|
|
|
பாரத நாட்டின் முனிவர்கள் வரிசையில் மிகப் பெரிதும் போற்றப்படுபவர் ஜட பரதர். பரதர் என்ற பெயரில் அரசராக விளங்கியவர். நாபி என்ற அரசனின் பெயரால் அஜநாபம் என்றழைக்கப்பட்டு வந்த தேசம் எந்த மன்னனின் பெயரால் பாரதம் என்று அழைக்கப்படலானதோ அந்த மன்னர் பரதர். எல்லாவற்றையும் ஒரு வினாடிப் பொழுதில் துறந்தார். காட்டில் தன் கையால் அமைத்துக் கொண்ட எளிய குடிசையில் வாழ்ந்தார். இராமனுக்குக் கைகேயி சொன்னதைப் போல் 'தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம்மேற் கொண்டார்'. அப்படி நெடுங்காலம் தவம்மேற்கொண்டு அவருடைய சடை நீண்டு வளர்ந்திருந்த காரணத்தாலேயே அவருக்கு ஜடபரதர் என்ற பெயர் ஏற்பட்டது. அரண்மனையில் வாழ்ந்தவர்; எப்போதும் நூற்றுக்கணக்கான சேவகர்கள் அவருடைய தேவைகளைக் கவனித்துக் கொண்டிருந் தனர். தங்கத் தட்டில் உணவருந்தியவர். எல்லாவற்றையும் விட்டு ஒதுக்கி இலை தழைகளால் அமைக்கப்பட்ட பர்ண சாலையில் வாழத் தொடங்கினார் என்றால் அதற்கு எப்படிப்பட்ட மன உறுதி வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நம்முடைய வழக்கமான சூழலிலிருந்து வேறோர் இடத்துக்குச் சென்று ஒரே ஓரிரவு கொசுக்கடியில் தூங்குவதைக் கற்பனை செய்யுங்கள்! ஒரே ஒருநாள் நம்முடைய வழக்கத்துக்கு மாறாக நம் உணவை வெறும் கைகளில் ஏந்தி அருந்த நேரிட்டால் நமக்கு எப்படியெல்லாம் உள்ளம் வருந்தும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! அத்தனையையும் ஒரு மன்னர்--நாம் அனுபவிக்கும் வசதிகளைப்போல பல ஆயிரம் மடங்கு வசதிகளை அனுபவித்தவர்--ஏற்றுக்கொண்டார், அப்படி ஒரு சூழலில் அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் என்றால் அதற்கு எப்படிப்பட்ட வைராக்கியம், உள்ளத் திண்மை வேண்டும் என்பதை இதற்குமேல் விளக்க வேண்டியதே இல்லை.
அவருடைய பர்ணசாலை--ஓலைவேய்ந்த குடிசை--ஒரு நதியின் கரையில் அமைந் திருந்தது. பல விலங்குகள் அங்கே நீர் அருந்த வரும். ஒருநாள் ஒரு மான் அங்கே நீரருந்த வந்தது. நதியின் இந்தக் கரையில் பர்ணசாலையில் தியானத்தில் இருந்த பரதருக்கு அப்போது சற்றே தியானம் கலைந்திருந்தது. எதிர்க் கரையில் மான் நீர் அருந்திக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் குட்டியை ஈன்றுவிடக் கூடிய நிறைமாத கர்ப்பமாக இருந்த மான் அது. அமைதியாக இருந்த அந்தச் சூழலில் தொலைவில் எங்கோ ஒரு புலி உறுமும் ஓசை கேட்டது. பயந்துபோன மான், இருந்த இடத்திலிருந்தே துள்ளி, ஆற்றின் எதிர்க் கரையில் குதிக்க முற்பட்டது. ஓடிவந்து துள்ளியிருந்தால் கடந்திருக்கலாம். இதுவோ நின்ற நிலையிலிருந்து துள்ளிய மான்; அதுவும் நிறைமாதமாக இருந்த மான். வயிற்றின் சுமை தாங்கமாட்டாமல் விரைந்தோடும் நதியில் விழுந்துவிட்டது. விழுந்த வேகத்தில் குட்டியையும் ஈன்று விட்டது. தொடர்ந்து நதியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரித்தும் விட்டது. ஆற்றின் வேகத்தில் அதன் உடல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.
