Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
நேர்காணல்
நடனக்கலைஞர் ராதிகா சூரஜித்
திரு. பிரபஞ்சன்
- மணி மு.மணிவண்ணன்|நவம்பர் 2004|
Share:
Click Here Enlargeதிரு. பிரபஞ்சன், தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தமிழ் இலக்கியத்துக்கு அளிக்கப்படும் பரிசுகள் பலவற்றை வென்றவர். நல்ல பேச்சாளர். நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். வெண்பாப் புலி என்று பாராட்டப்பட்ட கவிஞரும்கூட. கவிஞர் மு. மேத்தா இட்ட புனைபெயரைக் கொண்ட இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். இவர் புதுச்சேரிக்காரர், அதன் வரலாற்றை ஆழ்ந்து படித்தவர்.

கரந்தை தமிழ்க் கல்லூரியில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கௌரவ ஆசிரியராய்ப் பணியாற்றி நாடகக்கலை கற்பித்திருக்கிறார். நவீன நாடக இயக்கத்தைச் சார்ந்து "முட்டை" என்ற குறிப்பிடத்தக்க நாடகத்தை எழுதியவர். இவரது முதல் கதை 1964ல் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் வெளிவந்தது. குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் பத்திரிக்கைகளில் துணையாசிரியராய்ப் பணி புரிந்தவர்.

புதுமைப் பித்தன் எழுத்தார்வத்தால் உந்தப்பட்டு எழுத்துத் துறையில் தன் எண்ணம் பதிக்க விரும்பி, அதில் வெற்றியும் கண்டவர். "சாகித்திய அகாதமி" யின் பரிசு பெற்றும் அமைதியான வகையில் ஆழ்ந்த கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருபவர். இந்த ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் விழா 2004க்கு வந்திருந்த இவர் நாடெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல தமிழ்ச் சங்கங்களில் உரையாற்றினார். அவர் சான் ·பிரான்சிஸ்கோ வந்திருந்த போது காணத் துடித்த இடங்கள் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர்கள் தொடர்புள்ளவை: ஓக்லந்து ஜேக் லண்டன் சதுக்கம், செலைனாஸ் ஜான் ஸ்டெயின்பெக் அருங்காட்சியகம். நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டெயின் பெக்கின் கதைக்களமான மாண்டரே கேன்னரி ரோவில் நடந்ததில் அவருக்குப் பெருமகிழ்ச்சி. தென்றல் ஆசிரியர் மணி மு. மணிவண்ணன் அவரிடம் நிகழ்த்திய நேர்காணல் இதோ:

கே: எட்டாம் வகுப்பிலேயே எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். உங்களை எழுதத் தூண்டியது என்ன?

ப: சிறு வயதிலேயே நூலகத்தில் உறுப்பினராக்கி விட்டார் என் தந்தை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு எழுத்தாளரின் மொத்தப் புத்தகங்களையும் வாங்கி அன்பளிப்பாகக் கொடுப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்தேன். படித்ததைப் போல எழுதிப் பழகினேன். எதைப் படித்தாலும் அது போல எழுதிப் பழகினேன். ஒரு கட்டத்துக்குப் பின்னால் என்னால் சுயமாக எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

ஒரு நாள், என் அம்மா என் தம்பிக்குச் சோறூட்டிக் கொண்டிருந்த போது ஒரு பிச்சைக்காரக் குழந்தை வந்தது. என் தம்பி சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தான். "நீ சாப்பிடவில்லை என்றால் பிச்சைக்காரக் குழந்தைக்குக் கொடுத்து விடுவேன்" என்று அம்மா தம்பியை மிரட்ட அவன் வாயைத் திறப்பான். மறுபடியும் அடம் பிடிப்பான். மீண்டும், அந்தக் குழந்தைக்குக் கொடுத்து விடுவேன் என்ற மிரட்டல். சாப்பிடுவான். கடைசியாக முழுச்சோறையும் என் தம்பிக்கு ஊட்டி விட்டு உள்ளே போய் விட்டார்கள். அந்தக் குழந்தைக்குக் கொடுக்கவே இல்லை. இதை வேடிக்கை பார்த்துக் கொண்ட எனக்குச் சங்கடமாக இருந்தது. இதை ஒரு சிறுகதையாக எழுதி அப்போது சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த "பரணி" பத்திரிக்கைக்கு அனுப்பினேன். கதை வெளிவந்தது. அதே ஆண்டு, நான் எழுதிய கவிதையும் கட்டுரையும் புதுச்சேரிப் பத்திரிக்கைகளான தமிழ்ச்செல்வி, தமிழணங்கு என்ற பத்திரிக்கைகளில் வெளிவந்தது. அது எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. அதன் தொடர்ச்சியில் தான் இன்று வரைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கே: உங்களை ஆரம்பக்காலத்தில் ஊக்குவித்தது யார்?

