்பிவிடுவார்கள் என்று மனசைத் தேற்றிக்கொண்டேன். தினேஷ் ஒரு புதுமாடல் கோனிகாவைக் கையில் எடுத்துக்கொண்டு, "ஜஸ்ட் ட்வெண்டி மினிட்ஸ் ஹனி. இந்த வியூ எங்கியும் கெடைக்காது. திஸ் இஸ் ட்ரெஷர். ஸ்டில்ஸ் எடுத்துட்டு கெளம்பிடலாம்" என்று சூரிய அஸ்தமனத்தை மகாபலிபுர சில்ஹவட்டில் எடுக்கக் கிளம்பினான். "மோனி கம் ஹியர், டோண்ட் ரன் நியர் தி புஷ். இந்தா இந்த பந்து விளையாடு" பந்தை அந்தக் குழந்தையிடம் உருட்டிவிட்டு, ஐஃபோனில் எதையோ தேட ஆரம்பித்தாள்.

நான் மாலினியைப் பற்றின சிந்தனையில் ஆழ்ந்தேன். ஒருவேளை வராமல் போய்விடுவாளோ? கவலையாயிருந்தது. கண்டிப்பாக வருவாள். ஆறு மணிக்குள் இங்கு வராவிட்டால் நானும் அவளும் காதலர்களாக சேர்ந்து எடுத்துக்கொண்ட எல்லா புகைப்படங்களையும் பிரபல பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடுவேன். உன்னை ரஜத் தன் படத்துலேருந்து தூக்கிருவான். தலைகீழா நின்னாலும் அப்புறம் நீ ஹீரோயின் ஆகமுடியாது என்று மிரட்டியிருக்கிறேன். ஓ நான் யாருன்னு இன்னும் சொல்லலை இல்லை?

என் பேர் பாபு வயசு முப்பது சொச்சம். உள்வாங்கின முன்நெத்திய மறைக்கிறாப்பல தலையை வாரி, தொப்பையை உள்ளேதள்ளி டைட்டா பெல்ட் கட்டினா இளைஞன்னு தைரியமா சொல்லிக்கலாம். நான் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞன். நானே சொல்லிக்கக்கூடாது. நல்லாவே படம் எடுப்பேன். ஆலந்தூர் பஸ் டெர்மினஸ் பக்கத்து சந்துல வேலன் ஃபோட்டோ ஸ்டுடியோன்னு நியான்லைட் மின்னிக்கிட்டு போர்டு பாத்திருப்பீங்களே, அது என் கடைதான். எங்க அப்பா எனக்கு மின்ன இருபது வருஷமா அதை நடத்திட்டிருந்தாரு. எனக்கு எங்க அப்பாதான் சின்ன வயசுலேருந்து ஹீரோ. அந்தக்கால ஜெய்சங்கர் மாதிரி தலையைத் தூக்கி வாரியிருப்பார். வொயிட் அண்ட் வொயிட்ல எப்பவும் சுத்தமா நெத்தில அழகா சந்தனம் வெச்சுக்கிட்டு அம்சமா இருப்பாரு. ஃபோட்டோ எடுக்கும்போது மத்தவங்களுக்கு சொல்லிச் சொல்லியோ என்னவோ, எப்பவும் சிரிச்சமுகத்தோடவே இருப்பாரு.

எங்க பக்கத்துல எதுனா சினிமா ஃபங்‌ஷன், எலெக்‌ஷன் மீட்டிங், தெறப்பு விழான்னு எது நடந்தாலும் அப்பாவைத்தான் கூப்பிடுவாங்க. அவ்வளவு தொழில் சுத்தம், நாணயம். பெரிசா வருமானம் இல்லாட்டியும், நான், எங்க அப்பா, அம்மா கஷ்டமில்லாம வயித்த கழுவறதுக்கு அது கைகுடுத்திச்சு. "பாபு, லைஃப்ல எது செய்தாலும் நேர்மையா இரு. என்ன கஷ்டம் வந்தாலும் கடவுள் கைவிடமாட்டார்னு எப்பவும் நம்பிக்கையா இருந்தீன்னா நெனச்சதை சாதிப்பே," இதுதான் நான் ஸ்டுடியோவுக்குப் போயி கூடமாட ஒத்தாசை பண்ணும்போது அப்பா எனக்கு அதிகப்படியாகக் கொடுத்த அட்வைஸ். அவரும் அப்படித்தான் வாழ்ந்தார்.

