Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
இலக்கியம்
பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா?
- பெரியண்ணன் சந்திரசேகரன்|ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeமார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம். ஆண்டாள் திருப்பாவையும் 'மார்கழி நீராட' (திருப்பாவை: 4) என்று பாடும். எனவே திருப்பாவை போன்றவையும் மார்கழியும் பிணைப்புள்ளவை ஆகிவிட்டன. திருப்பதி போலும் திருமால் கோயில்களில் அந்த முறைப்படித்தான் சிறப்புப் பூசைகள் நடக்கின்றன. இங்கே நாம் பழைய சான்றுகள்படி மார்கழியின் முதல்நாளிலேயே இந்த நோன்பு தொடங்கவேண்டுமா என்பதை ஆய்வோம். இதற்கு முகாந்தரம் என்னவென்றால் சங்கக்கவிதைகளில் தைந்நீராடல் என்பது மிகுதியாகச் சொல்கிறது.

சங்கக்காலத்திலேயே குளிர்காலத்தில் கன்னியர் நோன்பாக நீராடுதல் இருந்தது தெரிகிறது. பரிபாடல் என்னும் நூல் சங்க இலக்கியத் தொகுப்பில் ஒன்றாகும். பரிபாடல் என்றால் இசைமெட்டுக்கு முதன்மை பொருத்திக் கவிதை அதற்குத் தக அமைந்த பாடலாகும்; அதனால் பண்குறிப்பும் இருக்கும். இந்தக் காலத்தில் சிந்து, கீர்த்தனை என்று சொல்கிறோம். அவை இந்தியாவில் கிடைத்துள்ள கருநாடக இசைப்பாடல்களில் பழையது என்று சொல்லலாம்.

மார்கழித் திருவாதிரையும் முழுமதியும்:

அந்தப் பரிபாடல் தொகுப்புகள் ஒன்றில் வையை நதியைப் பற்றிய பாடலொன்றில் நடுங்கும் குளிரில் விடிகாலையில் வையைக் கரையில் நிகழும் நிகழ்ச்சிகளை நாகனாரின் இசைமெட்டுக்கு இனியமுறையில் கவிதையாக இசைக்கிறார் நல்லந்துவனார் என்னும் கவிஞர், அங்கே கனைக்கும் அதிர்குரல்கொண்ட கார்மழை வானத்திலிருந்து நீங்கியுள்ளது. பனிமிகுந்த ஈரத்தால் மெய்யை விதிரவைக்கும் பொழுது. வெயில் காயாத குளிர்மாரி கொண்ட மார்கழி மாதம்.

கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து (பரிபாடல்: 11:74-76)
[பைதல் = ஈரம், குளிர்; விதலை = விதிர்த்தல், நடுங்குதல்; காயா = காயாத; நளி = குளிர்; குளம் = மார்கழி]

இங்கே மழைநீங்கியது என்றது கார்த்திகைக் கனமழை ஓய்ந்ததைச் சொல்வதாக இருக்கவேண்டும். அந்த மார்கழியில் மதியம் (பௌர்ணமி) நிகழும் நாள் அது; முழுமதியானதாலே அதன் கறையான மறு நிறைந்துள்ளது; அந்த மதியத்தோடு ஆதிரை மீனும் கூடுகிறது. அப்பொழுது விழாத் தொடங்குகிறது:

மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப (பரிபாடல்: 11:77-79)
[மாயிரு = முழுப்பெரிய; விழவு = விழா; புரிநூல் = முறுக்குநூல், பூணூல்; பொலம் = பொன்]

அதாவது 'பெரிய முழு மதியத்தின் மறுநிறைவோடு ஆதிரை நட்சத்திரத்தில் விரிந்த நூலோதும் அந்தணர் ஆதிரைக் கடவுளுக்கு விழாத் தொடங்கப் பூணூல் அந்தணர் பொற்கலசங்களை ஏந்த' என்கிறது. எனவே மார்கழியின் திருவாதிரையில் விழாவொன்று தொடங்குவதை அறிகிறோம். ஆதிரைக்குக் கடவுள் உருத்திரன் என்பதை இன்னொரு பரிபாடல் (8:6) ஆதிரை முதல்வன்'என்பதால் சொல்கிறது. இன்றும் ஆருத்திரா தரிசனம் அந்த நாளில் சிதம்பரத்தில் பெருவிழாவாகும்.
அம்பாவாடல்:

அப்பொழுது அழகிய வளையலணிந்த கன்னியர்களுக்குச் சடங்கறிந்த முதிய பெண்கள் நோன்புநீராடும் முறையைக் காட்டுகின்றார்கள். அவற்றில் ஒன்று இந்த அகன்ற நிலவரம்பு மழையால் குளிரட்டும் என்று வேண்டுவதாகும். இதற்கு அம்பா ஆடல் என்று பெயர். திருப்பாவையிலும் 'நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் திங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று வேண்டுவதைக் காணவேண்டும்.

வெம்பாதுஆக வியன்நில வரைப்பென
அம்பா ஆடலின்ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட (பரிபாடல்: 11:80-81)
[வெம்பா = பனி; வெம்பாது = பனியுடையது; வியன் = பெரிய; வரைப்பு = எல்லை; ஆடல் = நனைதல்; ஆய் = அழகு; தொடி= வளையல்; முனித்துறை = சடங்கு]
தாயோடாடுவதால் அம்பாவாடல் என்று பரிமேலகழர் உரை; ஆயினும் பாவை என்னும் அம்பிகைக்கு ஆடல் என்ற மூலக்கருத்தால் அந்தச்சொல் வழங்கியதோ என்று சிந்திக்கலாம். அதைத் தைந்நீராடல் என்றும் குறிக்கிறார் பரிமேலகழர்.

தைந்நீராடல்:

அடுத்து வையைநதியைப் பார்த்துப் பாடுகிறார் நல்லந்துவனார்:
தீயெரிப்பு ஆலும் செறுதவம்உன் பற்றியோ?
தாய்அருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல்
நீஉரைத்தி, வையை நதி! (பரிபாடல்: 11:90-92)
[ஆலும் = தங்கும்; செறு = அடக்கு, புலனடக்கு; உரைத்தி = உரை!]
'இந்தக் கன்னியர் தீயெரிப்பபுச் சடங்கிலே பொருந்திப் புலனடக்கித் தவம்செய்வதும் தம் தாய்மார் அருகிலே நின்று தவநோன்பாகத் தைந்நீராடுதலும் உன்னைப்பற்றித் தானோ? நீ உரைப்பாயாக வையை நதியே!' என்று விளிக்கிறார்.

மேற்கண்டதில் நாம் மார்கழித் திருவாதிரையில் விழாத் தொடங்கும் பொழுது கன்னியர்கள் அம்பாவாடல் என்றும் தைந்நீராடல் என்றும் வழங்கும் நோன்பைத் தொடங்குவதும் தெரிகிறது. இது தொடர்பாக இன்னொரு செய்தியும் சொல்லவேண்டும்: இன்றும் கொங்குநாட்டுச் சுமங்கலிப்பெண்கள் திருவாதிரைநாள் விடிகாலை மங்கலியப்பூசை கொண்டாடுகின்றனர்; பலவகைக் காய்கறிகள் சமைத்துக் இனிப்புக் களியோடு படைத்துப் பூசையை முடிப்பர். கன்னியர்கள் தமக்கு நல்லகணவன் அமைய வேண்டும் பாவை நோன்பை அப்பொழுது தொடங்குவது பொருந்துகிறது.
மற்ற சங்க இலக்கியங்களிலும் தையில் குளிர்நீராடலே குறிக்கப்பெறுகிறது. தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ (கலித்தொகை:59), தைத்திங்கள் தண்கயம் படியும் பெருந்தோட் குறுமகள்' (நற்றிணை:80) என்பவற்றைக் காண்கிறோம்.

மார்கழியா? தையா?

கடைசியில் நாம் தீர்க்கவேண்டியது மார்கழி நீராடலா தைந்நீராடலா? என்பதே. இங்கே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் மகாலட்சுமி என்பவர் தம் 'இலக்கியத்தில் சோதிடம்' என்ற நூலில் மேற்கண்ட பரிபாடல் பாட்டைச் சுட்டி 'இங்கே திருவாதிரை என்பது மார்கழியில் மதி நிறைந்த மிருகசீரிட நாளுக்கு அடுத்த நாள்; பூர்ணிமாந்த முறையில் பார்ப்பின் ஆதிரை தையின் தொடக்கநாள். எனவே தையில் தொடங்கும் நீராடல் 'தைநீராடல்' எனப்பட்டது' என்கிறார்.

ஆகவே தைம்மாதம் தொடங்குவது என்ற கணக்கிலேயே வேறுமுறை இருப்பது தெரிகிறது. அது பூர்ணிமாந்தம் என்பது; அதாவது பௌர்ணமி என்னும் பூர்ணிமாவை அந்தமாக (முடிவாக) ஒரு மாதம் கொள்ளுவது; அதாவது பூர்ணிமாவிலிருந்து பூர்ணிமா வரை. எனவே ஆதிரைப் பூர்ணிமையிலிருந்து அடுத்த பூர்ணிமைவரை தைம்மாதம் என்று அந்தக் கணக்கு. இப்பொழுது அப்படியில்லை. வரும் கிறித்துப்பிறப்பின் 2007ஆம் ஆண்டுக்கு மார்கழித் திருவாதிரையும் பூர்ணிமையும் கூடுவது சனவரி 3 (மார்கழி 20); தை தொடங்குவது சனவரி 14.
எப்படியிருந்தாலும் பாவைக்கு நீராடும் நோன்பு தொடங்குவது மார்கழியில் திருவாதிரையும் மதியமும் கூடும் நாள்தான் என்பது தெரிகிறது. அதனால்தான் ஆண்டாள் முதற்பாட்டில் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்'என்று பாடுகிறாள்; இன்று நாம் நிகழ்த்துவது போல் மார்கழி தொடங்கும்பொழுதே கிடையாது. எனவே இன்றைய மாதக்கணக்கின்படி மார்கழி தை இரண்டு மாதமும் சேர்ந்து நிகழ்வது அது.

பெரியண்ணன் சந்திரசேகரன்
Share: 




© Copyright 2020 Tamilonline