ப: எனது தமிழாசியர் திருநாவுக்கரசு. ஏழாம் வகுப்பில் எனக்கு யாப்பிலக்கணம் கற்பித்தார். வெண்பா எல்லாம் சாதாரணமாக எழுதுவேன். "வெண்பாப் புலி" என்றெல்லாம் சொல்வார்கள். கண்ணதாசனின் "தென்றல்" பத்திரிக்கையில் வெண்பா எழுதியிருக்கிறேன். நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். மற்றபடி நான் சுயமாக உருவானவன் தான்.

கே: 1955 வரை ஃபிரான்ஸ் நாட்டின் கீழிருந்த புதுச்சேரி தமிழ் எழுத்தாளர்களிடம் ஃபிரெஞ்சு இலக்கியத் தாக்கம் ஏதும் உண்டா?

ப: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்த இலக்கியங்களைக் காட்டிலும் பிரெஞ்சிலிருந்து தமிழுக்குப் போதுமான இலக்கியங்கள் அந்தந்தக் காலக்கட்டத்தில் வந்திருந்தால், தமிழ் இன்னும் சிறப்புப் பெற்றிருக்கும், அழுத்தம் பெற்றிருக்கும், தமிழின் மரியாதையும் கூடியிருக்கும். என்ன என் குறை என்றால், பாரதிதாசன் தொடங்கிப் பல கவிஞர்கள் புதுச்சேரியில் தோன்றியிருந்தாலும், வாணிதாசனைத் தவிர வேறு யாரும் பிரெஞ்சு இலக்கியத்திலிருந்து தமிழுக்கு ஏதும் கொண்டு வரவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் 400-500 பிரெஞ்சு மொழி ஆசிரியர்கள் கல்லூரிகளில் இருந்தாலும் தமிழிலிருந்து சிறந்த விஷயத்தைப் பிரெஞ்சுக்கோ, பிரெஞ்சிலிருந்து சிறந்த விஷயத்தைத் தமிழுக்கோ கொண்டு செல்லத் தவறிவிட்டார்கள்.

கே: நீங்கள் எழுதிய "மானுடம் வெல்லும்" நாவல்தான் தமிழில் முதல் வரலாற்றுப் புதினம் என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தீர்கள். விளக்க முடியுமா?

ப: "மானுடம் வெல்லும்" புதினத்தின் முன்னுரையில் அப்படிக் குறிப்பிட்டிருந்தேன். நான் வரலாற்றுப் புதினம் என்பதற்கு வைத்திருக்கும் இலக்கணம் வேறு. எந்தக் காலக்கட்டத்தைப் பற்றி எழுதுகிறோமோ அந்தக் காலக்கட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படி முடியாதென்றாலும், அப்படி நம்பும்படியான ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும். அந்தக் காலக்கட்டத்து மொழி, சிந்தனைகள், பெண்கள், ஆண்கள், மக்கள் உறவுமுறைகள், பெண்கள், உழைக்கும் மக்கள் நிலை இவைகள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வதுதான் வரலாறாக இருக்க முடியும்.

1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலத்தை எடுத்துக் கொண்டு, ஒரு நாட்டு இளவரசன் இன்னொரு நாட்டு இளவரசியைக் காதலித்தான், குதிரையில் வந்து தூக்கிக் கொண்டு போனான், சண்டை வந்தது என்று பொய்யாய்ப் புனைந்து கூறுவது, ஓரிரு ஆதாரங்களை வைத்து 1000, 2000 பக்கங்களுக்குக் கற்பனையில் எழுதிக் கொண்டிருப்பது, வரலாற்றுப் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டு, வரலாற்றுக்குச் சம்பந்தமே இல்லாமல் ஒரு நாவல் எழுதுவது அபத்தம். அப்படிப் பட்ட அபத்தங்கள் எனக்கு முன்னால் நிறைய இருந்தன.