தாய் மான் ஈன்றதே அந்தக் குட்டி, அது பிறந்ததே நதியின் வலிய அலைகளுக்கும் ஓட்டத்துக்கும் இடையில் அல்லவா? எழுந்து நிற்கவே வலிமையற்ற அந்தக் கால்களுக்கு, பிறந்த அதே வினாடியில் விரைந்தோடும் நதியை எதிர்த்து நீந்தும் திறன் எங்கிருந்து வரும்? நீரில் முங்குவதும் எழுவதுமாக அந்தக் குட்டி தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார் பரதர். பிறந்த அந்த வினாடி யிலேயே, தாய்ப்பால் ஒரே ஒருசொட்டு வாயில் விழுவதற்கு முன்னாலேயே, தாயின் இளஞ்சூட்டையும் அன்பையும் அரவணைப் பையும் பாதுகாப்பையும் உணர்வதற்கு முன்னரேயே மரணத்தை எதிர்த்துப் போராடவேண்டிய கட்டாயத்தில் இந்தக் குட்டி அகப்பட்டுக் கொண்டதைக் கண்ட அவருடைய உள்ளம் உருகியது. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார். அந்தக் குட்டியைத் தன் கரங்களில் அள்ளி எடுத்துக் கொண்டார். தன் பர்ணசாலைக்குத் திரும்பினார். அந்தக் குட்டிக்குத் தானே தாயும் ஆனார். தானே பால் கறந்து வந்து ஊட்டுவார்; பசிய புல்லைப் பறித்து வந்து தன் கையாலேயே அருந்தச் செய்வார். மான் வளர்ந்தது. நாளும் நாளும் அதன்மேல் பரதருக்கு நாட்டமும் வளர்ந்தது.
எவ்வளவோ வளம்மிக்க நாட்டையும், வசதிகளையும், நினைக்கவோ பேசவோ கற்பனை செய்யவோ முடியாத மிகப்பெரிய போகங்களையும் வினாடியில் துறந்து அகப்பயணம் மேற்கொண்ட பரதருக்கு இந்த மான்குட்டியின்மேல் பற்று ஏற்பட்டுவிட்டது. அது மேய்ச்சலிலிருந்து திரும்புவதற்குத் தாமதமானால் 'எங்காகிலும் புலி அடித் திருக்குமோ' என்று கவலைப்படுவார். நாட்டைத் துறந்து 'நான் யார்' என்று அகப்பரிசீலனையில் ஆழ்ந்திருந்தவருடைய அகத்தில் ஒரு மான்குட்டி அழுத்தமாகச் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டது. எப்போதும் தன்னுடைய மான்குட்டியைப் பிரியாமலேயே வாழத் தொடங்கிவிட்டார் பரதர். 'தன்னை அடைக்கலம் புகுந்த, தாயற்ற மான்' என்றொரு பரிவு அவருக்குப் பிறந்தது. அது இயற்கைக்கு மாறான, போலிப் பரிவு என்பதனை உணர அப்படிப்பட்ட பெரிய முனிவராலேயே முடியவில்லை. பரதருடைய இறுதி நாளும் வந்தது. தன் உயிர் பிரியும் தருணத்தில் பரதருக்குத் தன் நாட்டைப் பற்றியோ, மனைவி மக்களைப் பற்றியோ, அனுபவித்த செல்வத்தைப் பற்றியோ ஒரு சிந்தனையும் இருக்கவில்லை. கடைசி கடைசியாகத் தான் வளர்க்கத் தொடங்கிய மானைப் பற்றிய கவலை அவரைப் பெரிதும் பீடித்துக்கொண்டது. 'இனிமேல் இதை யார் கவனித்துக் கொள்வார்கள்' என்ற கவலையோடேயே அவருடைய உயிர் பிரிந்தது. அப்படி மானையே நினைத்தபடி இறந்தவர் ஒரு மானாகப் பிறந்தார். அவருடைய பிறவிச் சுழல் தொடர்ந்தது. மான் பிறவிக்குப் பிறகு அவருக்கொரு மனிதப் பிறவி நேர்ந்தது. அதன் பிறகு எடுத்த முயற்சிகளாலே 'தான் யார்' என்பதை உணரும் தன்னுணர்வு வாய்க்கப்பெற்று, பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டார் என்பது கதை. பாகவத புராணத்தில் வரும் இந்தக் கதையை விவேகாநந்தருடைய சொற்களில் கேட்கும் போது (http://www.ramakrishna vivekananda. info/vivekananda/volume_4/lectures_ and_discourses/the_story_of_jada_bharata.htm) உள்ளம் உருகும்.
பற்று நீக்குதல் என்பது என்னவோ கற்பனைக்கு எட்டாத பழைய காலங்களில் மட்டுமே நடைபெற்ற ஒன்று என்று நினைக்கத் தோன்றுகிறது, அல்லவா? அது உயிருக்கு மிக இயற்கையான ஒன்று. ஒரு சிலருக்கு 'நீங்கு, நீங்கிப்போ' என்ற அகக் குரல் தெளிவாகக் காதில் ஒலிக்கிறது. அவர்கள் நீங்கவும் செய்கிறார்கள். உலகின் செல்வந்தர்களில் முதலிடத்தைப் பெற்றிருந்த பில் கேட்ஸ் நீங்கவில்லையா, இந்திய மென்பொருள் நிறுவனங்களில் தலையாய ஒன்றான இன்·போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்திதான் தன் இடத்தை விட்டுத் தானே உவந்து நீங்கவில்லையா? துறவுக்குப் பின் பரதமுனி போன்றோர் மேற்கொண்ட நெறிக்கும் இவர்கள் விட்டு விலகிய பிறகு மேற்கொண்ட நெறிக்கும் வேறுபாடு இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், 'விடு; நீங்கு, விட்டுப் போ' என்று உள்ளுக்குள் ஏற்படும் உந்துதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. யாருக்கு அந்த உந்துதல் வலிமையுடையதாக இருக்கிறதோ அவர்கள் மிக எளிதாக எல்லாவற்றையும் விட்டு நீங்கவும் செய் கிறார்கள். இயற்கையானதோர் உணர்வு என்பதைக் காட்டுவதற்காக இந்த உதாரணங்களைச் சொன்னேன். நம் கதைக்கும் அன்பு, ஆசை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன என்று நாம் சிந்தித்துக் கொண்டிருந்தோமே அதற்கும் திரும்புவோம்.
இப்போது சொல்லுங்கள். மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே துறந்து, தன்னுள் தான் ஆழ்ந்து கிடந்த பரதமுனிக்கு அடுத்தடுத்து பிறவிகள் ஏற்பட்டது எதனால்? வள்ளுவர் சொன்னதைப் போல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து (361) |
|
'எந்த உயிரானாலும் சரி; எந்தக் கால கட்டமாயினும் சரி; அவற்றை ஓயாத பிறவிச் சுழலில் விழுந்து விழுந்து முளைக்கச் செய்வதற்கான விதை எதுவென்றால், அது ஆசைதான்' என்பதே மெய்யானால், ஜடபரதருக்கு மானின்பால் ஏற்பட்டது ஆசையாகத்தான் இருக்கவேண்டும். அப்படி யானால் அவர் செய்தது தவறா? பிறந்த அதே கணத்தில் ஓர் உயிர் தன் கண்ணெதிரே ஆற்று வெள்ளத்தின் வலிய கரங்களால் அள்ளப்பட்டு, மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்னமும் முதல் மூச்சைக்கூட அது சரியாக விட்டபாடில்லை; வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. தாயின் பரிவும், அவளிடம் பெறும் பாதுகாப்பு உணர்வும், பசியை ஆற்றும் அமுதமும் கிடைப்பதற்கு மாறாக, தாயின் பிரிவும், பாதுகாப்பற்ற சூழ்நிலை என்பதனை உணரக்கூட இயலாத நிலையில், விடுகின்ற முதல் மூச்சே தன் மரணத்தின் காரணியாக, உள்ளிழுக்கும் மூச்சு ஒவ்வொன்றோடும் நுரையீரல்களில் நீர் பாய்ந்து சாவின் விளிம்புக்கே அந்தக் குட்டியை இட்டுச் சென்றுகொண்டிருந்த தருணத்தில், 'எது எப்படிப்போனா எனக்கென்ன' என்று ஒரு துறவி கைகளைக் கட்டிக்கொண்டுதான் இருக்கவேண்டுமா? 'உயிர்களிடத்து அன்பு வேண்டும்' என்று அவன் உயிருக்குள்ளே இயல்பாக நெகிழ்ந்து துடித்தெழும்புகிறதே அந்த உணர்வை அவன் கைவிடத்தான் வேண்டுமா, விட்டு நீங்கவேண்டுமா? அப்படி நீங்காவிட்டால் பிறவிச் சுழல் தொடருமா? அதைத்தான் பாகவதமும் திருக்குறளும் சொல்கின்றனவா? அப்படியானால் எனக்கு அனந்த கோடி பிறவிகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கட்டும். இதை நான் கைவிடத் தயாரில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுவதுதான் என் இயல்பு. அதை நான் ஏன் விட வேண்டும், துறக்கவேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால்,
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று. (78)
என்கிறாரல்லவா, 'வலிய பாலையில் உள்ள பட்டுப்போன மரம் தளிர்த்ததைப் போல' அந்த உவமையே மிக ஆழமான செய்தி ஒன்றைச் சொல்கிறது. 'வன்பாற்கண் இட்ட விதைமுளைத்து அற்று' என்று அவர் சொல்லியிருந்தால் அதுதான் நடை முறைக்குப் பொருந்துவதாக இருந்திருக்கும். போட்ட விதை முளைக்க முடியாத நிலம்தான் பாலைவனம். ஆனால் இவரோ அங்கு நிற்பதை 'வற்றல் மரம்' என்று சொல்கிறார். அப்படியானால், அப்படிப்பட்ட வலிய பாலையிலும் ஏதோ ஒரு நாளில் விதை விழுந்திருக்கிறது; செடி முளைத் திருக்கிறது; மரமாக வளர்ந்து தழைத் திருக்கிறது; அதன் பிறகே வற்றி உலர்ந்து பட்டுப் போயிருக்கிறது என்பது அல்லவா இந்த உவமை சொல்கின்ற செய்தி! என்னதான் வலிய பாலையே ஆனாலும், இப்போது அது உயிர் வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லாதிருந்தாலும், அது எல்லாக் காலங்களிலும் இப்படி இருந்ததில்லை; இங்கேயும் ஒரு காலத்தில் ஈரம் இருக்கத் தான் செய்தது; உயிர் தழைக்கத்தான் செய்தது; ஆனால் இப்போது வற்றிப்போய் கிடக்கிறது.
இதைப் போலத்தான் என்னதான் அன்பில்லாத மனிதன் என்றாலும்; அவனகத்தில் ஈரம் முற்றிலும் வற்றி விட்டாலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் அவனுக்குள்ளும் ஈரம் இருந்திருக்கிறது; அது இருந்த காரணத்தால்தான் அவன் வாழ்ந் திருக்கிறான். அது எந்தக் கணத்தில் அவனுள் வற்றியதோ அந்தக் கணத்திலேயே அவன் செத்துவிட்டான். 'செத்தாருள் வைக்கப்படும்' என்று வள்ளுவர் இன்னொரு குறளில் சொல்வதைப் போல அவன் வற்றி உலர்ந்துவிட்டான். அவனிலும் சரி; அவனைச் சுற்றியும் சரி. உயிர் தழைக்க வாய்ப்பே இல்லை.
அப்படியானால், துறவி என்பவன் வன் பாலையா? அவனிடத்தில் அன்பு இருக்கக் கூடாதா? பரதர் செய்தது சரியென்றால் அவருக்குப் பிறவி ஏற்பட்டிருக்கக் கூடாது. தவறென்றால் கருணையற்ற மனநிலைதான் பிறவிச் சுழலிலிருந்து விடுவிக்கும் என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டி வருகிறது. அப்படி இருப்பது சாத்தியமா? அன்பில்லாத உயிர்வாழ்க்கை இயற்கையான ஒன்றா? இது தெளிவா, குழப்பமா? அடுத்த இதழ்வரையில் சிந்திப்போமா?
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|