Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2024 Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அலமாரி
தங்கம்மாள் பாரதி எழுதிய 'பாரதியும் கவிதையும்' நூலில் இருந்து
- தென்றல்|செப்டம்பர் 2024|
Share:
1. புயற்காற்று
புதுச்சேரியில் நள வருஷம் கார்த்திகை மாசம் 8-ந் தேதி புதன்கிழமை இரவில், அபாரமான புயல்காற்றடித்தது. பெரிய கிழவர்கள் தங்கள் வாழ்நாளிலே அதைப் போன்ற புயலை என்றும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள். சாயங்காலத்திலிருந்தே காற்றுத் தேவன் ஊத ஆரம்பித்துவிட்டான். எப்படிப்பட்ட காற்று! கூ கூவென்று விண்ணைக் குடைந்திடும் காற்று. கும்மிருட்டு. என் தந்தையார் இரவுகளில் அரவிந்தர் வீடு சென்று வேத ஆராய்ச்சி செய்வார். அங்குதான் இராப் போஜனத்தை யனுப்புவோம். இரவு ஒன்பது மணிக்குமேல்தான் அவ்விருவரும் ஆராய்ச்சியி லீடுபடுவார்கள். பின்பு விடியற்காலை ஐந்து மணிவரைக்கும் அவ்விதமே உட்கார்ந்திருப்பார்கள். இருவருக்கும் களைப்போ, சோர்வோ உண்டாவதில்லை. வழக்கம்போல், அன்றும் மாலை ஆறு மணிக்குத் தந்தையார் புறப்பட்டார்.

என் தாயார்: இன்று போகாவிட்டால் என்ன? மழையும் காற்றுமாயிருக்கிறதே!

தந்தை: ஒன்றுக்கும் அஞ்சாத நீ, இந்த இடிக்கும், மழைக்கும் பயப்படப் போகிறாயா?

தாயார்: இல்லை. என் மனம் எதனாலோ இன்று அதைரியமடைகிறது.

தந்தை: ஒரு நல்ல காரியம் செய்யப்போனால் அதற்கு எத்தனை தடை!

இதற்குள், நான், என் தங்கை பாப்பா எல்லோருமாகச் சேர்ந்துகொண்டு அப்பா போவதை நிறுத்திவிட்டோம். தந்தையும் இதைக் கேட்டு மனம் சலனமடைந்தார். சமாதானமின்றி, அப்படியும் இப்படியும் உலாவினார். சரியாகப் போஜனமும் அருந்தவில்லை. ஒன்பது மணியிருக்கும். வாயுதேவன் சீறி எழுந்தான், கோபமூட்டப் பெற்ற புலியைப்போல. பிரளயத்தில் ஏற்படும் என்கிறார்களே, அதுபோல் மழையும் வெள்ளமும். தெருக்களில் தண்ணீர் ஒரு ஆள் ஆழம் ஓடுகிறது. புதுவையில் தென்னை மரம் அதிகம். காற்று ஆரம்பித்ததும், சடசடவென்று மரங்கள் சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததால் மின்சாரக் கம்பிகள் அறுந்து, விளக்குகள் எல்லாம் அணைந்து, ஊர் பூராவும் ஒரே அல்லோல கல்லோலம்! நாங்கள் அன்றுதான் வேறு வீட்டிற்குக் குடி வந்திருந்தோம். (அதாவது முன்பிருந்த வீட்டிற்கு எதிர்வீடு.) எங்கள் வீட்டு மாடியிலும் நாலைந்து மரங்கள் சாய்ந்தன. தந்தையார் தாயாரிடம் சொன்னார். "பெண்கள் தெய்வீகத்தன்மை பொருந்தியவர்கள் என்பதை இன்றுதான் பிரத்யக்ஷமாகக் கண்டேன். அதனால்தான் நான் இன்று வேத ஆராய்ச்சியைக்கூட நிறுத்தினேன். உன் மனத்தில் 'ஏதோ சம்பவிக்கப் போகிறது' என்று தோன்றிவிட்டது. கஷ்டப்படும்போது எல்லோரும் ஒன்றாயிருந்து அதை அனுபவிப்பதே நல்லது என்பதற்காகத்தான் நான் போகாமலிருந்தேன்."

தாயார்: காரணம் தெரியாமல் என் மனம் இன்று கலங்கிற்று. ஏதாவது உற்பாதம் ஏற்படாதிருக்க வேண்டுமே என்றுதான் உங்களை வழிமறித்தேன்.

