|
|
அக்பர் தனது அரசவையில் வீற்றிருந் தார். 'எனக்கு ஒரு சந்தேகம். என்னுடைய கருவூலத்தில் ஏராளமான செல்வம் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதை எங்கே முதலீடு செய்வது? மந்திரிகள் ஆலோசனை கூறலாம்' என்று அறிவித்தார்.
நவரத்தினங்களில் ஒருவரான ராஜா மான்சிங் எழுந்தார், 'பாதுஷாவுக்கு வணக்கம். பங்குச் சந்தைதான் நல்லது. ஓர் ஆண்டில் 10 சதவீத வருமானம் அதில் கிடைப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ·பைஸர், ஜி.ஈ. போன்ற நல்ல கம்பெனிப் பங்குகளை வாங்குங்கள்' என்றார்.
இசைமேதை தான்சேன் எழுந்தார், 'ஜஹான்பனா! Worldcom, Enron போன்ற வற்றை மறந்துவிட வேண்டாம். பணத்தை இழக்கும் அபாயம் இல்லாமல் முதலீடு என்றால் பரஸ்பர நிதிகள்தாம் (mutual funds) சிறந்தவை' என்றார்.
'உக்கும்' என்று நொடித்தார் மான்சிங். '90 சதவீத பரஸ்பர நிதிகள் பங்குச் சந்தையை விடக் குறைவாகவே வளர்ந்தன' என்றார்.
'S&P 500 குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பரஸ்பர நிதித் திட்டத்தில் சேர்ந்தால் பங்குச் சந்தையை விட அதிக லாபம் பார்க்கலாம். அவ்வளவுதானே. எத்தனையோ பரஸ்பர நிதிக் கம்பெனிகள் இதற்காகப் பலவிதத் திட்டங்களை வைத்திருக்கின்றன. நமக்குப் பொருந்துவதை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்' என்றார் தான்சேன்.
'கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறதே! ம்... மேலே சொல்லுங்கள்' என்றார் சக்ரவர்த்தி.
'பங்குகள் என்றால் எத்தனையோ வசதிகள்: ஆப்ஷன்ஸ் டிரேடிங் அல்லது மார்ஜின் டிரேடிங், ஷார்ட் செல்லிங், எக்ஸ்சேஞ்ச் திறந்திருக்கும் நேரத்தில் வாங்கிவிற்றல் என்று. காலை 9.30 லிருந்து மாலை 4.00 மணிவரை (EST) பங்குச்சந்தை திறந்திருக்கும். அன்றைக்குச் சந்தை மேலே ஏறினால், காலையில் விலையேறும் பங்கை வாங்கி மதியம் விற்றாலே லாபம் கிடைக்கும். இதெல்லாம் பரஸ்பர நிதியில் கிடைக்குமா? உதாரணம் ஒன்று சொல்கிறேன்: செப்டம்பர் 12, திங்கட்கிழமை காலையில் பங்குச் சந்தை தொடங்கினால், பரஸ்பர நிதித் திட்டம் ஒன்றன் விலை எப்போது தெரியவரும்?' என்று கேட்டார் மான்சிங்.
'அன்று மாலை ஆகும்' என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னார் தான்சேன். 'அதுதான் நான் சொல்லுவது. அன்றைக்கு S&P 500 காலையிலேயே ஏறலாம். ஆனால், பரஸ்பரநிதி முதலீட்டாளர் சாயங்காலம் வரை காத்திருக்கணும். அவரால ஷார்ட் செல்லிங், ஆப்ஷன்ஸ் டிரேடிங் அல்லது மார்ஜின் பையிங் முடியாது' என்று வெற்றிப் புன்னகையோடு கூறினார் மான்சிங்.
'அதுக்கு ஒரு வழி இல்லையா?' என்று கேட்டார் ஆலம்பனா. 'ஏன் இல்லாமல்! ஸ்பைடர்ஸ், டயமண்ட்ஸ், கியூபெக்ஸ்' என்று சொன்ன ஒரு பக்கத்து நாட்டுக்காரர், சொன்ன கையோடு வெளியேறி மறைந்தார். சக்ரவர்த்தியின் பார்வை பீர்பலின் மீது திரும்பியது. 'பீர்பல், இந்தச் சவால் உனக்கு. அவர் சொன்னது என்னவென்று எனக்கு 3 நாட்களுக்குள் தெரிந்தாக வேண்டும். உன்னால் கண்டுபிடித்துச் சொல்ல முடியா விட்டால், உன் தலை கழுத்தின் மேல் இருக்காது' என்றார் மாமன்னர். நான்காவது நாள். அரசவை மீண்டும் கூடியிருந்தது. பீர்பல் உள்ளே நுழைந்தார்.
'சக்ரவர்த்திகளுக்கு வணக்கம். சமீபத்தில் புதியதொன்று அறிமுகம் ஆகியுள்ளது. அதற்குப் பெயர் ETF, அதாவது எக்ஸ்சேன்ஜ் டிரேடட்·பண்ட்ஸ். பங்குகளைப் போலவே பரஸ்பர நிதியையும் வாங்கி விற்பதற்கு இது முதலீட்டாளருக்கு உதவும். ஆனால் இதன்மூலம் குறியீட்டெண்ணைப் பிரதி பலிக்கும் பரஸ்பர நிதித் திட்டங்களை வாங்கி விற்கலாம். இது பங்கு அல்ல, ஆனால் பங்குகளைப் போலவே சந்தை திறந்திருக்கும் வேளையில் வாங்கி விற்கலாம். பரஸ்பர நிதியைவிட அதிகச் சவுகரியமானது. |
|
'எக்ஸ்சேன்ஜ் டிரேடட் ·பண்ட்ஸ்களில் மிகப் பிரபலமானது ஸ்பைடர்ஸ் அல்லது SPY. முதலில் வந்ததும், மிக அதிகமான முதலீட்டைக் கொண்டிருப்பதும் இதுதான். இது S&P 500ஐ அடிப்படையாகக் கொண்டது. ஒரே பெயரின்கீழ் பலவகைப் பங்குகளில் முதலீடு செய்யும் அனுகூலம் இதில் உண்டு. S&P 500 மேலேறினால் SPY-யும் மேலே ஏறும். இறங்கினால், இறங்கும். ஆக, S&P 500ன் ஏற்ற இறக்கங்களால் முதலீட்டாளர் பயனடைய இது வழி செய்கிறது.
'க்யூபெக்ஸ் அல்லது QQQQ மற்றொரு ETF. நாஸ்டாக்கின் 100 (NASDAQ 100) பங்குகளை இது பிரதிபலிக்கிறது. பொதுவாகச் சொன்னால், நாஸ்டாக் குறியீடு நகர்வதைப் பொறுத்து இது ஏறி இறங்கும்' சொல்லி முடித்தார் பீர்பல்.
'நல்லது. இதை நான் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?' என்று கேட்டார் அக்பர்.
'மே மாத ஆரம்பத்தில் நாஸ்டாக் சந்தை மெதுவாக மேலே போனது. தனித்தனிப் பங்குகளை வாங்காமல் QQQQவை 35 டாலர் மேனிக்கு வாங்கியிருக்கலாம். ஆகஸ்டில் அது 40 டாலரைத் தொட்டது. நாலே மாதத்தில் 14 சதவீத லாபம் கிடைத்திருக்கும். அதற்குப் பிறகு இறங்கத் தொடங்கியது. அப்போது ஒரு முதலீட்டாளர் வேண்டுமானால் 'புட்ஸ்' வாங்கியிருக்கலாம்; அல்லது QQQQவை ஷார்ட்செல் செய்திருக்கலாம்.'தனித்தனித் தொழில்துறைகளைப் பிரதிபலிக்கிற ETFகள் இருக்கா?' என்று ஆர்வத்தோடு கேட்டார் ராஜா மன்சிங்.
'இருக்கு. ஒருவேளை ஆற்றல் துறை மேலே உங்களுக்கு நம்பிக்கை இருக்குன்னு வச்சுக்குவோம். ஆற்றல் துறையை அடிப்படை யாகக் கொண்ட ETFஐ நீங்க வாங்கலாம். பயோடெக்னாலஜி துறைக்குக் கூட ETF இருக்கு!' என்றார் பீர்பல்.
'Dowவைப் பிரதிபலிக்கும் ETFஐ ஒருத்தர் வாங்கணும்னா?' இதைக் கேட்டவர் அக்பர்.
'முடியும். அதுக்குத்தான் டயமண்ட்ஸ் அல்லது DIAன்னு பேரு. டௌ இண்டஸ்ட்ரியல் ஆவரேஜின் 30 பங்குகளை அது கொண்டிருக்கு' என்று பீர்பல் விளக்கினார்.
'ஒரு முதலீட்டாளர் பரஸ்பர நிதி ஒன்றை வாங்க, அதை நிர்வகிக்கும் குழுமத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஒரு கணக்குத் தொடங்க வேண்டும். வான்கார்ட் S&P 500 அல்லது VFINX-ல் முதலீடு செய்ய வான்கார்ட் கம்பெனியில் கணக்கு வேண்டும். ETFக்கு எப்படி?' என்று சந்தேகம் கேட்டது தான்சேன்.
'AmeriTrade அல்லது E-Trade மாதிரி டிஸ்கவுண்ட் புரோக்கரேஜ் கம்பெனியில் கணக்குத் தொடங்கிக்கொள்ள வேண்டும். சரி, அன்றைக்குப் பக்கத்து நாட்டுக்காரர் சொன்னது இதுதான்: பரஸ்பர நிதியில் முதலீடு செய்து, அதில் பங்குகளைப் போன்ற அனுகூலங்களைப் பெறவேண்டுமென்றால் ETFகளை வாங்கவேண்டும்' என்று சொல்லி முடித்தார் பீர்பல்.
'மிக நன்று, மிக நன்று!' என்று பாராட்டினார் அக்பர். 'அது சரி, எப்படி நீ இவ்வளவைத் தெரிந்துகொண்டாய்?' என்றார் பாதுஷா. 'அதுவா, நான் போன மூன்று நாட்களும் நள்ளிரவில் அடுத்த நாட்டுக்காரரின் வீட்டு வாசலில் நின்று மணியடித்தேன்; அவர் பங்குச்சந்தையின் திறப்பு மணி அடிக்கிற தென்று நினைத்து தூக்கத்தில் ETF பற்றிச் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டேன்' என்றார் பீர்பல்.
'என் அருமை பீர்பல்! இன்று முதல் உன்னை எல்லோரும் 'பங்குச் சந்தை பாதுஷா' என்று அழைக்கட்டும்' என்று அறிவித்தார் சக்ரவர்த்தி.
ஆங்கில மூலம்: சிவா மற்றும் ப்ரியா தமிழ்வடிவம்: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|