தமிழ்நாட்டில் பிறந்த மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் கன்னடத்தில் முதல் சிறுகதை எழுதினார். அவர் "சிக்கவீர ராஜேந்திரா" என்ற வரலாற்று நாவலை எழுதினார். அது என்னை மிகவும் பாதித்தது. அலெக்சிடால்ஸ்டாய் எழுதிய "பேரரசன் பீட்டர்" என்ற ரஷ்ய வரலாற்று நாவலும் என்னைப் பாதித்தது. இப்படிச் சில முன்னுதாரணங்களை வைத்துதான் நான் "மானுடம் வெல்லும்" எழுதத் துவங்கினேன். அதைப் படித்தால்தான் அதற்கும் மற்ற வரலாற்று நாவல்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை உணர முடியும்.

கே: உங்கள் இலக்கணப்படிப் பார்த்தால் பெருத்த ஆராய்ச்சி, நிறைய தரவுகள் இல்லாமல் எழுத முடியாதே!

ப: ஆமாம். "மானுடம் வெல்லும்" நாவல் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள் புதுச்சேரி, தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச வரலாற்றுச் செய்திகளையும் கொடுக்கிறது. நாவலில் அவர் சொல்லாததைத்தான் சொல்லுகிறேன். அந்த நாட்குறிப்புகளை, அதன் மொழிநடையையும், அந்தக் காலக் கட்டத்தையும் புரிந்து கொள்ளுவதற்கே 10- 15 ஆண்டுகளாயிற்று. நாவலுக்கு நான் பயன்படுத்திய மொழி நடையை வசப்படுத்துவதற்கும் சில காலம் ஆயிற்று. வரலாற்று நாவல் என்பதை நிர்ணயிக்கவும் சில காலம் பிடித்தது. இப்படிக் கடுமையான ஆராய்ச்சி, உழைப்புக்குப் பின்னரே "மானுடம் வெல்லும்", "வானம் வசப்படும்" நாவல்களை எழுத முடிந்தது. இந்த இரண்டு பாகங்களை எழுதி விட்டேன். இன்னும் இரண்டு பாகங்களை எழுதி விட்டால் புதுச்சேரி வரலாறு முழுமை பெறும். அந்த அளவுக்கு எனக்குத் தரவுகள் இருக்கின்றன.

முன்னிரண்டு பாகங்களையும் தினமணி கதிரில் தொடராக எழுதி வந்தேன். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. வரலாற்றுப் புதினங்கள் யாருக்குப் புரியும், துப்பறியும் நாவல், காதல் நாவல் என்று எழுதுங்களேன் என்கிறார்கள். எத்தனையோ குப்பைகளோடு இன்னும் ஒரு குப்பையைச் சேர்க்க வேண்டாம் என்று எழுதாமல் இருக்கிறேன். ஏதேனும் பத்திரிக்கையில் வாய்ப்பு கிடைத்தால் மூன்றாவது பாகத்தை எழுதத் தொடங்கலாம்.

கே: வரலாற்றுக்காலக்கட்டத்து மொழியை உயிர்ப்பிக்க வேண்டும் என்கிறீர்கள். அது இன்றைய வாசகர்களுக்குப் புரியாது என்று பத்திரிக்கை ஆசிரியர்கள் கவலை கொள்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. வாசகர்களுக்கு எப்படி அதைப் புரிய வைக்க முடியும்?

ப: புரிதல் என்பது எல்லாக் காலத்திலும் ஒரு எழுத்தாளர் சந்திக்கிற பிரச்சினைதான். நான் கை குலுக்கத் தயார். நீங்களும் கை கொடுக்க வேண்டும். வாசகர்களுக்கு கொஞ்சமாவது உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

நவீன ஓவியம் பார்த்தால் புரியாது. நாம் அதை திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும். ஓவியக் கலைஞன் என்ன சொல்கிறான் எந்த அனுபவத்தைச் சொல்கிறான் என்பதை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இலக்கியத்திற்கு அது முக்கியம்.

எனக்கு என்ன மொழி வருகிறதோ அந்த மொழியில்தான் எழுதுவேன். அதை வாசகர்கள் உள்வாங்கிக் கொண்டு அதை தங்கள் மொழிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒரு மொழி இருக்கிறது. அந்த மொழியைப் பின்பற்றித்தான் எழுத்தாளன் எழுதுவான். அந்த மொழியைப் புரிந்து கொள்வதற்கு வாசகன் முயற்சிக்க வேண்டும். நான் நிறையப் படிக்க மாட்டேன். நிறைய சொற்கள் அறிய மாட்டேன். ஆனால் நீ எழுதுவது எனக்கு புரியவேண்டும் என்று அடம் பிடித்தால்... இப்படி அடம்பிடிக்கின்ற குழந்தையை ஒன்றும் செய்ய முடியாது.
கே: தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் கெளரவ ஆசிரியராக இருந்த மிகச் சில எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.

