|
|
சென்ற கட்டுரையில் கிட்கிந்தையில் சுக்கிரீவன் சீதையின் நகைகளைக் காட்டவும் இராமன் “வழியில் செல்லும் பெண்களை வேற்றோர் விலக்கி வற்புறுத்தினால் அதைப் பார்க்கும் ஆடவர் தமக்குப் புண்பட்டாலும் கடுமையாகத் தாக்கி உயிரையே இழப்பார்கள்! நானோ என்னையே நம்பியிருந்த சீதையின் துயரைப் போக்காமல் இருக்கிறேனே!” என்று புலம்பியதைக் கண்டோம். அது பெண் சீண்டலைத் தடுக்க இராமன் கூறும் நெறியையும் காட்டுவதாகவும் உணர்ந்தோம்.
இப்போது நாம் பாலை பாடிய கடுங்கோ என்னும் சேரமாமன்னன் நற்றிணையில் நவிலும் ஒரு காட்சி இராமன் சொன்னதற்கு இலக்கியமாகத் திகழ்வதைக் காண்போம்.
தலைவியும் தலைவனும் காதலிக்கிறார்கள்; ஆனால் தலைவியின் வீட்டார் அதை அறியாமல் அவளுக்கு வேறொருவனை மணமுடிக்க முயல்கிறார்கள்; தன் கற்புக்குக் கேடு நேராமல் இருக்கத் தலைவி தலைவனுடன் போகி மணந்துகொள்ள இசைகிறாள்; வீட்டாரிடம் சொல்லாமல் அவள் தோழி அவளைத் தலைவனுடன் அனுப்பி வைக்கிறாள். இருவரும் காட்டு வழியில் செல்கின்றார்கள்.
அந்தக் காட்டில் கோங்க மரங்கள் மிகுதி. கோங்க மரத்துப் பூவின் இதழ்கள் சிறியனவாக இருக்கும். இதழ்கள் சில பூக்கள் போல் தடித்து இல்லாமல் சன்னமாக இருக்கும்; குடை போல் வளைந்தும் இருக்கும். கோங்க மரம் பூக்கும் பருவம். அதனால் பூக்கள் உதிர்ந்து நிலத்தில் பரவிக் கிடக்கின்றன. அந்தக் காட்சிதான் என்ன அழகு! விடியும் வைகறைப் பொழுதில் வானத்தில் மின்னும் விண்மீன்கள் போல் பார்ப்போர் நினையத் தோன்றுகின்றன! காடு அழகு கொள்கிறது! அந்தக் காட்டு வழியும் அதனால் இனிய பூநாற்றம் நாறுகின்றது!
“புல்இதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் நினையத் தோன்றிப் புறவணி கொண்ட பூநாறு கடத்திடை...” (நற்றிணை:46:3-5)
[புல் = சிறிய; வைகு = விடியல்; மீனின் = விண்மீன்போல்; புறவு = காடு; அணி கொண்ட = அழகு கொண்ட; கடம் = வழி]
அந்தக் காட்சியையும் நறிய பூநாற்றத்தையும் சுவைத்துக்கொண்டே செல்கிறார்கள் தலைவனும் தலைவியும் அந்தக் கடத்திலே, காட்டுத் தடத்திலே. அப்போது...கிடின் என்ற ஓசை! அந்தக் கிடின் என இடிக்கும் ஓசை மரங்கள் நடுவே கிளம்புகின்றது! அது கனமான உலோகத்தால் ஆன பொருள்கள் மோதும் ஓசையல்லவா! ஆம் காட்டு மறவர்கள் தம் தோள்களில் அணியும் வீரவளையங்களின் (தொடிகள்) ஓசை! அவர்களில் சிலர் காட்டு வழியில் செல்வோரை மறித்துக் கொள்ளை யடிக்கும் தொழிலை மேற்கொண்டவர்கள்; அவர்கள் கூர்மை பொருந்திய அம்பினால் கொல்லும் கொலைவினையைச் செய்பவர்கள்.