வயசு ஆக ஆக ஃபோட்டோகிராஃபியைத் தொழில் என்பதற்கு மேலாகக் காதலிக்க ஆரம்பித்தேன். லைப்ரரியில் பார்த்த ஸ்பான், நேஷனல் ஜியாகரபி சஞ்சிகைகளில் வழவழ பேப்பரில் வந்த துல்லியமான புகைப்படங்களுக்கு அடிமையானேன். படிப்பு முடித்ததும் ஒரு பெரிய பத்திரிகையில் சீஃப் ஃபோட்டோகிராஃபர் ஆகணும். நம்ம பேர் சொல்றமாதிரி நச்சுனு படம் எடுத்து, புலிட்சர் பரிசு வாங்கணும், இப்படியெல்லாம் கனவுகாண ஆரம்பித்தேன். நான் ஆர்ட்ஸ் காலேஜ் கடைசி வருஷம் படிக்கும்போது அந்தக் கனவில் மண்விழுந்தது. ஒரு எலெக்‌ஷன் மீட்டிங்கைப் படம் எடுக்கப்போன அப்பா அந்த மீட்டிங்கில் தலைவரைக் கொல்லநடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் முகம்தெரியாத அப்பாவிப் பொதுமக்களோடு சேர்ந்து பலியானார்.

அந்த விபத்திலும் அப்பாவின் கேமரா சேதமாகாமல் போலீசுக்குக்கிடைத்தது. அதில் இருந்த கடைசிநிமிடப் படங்கள் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியது. ஆனால் எங்களுக்கு அதற்கு ஒரு நன்றியோ, அரசாங்க உதவியோ எதுவும் கிடைக்கவில்லை. தட்டிக்கேட்டு வாங்க சாமர்த்தியமும், செல்வாக்கும் இல்லை. என் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது. நானும், அம்மாவும் அனாதைகள் ஆனோம். படிப்பை நிறுத்திவிட்டு முழுக்கக் கடையை கவனிக்க வேண்டியதாகிவிட்டது. முதல்நாள் அப்பா இல்லாமல் நான் கடைக்குக் கிளம்பும்போது அம்மா "சாமி கும்புட்டுட்டு போ கண்ணு. உங்க அப்பாவும், அவரு கும்பிடுற அந்த ஆண்டவனும் துணை இருப்பாங்க. கவலைப்படாதே" என்று சொல்லி திருநீறு பூசவந்தாள். அதுவரைக்கும் அடக்கிவைத்திருந்த கோபம் அம்மாமேல் வெடித்தது. "அவ்வளவு நம்பிக்கையா கும்பிட்டாரே, அந்த மனுஷனை அன்னிக்கு அந்த கூட்டத்துக்குப் போகாம அந்த சாமி தடுத்துச்சா. பலி வாங்கிருச்சில்ல" ஆற்றாமை பொங்கி வந்தது. "அவரு அன்னிக்கு அங்க போயி எடுத்த ஃபோட்டோவை வச்சுதான் குத்தவாளிங்களையே பிடிச்சாங்கன்னு நீதானே சொன்ன? அவரு போகலைன்னா, அவங்க எல்லாரும் தப்பிச்சிருப்பாங்க இல்லை."