ப: புகழ்பெற்ற நாடகாசிரியரும், நாவலாசிரியருமான இந்திரா பார்த்தசாரதி புதுச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறைக்கு தலைவராக இருந்தபோது என்னை அழைத்து கெளரவ விரிவுரையாளர் ஆக்கினார். நான் இந்தியாவில் மிக முக்கியமான நாடக ஆசிரியரான பாதல் சர்க்காரின் மாணவன். பரிக்க்ஷ¡ குழு என்னுடைய நாடகங்களை போட்டிருக்கிறார்கள். முட்டை என்கிற என் நாடகம் நவீன நாடகங்களில் மிகமுக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. இத்தகைய அனுபவத்தினால் அவர் என்னை அழைத்து நாடக வகுப்பு ஆசிரியராகப் பணியாற்ற வைத்தார்.

இரண்டு ஆண்டு காலம் உலகத்திலுள்ள மிக முக்கியமான நாடகங்களையெல்லாம் வைத்து வகுப்பு எடுத்தேன். Waiting for Godot, சாமுவெல் பெக்கெட் நாடகங்கள் என்று நிறைய விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அவர்களுக்கு எந்த விதத்தில் நான் உபயோகப்பட்டேன் என்று தெரியாது. ஆனால் எனக்கு நாடகம் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

வருமானம் அதில் அவ்வளவு கிடையாது. நான் முழுநேர எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். எழுத வேண்டும் என்று நினைத்தால் எழுதுவேன். படிக்க வேண்டும் என்று நினைத்தால் படிப்பேன். இப்படிப்பட்ட வாழ்க்கையை நான் விரும்பி அமைத்துக் கொண்டவன். அதனால் என்னால் இந்த நாடகத்துறையில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.

கே: நாடகத்துறையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது?

ப: பொதுவாகவே நிகழ்கலைகளில் எனக்கு எப்போதுமே அதிக ஈடுபாடு. நான் எழுத்தாளனாகவில்லையென்றால் ஒரு நாட்டியக் காரனாகவோ, பாட்டுக்காரனாகவோதான் இருந்திருப்பேன். என்னால் சங்கீதத்தின் உள்ளே போகமுடியவில்லையே தவிர என்னால் சங்கீதத்தை ரசிக்க முடியும். என்னுடைய அடுத்த கட்டவளர்ச்சிதான் நாடகம். நாடகத்தில் இசை, நடனம், பாவம் என்று எல்லாம் இருக்கிறது. நாடகங்கள் நான் நிறைய பார்த்திருக்கிறேன். மரபார்ந்த நாடகங்கள், கூத்துகள், மரபு நாடகங்கள் என்று நிறைய பார்த்திருக்கிறேன். ந.முத்து சாமியின் கூத்துப்பட்டறை நவீன நாடகங்களை பார்த்திருக்கிறேன். அதுபோல் ஆங்கில நாடகங்களை படிக்கிற போது, குறிப்பாக Samuel Becket இதுபோன்ற நாடகங்களை படிக்கின்ற போது நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் உருவானது.

கே: எப்படி ஒருகாலக்கட்டத்தில் எல்லா எழுத்தாளர்களும், கலைஞர்களும், பாரிசுக்குப் போய்த்தான் வேண்டும் என்று இருந்தததே அது போல் எல்லோரும் பாண்டிச்சேரிக்கு போய்த்தான் தீர வேண்டும் என்று ஒரு பிரமிப்பு இருக்கிறது... அப்படி என்ன வித்தியாசத்தை பாண்டிச்சேரியில் காண்கிறீர்கள்?

ப: பாண்டிச்சேரி ஒரு ஞானபூமி. இங்கு கலைஞர்கள் அவசியம் ஒருமுறையாவது வரவேண்டும். அந்த காற்றிலேயே நிறைய விஷயங்கள் இருக்கு. அந்த காற்று உங்களிடையே பேசாமல் நிறைய விஷயங்கள் சொல்லக்கூடியது. புதுச்சேரி கடற்கரை பக்கம் போனால் உலகத்தில் லெளகீகமாக இருக்கிற உங்களை அதற்கு மேல் கொஞ்சம் ஒருபடி கொண்டு போவதற்கான சூழல் இருப்பதாக உணர்கிறேன். இதெல்லாவற்றையும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாது. உணரப்படக்கூடியது. புதுச்சேரிக்கு வந்து பார்த்தால் கலைஞர்களுக்கு உரிய ஊர் அது என்று உங்களுக்குப் புரியும்.