அந்தக் கொடியவர்கள் அஞ்சாது அவனைத் தாக்க முனைகின்றார்கள். தலைவனும் தலைவியைக் காக்கும் பொருட்டுக் கடும்போர் விளைத்து அவர்களை நீக்குகின்றான். பிறகு இருவரும் தங்கள் போக்கைத் தொடர்கிறார்கள். மீன்போல் மின்னும் பூக்களையும் பூமணத்தையும் இன்னும் சுவைத்துச் செல்கிறார்கள்.
பிறகு மீண்டும் வழியில் சலசலப்பு. பின்னால் இருந்து கேட்கிறது. அவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். தலைவி பின்னால் வரும் ஆட்களைப் பார்த்து இவனிடம் ஏதோ சொல்லத் தலை திருப்புகிறாள். அவனோ ஓடி ஒளிந்து விட்டான்! என்னடா இது சற்று முன்தான் கொடிய மறவர் படையை எதிர்நின்று போராடி விலக்கிய அவன் ஏன் இப்படி ஓடி ஒளிய வேண்டும்! அதுவும் இந்தக் கானகத்தின் நடுவே! அதுவும் தன் தலைவியைக் கைவிட்டுவிட்டு? அவளைக் காதலிக்கும் போது அவள் நலங்களைப் புனைந்துரைக்கையில்
“நன்னீரை வாழி அனிச்சமே! நின்னினும் மெல்லியள் யாம் வீழ்பவள்!” (திருக்குறள்: காமத்துப்பால்) |
|
[நல் நீரை = நல்ல குணமுடையாய்; நின்னினும் = உன்னை விடவும்; மெல்லியள் = மெல்லியவள்; வீழ் = விரும்பு, காதலி; யாம் வீழ்பவள் = யாம் விரும்புபவள்]
என்று அனிச்சப்பூவிற்குப் பொறாமை ஊட்டுமாறு அவள் மென்மையைப் பாராட்டியவன்! அந்த மெல்லிய பெண்ணை இப்படிக் காட்டுவழியில் விட்டு ஓடி ஒளிவதா?
ஆனால் அவளுக்கு அந்த ஐயம் தோன்றவில்லை! அவள் சிரிக்கிறாள்! ஏன்? சலசலக்கப் பின்னால் வந்தவர்கள் எதிரிகள் அல்லர். அவர்கள் தன் வீட்டார்! அவர்கள் இருவரையும் தேடிக் கொணர்ந்து தாங்களே மணமுடிக்கப் பின் வந்தவர்கள்! அவர்கள் கையில் தலைவியின் சேமத்திற்கு குறைவில்லை அல்லவா? எனவே மணமான பிறகு ஒருநாள் இல்வாழ்க்கையின் போது தலைவன் பொருளீட்ட அவளைப் பிரிய வேண்டியதைச் சொல்லும்போது தலைவி யின் தோழி அந்த ஓடி ஒளிந்த நிகழ்ச்சியை நினவு படுத்திச் சொல்கிறாள், அந்த நிகழ்ச்சி இன்று நடந்தது போல் எம் கண்ணில் சுழல்கின்றது என்று.
“அன்றை அனைய ஆகி இன்றும்,எம் கண்ணுள் போலச் சுழலும், மாதோ! புல்இதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் நினையத் தோன்றிப் புறவணி கொண்ட பூநாறு கடத்திடைக் கிடின்என இடிக்கும் கோல்தொடி மறவர் வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாது அமரிடை உறுதர நீக்கிநீர் எமரிடை உறுதர ஒளித்த காடே!” (நற்றிணை:46: பாலை பாடிய கடுங்கோ பாடியது)
[அன்றை அனைய = அன்றையவை போன்றன; கண்ணுள் போல = கண்ணுக்குள் நடப்பது போல; வடி = கூர்மை; நவில் = பொருந்து; வினையைர் = வினைசெய்வோர்; அமர் = போர்; உறுதர = இருக்க; எமர் = எம்மவர், எம் வீட்டார்]
மூலம்: “நற்றிணை மூலமும் உரையும்”. உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 1997.
பெரியண்ணன் சந்திரசேகரன் |
|
|
|
|
|
|
|