Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர் ராஜன் நடராஜன்
ஓவியர் ஜெயராஜ்
- அரவிந்த் சுவாமிநாதன்|செப்டம்பர் 2011||(2 Comments)
Share:
பத்திரிகை ஓவியங்களில் இளமைத் துள்ளலைக் கொண்டுவந்தவர் ஜெயராஜ். சிறுவர் கதை, சித்திரக் கதை, நகைச்சுவை, க்ரைம், காதல், வரலாறு எனப் பல களங்களைத் தனது தூரிகையால் கிளுகிளுப்பூட்டியவர். பார்த்தவுடன் சொல்லிவிடலாம் இது ஜெயராஜ் வரைந்த படம் என்று. பாக்யம் ராமசாமி அப்புசாமி-சீதாப்பாட்டிக்கு எழுத்துருவம் கொடுத்தாரென்றால் அவர்களைக் கண்முன்னால் கொண்டு நிறுத்தியவர் ஜெயராஜ். முரசொலி அறக்கட்டளை விருது, சீதாப்பாட்டி-அப்புசாமி அறக்கட்டளை விருது, வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டு விருது, விஜிபி குழுமத்தினரின் சிறப்புப் பரிசு எனப் பல கௌரவங்களையும் பெற்றவர். தூத்துக்குடி நகர மக்கள் இவருக்கு ‘ஓவியச் சக்கரவர்த்தி’ என்ற சிறப்புப் பட்டம் தந்துள்ளனர். ஓவிய உலகில் 50 வருடங்களைக் கடந்து இன்னமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜெயராஜை தென்றல் வாசகர்களுக்காகச் சந்தித்தோம். அதிலிருந்து.....

கே: படம் வரையக் கையில் பென்சிலை எடுக்கத் தோன்றியது எப்போது?
நிறைய கல்லூரிப் பெண்களிடமிருந்து லெட்டர் வரும். நான் வரைந்த மாடலின் டிரெஸ் குறித்து, பனியன் வாசகங்கள் குறித்து விசாரித்துக் கடிதம் வரும். டிரெண்டையே மாற்றிவிட்டீர்கள் என்று ஆண் வாசகர்கள் கடிதம் எழுதுவார்கள். ஆயிரக்கணக்கில் வரும். எதிர்ப்பைவிட வரவேற்புதான் அதிகம் இருந்தது.
ப: எப்போது என்று சொன்னால் நான் மிகைப்படுத்துவது போல இருக்கும். மூன்று வயதிலேயே நான் படம் வரைய ஆரம்பித்து விட்டேன். சுவரில், காகிதத்தில் கார், பஸ், பொம்மை என்று ஏதாவது வரைவேன். என் அப்பா அதைப் பார்த்துவிட்டு, பையன் ஏதோ கிறுக்கியிருக்கான் என்றில்லாமல் ஊக்குவிப்பார். இப்படி இருந்தா நல்லா இருக்கும், இப்படி வரை என்றெல்லாம் சொல்வார். வீட்டுக்கு வருபவர்களிடம் காட்டுவார். என்னுடைய வளர்ச்சியில் அவருடைய பங்கை மறக்க முடியாது. பின் மதுரை சேதுபதி ஹைஸ்கூல், அமெரிக்கன் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும்போது ஓவியப் போட்டிகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். நண்பர்களோடு சேர்ந்து ‘சிற்பி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கிறேன். அதில் நிறையச் சிரிப்பு வெடிகள், படங்கள் வரைந்திருக்கிறேன்.

கே: முதல் ஓவியம் எப்போது அச்சேறியது?
ப: அப்பாவுக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றலானது. குடும்பத்தோடு சென்னைக்குப் போனோம். நான் படித்துவிட்டு வேலை தேடும் முயற்சியில் இருந்தேன். அப்பா என்னை கூப்பிட்டு, "நீ குமுதம், விகடன் பத்திரிகைகளைப் போய்ப் பார். உன் படத்தையெல்லாம் கையோடு எடுத்துக் கொண்டு போய்க் காட்டு. வாய்ப்புக் கிடைக்கும்" என்றார். அங்கேயெல்லாம் என்னை உள்ளே விடுவார்களா என்றே எனக்குத் தயக்கமாக இருந்தது. "இதோ பார், முடியும் என்று நினைத்தால் எதுவும் முடியும். முடியாது என்றால் முடியாது. மதுரையைவிட இங்கு வாய்ப்புகள் நிறைய. முயற்சி செய்" என்றார். நான் குமுதம் பத்திரிகைக்கு ஓவியங்களை எடுத்துக் கொண்டு போனேன். எஸ்.ஏ.பி., ரா.கி.ரங்கராஜன் இருவரையும் பார்த்தேன். எஸ்.ஏ.பி என்னிடம் "ரஃப் ஸ்கெட்ச்ன்னு சொல்றீங்க. ஆனா பத்திரிகைக்குன்னு வரைஞ்ச மாதிரி நல்ல க்வாலிட்டியா இருக்கே" என்றார். பின் ரா.கி. ரங்கராஜனிடம் "இவர்ட்ட நாம நேத்து பேசிட்டிருந்தோமே உங்களோட அந்த சிறுகதையைக் கொடுத்து வரையச் சொல்லுங்க" என்றார். ரங்கராஜனுக்கு ஒரே சந்தோஷம். அவருக்குச் சிரித்த முகம். ரொம்பப் பெருந்தன்மையான மனிதர். ஒளிவு மறைவு இல்லாதவர். அவர் பேச்சில் ஒரு நகைச்சுவை இருக்கும். பிறரை ஊக்குவிப்பதில் ரொம்ப ஆசை கொண்டவர். சிறுகதையைக் கொடுத்தார். நானும் வரைந்து கொடுத்தேன். கோட்டோவியம் தான். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அக்டோபர் 10, 1958 இதழில் அந்த ஓவியம் வெளியானது. என் முதல் ஓவியமே ரா.கி. ரங்கராஜன் சார் கதைக்கு அமைஞ்சதில் எனக்கு ரொம்பப் பெருமை.

பத்திரிகைகளுக்கு நான் வரைவேன் என்றோ, என்னால் முடியும் என்றோ நான் நினைத்தே பார்த்ததில்லை. 22 வயதில் தொடங்கிய அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது.

கே: ஜெயராஜ்னாலே இளமை, துடிப்பு, நவீனம் என்று சொல்லிவிடலாம். அப்படி ஒரு பாணியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
ப: ஓவியம் என்பது இயல்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. எனக்கு முன்னால் சிருங்காரமான விஷயங்களை ஓவித்தில் கொண்டு வருவதில் ஒருவிதத் தயக்கம் இருந்தது. எழுத்தாளர்கள் "அவன் அவளைக் கட்டி அணைத்தான்" என்று எழுதியிருந்தால் கூட ஓவியத்தில் அது வெளிப்பட்டதில்லை. நான் வந்த பிறகு இயல்பான விஷயங்களை இயல்பாகக் கொண்டு வந்தேன். அதில் இருந்த நெருக்கம், நளினம், கவர்ச்சியை எஸ்.ஏ.பி. போன்றவர்கள் ரசித்து ஊக்குவித்தார்கள். மாற்றியே ஆக வேண்டும் என்றெல்லாம் முனைப்பாக நான் செய்யவில்லை. கதையில் வரும் சம்பவத்தைக் கற்பனையில் பார்ப்பதை விடுத்து, ஓவியத்திலேயே இருக்க வேண்டும் என்று நினைத்து வரைந்தேன். உதாரணமாக ஒரு பீச், காதலன், காதலி நடந்து செல்கின்றனர் என்று கதையில் இருந்தால் நானாகவே ஆணுக்கு பேண்ட், சர்ட், பெண்ணுக்கு ஜீன்ஸ், பனியன் என்று வரைந்து விடுவேன். அந்த பனியனில் கவர்ச்சியாக ஏதாவது ஒரு கேப்ஷனையும் போட்டுவிடுவேன். ஒரு சிலர் செக்ஸியாக வரைகிறான் என்றார்கள். ஆனால் உள்ளூர ரசித்தார்கள். அதை ஒப்புக்கொள்ளத் தயக்கம் இருந்தது, அவ்வளவுதான்.

கே: எதிர்ப்பு இருந்ததா?
ப: பெரிய எதிர்ப்பு என்று இல்லை. ஆனால் வயதான பல பெண்கள், குடும்பத் தலைவிகள் கடிதம் எழுதுவார்கள். இப்படி வரைவது நன்றாக இல்லை. உங்களுக்குத் திமிரா என்றெல்லாம் திட்டிக் கடிதம் வரும். நானும் அவர்களுக்கு, உங்களைப் போன்ற நல்லவர்களிடம் திட்டு வாங்குவதே எனக்குப் பெருமை, பாக்யம் என்றெல்லாம் சமாதானம் செய்து, நான் வரைந்தது பற்றி விளக்கிக் கடிதம் எழுதுவேன். நிறைய கல்லூரிப் பெண்களிடமிருந்து லெட்டர் வரும். நான் வரைந்த மாடலின் டிரெஸ் குறித்து, பனியன் வாசகங்கள் குறித்து விசாரித்துக் கடிதம் வரும். டிரெண்டையே மாற்றிவிட்டீர்கள் என்று ஆண் வாசகர்கள் கடிதம் எழுதுவார்கள். ஆயிரக்கணக்கில் வரும். எதிர்ப்பைவிட வரவேற்புதான் அதிகம் இருந்தது.

கே: நீங்கள் பள்ளி பாடப் புத்தகங்கள், சிறுவர் இதழ்கள், காமிக்ஸ் இவற்றுக்கெல்லாம் ஓவியம் வரைந்துள்ளீர்கள், அல்லவா?
ப: நிறைய. காமிக்ஸ் கதைகளுக்கு வரைவது கஷ்டம். சின்னச் சின்ன ப்ரேமுக்குள் விவரமான படங்களை வரைய வேண்டும். நிறைய கவனம் வேண்டும். அதுபோல பாடப் புத்தகங்களுக்கு வரைவது ரொம்பக் கஷ்டமான விஷயம். ஒரு சிறிய பக்கத்தில் மேல், கீழே பாடம் இருக்கும். நடுவில் உள்ள சின்ன இடைவெளியில் வருமாறு வரைய வேண்டும். படம் சின்னதாக இருக்க வேண்டும். அதே சமயம் மாணவர்களுக்கு என்பதால் மிகத் தெளிவாக, பிழை இல்லாததாக இருக்க வேண்டும். இதெல்லாம் பத்திரிகைகளுக்கு ஓவியம் போடும்போது மிகவும் உதவியது. ஓவியத்தின் பின்னணியில் வரும் விவரங்களும் சரியாக வருவதற்கு இந்த அனுபவம் உதவியது. எஸ்.ஏ.பி. இந்த மாதிரி பின்னணியில் ஜன்னல் கதவு திறந்து இருப்பது; அதன்மூலம் வெளியே செடி, மரம் தெரிவது, பீரோவின் ஒரு கதவு திறந்து மற்றொரு கதவு மூடி இருப்பது, சாவி கதவில்/ பீரோவில் தொங்குவது போன்ற சின்ன ஆனால் நுணுக்கமான விஷயங்களை ரசித்துப் பாராட்டுவார்.

சிறுவர்களுக்காக நான் வரைந்ததில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது Oxford Dictionary for Children. அதற்குப் படம் வரைந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல இடங்களில் அது நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஓரியண்ட் லாங்க்மனுக்கு வரைந்திருக்கிறேன். குமுதத்தில் சுஜாதா எழுதிய ‘நடுவானத்தில்’ என்ற சித்திரக்கதைத் தொடருக்கு நான் வரைந்ததைப் பலரும் பாராட்டினர். ஃபாரின் ஸ்டேண்டர்டுக்கு இருக்கிறது என்றார்கள்.

கே: சுஜாதா என்றாலே ஞாபகத்திற்கு வருவது கணேஷ், வசந்த். அவர்களை வாசகர் கண்முன்னே உலவவிட்ட அனுபவத்தைச் சொல்ல முடியுமா?
ப: சுஜாதாவின் பாணியே தனி. அதுவரை வாசகர்கள் படித்திராத நடை; புதுமையான கரு; வித்தியாசமான கதைப்போக்கு. நவீனமானதுன்னு சொன்னாக்கூட சுஜாதாவைக் குறைத்து மதிப்பிடுவதாகும். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை என்னும்படி நிறையத் தகவல்களை அறிந்து வைத்திருந்தார். தனக்குத் தெரிஞ்ச எல்லா விஷயங்களையும் வாசகனுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணமுங்கற ஆர்வம் அவருக்கு இருந்தது. நான் கிறங்கிப் போய் அவருடைய கதைகளைப் படிப்பதுண்டு. சுஜாதா கதைக்குப் படம் போடணும்னு சொன்னதும் எனக்குத் தலைகால் புரியல்லை. கணேஷ், வசந்த் இருவரையும் ஸ்கெட்ச் வரைந்து, மைலாப்பூரில் இருந்த அவரிடம் சென்று காட்டினேன். வாங்கிப் பார்த்த அவர், "இதைவிட பர்ஃபெக்டாகப் போட முடியாது. இதுவே இருக்கட்டும்" என்று சொல்லிவிட்டார். கணேஷ் கொஞ்சம் சீரியஸான ஆசாமி. வசந்த் குறும்புக்கார இளைஞன். அதை நான் அந்த ஓவியத்தில் பிரதிபலித்திருந்தேன். அது எஸ்.ஏ.பி.க்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், "வஸந்தை இண்ட்ரட்யூஸ் செய்ய முடியுமா, முகவரி தெரியுமா?" என்று காலேஜ் பெண்களிடமிருந்து கடிதங்கள் வந்ததுதான்.

கே: அப்புசாமி, சீதாப்பாட்டி உருவானது குறித்துச் சொல்லுங்கள்!
ப: அது ரொம்ப சுவாரஸ்யமானது. குமுதத்தின் ஆசிரியர் குழுவில் ஜ.ரா. சுந்தரேசனும் ஒருவர். அவர் என்னிடம், "இதுவரை எல்லோரும் இளசுகளையே நாயகன், நாயகியாக வைத்து எழுதியிருக்கிறார்கள் நான் ஒரு மாறுதலுக்கு ஒரு தாத்தாவை வைத்துக் கதை எழுதப் போகிறேன். நல்ல பழுத்த கிழம். ஆனால் அப்பாவி. அவரைப் பார்த்தாலே சிரிப்பு வர வேண்டும். அந்த மாதிரி வரையுங்கள்" என்று சொன்னார். நானும் யோசித்து ஒரு தாத்தா உருவத்தை வரைந்தேன். அது அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. ஆசிரியரிடம் காட்ட உள்ளே எடுத்துச் சென்றார். நான் அதற்குள் அந்த தாத்தாவுக்கு ஜோடியாக, ஒரு பாட்டியையும் வரைந்துவிட்டேன். அப்புசாமித் தாத்தாவின் முகத்தையே, பாட்டிக்கும் போட்டேன். அதற்கு மேலே தலைமுடி, மூக்குக் கண்ணாடி, குங்குமம் என்று சில எக்ஸ்ட்ரா விஷயங்களைச் சேர்த்தேன். இரண்டு படங்களையும் பார்த்த எஸ்.ஏ.பி. சிரியோ சிரி என்று சிரித்தார். வாசகர்களிடமும் நல்ல வரவேற்பு. இளமையாக, கவர்ச்சியாக வரைந்த இளம் பெண்களின் படங்களை விட, எனக்கு அதிகமான பெயர், புகழ் பெற்றுக் கொடுத்தது, அப்புசாமி-சீதாப்பாட்டி தான். ரசகுண்டு, பீமா ராவ், கீதாப் பாட்டி, அரைபிளேடு அருணாசலம் என்று நிறைய துணைப் பாத்திரங்கள். சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்ற மூன்று வடிவங்களிலும் வந்திருக்கும் ஒரே கதை அப்புசாமி கதைதான் என்று நினைக்கிறேன். எந்தப் பத்திரிகையில் அப்புசாமி கதை வந்தாலும், அதற்குப் படம் போட என்னையே அழைத்தனர்.

கே: திரைப்படங்களில் உங்கள் பங்களிப்பு பற்றி..
ப: இயக்குநர் மகேந்திரன் என்னிடம் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். கதாநாயகிக்குப் புதுமுகத்தைப் போடலாம்னு நெனக்கிறேன். எந்த முகம் சரியானதாக இருக்கும் என்று சொல்ல்லுங்கள் என்று கூட்டிச் சென்றார். ஏவி.எம். ஸ்டூடியோவில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கமல்ஹாசனைச் சந்திக்க சுஹாஸினி வந்திருந்தார். அவர் கமலுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த நான், யார், யாரையோ நாயகியாக்குவதை விட இந்தப் பெண் பொருத்தமானவராக இருப்பார் என்று மகேந்திரனிடம் சொன்னேன். மஹேந்திரனும் ஒப்புக் கொண்டார். அப்போது சுஹாசினி கேமரா அசிஸ்டெண்டாக இருந்தார் என்று நினைவு. மகேந்திரன் பேசி அவரைச் சம்மதிக்க வைத்தார். நான் அதில் காஸ்ட்யூம் டிசைனர். அதில் சுஹாசினி அணிந்த காஸ்ட்யூம் எல்லாம் என் மகள் ஹில்டா போடுவதின் மாடல்கள்தான். அந்தப் படம் நல்ல வெற்றி. அதேபோல ரஜினி நடித்த ‘ஜானி’ படத்திலும் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றினேன். ரஜினியைச் சந்தித்த மகேந்திரன், "இவர்தான் உங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனர், ஓவியர் ஜெயராஜ்" என்று அறிமுகப்படுத்தினார். அதற்கு ரஜினி, "நல்லது சார். மத்தவங்களவிட ஒரு ஓவியருக்கு நல்லா காஸ்ட்யூம் டிசைன் செய்யத் தெரியும். ஓவிய அனுபவமும் நிறைய இருக்கும். இவரையே வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார். ரஜினி அணிந்த ஆடைகளில் "Music the life giver" என்று நான் போட்டிருந்தது எல்லாருக்கும் பிடிச்சிருச்சு. அது இசை சம்பந்தப்பட்ட படம்.