தந்தை: வானம் உறுமுகிறது! உலகம் நடுங்குகிறது! நாம் இப்பொழுது ஏதாவது செய்ய முடியுமா! பராசக்தியைத் துதித்து, துன்பம் வராமல் காக்கச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

தாயார்: ஐயோ! நேற்று நாமிருந்த விட்டில் தென்னை மரங்கள் சாய்ந்து மாடியின் ஒரு பாகம் இடிந்து விழுகிறதே! எல்லோரும் அலறும் சத்தமும், அதற்குமேல் வாயுவின் உறுமலும் என்னை திக்பிரமையடையச் செய்கிறதே! இது என்ன காற்று! இது என்ன இன்று யுக முடிவா! தெரியவில்லையே!

தந்தை: செல்லம்மா, இவ்வளவு தூரம் மனத்தைக் கலங்கவிடாதே! இதோ ருக் வேதம்! படித்துப் பொருளுரைக்கின்றேன். அரவிந்தர் வீட்டில் வாயுவின் ஸ்தோத்திரம்தான் படிப்பதென்று நினைத்திருந்தேன். இதோ பிரத்யக்ஷமாகவே அவனைத் தரிசித்தேன். ஒரு கெடுதலும் வராது, தேவியின் அருளால்; அவன் சக்தி குமாரன் என்று இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே. சூறாவளிக் காற்றடித்து. மழைத் தண்ணீர் யானைத் துதிக்கையால் பாய்ச்சுவதுபோல வீட்டுக்குள் வந்து விழுந்தது. காற்று ஜன்னல் கதவுகளை உடைத்து கண்ணாடிகளை யெல்லாம் தூள் தூளாக்கி விளக்கையும் அவித்தது.

தாயும், தந்தையும் அந்த மாடியில் சற்று ஒதுப்புறமாய் எங்களை இருக்கச் சொல்லிவிட்டு, ரொம்ப சிரமப்பட்டு விளக்கேற்றி, சுற்றும் சாமான்களை வைத்து மறைத்தார்கள். ஒரு விதமாக விளக்கு அணையாமல் நின்றது.

தந்தை: செல்லம்மா! ஊழிக் காலத்து முடிவும் இவ்விதம்தான் இருக்கும். உலகம் ஜலப்பிரளயம். ஓடும் நீர் அந்நதித் தண்ணீர். சக்தி காற்றாக மாறிவிடுவாள். சிவன் வெறிகொண்டிருப்பான். காற்று நீரைச் சிதறடித்து, ஆகாசத்தில் மின்னை விளைவித்து, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கி, தூளை நீராக்கி, சண்டமாருதம் செய்து, இந்த விதமாக யுக முடிவு செய்வான். காற்றே நம்மைக் காப்பான். மேகங்களை ஒன்றோடொன்று மோதச் செய்து, இடிக்கப்பண்ணி, கடலைக் கலக்கி, மண்ணைப் புரட்டி விளையாடுகிறான்.

‘காற்றே! ஒளியே! வலிமையே! உன்னை வணங்குகிறேன். காற்றே! உயிரே! அகில உலகத்திற்கும் உயிரளிக்கும் தேவனே! நீயே உயிர் என்றால் உன்னால் அதை அழிக்க முடியுமா? எனவே உயிர் அழியவில்லை. உன்னோடு கலக்கிறது. சிறிய உயிர் அகண்டமான உயிரோடு சேருகிறது. மரணம் இல்லை.'

தாயார் இது கேட்டுச் சிறிது தைரியம் பெற்றார். இப்போது எங்களுக்கு அந்தச் சம்பவங்களை நினைக்கும்போது மயிர்க் கூச்சிடுகிறது. மெய் சிலிர்க்கிறது. பின்னும் மழையும் காற்றும் நிற்கவில்லை. தந்தையார் அந்த அற்புதத்தை, சக்தியின் விளையாட்டைக் கண்டு வியந்து, பின்வரும் பாட்டைப் பாடிக்கொண்டு குதிக்கலானார்.

திக்குக்கள் எட்டுஞ் சிதறி - தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்
பக்க மலைகளு டைந்து - வெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்

வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட சட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையு மிடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

அண்டம் குலுங்குது, தம்பி - தலை
ஆயிரந் தூக்கியச் சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான் - திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார் - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம், கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.


பின்பு காலை ஆறு மணிக்குப் புயற்காற்று அடங்கிற்று.