கே: நீங்கள் இளம் வயதில் எழுதியதிலிருந்து இன்று வரை உங்களுக்குள்ளும், உங்கள் எழுத்துக்களுக்குள்ளும் ஒரு முதிர்ச்சியையோ அல்லது பரிணாம வளர்ச்சியையோ பார்த்திருக்கிறீர்களா?

ப: இலக்கியத்தை தொடர்ந்து இடைவிடாமல் வாசிப்பவனுக்குள் ஏற்படுகிற முதிர்ச்சிதான். உதாரணமாக யாராவது நம்மை அடித்தால் நாம் அவரை திரும்ப அடிக்க முடியாது. அப்படி அவர்கள் அடித்தால் ஏன் அவர்கள் நம்மை அடித்தார்கள். அவர்கள் அடிக்கும்படி நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசிக்க வைக்கிறது. உடனேயே நம்மைத் தாக்க வைக்காமல் யோசிக்க வைக்கிறது. இலக்கியம் லஞ்சம் வாங்குகிறவனை லஞ்சம் வாங்காமல் தடுக்காது. ஆனால் குறைவாக வாங்க வைக்கும். அதாவது மனிதனை பக்குவப்படுத்துகிறது இலக்கியம்.

கே: நவீன இலக்கிய எழுத்தாளர்கள் பலருக்குத் தமிழுடைய மரபோ, வேரோ தெரியாமல் முழுக்க முழுக்க இன்றைக்கு எது நாகரீகமாக இருக்கிறதோ அதைப் பார்த்து அப்படியே எழுதுகிற தன்மை இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதைப் பற்றிய தங்கள் கருத்து.

ப: ஒரு சிலரை வைத்துக் கொண்டு நாம் பொதுவாக பேசுகிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மரபு தெரியும். நான் ரொம்பவும் மதிக்கிற, உயர்வாகப் பாராட்டுகிற அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, அவர்களுக்கு மரபு தெரியும். மரபு தெரிந்துதான் மரபை மீறவேண்டும் என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது வரும் எழுத்தாளர்களுக்கு மரபு படிக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்கள், ஆனால் நேரம் இல்லாதவர்கள்.

ஒரு எழுத்தாளன் தன் காலத்தில் தன் மொழியில் இதுகாறும் நடத்தப்பட்ட சாதனைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். புதுமைப்பித்தனுக்குப் பின்னாலே, பாரதிக்குப் பின்னாலே, பிச்சமூர்த்தி, அழகிரிசாமி, கு.ப.ரா, மெளனி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், சம்பத், அ.மாதவன், ஆதவன், நகுலன் போன்றவர்கள் எங்கள் முன்னோர்களாக இருந்திருக்கிறார்கள். எங்களுடைய தலைமுறையில் வண்ணதாசன், வண்ணநிலவன், நான், பூமணி இவர்கள் எல்லாம் வந்திருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு ஜெயமோகன் வந்திருக்கிறார்.

கவிஞர்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் உலகம் போற்றக்கூடிய கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். குறிப்பாக புதுக்கவிஞர்கள். பெண் கவிஞர்கள். 2000 தொடங்கிய பத்தாண்டுகள் கவிஞர்களின் காலம். குறிப்பாக கனிமொழி, உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரேயி, லேனா மணிமேகலை. இப்படிச் சில கவிஞர்கள். அற்புதமான படைப்புகள் உருவாகியிருக்கின்றன. மனுஷ்யபுத்திரன், ஞானக்கூத்தன், கலாப்பிரியா, மறைந்த தருமு சிவராம் இப்படிச் சில கவிஞர்கள் தமிழில் மிக முக்கியமான கவிஞர்களாக இருக்கிறார்கள். இருந்தார்கள்.

சிறுகதைகள், நாவல்கள் என்று எடுத்துக் கொண்டால் கடந்த பத்தாண்டுகளுக்குள்ளாக தமிழில் மிக முக்கியமான நாவல்களும், சிறுகதைத் தொகுப்புகளும் வந்திருக்கின்றன. அது பெருமைப்படக்கூடிய விஷயம். நான் தெளிவாக அடிக்கடி சொல்வேன் உலக எழுத்தாளர் எவருக்கும் கொஞ்சமும் சளைக்காத, சொல்லப்போனால் அவர்களைக் காட்டிலும் மேலான எழுத்தாளர்கள் தமிழில் இப்போது இருக்கிறார்கள். இதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதாவது மூத்த எழுத்தாளர்கள் மட்டுமல்ல இப்போது எழுத ஆரம்பிக்கும் தமிழ் எழுத்தாளன்கூட முதிர்ச்சியாக எழுதுகிறான். முதல் பிரதியே மிகச் சிறப்பாக பலருக்கு வந்திருக்கிறது.