கே: தொடர்ந்து திரைப்படங்களில் பணிபுரியாதது ஏன்?
ப: எனக்கு ஓவியம்தான் தாய்வீடு. ஆரம்ப காலத்தில் எனக்குச் சோறு போட்டது ஓவியம்தான். சினிமாவுக்குப் போனால் இதில் முழுமையாக ஈடுபட முடியாது. என்னால் ஓவியத்தைப் புறக்கணிக்கவும் முடியாது. அதனால்தான்.

கே: சாவியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆமாம். அவர் அடிக்கடி "நான் உங்கள் ஃபேன் சார்" என்று என்னிடம் சொல்வார். "பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சார்!" என்பேன். உடனே அவர் "இல்லை, இல்லை ஃபேன் சின்ன வார்த்தைதானே!" என்பார். அப்படி ஒரு நகைச்சுவை உணர்வு மிக்கவர். தினமணி கதிரில் ஆசிரியராக இருந்தபோது என் படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். முதன் முதலாக என்னுடைய படங்களை டபுள் ஸ்ப்ரெட்டில் போட்டது அவர்தான். கதிரில் சுஜாதாவின் ஜே.கே.வுக்கு ஓவியம் வரைந்தது என்னால் மறக்க முடியாதது. ஒரு எழுத்தாளனுக்கு, ஓவியனுக்கு முதன்முதலில் பாராட்டு விழா நடத்தியதே சாவிதான். சோழா ஷெரட்டனில் என்னையும் சுஜாதாவையும் அவர் கௌரவப்படுத்தினார். அதை என்னால் மறக்கவே முடியாது. அவரோடு இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா, ஜெர்மனி எனப் பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன். ஒருமுறை பிரான்ஸ் செல்வதற்காக விசா நேர்காணலுக்குப் போயிருந்தோம். விசா அதிகாரி ஒரு மாதிரி ரஃப் அண்ட் டஃப் ஆக இருந்தார். விசா கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது. அவரோடு நான் பேசிக் கொண்டிருந்தபோதே கீழே மேசைமீது அவரது உருவத்தை வரைந்து கொண்டிருந்தேன். "நான் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நீ கீழே ஏதோ செய்து கொண்டிருக்கிறாயே" என்று கோபத்தில் கத்திவிட்டு அதை வாங்கிப் பார்த்த அவர் சிரித்து விட்டார். சூழ்நிலை மாறியது. எங்களுக்கு விசாவும் கிடைத்தது. அந்த ஓவியத்தை அந்த அதிகாரியிடமே கொடுத்துவிட்டேன். சாவிக்கு இதில் ஒரே சந்தோஷம். ஓவியனால் முடியாத ஒன்று, அவன் ஓவியத்தால் முடிந்ததே என்று எனக்கும் சந்தோஷம்தான்.
கே: உங்களைக் கவர்ந்த ஓவியர்கள், எழுத்தாளர்கள் யார், யார்?
ப: உலக அளவில் பார்த்தால் என்னை மிகவும் கவர்ந்த ஓவியர் நார்மன் ராக்வெல் அவருக்கு இணையாக இன்னும் யாரும் பிறந்து வரவில்லை. அவர் செய்த சாதனைகளையும் யாரும் செய்யவில்லை. அவருடைய தரத்தை இன்னமும் யாரும் நெருங்கவில்லை. ஜெயராஜ் எல்லாம் பிறந்து பிரயோசனமில்லை. அவர்கிட்டக் கூட போக முடியாது. நான் அமெரிக்கா சென்றபோது எப்படியாவது நார்மன் ராக்வெல்லைச் சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அலைந்து, திரிந்து கடைசியில் அவர் அலுவலகத்தைக் கண்டுபிடித்தேன். அங்கிருந்தவரிடம், "நான் நார்மன் ராக்வெல்லைச் சந்திக்க வேண்டும். அவரோடு கை குலுக்கினால் கூடப் போதும். இன்றைக்கு முடியாவிட்டாலும் என்றைக்கு என்றாவது சொல்லுங்கள். நான் வந்து பார்க்கிறேன்" என்றேன். அதற்கு அவர் வாட்டமான முகத்துடன், "Sorry, he is no more" என்றார். அதைக் கேட்டதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. அவரைச் சந்திக்க முடியாமல்போன வருத்தம் இன்றுவரை எனக்கு உண்டு.

எழுத்தாளர்கள் எல்லாரையுமே எனக்குப் பிடிக்கும். அதில் நான் ஓவியம் வரைவதற்கு நிறைய களங்கள் அமைத்துத் தந்த சுஜாதாவையும், புஷ்பா தங்கதுரையையும் மிகவும் பிடிக்கும். சில கதைகளுக்கு ஓவியம் வரைவதே கடினமாக இருக்கும். ஆனால் இவர்கள் இருவருடைய கதைகளையும் படித்தீர்கள் என்றால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துப் படமாக வரைய முடியும். அந்த மிளிர்ச்சி இவர்களுடைய கதைகளில் இருக்கும். அதுமாதிரி அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதிக்கு எல்லாம் ஹோம்லி சீன்ஸ் நிறைய வரைந்திருக்கிறேன்.

கே: ஓவியத்துறையில் இப்போது என்ன மாற்றத்தைக் காண்கிறீர்கள்?
என்னை மிகவும் கவர்ந்த ஓவியர் நார்மன் ராக்வெல் அவருக்கு இணையாக இன்னும் யாரும் பிறந்து வரவில்லை. அவர் செய்த சாதனைகளையும் யாரும் செய்யவில்லை. அவருடைய தரத்தை இன்னமும் யாரும் நெருங்கவில்லை.
ப: படங்கள் எல்லாம் இப்போது தேய்ந்து போய் அங்கே சினிமா வந்து விட்டது. சினிமாடோகிராபி ஓவியத்தின் இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டது. எந்தப் பத்திரிகையையும் பாருங்கள், சினிமாப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம். சிறுகதை, தொடர்கதைகள் குறைந்துவிட்டன. ஓவியம் ஒரு மகத்தான கலை. மைக்கலேஞ்சலோ, ரெம்ப்ராண்ட் போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்ற ஒரு பெரிய கலை என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள். இது காலத்தின் மாற்றம். ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

கே: பெண்கள் இத்துறையில் அதிகம் இல்லை என்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
ப: குடும்பச் சூழல்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆண்களைப் போல சுதந்திரமாக பெண்களால் இருக்க முடிவதில்லை. அவர்களுக்கு நிறைய பொறுப்புகள், சமூகக் கடமைகள் இருக்கின்றன. உடனே ஏன் இந்தக் காலத்தில் சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் என்று பல துறைகளில் பெண்கள் வெற்றிகரமாக இருக்கிறார்களே என்று சொல்லலாம். அது உண்மைதான். ஆனால் அது 8 மணி நேரப் பணிதான். மீதி நேரத்தில் மற்ற வேலைகளைச் செய்யலாம். ஆனால் ஓவியத் துறை அப்படி அல்ல. 24 மணி நேரமும் கூட ஒரு கதையின் நினைவோடு, தாக்கத்தோடு, சிந்தனையோடு இருக்க வேண்டி வரும். பத்திரிகையுலக அவசரத்துக்கு ஏற்ப இரவு, பகல் பார்க்காமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். அதனால்தான் பெண்கள் அதிகம் இத்துறைக்கு வருவதில்லை.

கே: ஒரு நல்ல ஓவியத்துக்கான அளவுகோல் என்ன?
ப: அது வெறும் ஓவியமாக மட்டும் தெரியாமல், ஒரு காட்சியாக, இயல்பான ஒன்றாக வாசகர்களால் உணரப்பட்டால் அது நல்ல ஓவியம். நல்ல ஓவியத்துக்கான அளவுகோல் வாசக ரசனையும், வரவேற்பும்தான்.

கே: ஆரம்பத்தில் "ஜெயராஜ்." என்று புள்ளி போட்டு வரைந்தீர்கள். பின்பு அது "ஜெ." ஆயிற்று. பின்னர் :ஜெ..." என்று புள்ளி அதிகரித்தது. இப்போது பார்த்தால் "..ஜெ..."முன்னால், பின்னால் எல்லாம் புள்ளி வைக்கிறீர்கள். இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?
ப்: சத்தியமாக இருக்கிறது. ஆரம்பத்தின் நான் "ஜெயராஜ்." என்றுதான் வரைந்து கொண்டிருந்தேன். பின்னர் ஜெ. என்று புள்ளி வைத்து வரைந்தேன். அந்தப் புள்ளி என் மனைவியைக் குறிக்கும். அப்புறம் இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களுக்காக இரண்டு புள்ளிகள் சேர்த்து "ஜெ..." என்று வரைந்தேன். மருமகன் வந்தவுடன் அவரையும் எனது குழந்தையாகவே நினைத்து நான்கு புள்ளிகளோடு வரைந்தேன். பின்னர் பேரக் குழந்தைகள் என்றெல்லாம் வந்ததாலும், அவர்கள் எனக்கு அடுத்தடுத்த தலைமுறை என்பதாலும் என் பெயருக்கு முன்னால் இப்போது புள்ளி வைத்து வரைகிறேன். "இப்படியே போனால் உன் பெயரைச் சுற்றி வெறும் புள்ளியாகத்தான் இருக்கும்" என்று சிலர் கிண்டல் கூடச் செய்தார்கள். குடும்பம் இல்லாமல் நான் இல்லையே!

கே: உங்கள் வாரிசுகளுக்கு ஓவிய ஆர்வம் உண்டா?
ப: ஹில்டா இயற்கைக் காட்சிகளை நன்றாக வரைவார். டிஸ்னி மனிதர்களை வரைவார். கொஞ்சம் டெக்னிகலாக வரைவார். தேவி, ஆங்கில கோகுலம் போன்றவற்றில் வரைந்துள்ளார். கோகுலத்தில் கதை எழுதிப் படமும் வரைந்திருக்கிறார். கோகுலத்தில் அவர் உருவாக்கிய அப்பு & குக்கூ சிறார்களைக் கவர்ந்த பாத்திரம். ரொம்ப ஃபேமஸ். ரேகா காமிக்ஸில் கதை டிஸ்னி கதை எழுத, நான் வரைந்திருக்கிறேன். மகன், மகள் இருவருமே தற்போது ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறார்கள்.

ஜெயராஜ் நட்போடு சரளமாகப் பேசுகிறார். எதற்கும் உடனடியாக பதில் வருகிறது. பேசிக்கொண்டே இருக்கலாம் என்று நமக்குத் தோன்றினாலும் நேரமாகிவிடவே நன்றி கூறி விடை பெறுகிறேன்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

கலைஞர் பாதுகாத்த பொற்கிழி
ஒருமுறை கலைஞர்களுக்கான பாராட்டு விழாவில் எனக்குப் பொன்னாடை போர்த்தினார் கலைஞர். அப்போது என்னிடம், "நல்லா வெளுத்துக் கட்டுறீங்க படங்கள்லாம். நீங்க அப்படி வெளுத்துக் கட்டினதையே உங்க மேல காயப் போடுறேன்" என்று சொல்லிப் போர்த்தினார். முரசொலி அறக்கட்டளை விழாவில் என்னை கௌரவித்துப் பாராட்டினார். எனக்கான பரிசை - அது ஒரு பொற்கிழி - ஒரு பேழையில் வைத்துக் கொடுத்தனர். நன்றியுரை ஆற்றச் செல்லும்போது நான் அதைக் கையோடு கொண்டு போனேன். உடனே கலைஞர் குறுக்கிட்டு, "அதையும் ஏன் கூடவே கொண்டு போறீங்க. என்கிட்ட கொடுத்துடுங்க. வேற யாரும் எடுக்காம நீங்க வர்ற வரைக்கும் பாத்துக்கறேன்" என்றார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. நான் அவரிடமே கொடுத்துவிட்டு, பேசி முடித்துத் திரும்பி வரும்போது வாங்கிக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியை, கலைஞரின் நகைச்சுவையை என்னால் மறக்கவே முடியாது.

நண்பரும் நானும்
மனோகர் தேவதாஸ் எனது பால்யகால நண்பர். கல்லூரியில் எனக்கு சீனியர். நல்ல ஓவியரும்கூட. அவரது ஓவிய பாணி மிக வித்தியாசமானதாக, சிறப்பாக இருக்கும். கோடுகளிலேயே மிக அழகாகக் காட்சிகளைக் கண்முன் கொண்டு வருவார். அவருக்குக் கொஞ்சம் பார்வைக் குறைவு உண்டு. கண்ணுக்கு அருகில் வைத்துத்தான் வரைய முடியும். அந்தக் கஷ்டத்திலும் வரைந்து அவர் மிகச் சிறப்பாக, நுணுக்கமான விஷயங்களை வரைந்திருக்கிறார் என்பதால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை, மதுரை என்று அவர் நிறைய வரைந்திருக்கிறார். அதை புகைப்படக் காட்சியாகவும் வைத்து பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவரது ஓவியங்களை நான் பாராட்டினால், "நான் என்ன வரைகிறேன். உங்களைப் போல ஹ்யூமன் ஓவியங்களை எல்லாம் வரையவே முடியலையே!" என்பார். நான் அதை மறுத்து, "நீங்கள் வரைவதுதான் மிகவும் கஷ்டம். நீங்கள் கிரேட் ஆர்டிஸ்ட்" என்று பாராட்டுவேன்.

மனைவி ஒரு மந்திரி
எனது எல்லா வெற்றிக்கும் காரணம் என் மனைவிதான். எனக்கு உதவியாக இருப்பது, பிரஷ் எடுத்துத் தருவது, தேவையானதை வாங்கி வைப்பது, கதைகளை படித்துக் காட்டுவது, எதை எப்போது, எந்த இதழுக்கு அனுப்புவது என்று ஒழுங்குபடுத்துவது என்று எல்லாப் பணிகளையும் செய்வார். அதுமட்டுமல்ல; நான் வரையும் ஓவியங்களைச் சரிபார்த்து, "இது இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும்;" "இது அதிக கவர்ச்சியாக இருக்கிறது. சரியில்லை; இதைக் கொஞ்சம் மாற்றினால் இன்னும் பெட்டராக இருக்கும்" என்றெல்லாம் ஆலோசனை சொல்வார். நானும் உடனே மாற்றி விடுவேன். இவளுக்கென்ன தெரியும். இவள் ஆர்டிஸ்ட்டான நம்மைக் குறை சொல்வதாவது என்றெல்லாம் நான் நினைத்திருந்தால் அன்றே நான் தோற்றுப் போயிருப்பேன். ஆலோசனை கூறும் மனைவியின் கருத்துக்கு, ஒரு ரசிகையின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டதால்தான் நான் இன்று நாலு பேர் பாராட்டும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன்.

.ஜெ..... சில குறிப்புகள்
  • அப்புசாமி - சீதாப்பாட்டி ஓவியத்தையே தனது விசிடிங்கார்டில் பயன்படுத்துகிறார் ஜெ.
  • ஜெயராஜுக்கு ஒரு விபத்தில் வலது கை எலும்பு முறிந்து விட்டதால் சிலகாலம் இடது கையால் படம் போட்டிருக்கிறார். கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியாமல் இருக்கும் அந்த நேர்த்தியை சாவி மிகவும் பாராட்டியிருக்கிறார். குங்குமம் இதழுக்காக ஒருமுறை காலாலேயே படம் வரைந்திருக்கிறார்.
  • தமிழ் தவிர ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னட இதழ்களுக்கு வரைந்துள்ளார். மலேசிய முரசு, லண்டன் முரசு போன்றவற்றுக்கும் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.
  • விஜயவாடாவில் ஒருமுறையும், சென்னை ரஷ்யன் கல்சுரல் அகாடமியிலும் இருமுறை ஓவியக் கண்காட்சி நடத்தியிருக்கிறார்.
  • பல விளம்பரப் படங்களில் உதவியிருக்கிறார்.
  • ஓய்வுநேரத்தில் பேப்பர் மற்றும் கார்ட்போடில் அழகாக கைவினைப் பொருட்களைச் செய்கிறார். மௌத் ஆர்கன் வாசிப்பதில் நிபுணர்.
மேலும் படங்களுக்கு
More

டாக்டர் ராஜன் நடராஜன்
Share: 




© Copyright 2020 Tamilonline