|
தென்றல் பேசுகிறது... |
|
- |மே 2015| |
|
|
|
|
கடுமையான உழைப்பும், கல்வியுமே முன்னேற்றத்துக்கான சாதனங்கள் என்ற உறுதியான நம்பிக்கை இந்திய அமெரிக்கர்களை இந்த நாட்டில் பொதுவாழ்வின் உயர்படிகளை அடையவைத்திருப்பது அண்மையில் சந்தேகத்துக்கிடமில்லாமல் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த நிலையை அடைய ஓரிரு தலைமுறைகள் ஆனபோதும், "எதற்கும் எங்களுக்குத் தகுதியுண்டு" என்று பறையறையும் வகையில் இந்தப் பதவிகளை இந்திய அமெரிக்கர்கள் எட்டியுள்ளனர். சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான ராஜ ராஜேஸ்வரி நியூ யார்க்கின் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக ஏப்ரல் 14ம் தேதியன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். தெற்காசிய மற்றும் இந்திய அமெரிக்கப் பாரம்பரியங்களில் வந்த, நியூ யார்க் நகரத்தின் முதல் பெண் ஜட்ஜ் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் வெற்றிகரமான அரசுத்தரப்பு வழக்குரைஞரெனக் கருதப்படும் ராஜ ராஜேஸ்வரி, பரதநாட்டியம், குச்சிப்புடி ஆகியவற்றிலும் வல்லவர்.
நமக்கு மகிழ்ச்சிதந்த மற்றொரு செய்தி வைஸ் அட்மிரல் விவேக் மூர்த்தி அமெரிக்காவின் 19வது சர்ஜன் ஜெனரலாக நியமனம் ஆகியிருப்பது. இந்தப் பதவி வகித்தோருக்குள் மிகஇளையவரான (37 வயது) விவேக் மூர்த்தி இங்கிலாந்தில் பிறந்த இந்தியர். தன்னார்வப் பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் Doctors for America என்ற சேவையமைப்பைத் தோற்றுவித்திருக்கிறார். மற்றொரு குறிப்பிடத்தக்க நியமனமும் நீதித்துறையில் நடந்துள்ளது: லொரெட்டா E. லின்ச் அவர்கள் அமெரிக்காவின் 83வது அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டிருப்பதாகும். அமெரிக்கக் கறுப்பினப் பெண் ஒருவர் இப்பதவி வகிப்பது இதுவே முதல்முறை என்பது இந்த நியமனத்தின் சிறப்பு. |
|
|
சென்றமாதத் தென்றல் இதழில் திருநங்கையர்/திருநம்பியர் (திருநர்) குறித்த இரண்டு சிறுகதைகளை வெளியிட்டதோடு, தலையங்கத்திலும் "திருநங்கை என்பவர் ஒருபக்கம் பிச்சைக்காரர் மறுபக்கம் பாலியல் தொழிலாளி என்கிற அளவில்தான் புரிதல் இருக்கிறதே தவிர, அவரும் இந்த மானுடசமூகத்தின் பிரிக்கவியலாத அங்கம், அவரும் நம்மைப்போலவே கல்வி, தொழில், சமுதாயத்தில் மரியாதை, வாழ்க்கை வசதிகள் என எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமைபெற்றவர் என்பதைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை" என்று தெளிவுபடக் கூறியிருந்தோம். இதனை ஆமோதிப்பதுபோல இந்திய மாநிலங்களவை இவர்களுக்கான தனிநபர் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. குறுக்குப்பாலினம் (transgender) என்று அழைக்கப்படும் இவர்களைச் சமுதாயப் பொதுநீரோட்டத்தில் இணைக்கவும், அவர்களுக்குக் கல்வி, நிதியுதவி ஆகியவற்றில் இடஒதுக்கீடு தரவும் இந்த மசோதா வழிவகை கூறுகிறது. இதனைத் தனிநபர் மசோதாவாகக் கொண்டுவந்ததோடு, பிடிவாதமாக அதை அறிமுகப்படுத்தியே தீருவேன் என்று நின்று, வெற்றியும் பெற்ற மேலவை உறுப்பினர் (தி.மு.க.) திருச்சி சிவா அவர்களைப் பாராட்டுகிறோம். இது முழுமையாகச் சட்டமாகவேண்டும்.
அன்னையர் தினத்தைக் கொண்டாடும் இந்த மாதத்தில் தென்றலின் இரண்டு சிறுகதைகள் அன்னையரின் தியாகத்தை, பாசத்தைப் பேசுபவையாக இருக்கின்றன. ஆனால், யாரோ பெற்று அனாதையாகத் தெருவிலலையும் பாவப்பட்டவர்களை அரவணைத்து, தூய்மைப்படுத்தி, உடல் மற்றும் மனநலத்தைச் சரிசெய்து அவர்களைக் குடும்பத்தோடு சேர்க்கும் அரியபணியைக் கோவைமாநகரில் செய்துவரும் ஈரநெஞ்சம் மகேந்திரனின் நேர்காணல் எந்தக் கல்மனதையும் கரைத்துவிடும். பிரேமா ஸ்ரீராம் அவர்களின் இசைப்பணி, பத்தே வயதான விவேக் பாரதியின் ஓவியத் திறன் என்று தேடிப்பிடித்த முத்துக்களுடன் மே இதழ் உங்கள் கைகளை வந்தடைகிறது.
வாசகர்களுக்கு புத்தபூர்ணிமா, தொழிலாளர் தினம் மற்றும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
மே 2015 |
|
|
|
|
|
|
|