தமிழ் அந்த வகையில் சிறப்புமிக்க மொழி தான். ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வேன்.

கே: புலம்பெயர்ந்த தமிழர்கள், குறிப்பாக ஈழத்தமிழர்களின் படைப்புகளில் ஒரு தனித்தன்மை, தாக்கம், தமிழுக்கு ஒரு புதிய படைப்புகளை உருவாக்குகிறது. இதற்கான காரணம் காலையில் அலுவலகம் சென்று மாலை வீடு திரும்பும் வாழ்க்கையை பார்த்தவர்களின் கண்ணோட்டம் வேறு, வாழ்க்கையிலேயே கஷ்டங்களை பார்த்த ஈழத் தமிழர்களின் கண்ணோட்டம் வேறு என்று கூறியிருக்கிறீர்கள்.

ப: இருத்தல் என்ற விஷயமே கேள்விக்குள்ளாக்கப்பட்ட மக்களிடமிருந்து வருகின்ற இலக்கியம் இருக்கிறது பாருங்கள் அதில் மிகப்பெரிய ஆழ்ந்த சோகமும், ஒரு மீறுகின்ற தன்மையும் இருக்கும். அது புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பார்க்க முடிகிறது. குறிப்பாக சேரன், ஜெயபாலனைச் சொல்லலாம். சங்கரி போன்ற புதிய கவிஞர்களைச் சொல்லலாம். உலக அளவில் முத்துலிங்கம், ஆர் சி கந்தராசா போன்றவர்களைச் சொல்லலாம். தமிழ்நாட்டிலேயே அக்காவும் தங்கையுமாய் இரண்டு கவிஞர்கள் - நிலா, தென்றல் - மிகச் சிறப்பான கவிஞர்கள். அடுத்த பத்து, இருபது ஆண்டுகளில் தமிழ் மிகச் சிறந்த மொழியாக இருக்கும். இலக்கிய ரீதியில் வளர்ச்சி பெற்ற மொழியாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இப்போது செம்மொழியாக்கப் பட்டப்பிறகு இன்னும் வளமான மொழியாக தமிழ் விளங்கும்.

கே: தலித்துகள் - ஒடுக்கப்பட்டவர் களும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒரு மக்கள்தான் அவர்களும் தனி இலக்கியம் படைக்கத் தொடங்கிவிட்டார்கள்? இது தமிழுக்கு நல்லதா...

ப: ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போது ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக, அவர்களே தங்களுடைய பிரச்சனைகளை பேசத் தொடங்கிவிட்டார்கள். அதுதான் சரியானது. நியாயமானதும்கூட. இப்போது தீண்டாமை கொடுமைக்கான வலியை தீண்டாமைக்கு உள்ளானவன் அனுபவித்த மாதிரி மற்றவர்கள் அனுபவிக்க முடியாது. ஆக ஒரு தேசத்தின் கறை படிந்த பக்கத்தைப் பற்றி, மொழியைக் கையில் எடுத்துக் கொண்டு, அவர்கள் அனுபவத்தை அவர்களே கூறுகிறார்கள்.

அண்மைக்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் மிகக் குறிப்பிடத்தகுந்த படைப்பிலக்கியம் தலித் இலக்கியம். குறிப்பாக சிவகாமி, பாமா, ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள். அதே போல பெண்ணியம் பற்றிய வீச்சான பார்வை உருவாகியிருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் குமுறலான பல குரல்கள் ஏற்பட்டிருக்கின்றன. பண்பாடு என்கிற பெயரில் நாம் எழுதக் கூச்சப்பட்ட விஷயங்கள் எல்லாம் இப்போது பெண்கள் வெளிப்படையாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படி எழுதுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

நமக்குள் சில வார்த்தைகளை எழுதக் கூடாது என்கிற மனோபாவத்தில் இருக்கிறோம். ஆண்டாள் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். மனம் திறந்து காதலையும், காமத்தையும், புலவி நுணுக்கத்தையும் எழுதியிருக்கிறார்கள். முலை என்கிற வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம் என்று பல ஒழுக்கவாதிகள் தமிழ்நாட்டில் பேச ஆரம்பித்தார்கள். பெண்களுக்கென்று சில வார்த்தைகள் மறைக்கப்பட்டு, இதையெல்லாம் நீ பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிற போது இதையெல்லாம் நாங்கள் பயன்படுத்துவோம் என்கிற போராட்ட குணம் கொண்டவர்கள் எடுத்துக் கொள்கின்ற நியதி. இப்படி இப்போது சில மேன்மையான ஒழுக்கவாத இலக்கியவாதிகளுக்கும், இந்தப் பெண்களுக்கும் அல்லது இந்தப் பெண்களை போல் எழுதும் மற்ற ஆண் எழுத்தாளர்களுக்கும் ஒரு போர் வந்து கொண்டிருக்கிறது. நான் எப்போதும் இவர்களைத்தான் ஆதரிக்கிறேன். ஒழுக்கம் சொல்பவர்களையும், சட்டம் சொல்பவர்களையும் நாங்கள் ஆதரிக்கிறதே இல்லை. இலக்கியம் இப்போது ஆண்பாலுக்கு உள்ள நியதியும், ஆண்டாளுக்கு உள்ள சுதந்திரமும் எனக்கும் உண்டு என்பதுதான் என்னுடையகருத்து.

கே: இதில் எத்தனைப் பேர் அதிர்ச்சியைக் கொடுப்பதற்கோ அல்லது விடலை பருவத்தினருக்கோ எழுது கிறார்கள் அல்லது எத்தனைப் பேர் உண்மையிலேயே கலை நுணுக்கத்துடன் எழுதுகிறார்கள்...

இந்த விகிதத்தை காலம்தான் தீர்மானிக்கும். சமகாலத்தில் நாமே இதை தீர்மானிக்க முடியாது. ஒரு காலக்கட்டத்தில் கலகம் செய்பவன், கலகம் செய்பவள் போன்றவர்கள் தீவிரவாதிகளாகவும், கலகக்காரர்களாகவும், மோசமானவர்களாகவும், சமூகத்தைக் கெடுப்பவர்களாகவும் தோற்றம் அளித்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் தான் மிகச்சிறந்த இலக்கியவாதிகளாக, மொழியை முன்எடுத்துச் சென்றவர்களாக, பண்பாட்டைக் காப்பாற்றியவர்களாக காலம் சொல்கிறது. ஆக நாம் இப்போது நாம் அந்த வேலையைச் செய்ய வேண்டாம். வரட்டும். புதுவெள்ளம் எப்போதுமே வண்ணத்தோடும், அழுக்கோடும்தான் இருக்கும். காலம் போகபோக நீர் தூய்மையாகும். நான் எப்போதும் அப்படித்தான் பார்க்கிறேன். எனக்கு எப்போதும் இளைஞர்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது.

கே: தமிழில் கடந்த நூற்றாண்டில் சுதந்திரப்போராட்ட எழுத்தாளர்கள், திராவிட எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் என்று பலவிதமான இயக்கங்கள் இருந்திருக்கின்றன. இதில் பொதுவாக பொதுவுடைமை எழுத்தாளர்கள் போற்றப்படுகிறார்கள். திராவிட எழுத்தாளர்களோ மற்றவர்களோ போற்றப்படுவதில்லையே.

ப: நவீன எழுத்தாளர்களால் பொதுவுடைமையைச் சார்ந்த எழுத்தாளர்கள் போற்றப்படுகிறார்கள் என்பது முற்றும் சரியல்ல. நவீன எழுத்தாளர்களுக்கும் முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் தொடர்பே இல்லை. முற்போக்கு எழுத்துக்கள் சேர்ந்த எழுத்தாளர்கள் எல்லாம் கலாப்பூர்வமாக எழுதுகிறார்களா என்றால் இல்லை. கொள்கையை முன்வைத்துத் தாமரையில் கதை எழுதுகிறவர்கள் எல்லாம் எழுத்தாளர்களாக கருதப்பட்டனர். அந்தப் போக்கு இருக்கத்தான் இருக்கிறது. இதையெல்லாம் பிரச்சார எழுத்து என்ற வகையில்தான் எடுத்துக் கொண்டு புறக்கணிக்கப்பட வேண்டும். கலைப்பூர்வமாக இல்லாமல் தொழிலாளர்களுக்காக எழுதப்பட்ட எழுத்து கலையாகாது. நல்ல கொள்கையாக இருக்கலாம். கொள்கை எல்லாம் கலை இலக்கியமாகாது. ஒரு கருத்து கலையாகவோ, இலக்கியமாகவோ மாற வேண்டும் என்றால் அதற்குரிய நெறிகளுடன் அது இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா என்று பார்க்கும் போது அது குறைவுதான். ஆனால் முற்போக்கு இலக்கியத்தில் கந்தர்வன், தமிழ்ச்செல்வன், பொன்னீலன் போன்ற பல மிக முக்கியமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த இலக்கணத்தை நீங்கள் திராவிட இயக்கத்திற்குப் பொருத்த முடியாது. திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு நோக்கம் வேறு. அவர்கள் நிறையப் பேரை சென்று அடையவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். பொதுவாக வடவர்கள் சூழ்ச்சி, பிராமணர்கள் சூழ்ச்சி அப்புறம் முதலாளிகள் சூழ்ச்சி இவற்றை கொண்டு போக ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஒரு கதை கலையாகவும், இலக்கியமாகவும் மாறவேண்டும் என்றும் அதற்குரிய இலக்கணங்கள் அதில் இருக்க வேண்டும் என்கிற அக்கறையே அவர்களுக்கு இல்லை. இலக்கியத்திற்கும் அண்ணாதுரைக்கும் சம்பந்தம் இல்லை, கலை, இலக்கியத்திற்கும் கருணாநிதிக்கும் சம்பந்தமில்லை. அல்லது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பலருக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் வேறு ஒருவகையான பிரச்சார இலக்கியத்தைக் கட்டுமானம் செய்தார்கள். கலை இலக்கியம் என்று உலகம் ஒப்புக் கொள்கிற அந்த தடத்தில் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அந்த வகையில் புதுமைப்பித்தன் போல் ஒரு எழுத்தாளரை திராவிட இயக்கத்தில் காட்ட முடியுமா? அவரது நோக்கங்கள் வேறு. அண்ணாவும் பத்திரிகை நடத்தியிருக்கிறார். கருணாநிதியும் பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். ஆனால் யாராவது புதுமைப்பித்தனை அங்கீகரித்திருக்கிறார்களா. இல்லை. அவரைப் பற்றிழுதினார்களா. இல்லை. ஏன் என்றால் அவர்களுக்குத் தெரியாது.

கே: ஒரு இலக்கியத்தரமுள்ள பத்திரிக்கை நடத்த வேண்டும் என்று இளமையில் கனவு கண்டிருக்கிறீர்கள். அது இன்னும் உண்டா?

ப: எனக்கு இலக்கியத் தரமான பத்திரிகை, கலாப்பூர்வமான பத்திரிகை, உலகக் கலைகளுக்கும் உலக இலக்கியத்திற்குமான பத்திரிகை, மொழிபெயர்ப்புகளுக்கு அதிகமாக இடம் கொடுக்கும் பத்திரிகை நடத்த வேண்டும் என்று ஆசை. பத்திரிக்கை நடத்துவதற்கு லட்சகணக்கான பணம் தேவை. சிறு பத்திரிகை நடத்துவதற்கே நிறைய செலவு ஆகும். சிறுபத்திரிக்கைகள் இப்போது உயர்தரத்தில் வருகின்றன. தரம் மிகுந்து காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இலக்கியத்திற்கும், கலைக்கும் சமூகத்திற்கும் தொண்டு செய்வது சிறு பத்திரிகைகள்தாம். இன்று காலச்சுவடு, உயிர்மை, அச்சரம் இதுபோன்ற பத்திரிகைகள் செய்கின்ற தொண்டு இருக்கிறது பாருங்கள். அந்த புத்தகத்திற்கு இருக்கின்ற அழகுக்கு இணையாக வே11111111111111111று எதுவும் இல்லை. நான் பத்திரிகை நடத்த வேண்டும் என்றால் எழுத்தாளனுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் கேட்டால் கண்டிப்பாக இலவசமாக கதைகள் எல்லாம் கொடுப்பார்கள். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ஆனால் பத்திரிகை நடத்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

அவரது கனவு நனவாக வாழ்த்தி விடை பெறுகிறோம்.

சந்திப்பு: மணி மு. மணிவண்ணன்
ஒலிபெயர்ப்பு: கேடிஸ்ரீ
More

நடனக்கலைஞர் ராதிகா சூரஜித்
Share: 




© Copyright 2020 Tamilonline