|
பாடிப் பறந்த குயில் பட்டம்மாள் |
|
- |ஆகஸ்டு 2009| |
|
|
|
|
கர்நாடக சங்கீதத்தின் மூத்த இசைக்கலைஞரும், கர்நாடக சங்கீதப் பெண் மும்மூர்த்தியரில் ஒருவர் என்று போற்றப்பட்டவருமான டி.கே. பட்டம்மாள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. 'பத்மபூஷண்', 'பத்மவிபூஷண்' உட்படப் பல பட்டங்களைப் பெற்ற பட்டம்மாள் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் என்ற ஊரில் பிறந்தவர். இயற்பெயர் அலமேலு. தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதரும், தாயார் காந்திமதி என்கிற ராஜம்மாளும் நல்ல இசைஞானம் கொண்டவர்கள். ரமண பக்தர்கள். குழந்தைக்கு மூன்று வயதாக இருக்கும்போது ரமணாச்ரமம் சென்ற போது, பகவான் அவர்களை ஆசிர்வதித்ததுடன், குழந்தையின் நாவில் தேன் தடவி ஆசிர்வதித்தார்.
தாமல் சிறு கிராமம் என்பதால் பெரிய இசை வல்லுநர்களிடம் பயிலும் வாய்ப்பு பட்டம்மாளுக்குக் கிட்டவில்லை. தந்தையிடமே பாடக் கற்றுக் கொண்டார். தந்தைதான் அவர் குரு. பின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற நயினாப்பிள்ளை நடத்திய தியாகராஜ உற்சவ விழாவில் கலந்து கொண்டு பைரவி ராகத்தில் அமைந்த 'ரக்ஷ பெட்டரே' என்ற பாடலைப் பாடி முதல்பரிசு பெற்றார். அப்போது வயது எட்டு. பின் அவர் ஒரு திருமண விழாவில் பாடுவதைக் கேட்ட ஆரணியைச் சேர்ந்த தெலுங்கு வித்வான் ஒருவர் பட்டம்மாளைத் தனது சிஷ்யையாக்கிக் கொண்டார். அவரிடமிருந்து தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடக் கற்றுக்கொண்டார். தொடர்ந்து பள்ளியில் விழாக்களிலும், நாடகங்களிலும் பாடிப் பல பரிசுகளை வென்றார். வானொலியில் பாடும் வாய்ப்பும் வந்தது. கேட்டுக் கேட்டும், இசை ஜாம்பவான்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பயின்றும் தனது இசைஞானத்தைப் பெருக்கிக் கொண்டார் பட்டம்மாள்.
சென்னைக்குக் குடி பெயர்ந்த பட்டம்மாள், தனது இசைப் பயணத்தைச் சென்னையில் துவக்கினார். அதுவரை ஆண் பாடகர்களே செங்கோலோச்சிக் கொண்டிருந்த மேடைகளில் பட்டம்மாளின் குரல் உரத்து ஒலிக்கத் தொடங்கியது. மற்ற ஆண் பாடகர்களைக் காட்டிலும் ராகம், தானம், பல்லவியை திறமையாக கவனத்துடன் விஸ்தாரமாகப் பாடித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சக கலைஞர்களாலேயே 'பல்லவி பட்டம்மாள்' என்று பாராட்டப் பெற்றார்.
| கர்நாடகக் கச்சேரி மேடைகளில் மட்டுமல்ல, திரையிசையிலும் இவர் பங்கு மகத்தானது. குறிப்பாக பாரதியாரின் பாட்டுக்களை திரைப்படங்களில் பாடி, அவர் பெருமையை பாரெங்கும் ஒலிக்கச் செய்ததில் பட்டம்மாவின் பங்கு குறிப்பிடத் தக்கது. | |
"உயர்ந்த சங்கீதத்தில் செவிக்கு இன்பமும், மூளைக்கு உற்சாகமும், இருதயத்துக்கு உணர்ச்சியும் அளிக்கும் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று பார்த்தோம். இந்த மூன்று முக்கிய அம்சங்களுக்கும் அஸ்திவாரம் ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் அமைந்திருக்கிறது" என்று கல்கி அவர்கள் எழுதினார். எழுதியது, 1936-ல்; அதாவது பட்டம்மாளுக்கு 17 வயதுதான்! கல்கி மேலும் கூறுகிறார், "ஸாஹித்யத்தில் கவனம் செலுத்தி அக்ஷரங்களைச் சுத்தமாக உச்சரித்துப் பாடுகிறார். அவற்றின் பொருளையும் உணர்ந்து சொற்களை இசையுடன் கலந்து பாடத் தொடங்கும்போது உயர்தர சங்கீதத்தில் நாம் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இவருடைய பாட்டில் பொருந்தி விளங்குவதைக் காண்போம்". |
|
அந்தக் காலத்தில் வித்வான்கள் பெரும்பாலும் தமிழ்ப் பாடல்களை நிகழ்ச்சியின் இறுதியில்தான் பாடுவது வழக்கம். ஆனால் பட்டம்மாள் அவர்கள் அந்த முறையை மாற்றிப்பல்லவி பாடும் முன்னரே சில தமிழ்ப் பாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாபனாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர் பாடல்களைப் பாடித் தமிழ்ப் பாடல்களை அரியணை ஏற்றினார்.
கர்நாடகக் கச்சேரி மேடைகளில் மட்டுமல்ல, திரையிசையிலும் இவர் பங்கு மகத்தானது. குறிப்பாக பாரதியாரின் பாட்டுக்களை திரைப்படங்களில் பாடி, அவர் பெருமையை பாரெங்கும் ஒலிக்கச் செய்ததில் பட்டம்மாவின் பங்கு குறிப்பிடத் தக்கது. 'தியாக பூமி', 'நாம் இருவர்', 'வாழ்க்கை' ஆகிய படங்களில் இவர் பாடிய பாடல்கள் மறக்க இயலாதவை. 'ஹே ராம்!' படத்தில் வைஷ்ணவோ ஜனதோ இவரது குரலில்தான் ஒலித்தது.
'சங்கீத சாகர ரத்னா', 'சங்கீத கலாநிதி', 'ஞான சரஸ்வதி' போன்ற விருதுகளைப் பெற்ற பட்டம்மாளுக்கு சங்கீத நாடக அகாடமி விருதும் கிடைத்ததுண்டு. எளிமையானவர். மாத்ரு பக்தி, பித்ரு பக்தி, குரு பக்தி, தேச பக்தி... அதன் பின்னர் தெய்வ பக்தி என்ற கொள்கை கொண்டிருந்தவர். பாரத தேசத்தின் மீதும், அதன் பண்பாடு, கலசார வளர்ச்சி மீதும் உண்மையான அக்கறை கொண்டிருந்தவர். அவரிடம் இசை பயின்று சிங்கப்பூர், ஜப்பான், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, லண்டன் என உலகெங்கிலும் இவரது சீடர்கள் இன்று இசைத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இவரது சிஷ்யையும் பெயர்த்தியுமான நித்யஸ்ரீ மஹாதேவன் கர்நாடக இசையின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக இன்று உருவாகியுள்ளார். மறைந்த இசை வல்லுனர் டி.கே. ஜெயராமன் இவரது சகோதரர்.
இசையரசி டி.கே.பட்டம்மாளுக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது. |
|
|
|
|
|
|
|