Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
Tamil Unicode / English Search
சாதனையாளர்
விஜி திலீப்
- நித்யவதி சுந்தரேஷ்|ஏப்ரல் 2010||(1 Comment)
Share:

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



பார்வையற்றோரின் இருளில் கிடக்கும் புத்தகங்களை அவர்களது அறிவின் வெளிச்சத்துக்குக் கொண்டு வர முனைகிறார் திருமதி. விஜி திலீப். சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்கப் பிரஜை. இந்தியாவில் படித்து விட்டு, இங்கே CPA முடித்து வேலைபார்த்து வந்தார். ஒருநாள் திடீரெனக் கண்பார்வை பாதிக்கப்பட, மருத்துவப் பரிசோதனைகளில் மூளையில் ஒரு கட்டி இருப்பதும் அது பார்வை நரம்புகளைப் பாதித்திருப்பதும் தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் குணமாயிற்று. அத்தோடு முடியவில்லை.

பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் படிப்பதற்கான வழிகள் என்னென்ன என்று ஆராயத் தொடங்கினார் விஜி. அது அவரை 2003-இல் வித்யா விருக்ஷா என்ற தன்னார்வச் சேவை அமைப்புக்கு இட்டுச்சென்றது. வித்யா விருக்ஷா பார்வையற்றவர்களுக்கான உபகரணங்கள், மென்பொருள் பயிற்சி, உதவித்தொகை தருதல் ஆகியவற்றைச்செய்து வருகின்றது. இதன் அமெரிக்கக் கிளையின் முதன்மைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள விஜி, இந்த அமைப்புக்காக நிதி திரட்டுவது, மென்பொருள் வழங்குவது போன்றவற்றைச் செய்து வருகிறார்.

வித்யா விருக்ஷா தயாரித்தளிக்கும் பார்வையற்றோருக்கான மென்பொருளின் சிறப்பு, அது ஆங்கிலத்தில் மட்டுமன்றித் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளிலும் பயன்படுத்தத் தக்கது என்பதே.
வித்யா விருக்ஷா தயாரித்தளிக்கும் பார்வையற்றோருக்கான மென்பொருளின் சிறப்பு, அது ஆங்கிலத்தில் மட்டுமன்றித் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளிலும் பயன்படுத்தத் தக்கது என்பதே. இதனை வடிவமைத்தவர்கள் சென்னை IIT நிறுவனத்தினர். இந்த மென்பொருள், அச்சிட்ட உரையை வாசித்துக் (Text-to-Speech) கேட்கத் தருகிறது. வலைத்தளங்களையும் வலைத்தேடல் எந்திரங்களையும் உபயோகிக்க முடியாத பார்வையற்றோர் இதைச் சுலபமாக உபயோகித்து இணையப் பயனராகி விட முடிகிறது. இதன்மூலம் ஆங்கில அறிவு இல்லாமலேயே இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் 80 சதவிகிதத் தகவல் பரிமாற்றம் இந்திய மொழிகளில்தான் நிகழ்கிறது, இம்மொழிகளில் கணிணிவழித் தகவல் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது என்பவற்றைக் கணக்கில் கொண்டால் பார்வையற்றோருக்கு இந்த மென்பொருள் எப்படிப்பட்ட தோழன் என்பது புலனாகும்.

அமெரிக்காவில் புக் ஷேர் என்ற அமைப்பு டிஸ்லெக்ஸியாவால் பார்வைக்குறைவு அடைந்தவர்கள் படிப்பதற்கான கருவி ஒன்றை வழங்குகிறது. தற்போது பிரபலமாகப் புழக்கத்திலுள்ள கிண்டில் (kindle) போலக் காணப்படும் இந்த உபகரணத்தின் மூலம் அவர்கள் படிக்க முடியும். 90-களில் பார்வையற்றோர்களுக்காக அமெரிக்காவில் காப்புரிமைச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் விளைவாகப் பல நூல்களையும் டிஜிடலாக மாற்றுவதும், நவீன மின்கருவிகள் மூலம் பார்வையற்றோருக்கான நூல்களை வினியோகம் செய்வதும் சாத்தியமாயிற்று.