"ஆண்டவனை நிந்திக்காமே, வெசனமில்லாம போப்பா. கடவுள் பாத்துக்குவான்."
கடவுள் பாத்துக்குவான் - கையாலாகாத, தோத்தாங்குளிகளின் தாரகமந்திரம். ஒரே வெறுப்பாக இருந்தது. தொழிலும் சொல்லிக்கொள்வது போல இல்லை. எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப அசுரவளர்ச்சியில் எல்லார் கையிலும் கேமரா, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க, ஃபோட்டோஷாப்பில் நகாசு பண்ண, ப்ரிண்ட் பண்ண கத்துக்கொண்டார்கள். ஸ்டுடியோவுக்கு வந்து படம் எடுத்துக்கொள்வதெல்லாம் வழக்கொழிந்து போனது. அப்பாவின் பழைய நண்பர் நாகராஜுவின் கையில் காலில் விழுந்து ஓரிரண்டு உப்புமா படக்கம்பெனிகளுக்கு சினிமா ஸ்டில் ஃபோட்டோ எடுக்க வாய்ப்பு கிடைத்தது. தப்பித்தவறி அதில் ஒரு படம் ஓடிவிடவே, ராசியானவன் என்று கொஞ்சம் பேர் வந்து ஓஹோவென்று இல்லாவிட்டாலும் கடந்த பத்து வருஷமாக பிழைப்பு ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது.

என்ன, உலகத்தையே குலுக்கும் நிகழ்ச்சிகளை, அரிதான அரசியல் நிகழ்வுகளை, இயற்கைக் காட்சிகளைப் படமெடுத்து பேர் வாங்கணும்னு நெனச்சது நடக்கலை. உலகத்தைக் குட்டிச்சுவராக்கற அரிதாரம் பூசின முகங்களைப் படம் எடுக்கிறமாதிரி ஆயிடிச்சு என் நிலைமை. எனக்குப் பிடிச்ச ஃபோட்டோகிராஃபியையே வேண்டாவெறுப்பாக இப்படி நான் தொழிலா நடத்திட்டிருந்தபோதுதான் மாலினி ஒரு வருஷம் முன்னால் என் ஸ்டுடியோவுக்குள்ளும், வாழ்க்கையிலும் நுழைந்தாள்.

யாரோ தூரத்து சொந்தக்காரர் தமிழ் சினிமா உலகத்தோட சாவியே இவர்கிட்டதான் இருக்குனு அளந்துவிட்ட கதையை நம்பி என்னைப் பார்க்க அம்மாவோடு வந்தாள். அம்மாவுக்கு அவளை எப்படியாவது சினிமாவில் நுழைத்து ஹீரோயினி ஆக்கிவிடணும்னு துடிதுடிப்பு. மாலினிக்கு இருபது வயது இருக்கலாம், பதினாலு வயசுனு கூசாமல் அவள் அம்மா பொய் சொன்னாள். எத்தனையோ புதுமுகங்களுக்கு ஆல்பம் பண்ணிக்கொடுத்து, எனக்குத் தெரிந்தவர்கள் வழியாகக் கைகாட்டி விட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் தோணாத ஏதோ ஒரு குறுகுறுப்பு மாலினியைப் பார்த்ததும் வந்தது.

அங்கு பிடித்தது எனக்கு சனி. தொழிலைவிட்டு அவளுக்காகக் கம்பெனி கம்பெனியாக ஏறினேன். விதவிதமாக எனக்குத் தெரிந்த வித்தையெல்லாம் காட்டி அவளைப் படம் எடுத்து, கிட்டத்தட்ட எட்டு மாசம் கண்ட டைரக்டர், தயாரிப்பாளர், ப்ரொடக்‌ஷன் மேனேஜர் வீட்டுக்கெல்லாம் போய் அவளுக்குச் சான்ஸ் குடுக்கக் கெஞ்சினேன். வழக்கமான சால்ஜாப்பு, சிலசமயம் என் தொழிலைக் கேவலப்படுத்தும் வார்த்தைகள், திட்டவட்ட நிராகரிப்பு என்று எல்லாவற்றையும் என் மாலினிக்காகத் தாங்கினேன். ஆமாம், அந்த எட்டுமாசத்தில் மாலினியும் நானும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தோம். நான்கூட அவளிடம் இந்தக் கர்மத்தையெல்லாம் விட்டுட்டு பேசாமல் என்னைக் கல்யாணம் பண்ணிக்க என்று சொன்னதற்கு, இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு ஒரு படமாவது ஹீரோயினா நடிச்சுட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா. அப்படியே நம்பினேன்.

போனமாசம் டைரக்டர் ரஜத் புதுமுகம் தேடறாருனு கேள்விப்பட்டு, மாலினியை அவள் அம்மாவோடு அனுப்பினேன். அங்க என்ன நடந்துச்சுனு எனக்குத் தெரியாது. அதுக்கப்புறம் என்னை அவங்க பாக்கவே வரலை. ஒருவாரம் கழிச்சு வாஹினில ரஜத் சாரோட புதுப்பட பூஜைக்கு ஸ்டில் எடுக்க போனப்ப, அங்க ஆளே அடையாளம் தெரியாம மாலினி ரஜத்தோட போஸ் குடுத்திட்டிருந்தா. அவள்தான் அந்தப்படத்தின் புது ஹீரோயின் என்று மற்றவர்கள் சொல்லித் தெரிந்துகொண்டேன். அவள் என்னை தெரியாத ஒருவனை முதல்தடவை பார்ப்பதுபோல பார்த்த பார்வை என்னை அடித்து வீழ்த்திவிட்டது. நிச்சயம் இவள் ஒரு நல்ல நடிகைன்னு நெனச்சேன். அது நடந்து ஒரு மாசத்துக்குள் கொஞ்சகொஞ்சமாக இரக்கமில்லாமல் என்னைக் கத்தரித்துவிட்டாள்.

"பாபு உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ். உங்களாலேதான் இந்த சான்ஸ் கெடச்சிச்சு. இன்னும் மூணு வருஷம் ரஜத் கம்பெனி காண்ட்ராக்ட்"; "விருகம்பாக்கத்துல ஒரு புது வீடு எடுத்துக்குடுத்து அதுலதான் தங்கணும்னு சொல்றாங்க. டயம் கிடைக்கும்போது உங்களுக்கு ஃபோன் பண்றேன்"; "பத்திரிகைக்காரங்கள்லாம் ஏதாவது கிசுகிசு கெடைக்குமான்னு பாக்கறாங்க, அதனால இனிமே வீட்டுக்கெல்லாம் வராதீங்க, போனும் வேணாம். இப்ப நான் முன்னுக்கு வர்றதுதான் முக்கியம்". கடைசியாக நேற்று பேசும்போது, "முதல்படம் ரிலீசானதும் ரஜத்கிட்ட சொல்லி உங்களுக்கு ஏதாவது செய்யச்சொல்றேன். கல்யாணம் அது இதுனெல்லாம் பேசறதாயிருந்தா இனிமே என்னை ரீச் பண்ணாதீங்க."

அதுதான் எனக்கு விழுந்த கடைசி அடி. இதோ அதற்குத்தான் பழிவாங்க இங்கே காத்திருக்கிறேன். பையில் அவளோடு நான் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்கள், இடுப்பில் பிச்சுவா கத்தி. எனக்கு வாழ்க்கையில் கிடைத்த அத்தனை தோல்விகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் மாலினியை பிரதிநிதியாக்கி அவள் வந்ததும் தீர்த்துக்கட்டிவிட்டு இந்த ஃபோட்டோக்களை அவள் உடல்மேல் வைத்துவிட்டு நானும் இதோ இந்தக்குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்வது என்று தீர்மானித்துக் காத்திருக்கிறேன். எனக்குக் கத்தியால் குத்திக்கொள்ள மனசு வராது. ஜலசமாதி கொஞ்சம் வலியில்லாத சாவு. எனக்கு நன்றாக நீச்சல் தெரிந்தாலும், இந்தக் குளத்தில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை, பாசிக்கொடிகளில் சிக்கிக்கொண்டால் நீச்சல் தெரிந்தாலும் மாட்டிக்கொண்டு சில நொடிகளில் மரணம் உறுதி.

"சொளக்" என்று ஒரு சப்தம், அதைத் தொடர்ந்து "அய்யோ மோனி மோனி... தினேஷ் தினேஷ் மோனி தண்ணிக்குள்ள விழுந்துட்டா, அய்யோ" என்று அந்த அம்மா அலறும் சப்தம் கேட்டது. சுபாவமான மனுஷத்தன்மை என்னை உடனே ஓடவைத்தது. குளத்தில் அந்தக் குழந்தை விளையாடிய பந்து மிதந்துகொண்டிருந்தது, அதன்கீழ் நீர்க்குமிழிகள். கொஞ்சமும் யோசிக்காமல் குளத்தில் குதித்துவிட்டேன். மேட்ரிக்ஸ் ஸ்க்ரீன் மாதிரி பச்சையாகக் கலங்கின பாசி மேலெழும்பி, ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் நிதானப் படுத்திக்கொண்டு தம் பிடித்து தலையைச் சுழற்றிப் பார்த்தேன். கைகளால் மெதுவாக அளைந்ததில் ஒரு கால் கையில் அகப்பட்டது. ஒரே பாய்ச்சலில் அதைப்பற்றி, அந்தக்குழந்தையை நீர்மட்டத்துக்கு மேலே தூக்கினேன். "ஹாவ் ஹாவ்" என்று போராடியது. என்னால் நீந்தமுடியாமல் நான் சுழன்றபோது கால்களை நன்றாகத் தாமரைக்கொடிகள் பின்னியிருந்தன. குழந்தையை இப்படியே தூக்கிக்கொண்டிருக்கவும் முடியாது. இடுப்பில் இருந்த பிச்சுவா நினைவுக்கு வந்தது. ஒரு கையால் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, இன்னொரு கையால் பிச்சுவாவை எடுத்து, உடலை வளைத்து என்னைக் கொடிகளிலிருந்து விடுவித்துக் கொண்டேன்.

கரையில் இருந்த அந்த அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்ததும் அந்த அம்மா பேசக்கூட முடியாமல் என் காலில் விழுந்தாள். குழந்தை கண்விழித்து மலங்கமலங்கப் பார்த்து வீல் என்று கத்தியது. இதற்குள் அங்கு வந்திருந்த தினேஷ்- "ஹாஸ்பிடல் போலாம். நாங்க கெளம்பறோம். இந்தாங்க இது என்னோட கார்ட். என்னை நீங்க நிச்சயம் வந்து பாக்கணும். நீங்க கடவுள். இந்த நேரத்துல இங்க வந்து என் மோனி உயிரைக் காப்பாத்திட்டீங்க."

"உங்க குழந்தைதான் என் உயிரையும், மானத்தையும் காப்பாத்திருச்சு. என் கோபத்துல பைத்தியக்காரத்தனமா ஒரு பெரிய தப்பு பண்ண இருந்தேன்." மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

மாலினிக்கு "நோ நீட் டு கம். குட்பை" என்று எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு ஃபோனிலிருந்து அவள் தொடர்பை அழித்தேன். நானும் அவளும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களை அந்தக் குட்டையில் வீசினேன். சூரியன் மறையும் அந்த மெல்லிய வெளிச்சத்தில் தினேஷின் விசிட்டிங் கார்டைப் படித்தேன். "தினேஷ், சப் எடிட்டர், நேஷனல் ஜியாகரஃபி"!

அப்பா சொன்னமாதிரி கடவுள் நிச்சயம் இருக்கிறார்.

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
More

இப்போது திரும்பிவிடக்கூடாது
Share: 
© Copyright 2020 Tamilonline