★★★★★


2. புயற்காற்று
மறுநாட் காலை ஐந்து மணி. புயற்காற்றடித்ததனால் போக்குவரத்துக்கு அசௌகரியமாக, மரங்களும் இடிந்த வீடுகளும் தெருக்களை அடைத்துக்கொண்டு கிடந்தன. தந்தையாரும் காலையுணவுகூடக் கொள்ளாமல் புறப்பட்டார், நண்பர்களையும் அன்பர்களையும் பார்ப்பதற்கு. நானும் உடன் சென்றேன். மரங்கள் சாய்ந்ததால் அவற்றில் வசித்த காக்கைகள், குருவிகள் மற்றும் அனேகவித பட்சிகள் யாவும் கூடுகளுடன் சிதறிக்கிடந்தன. தெருவில் முழங்கால்வரை தண்ணீர். மரங்களையும் மட்டைகளையும் தாண்டித் தாண்டிச் சென்றோம். முதலில் முருகேச பிள்ளை வீட்டை அடைந்தோம். அங்கு விபத்து ஒன்றும் இல்லாதிருப்பதைக் கண்டு சிறிது சமாதானமடைந்து, அங்கிருந்து ஒவ்வொரு நண்பராய்ப் பார்த்துக்கொண்டு, வ.வெ.சு. அய்யர் வீடு சென்றோம். ஐயர் மிகவும் களைப்புற்றிருந்தார். ஏனெனில் இரவு முழுதும் மழைத்தண்ணீர் அவர்கள் வீட்டு உள்ளெலாம் பெருகிவிட்டதாயும், இரைத்துக் கொட்டும் வேலை ஏற்பட்டதாயும் சொன்னார். அங்கிருந்து முத்தியால்பேட்டைவரை சென்றோம். உடனே நண்பர் ஒருவர் ஓடி வந்து, "சுப்புரத்னம் சமாசாரம் கேள்விப்பட்டீர்களா?" என்றார். "இல்லையே" என்றார் தந்தை. அவர் சொல்லு முன்பாகவே, சுப்புரத்னம் (இப்போது பாரதிதாசன் என்னும் பெயரில் இருக்கிறார்.) வந்துவிட்டார். "சுப்புரத்னம்! என்னப்பா நடந்தது?" என்று தந்தை கேட்டார். அவர் பின்வருமாறு கூறினார்: "நான் என் கிராமத்தில் தெருத்திண்ணையில் படுத்துக் கொண்டிருந்தேன். காற்றடிக்க ஆரம்பித்தது. உடனே மழையும் கொட்ட ஆரம்பித்தது. நான் உள்ளே போவதற்காக எழுந்திருந்தேன். பத்துப் பேர் சேர்ந்து என்னைப் பிடித்திழுப்பதுபோல் தோன்றிற்று. அவ்வளவுதான். நான் திமிறிக்கொண்டு கதவைத் திறந்து உள்ளே போவதற்காக எழுந்திருந்தேன். எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாதபடி என்னைப் பந்தைப்போல் தூக்கி வீசிற்று காற்று. ஒரு தடவை வயல்வெளியில் போட்டது. அங்கிருந்து தூக்கிக் களிமண்ணில் போட்டுப் புரட்டி எடுத்தது. என்னால் முடிந்தவரை சிரமப்பட்டுக் காற்றில் பறக்கக் கூடாதென்று நினைத்துப் பெரிய மரம் ஒன்றைக் கட்டிக்கொண்டேன். அது முட்டாள்தனம் என்று பின்னால் தெரிந்தது. க்ஷணத்திற்கெல்லாம் மரம் மடமடமட வென்னும் ஓசையோடு முறிந்து விழுந்தது. இன்ன சத்தம் என்று உரைக்க முடியாதபடி ஒரே இரைச்சல்! வாயுதேவன்தான் அவ்விதம் உறுமினானோ, அல்லது பேய்கள்தான் அவ்விதம் கூக்குரலிட்டனவோ தெரியாது. என் மனதில் இவ்விதம் தீர்மானித்துவிட்டேன்.

நாம் மறுபடி உலகத்தை பார்க்கப் போவதில்லை. மின்னல் கண்ணைப்பறிக்கிறது இடிச்சத்தம் காதைத் தொளைக்கிறது. என் உடம்பில் லங்கோட்டைத் தவிர வேறொன்றுமில்லை குளிர் நடுக்குகிறது. பல் கிட்டுகிறது. பராசக்தியைத் தியானித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன். கண்ணை விழித்தால் பயங்கரமான இருளில் கொட்டு மழையில் காற்று எங்கேனும் மரங்களில் மோதி விடுமோ என்று பயமாயிருக்கிறது. காதையும் கையினால் பொத்திக்கொண்டேன். ஒவ்வொரு நிமிஷத்திலும் மரணத்தை எதிர்பார்த்தேன். காற்று என்னைப் புரட்டிக்கொண்டும், உருட்டிக்கொண்டும், தூக்கித் தூக்கி வீசி, கடைசியில் ஒரு தண்ணீரில் கொண்டு அமுக்கிற்று. அமுக்கிய அமுக்கலில் மூச்சுத் திணறிவிட்டது. இருந்தாலும் நான் தைரியத்தைக் கைவிடாமல் தம் மூச்சு அடக்கிக்கொண்டு மேலே வருகிறதற்கு முயற்சி செய்தேன். அனேகந் தடவை முயற்சி தோற்றது. கடைசியில் கைகளை வீசியதும் சில கொடிகள் அகப்பட்டன. அதைப்பற்றிக் கொண்டு எப்படியோ திக்குமுக்காடித் தண்ணீரிலிருந்து உயர வந்துவிட்டேன். நல்ல வேளை. அப்போது சிறிது காற்று மட்டுப்பட்டிருந்தது. மெதுவாகக் கரை ஏறிப் பார்க்கையில் ஊரிலிருந்து நான்கு மைலுக்கப்பால் உள்ள கிராமத்து வயலோரத்தில் இருப்பது தெரிந்தது. அங்கிருந்து ஒரு வண்டியிலேறி இங்கு வந்து சேர்ந்தேன். என் மனத்தில் நாம் இப்படி அவஸ்தைப்பட்டோமே, உங்கள் கதி என்னவாயிற்றோ என்று ரொம்பக் கவலையாயிருந்தது. தங்களைக் கண்டதும் கவலை நீங்கிற்று' என்று கூறினார்.

அவர்களை எல்லாம் எங்கள் வீட்டில் போயிருக்கும்படி சொல்லிவிட்டு, நானும் அப்பாவும் மட்டும் அரவிந்தர் வீடு சென்றோம். பாபுஜி மிகவும் ஆவலோடு தந்தையை வரவேற்றார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர் இருந்த வீடு ஒரு நல்ல கெட்டிக்கட்டிடம், அப்படியிருந்தும் வீட்டுக்குள் தண்ணீர் பெருகி மிகவும் துன்பங் கொடுத்ததாம். எல்லோரும் காரிருளில் தீப்பெட்டி வைத்த இடம் தெரியாமல் திண்டாடினார்கள். பாபுஜி மட்டும் இருந்த இடம் விட்டு அசையாமல் ஜபம் செய்துகொண்டிருந்தார். பாபுவின் சிஷ்யர்கள் எல்லோரும் பங்களாவின் எல்லா சாமான்களையும் கவனித்து வரும்போது, அவரது தர்மபத்நி ஸ்ரீமதி மிருணாலினி தேவியின் புகைப்படம் ஒன்று மட்டும் உடைந்து சேதமடைந்து விட்டதென்று அதைக் கொணர்ந்தனர். அது கண்டு அரவிந்தர் மிகவும் வருந்தினார். இரண்டு நாளைக்கெல்லாம் ஸ்ரீமதி மிருணாலினி தேவி விண்ணுலகம் அடைந்ததாக வங்காளத்திலிருந்து செய்தி வந்தது. நாங்கள் வீடு வந்ததும், "அப்பா, நேற்றைய சம்பவத்தைப்பற்றிப் பாட்டு ஒன்றும் எழுதவில்லையே'' என்றேன்.

அவர் எழுதிய பாட்டு இதுதான்:
புருஷன்: காற்றடிக்குது கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத் தடிக்குது பள்ளியிலே

மனைவி: நேற்றிருந்தோ மந்தவீட்டினிலே யிந்த
நேரமிருந் தாலென் படுவோம்;
காற்றென வந்தது கூற்றமிங்கே நம்மைக்
காத்தது தெய்வ வலிமையன்றோ?

புருஷன்: வானஞ் சினந்தது வைய நடுங்குது
வாழி பராசக்தி காத்திடவே;
தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
தேவியருள் செய்ய வேண்டுகின்றோம்.
தென்றல்
Share: 




© Copyright 2020 Tamilonline