புக் ஷேர் அமைப்பின் பன்னாட்டு நிர்வாகப் பொறுப்பு விஜியிடம் உள்ளது. ஆங்கிலம் தவிர்த்த பிற மொழி நூல்களைப் பார்வையற்றோர் அணுகும் வடிவில் தருகிறார் இவர்.
இன்றைய நிலையில் இந்தியாவில் பார்வைக் குறைபாடுள்ள மாணவர் ஒருவர் தேர்வெழுத வேண்டுமென்றால் அதற்கு அவர் வேறொருவரது உதவியை நாட வேண்டும். எண்ணியமாக்கப்படும் (டிஜிடலாக மாற்றப்படும்) பாட நூல்கள் தாமே கற்பதையும் தேர்வெழுதுவதையும் பார்வையற்றோருக்கு இலகுவாக்குகிறது. இந்தியப் பாடநூல் நிறுவனத்தை (NCERT) அணுகிக் கடந்த நான்கு வருடமாக முயன்றும் இதுவரை பாடநூல்களை டிஜிடல் ஆக்க அனுமதி கிடைக்கவில்லை என வருந்துகிறார் விஜி. இந்தியாவில் பார்வையற்றவர்களுக்கான காப்புரிமைச் சட்டத் திருத்தம் இல்லாததால், புக் ஷேர் நிறுவனம் இதுவரை சுமார் 1000 தமிழ் நூல்களை மட்டுமே டிஜிடல் ஆக்கியுள்ளது. இதில் வங்கித்தேர்வு, ரயில்வே தேர்வுக்கான புத்தகங்கள், திருக்குறள், திருப்பாவை ஆகியவை அடக்கம். அண்மையில் கிழக்கு பதிப்பகத்துடன் அவர்கள் வெளியிடும் நூல்களை புக் ஷேர் வழியே பார்வை குறைபாடு உள்ளோர்க்குத் தருவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

மட்டுமன்றி இந்தியாவில் உள்ள WORTH Trust என்ற நிறுவனம் மூலம் இந்தப்புத்தகங்களை பிழைதிருத்துதல், எண்ணியமாக்கல் ஆகியவை செய்யப்படுகின்றன. இதன் சிறப்பம்சம், இந்த அத்தனை வேலைகளையும் செய்வது காதுகேளாதவர்கள், வாய்பேசாதவர்கள், நடக்கவியலாதவர்கள் மற்றும் பார்வையற்றோர் என்பதே.

இந்தியப் பாடநூல் நிறுவனத்தை (NCERT) அணுகிக் கடந்த நான்கு வருடமாக முயன்றும் இதுவரை பாடநூல்களை டிஜிடல் ஆக்க அனுமதி கிடைக்கவில்லை.
புக் ஷேர் நிறுவனம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பார்வையற்றோருக்கு ஒரு வருடத்துக்கு இலவச உறுப்பினர் சலுகை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் சுமார் 10000 புத்தகங்கள் வரை படித்துப் பயன் பெறலாம்.

"பிறப்பிலேயே பார்வைக் குறைபாடு உடையவர்களது வாழ்க்கையை நம்மால் முடிந்த அளவு எளிதாக்கலாமே" என்கிறார் விஜி. பார்வைக்குறைபாடு உடையவர்களுக்காகத் 'தென்றல்' இதழ் அதனை டிஜிடல் வடிவில் மாற்றுவதற்கு முழுச் சுதந்திரம் அளித்திருப்பதையும் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். தென்றல் இதழில் தொடர்ந்து வெளியான டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் 'அன்புள்ள சிநேகிதியே' தொகுப்பு நூல் இதற்காக வழங்கப்பட்டுள்ளது.

தமது சஞ்சிகை அல்லது நூலை புக் ஷேர் வழியே தர விருப்பம் உள்ளவர்கள் விஜி திலீப்புடன் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்: 408-656-8162 அல்லது 650-352-0092.

"கண்ணுடையார் என்பவர் கற்றோர்" என்றார் வள்ளுவர். விஜி திலீப் போன்றவர்களின் முயற்சியால் பலருக்கும் அது சாத்தியமாகி வருகிறது.

நித்யவதி சுந்தரேஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline