Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பற்றி இறுக்காத பற்று
- ஹரி கிருஷ்ணன்|மார்ச் 2008||(1 Comment)
Share:
Click Here Enlargeஒரு மான்குட்டியின் காரணத்தால் மாமுனிவரான ஜடபரதர் பிறவிச் சுழலில் சிக்கிக் கொண்டார் என்று பார்த்தோம். அப்போதுதான் பிறந்த மான்குட்டியை மரணத்தின் கைகளில் இருந்து காப்பாற்றியதன் விளைவாகவா இப்படி நேரும், இப்படியும் கதைகள் சொல்லலாமா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தோம். 'ஆசையே பிறவிச் சுழலில் விழவைப்பதற்கான வித்து' என்று வள்ளுவர் சொல்வதையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இப்போது ஒருமுறை ஜடபரதரின் கதை யைத் திரும்ப நினைத்துப் பார்ப்போம். நதியின் அலைகளுக்கு நடுவில் தத்தளித்துக் கொண்டிருந்த மான்குட்டியைக் காப்பாற்றிய தாலா அவருக்குப் பிறவிகள் தொடர்ந்தன? 'பிறப்பு ஈனும் வித்து' என்று வள்ளுவர் குறிக்கும் 'அவா' இதுவா? அன்பு காட்டுவதும் உயிர்களிடத்தில் கருணையோடு இருப்பதும் துறவிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றனவா?

இல்லை என்பதுதான் விடையாக இருக்க முடியும். மான்குட்டியைக் காத்ததும், அது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளும் அளவுக்கு--அந்தப் பருவத்தை அடையும் வரை--வளர்த்ததும் அன்பின் வெளிப்பாடு தான். இதுதான் உயிரின் இயற்கை. பூனைக்குட்டிக்கு நாய்த் தாய் பாலூட்டு வதையும்; நாய்க்குட்டியைக் குரங்கு பாலூட்டி வளர்ப்பதையும் அவ்வப்போது செய்தி களாகப் படித்துக் கொண்டுதான் இருக்கி றோம். தன்குட்டியைத் தான் வளர்ப்பதற்கு அன்பு காரணமாக இருக்கிதென்றால், இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு, வள்ளுவர் சொன்னாரே, அந்த 'அருள் என்னும் அன்பு ஈன் குழவி' அதுதான் காரணமாக இருக் கிறது. அன்புக்கு ஒருபடி மேலான அருள் எனப்படுவது சில அரிய சமயங்களில் விலங்குகளாலும் வெளிப்படுத்தப்படுகிறது. மனிதராலோ, விலங்குகளைக் காட்டிலும் எளிதாக இதனை உணரவும் வெளிப் படுத்தவும் முடிகிறது. எனவே, ஜடபரதர் மான்குட்டியைக் காத்ததும், அதை ஒரு பருவம் வரையில் வளர்த்ததும் அன்பு மட்டுமல்லாது அருளின் வெளிப்பாடும் கூட.

ஆனால், இழை எங்கே தவறியது என்றால், அந்த மான்குட்டி வளர்ந்து, தன்னைத் தானே பார்த்துக் கொள்ளக்கூடிய வயதும் வளர்ச்சியும் அடைந்த பின்னரும்கூட அதை விடாமல் இறுகப் பற்றியபடி, 'இது என் மான்; நான் வளர்த்த மான்; என்னைத் தஞ்ச மடைந்த மான்' என்றெல்லாம் உணர்வுகள் கிளர்ந்து எழ அனுமதித்து, அந்த உணர்வு களின் பின்னால் தன்னைச் செலுத்திக் கொண்ட அந்த இடத்தில்தான் பிறழ்ச்சி ஏற்பட்டது. அங்கேதான் அருள் என்ற மிக உயர்ந்த வெளிப்பாடு, ஆசை என்னும் வடிவத்துக்கு மாறியது. 'நான் இல்லா விட்டாலும் இது இயங்கும்' என்ற துணி வில்லாமலா நாட்டைத் துறந்தார்? 'நான் இல்லாவிட்டால் இந்த நாட்டை யார் ஆள்வார்கள்; மக்களை யார் பார்த்துக் கொள்வார்கள்' என்றெல்லாம் அவர் மனம் உளைச்சலுக்கு ஆளாகவில்லையே! அதற் கான அடுத்த அரசன் தயாராகிவிட்டான்; அரசு எந்திரம் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் சார்ந்து இயங்கவில்லை; தான் இல்லாவிட்டாலும் நாடு இயங்கும்' என்பது வரையில் தெளிவாக இருக்க முடிந்த மாமுனிக்கு, 'நான் இல்லாவிட்டால் இந்த மானை யார் பார்த்துக் கொள்வார்கள்' என்ற நினைப்பும் கவலையும் வந்து சேர்ந்ததுதான் வியப்பு. 'தவாஅப் பிறப்பீனும் வித்து' என்ற குறள் பேசும் அவா என்ற நிலைக்கு அவரிடம் தோன்றிய அருள் என்ற மிக உயர்ந்த உணர்வைக் கீழ்நோக்கிச் செலுத்தியதும் அந்தப் பொய்க் கவலைதான்; பொய்ப் பரிவுதான்.

இதை ஏன் பொய்ப்பரிவு என்று சொல்கிறோம்? நதியில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அந்தக் குட்டியைக் காத்தது மெய்ப்பரிவுதான்; அதை வளர்த்ததும் மெய்ப்பரிவுதான். ஆனால், அது காட்டில் திரியும் மற்ற மான்களைப் போல இல்லாமல், காலத்துக்கும் தன்னை வளர்த்தவரையே சார்ந்து நிற்குமாறு தன்னுடன் அதனையும்; மற்ற எத்தனையோ கூட்டம் கூட்டமான மான்கள் காட்டில் திரிந்தும், புலிகளைப் போன்ற விலங்குகளுக்கு இரையாகியும், இரையாகாமல் தப்பி வாழ்வதையும் தம் இயல்பாகக் கொண்டிருக்கும்போது, 'என் மான் ஏன் இன்னும் திரும்பவில்லை? அதை ஏதேனும் புலி அடித்திருக்குமோ' என்றும் 'எனக்குப் பிறகு இதை யார் பார்த்துக் கொள்வார்கள்' என்றெல்லாம் கவலைப் பட்டு அதனுடன் தன்னையும் பிணைத்துக் கொண்டது பொய்ப்பரிவுதான். இந்த மானை நீங்கள் பார்த்துக் கொண்டீர்கள், சரி. மற்ற மான்களை யார் பார்த்துக் கொள்கிறார்கள்! அவற்றை எந்தச் சக்தி பார்த்துக் கொள்கிறதோ அந்தச் சக்தி இதனையும் பார்த்துக் கொள்ளும் என்றல்லவா ஒதுங்கியிருக்க வேண்டும்! சொல்லப் போனால் ஒரு முழு நாட்டையும் அல்லவா அவர் அப்படித் துறந்து, ஒதுங்கி வந்திருந்தார்!

வேறுவிதமாகச் சொன்னால், தன்னை மையப்படுத்தி அடுத்தவர்மேல் வைப்பது ஆசை. அடுத்தவர்மேல் அவரையே மையமாக வைத்துக் காட்டப்படுவது அன்பு. ஒரு பொருளின்மேல் என்றாலும் சரி; நபரின் மேல் என்றாலும் சரி. வைத்திருப்பது ஆசை என்றால் அதன் மையத்தில் இருப்பது நான். என்னைக் காரணமாக வைத்து மற்றவர்மேல் நான் காட்டுவது ஆசை. அன்பின் மையத் தில் நான் இருப்பதில்லை. அடுத்தவரின் நலம் மட்டுமே இருக்கிறது. இறந்தவர் இல்லங்களுக்குச் சென்றால் அங்கே ஒலிக்கும் இரங்கல் மொழிகளுக்குள் இந்த அன்பையும் ஆசையையும் வேறுபடுத்திக் காண முடியும். 'ஐயோ, பார்க்கும் போதெல் லாம் சாப்பிட்டாயா என்று கேட்பாரே, இனி என்னை யார் அப்படிக் கேட்பார்கள்' என்பதனை ஒத்து ஒலிக்கும் இரங்கல் மொழிகள் ஆசையின் வெளிப்பாடு. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால், அவர் இறந்ததைக் காட்டிலும், தன்னை அவ்வாறு கேட்பதற்கு யாரும் இல்லாமல் போய்விட்ட துயரமே பெரிதாக அங்கே சொல்வடிவம் பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை உணரலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பேச எடுத்துக் கொண்டது கால முதிர்ச்சியால், இயற்கையாக நிகழ்ந்த மரணங்களைப் பற்றி மட்டுமே. இவையன்றி, ஆசையின் காரணத் தால் இல்லாமல், விபத்து அல்லது அது போன்ற வேறு சூழல்களில் அபத்திரமாக உணரக்கூடிய நிலைகளிலும் இப்படிப்பட்ட மொழிகள் வெளிப்படலாம். அவை நம் அனுதாபத்துக்கும் இரக்கத்துக்கும் உரியவை.

இப்படி உணர்வது தவறா என்றால் இல்லை. இது ஒரு நிலை. ஆனால் இது மிகவும் சிக்கலான, இக்கட்டான கட்டங் களுக்கு இட்டுச் செல்லக்கூடிய நிலை. ஆசை என்பது ஒரு நிலை என்றால் அன்பு என்பது அதற்கு மேம்பட்ட இன்னொரு நிலை. இரண்டும் மனித மனங்களில் நிலவும் இரண்டு வேறுபட்ட நிலைகள்தாம். இரண்டுக்கும் வேறுபாடு வெளிப்படையாகத் தெரிவதில்லை; சம்பந்தப்பட்ட நபர்களாலும் உணரப்படுவதில்லை. அன்பு என்றாலும் ஆசை என்றாலும் இரண்டுமே தன்னை அல்லாது பிறிதொன்றை இறுகப் பிணிப் பதும்; கட்டுவதும்தான். சிறிய வேறுபாடு மட்டுமே இரண்டுக்கும் உண்டு. பம்பரத்தைச் சாட்டை இறுகப் பிணிக்கிறது; கட்டுகிறது; பம்பரத்தின் உடல் முழுதும் பரவி, அது வெளியே தெரியாத அளவுக்கு அதை மறைத்துக் கொள்கிறது. ஆனால் அந்தக் கட்டு, அந்தப் பிணிப்பு, பம்பரத்தின் இயக்கத்தைத் தடுப்பதில்லை. மாறாக, முழு வலிமையுடன் பம்பரம் சுழல்வதற்குக் காரணமாக அமைகிறது. பம்பரம் சுழலத் தொடங்கியவுடன் சாட்டை வலிக்காமல் பிரிந்து தனியே ஒதுங்கிக் கொள்கிறது. அதன் பிறகு அதற்கு வேலை இல்லை. மீண்டும் ஒருமுறை பம்பரம் சுழலவேண்டு மானால் சாட்டை அதனை இறுகப் பிணிக்க வேண்டும். அதுவரையில் சாட்டைக்கு வேலை இல்லை. அது ஒதுங்கிக் கொள்ளத் தான் வேண்டும்.
அன்பு என்றாலும் ஆசை என்றாலும் இரண்டுமே தன்னை அல்லாது பிறிதொன்றை இறுகப் பிணிப்பதும்; கட்டுவதும்தான். சிறிய வேறுபாடு மட்டுமே இரண்டுக்கும் உண்டு. பம்பரத்தைச் சாட்டை இறுகப் பிணிக்கிறது; கட்டுகிறது; ஆனால் அந்தக் கட்டு, அந்தப் பிணிப்பு, பம்பரத்தின் இயக்கத்தைத் தடுப்பதில்லை.
அவ்வாறு இல்லாமல் இன்னொரு நிலை மையும் ஏற்படுவது உண்டு. சாட்டையின் நுனி ஒழுங்கில்லாமல் நூல்நூலாகப் பிரிந்து போய்விடும். அந்தச் சந்தர்ப்பங்களில், எந்த ஆணியின்மேல் பம்பரம் சுற்றவேண்டுமோ, அந்த ஆணியைச் சாட்டையின் நுனியில் உள்ள பிசிறு இறுகப் பற்றிக் கொள்ளும்; அல்லது ஆணி பிசிறில் சிக்கிக் கொள்ளும். இப்போது பம்பரத்தால் சுற்ற முடியுமோ! சாட்டையால் இப்போது என்ன பயன்! அது தன் வேலையைச் செய்ததோ? செய்ய முடிந்ததோ? இல்லை பம்பரத்தைத்தான் சுழல விட்டதோ! இவற்றில் முன்னது அன்பு என்றால், பின்னது ஆசை. அவா. தவாஅப் பிறப்பீனும் வித்து இதுதான். தன் வேலையைத் தானும் செய்யாது; அடுத்த வரை அவர் வேலையைச் செய்யவும் ஒட்டாது. எந்தச் சமயம் வரையில் இறுகப் பற்ற வேண்டும்; எதற்கு மேல் பற்றிய பற்றை விட்டுவிடவேண்டும் என்பதை அறிந்த உணர்வு எதுவோ அது அன்பு. அறியாத உணர்வு எதுவோ அது ஆசை.

ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் இந்தியக் குடும்பங்களில் ஒரு காட்சியை மிகச் சாதாரணமாகக் காண முடிந்தது. பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திருக்கும். போகத் துடிப்பான். அவனைப் போக ஒட்டாமல் தாய் தடுப்பாள். 'என்னப்பா, எனக்கிருப்பது நீ ஒரே ஒரு பிள்ளை. நீயும் வெளிநாட்டுக்குப் போய்விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள்' என்று தாயோ அல்லது குடும்பத்தின் பிற உறுப்பினர்களோ கலங்குவதும் தடுப்பதும் வழக்கமாக இருந்தது. ஆசை என்பது இதுதான். இந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இது மகன்மீது வைக்கப்பட்டுள்ளது; தன்னை மையமாக வைத்து. அவ்வாறு இல்லாமல், 'அப்பா, நீ எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்; மேலும் மேலும் முன்னுக்கு வரவேண்டும். என்னைப் பற்றிய கவலைகளைப் பிறகு பார்த்துக் கொள்ள லாம், நீ இந்த வேலையை ஏற்றுக்கொள். நீ நலமாக இரு' என்று யாராவது சொன்னார் கள் என்றால் அதற்குக் காரணமாக நின்றது அன்பு. நான் சொன்னது முப்பது வருடங் களுக்கு முந்தைய சூழலை. இப்போது வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்றால் உடனடியாக, மகிழ்ச்சியுடன் சம்மதிக் கிறார்கள். அதற்கு மகன்மேல் வைத்த ஆசை யைப் பார்க்கிலும் பெரிதான இன்னொரு ஆசை காரணமாக இருக்கிறது. அப்படி வெளிநாடுகளுக்குச் சென்ற பிறகு ஏற்படும் உணர்ச்சிப் போராட்டங்களுக்கும் அந்த இன்னொரு ஆசையே வழியும் வகுக்கிறது. அது நம்முடைய விவாதத்துக்கு உட்பட்ட தன்று. அதனை விட்டுவிடுவோம்.

அன்பையும் ஆசையையும் பாகுபடுத்திப் பார்த்தோம். நம் விவாதத்தில் இன்னும் விடை காணப்படாமல் நிற்கும் பகுதி ஒன்றுண்டு. 'எதை விடுவது, எதைப் பிடிப்பது' என்ற தலைப்பில் பேசும்போது, ஒரு நண்பர் சொன்னதைக் குறிப்பிட்டிருந் தோம். 'நிலத்தை உழ எண்ணி அடியெடுத்து வைக்கும் உழவன், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற ஆசையோடுதானே தன் வேலையைத் தொடங்குகிறான்? அவனிடம் அந்த ஆசை அற்றுப் போய்விட்டால் அடுத்ததாக அவனால் இயங்க முடியுமா? ஒண்ணும் வேணாம். நாளைக்கு எனக்கு வருவாய் கிட்டும்; ஊதிய உயர்வு கிடைக்கும்' என்றெல்லாம் நமக்கு ஆசை இருப்பதால் தானே தொடர்ந்து கடினமாய் உழைக் கிறோம்? அது இல்லாவிட்டால் எப்படி வாழ்க்கை என்னும் இழை தொடரும்?' என்றெல்லாம் அந்த நண்பர் கேட்டிருந்தார்.

அந்த நண்பர் உணராத ஒன்றுண்டு. அவர் சொன்ன நிலைப்பாடுகளில் காணப்படுவது ஆசை அன்று. அங்கே காணப்படுவது இலக்கு. லட்சியம். நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டும் என்பதும்; அடுத்த ஆண்டு பதவி உயர்வு கிடைக்கவேண்டும்; நல்ல ஊதிய உயர்வு கிடைக்கவேண்டும் என்று நினைப்பதும் வெறும் ஆசையின்பாற் பட்டவை அல்ல. அவை இலக்கின்பாற் பட்டவை. இலக்கும் குறிக்கோளும் இல்லாத வாழ்வு செழிக்கத்தான் செழிக்காது. ஆகவே, இலக்கை ஆசை என்று குழப்பிக் கொண்டது அந்த நண்பரின் பார்வையில் ஏற்பட்ட சிக்கல். அவ்வளவுதான்.

ஆக, எதை விடுவது எதைப் பிடிப்பது என்பதை ஒருவாறாகப் பிடித்துவிட்டோம் இல்லையா?

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline