Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2024 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அலமாரி
என் தந்தை வ.உ.சி. - சில நினைவுகள்
- |ஆகஸ்டு 2024|
Share:
இன்று நடந்தாற்போல இருக்கிறது; ஆனால் அதற்குள் ஏறக்குறைய கால் நூற்றாண்டு உருண்டோடிவிட்டது. ஆம், எனது தந்தையார் வ.உ.சி. அவர்கள் மறைவு பற்றியே நான் குறிப்பிடுகிறேன். 1936 நவம்பர் 19-ந் தேதி அவர்கள் எங்களை விட்டுப் பிரிந்தார்கள். அப்போது எனக்கு வயது பதினொன்று.

எனக்கு அறிவு தெரிந்த பின் நடந்த சில நிகழ்ச்சிகள் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன; நினைத்துப் பார்க்கும்போது, திரைப்படக் காட்சிபோல ஒவ்வொன்றாக உள்ளத் திரையில் பளிச்சிடுகிறது. இன்பமும் துன்பமும் கலந்து ஒரு புதிய உணர்ச்சி பிறக்கிறது.

கரும்பு தின்னக் கூலி!
எனது தந்தையவர்கள் ஒரு சிறந்த நூலாசிரியர் என்பது சிலருக்கே தெரியும். 'கப்பலோட்டிய தமிழன்', 'கல்லுடைத்த கல்விமான்', 'செக்கிழுத்த செம்மல்' என்ற சிறப்புப் பெயர்கள் இன்று பள்ளிச் சிறார்களுக்கும் மனப்பாடம். 'செந்தமிழ் வேந்தன்', 'குறளுக்கு விருத்தியுரை கண்ட வித்தகன்', 'இளம்பூரணத்தை ஏடு பெயர்த்தெழுதிய இலக்கண ஆசிரியன்' என்பதறிந்தவர்களை எண்ணிச் சொல்லிவிடலாம்!

நூல்கள் பல எழுதி வெளியிட்ட போதிலும், என் தந்தையவர்கள் அதனை ஒரு வாணிபமாகக் கருதியதில்லை. தமிழன்னையின் தொண்டாகவே கருதி வந்தார்கள். பதிப்பித்த நூல்களில் பாதி பள்ளி நூலகங்களுக்குப் பரிசுகளாகப் போய்ச் சேரும். நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பப்பெறும் அநேகம். எஞ்சியவை தம்மை முந்தியவையின் வழியிற் சென்று கொண்டிருக்கும். எனவே, நூல் வெளியீடு ஓர் அறப்பணியாகவே எங்கள் வீட்டில் நடந்ததென்றால், இது அதிகம் பிழையல்ல.

திருக்குறள் அறத்துப்பாலுக்கு எனது தந்தையவர்கள் விருத்தியுரை எழுதி வெளியிட்டார்கள். முன்னூறு பக்கங்கள் கொண்ட அப்பெரும் புத்தகத்துக்கு விலை முக்கால் ரூபாய்! வியாபாரிகளுக்கு கழிவு வேறு உண்டு! பள்ளிப் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி பரிசு.

காலையிலும் மாலையிலும் அவர்கள் வந்து உரையுடன் குறள் ஒப்பித்து விட்டுப் போகலாம்; அதற்குச் சன்மானம் உண்டு. தவறின்றி உரையும் குறளும் சொன்னால், குறள் ஒன்றிற்குக் காலணா கைமேல் கிடைக்கும். விடியும் முன்பு, சிட்டுக்குருவி போலச் சிறுவர்கள் கசமுசவென்று உரக்கவும் மெல்லவும் குறள் சொல்லிக் கொண்டு வருவார்கள். அவர்கள் சொல்லும் குறளையும், உரையையும், புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு சரிபார்ப்பது என் வேலை. நாள்தோறும் காலையிலும் மாலையிலுமாக ஏறக்குறைய ஐம்பது மாணவர்கள் வாயில் வள்ளுவம் மணக்க வருவார்கள்; கையில் காலணா கனக்கப் போவார்கள். சில சிறுவர்கள் ஒரே நாளில் நாலணா, ஐந்தணாக்கூடத் தட்டிக் கொண்டு போவார்கள். காசு கிடைக்குமென்ற ஆசை எனக்கும் உண்டு. ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, மனப்பாடத்துக்கும் எனக்கும் 'தோட்டந் தொலைவு'. எனவேதான் பிறர் குறள் ஒப்புவிப்பதைக் கேட்கும் சட்டாம்பிள்ளை வேலை. காசு கிடையாது; கவுரவம்தான்!

துயில்மிசை ஏகுதல்!
நாள்தோறும் இரவில் உறங்குவதற்கு முன்பு குறள் சொல்ல வேண்டும். நாளொன்றுக்கு ஒரு குறள் ஒப்புவிக்க நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்; என் அப்பாவுக்கும் தெரியும்! எனவே முதலில் குறளை அவர்களே சொல்லிப் பின்பு என்னைச் சொல்லச் சொல்லுவார்கள். தூங்கும் முன்பு குறள் சொன்னால் துர்ச் சொப்பனங்கள் வராது என்று சொல்லுவார்கள். 'சிவ சிவ' என்று நூறுமுறை சொல்லுமாறும் கூறுவார்கள். முதலில் குறள், பின்பு சிவன் நாமம். ஆனால், என் தந்தையவர்களிடம் ஒரு பழக்கமுண்டு; படுத்துச் சில நிமிடங்களில் தூங்கி விடுவார்கள். (இந்த நல்ல பழக்கம் அவர்களது வாரிசு என்று சொல்லிக்கொள்ள எனக்குள்ள ஒரு தனிப்பெருந் தகுதி!) எனவே, நான் 'அகர முதல' எழுத்தில் தொடங்கி 'மலர்மிசை' ஏகுமுன்பு, அவர்கள் துயில்மிசைச் சென்று விடுவார்கள். சில சமயம் நான் அவர்களை முந்திக்கொண்டு விடுவேன்; 'வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது' என்பது எனக்குத் தெரியாது!

கண் தப்பியது
தன்மகன் தமிழோடு ஆங்கிலமும் தகவொடு ஹிந்தியும் கற்க வேண்டுமென்பது எந்தையவர்கள் விருப்பம். அந்நாளில் 'மொழி ஒழிப்பு' இயக்கம் ஏதும் பிறக்கவில்லை; அவர்கள் செய்த புண்ணியம். தமிழும், சமஸ்கிருதமும், ஆங்கிலமும், மலையாளமும் எந்தையவர்களின் கைப்பாவைகள்: அவை அவர்களிடம் தவழ்ந்து விளையாடின. வேறு சில மொழிகளும் அவர்களுக்குத் தெரியும், எனவே, தன் மகனும் பன்மொழிப் புலவனாக வேண்டுமென நினைத்து எனக்கு எண்ணும் எழுத்தும் இனிய பல மொழிகளும் கற்பிக்க ஓர் ஆசானை நியமித்தார்கள். (அவர் பெயரும் சிதம்பரம் பிள்ளை; இன்றும் வாழ்கிறார்.) அப்போது எனக்கு ஏழெட்டு வயதிருக்கும். 'பச்சோன்-கி-கிதாப்' அன்று படிக்கத் தொடங்கியவன், இன்னும் படித்து முடிக்கவில்லை! ஆம்; ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று அன்றே எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்! நல்லவேளை, தன் மகன் குருடனாகி விடக் கூடாதே என்ற நல்லெண்ணெத்தினால் ஹிந்தியை விட்டுவிட்டு, எண்ணும் எழுத்தும் கற்பித்தால் போதும் என்று என் தந்தையவர்கள் என் ஆசானுக்குக் கட்டளையிட்டார்களோ, ஹிந்தி பிழைத்தது!

இன்பக் கண்ணீர்
நாள்தோறும் எங்கள் வீட்டில் இரவில் ஏதாவது அறிவு விளக்கம் ஏற்றிய வண்ணமிருக்கும்; குறள் விளக்கம் நடக்கும்; சித்தாந்தச் சிந்தனைகள் அலைமோதும்; கந்த புராணம் கமழும்; அல்லது கம்ப ராமாயணம் மணக்கும். தொடர்ந்து ஓராண்டாகக் கம்ப ராமாயணம் நடந்தது. இராதா கிருஷ்ணய்யர் என்பவர் கம்பனது பாடல்களை முதலில் பண்ணுடன் பாடுவார்; தொடர்ந்து, பிரசங்க ரத்தினம் பொன்னம்பலம் பிள்ளை வெண்கலக் குரலில் உரை சொல்வார்; இருவரும் இடையிடையே பனங்கற்கண்டும் பாலும் பருகுவது குறித்து எனக்குப் பொறாமை! என் கவனம் எல்லாம் பால் செம்பு மீதும், கற்கண்டுத் தட்டின் மீதும்தான்! ஆனால் அவர்கள் இருவரும் கம்பனைப் பாதியில் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்: பால்-கற்கண்டு நிறுத்தமாட்டா என்றுதான் நான் நினைத்தேன்.

ஒருநாள் இரவு எங்கள் இல்லத்து முன்றில், மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருத்தது. நடுவில் மேடை. மணமேடை போல ஊதுவத்தி நறுமணத்துடன் புகைந்து கொண்டிருந்தது; 'காஸ்' விளக்குகள் கண்ணைக் குருடாக்கும் ஒளி கக்கிக் கொண்டிருந்தன. ஏதோ 'கல்யாணம் நடக்கப் போகிறதாக்கும்' என நினைத்துக் கொண்டேன். ஒரு பெருங்கூட்டம் வந்திருந்தது. ஆனால், வழக்கம் போல கம்ப ராமாயண விளக்கந்தான் நடைபெற்றது. பின் ஏன் இந்தத் தடபுடல் என்று எனக்குப் புரியவில்லை. பாட்டாளரும் - அதாவது பாடியவரும், பேச்சாளரும் வழக்கம் போலத் தம் கடமையைச் செய்து முடித்ததும், ஒவ்வொருவராகப் பலர் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்தார்கள்; எந்தையார் வ.உ.சி. அவ்விருவருக்கும் இரு தாம்பாளங்களில் என்னென்னவெல்லாமோ வைத்துக் கொடுத்தார்கள்; எல்லோரும் கை தட்டினார்கள். எங்கள் அப்பா மேடையின் முன் வந்து நின்று பேச முயன்றார்கள். ஆச்சரியம்! பேச்சு வரவில்லை; இடிமுழக்கம் செய்யும் நா அன்று தழுதழுத்துக் கண்கள் நீர் சொரிந்தன. ஆம்; அழுதார்கள்; நானும் அழுதுவிட்டேன்!

"இன்று பட்டாபிஷேகம்; ஓராண்டாக நாள்தோறும் நடைபெற்று வந்த இராமகாதை இன்று முடிகிறது. நீங்களெல்லோரும் வந்து கேட்டு மகிழ்ந்தீர்கள்; நானும் மகிழ்ந்தேன். சிறப்பாக இந்த இலக்கிய விருந்தை நடத்திக் கொடுத்ததற்காக உங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று ஒருவாறாகப் பேசி முடித்தார்கள். மலை கலங்கினும் நிலை கலங்காத நெஞ்சினரான எந்தை அன்று நெஞ்சு நெகிழ்ந்திருந்ததை 'இன்பப் பெருக்கு' என்று சிலர் சொன்னார்கள்: 'ஆனந்த பாஷ்பம்' என்று சிலர் வருணித்தார்கள். ஆனால் அப்பா அழுததென்னமோ, உண்மை என்பதுதான் அன்று என் மனசில் பட்டது.

சைவனுக்கு அழகு
மார்கழித் திங்கள். விடியற்காலை. பனி பெய்கிறது. அப்போதுதான் விழித்தெழுந்த நான் வெளித் திண்ணையில் வந்து உட்கார்ந்தேன். தலையில் சிவப்புக் கம்பளியுடனும் கையில் தடியுடனும் தோட்டப் பக்கத்திலிருந்து அப்பா முன்புறம் வந்தார்கள். என் தமக்கைமார்கள் வாசலில் கோலமிட்டு, சாணிப் பிள்ளையார் மீது பூசணிப்பூ குத்திக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"அடே, பயலே! சைவனுக்கு என்னடா அடையாளம்?" - அப்பா.

எனக்கு இது பெரிய கேள்வி; அன்றும்தான்; இன்றும்தான்!

பதில் பேசாமலிருந்தேன்.

"சொல்லுடா, யோசித்துப் பார்த்துப் பதிலைச் சொல்!" என்றார்கள் அப்பா அவர்கள்.

அவர்கள் நெற்றியில் வெண்ணீறு ஒளியிட்டது, என் கண்ணில் பட்டது. "நெற்றியிலே நீறு பூசுதல்!" என்றேன்.

அது மட்டுமல்ல; புலால் உண்ணாமையும் கூட. "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லாவுயிருந் தொழும்!" என்று கணீரென்று கூறிவிட்டு, அவர்கள், அவர்களது வழியே சென்றார்கள். இந்நிகழ்ச்சி இன்று நடந்தாற் போல என்னகத்தே ஒளி வீசுகின்றது. இந்தக் கேள்வி-பதில் நிகழ்ச்சிக்குப் பின் அவர்கள் நெடுங்காலம் வாழவில்லை. ஆனால் அவர்கள் சொல் என்னுள்ளே வாழ்கின்றது.

(நன்றி: உமா, ஜனவரி 1960 இதழ்)
வ.உ.சி. சுப்பிரமணியம்
Share: 




© Copyright 2020 Tamilonline