|
முன் நின்ற முருகன் அருள் |
|
- |ஏப்ரல் 2022| |
|
|
|
|
'மாதமணி' தீபாவளி மலருக்கு ஏதாவது கட்டுரை எழுதித் தருமாறு என்னிடம் கேட்ட போது என்ன எழுதுவது என்ற எண்ணம் என் மனசில் உதித்தது. என் குலதெய்வம் பழனி ஆண்டவன். அந்த ஆண்டவனைப் பற்றிய எண்ணமே உள்ளத்தில் எழுந்தது. இந்த வாழ்க்கையில் முருகன் எத்தனையோ தரம் இந்த அடிமையை ஆட்கொண்டிருக்கிறான். எந்தெந்த சமயத்தில் எப்படி எப்படிக் காப்பாற்றினான் என்ற அனுபவங்களை எண்ணினாலே மனதில் வியப்பும், பூரிப்பும் உண்டாகிறது. அதை அப்படியே எழுத முடியாவிட்டாலும் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் இரண்டொரு சம்பவங்களை ஞாபகத்திற்குக் கொண்டுவர முயற்சிக்கிறேன். குற்றமிருந்தால் அன்பர்களும் தாய்மார்களும் மன்னிக்க வேணும்.
சிலருக்கு இது வெறும் கற்பனையாகத் தோன்றலாம். ஆனால் என் வாழ்க்கையில் நடந்த சொந்த அனுபவத்தையே இங்கு கூறுகிறேன்.
பழனி ஆண்டவனைத் தரிசிக்க வேண்டுமென்ற பித்து அப்போதுதான் எனக்கு ஆரம்பமாகி இருந்தது. சதா முருகன் நினைவே நெஞ்சில் தோன்றி நிறைந்திருக்கும். பழனிக்குப் புறப்பட ஒரு தேதியும் குறித்து நிச்சயித்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தேன். ஆனால் எதிர்பாராத காரணத்தால் பழனிக்குப் புறப்படுவதில் தடை ஏற்பட்டது. ஆனால் என் மனம் மட்டும் ஆண்டவனிடத்தில் லயித்திருந்தது. அதே சமயத்தில் கடலூரில் ஒரு நாடகத்திற்காக அழைப்பு ஏற்கவேண்டி வந்தது.
1950-ம் வருஷம், இன்ன மாதம் என்று நினைவில்லை, ஒரு நண்பருடைய பெண்ணின் கலியாணத்திற்காக 'உதவி நாடகம்' ஒன்று கடலூரில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஊருக்கு முதல் தடவையாக அப்போதுதான் போகிறேன்.
அன்று கோவலன் நாடகம். அன்றைய நாடகத்தில் மாதவியிடத்தில் விடைபெற்று கண்ணகியின் வீட்டிற்குப் போகும் வரையிலும் ஞானபண்டிதன் எனக்குத் தந்த சாரீரத்தால் அன்பர்கள் எல்லோரும் ஆனந்தித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கண்ணகியின் வீட்டிற்கு வந்து, 'கண்ணகி' என்று அழைக்கும் பொழுது சப்தமே எழவில்லை. என் உள்ளம் என்ன செய்வதென்று தோன்றாது 'முருகா' என்று என்னை மறந்து அழுதேன். அப்பொழுது அங்கு கூடியிருந்த அன்பர்கள் "நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் பாடலை பூரணமாக அனுபவிக்க எங்களுக்குப் பிராப்தமில்லை. கடவுள் கிருபையால் இன்னொரு சமயம் வந்து எங்களை ஆனந்திக்கச் செய்யுங்கள்" என்று உள்ளமுருக எல்லோர் மனதிலும் 'முருகன்' தோன்றிக் கூறினான். உடனே நாடகத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினோம்.
பிறகு சென்னையில் எனது மாமா மலைக்கொழுந்து கவுண்டர் அவர்கள் தொண்டை வைத்திய நிபுணர் டாக்டர் சங்கரநாராயண பிள்ளை அவர்களிடம் என்னை அழைத்துச் சென்றார்கள். டாக்டர் பரீட்சித்துவிட்டு, "இந்த அம்மா பாடக்கூடியவர்களா?" என்று கேட்டார். நான் பேசவில்லை. பேசவும் முடியவில்லை. மாமா அவர்கள் சிரித்துக்கொண்டே, "ஆமாம்" என்று சொல்லி எனது பெயரையும் கூறினார்கள். ஆனால் டாக்டருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. டாக்டர் நம்ப மறுத்து, "நாடகத்தில் பார்த்திருக்கிறேனே! எனக்கு அவர்களைத் தெரியும். நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு அந்த அம்மாவைத் தெரியுமே" என்று சொன்னார்.
அருகில் நின்ற உதவி டாக்டர், என்னை உற்றுப் பார்த்துவிட்டு, நிதானமாக, நாங்கள் சொல்வது உண்மைதான் என்றார். உதவி டாக்டர் சொல்லியதின் பேரில், 'நான் நானே தான்' என்பதை டாக்டரும் நம்பினார்!
அதன் பிறகு, நன்கு பரிட்சை செய்து பார்த்ததில், "ஆபரேஷன் செய்யாமல் பாடமுடியாது. ஆபரேஷன் செய்யத்தான் வேண்டும்" என்று அவர் சொன்னார். என்னையறியாமல் கடிதத்தில், 'எங்கள் ஞானபண்டிதன் உள்ள வரையில், எனது தொண்டையில் கத்தி வைத்து ஆபரேஷன் செய்ய முடியாது' என்று டாக்டருக்கு எழுதிக் காண்பித்துவிட்டு, "சரி, வருகிறோம்" என்று விடைபெற்றுப் புறப்பட்டோம்.
அப்போது நான் சைதாப்பேட்டையில் ஜாகை வைத்திருந்தேன். வீட்டிற்குப் போனதும், ஒரு பலகையில் (சிலேட்டில்) இரண்டொரு வார்த்தைகள் - அதாவது, "எனக்கு ஆபரேஷன் செய்வதானால் அது முருகன் ஒருவனால்தான் முடியும்; வேறு யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. ஏனென்றால் இது அவன் கொடுத்தது. அவன் விருப்பப்படியே நடக்கட்டும்" - என்று எழுதிக் கொடுத்துவிட்டு நிம்மதியாகப் படுத்துக் கொண்டேன். ஆனால் அந்தச் சமயத்தில்தான் எங்கள் குடும்பம் முன்னுக்கு வரவேண்டிய நிலையில் இருந்தது. அப்பேர்ப்பட்ட நிலையில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
மறுநாள் சென்னையில் எனது நாடகம். அந்த நாடகமும் உதவி நாடகம்தான். இந்த நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவரும் என்னிடம் வந்து, "நாடகத்தை நிறுத்தி விடலாம்" என்று வருத்தத்தோடு சொன்னார். என் உடல்நிலை அப்படி இருந்தும், "முடியாது. நாடகத்தை நிறுத்தாதீர்கள். கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள், முருகன் அருள் புரிவான்" என்று திடமாக வாக்கு வந்தது. அன்று இரவு படுக்கைக்குப் போகுமுன் - காலையில் எழுந்திருக்குமுன் என் தொண்டை குணமாகாவிடில் நாடகத்தை நிறுத்தி நேரே பழனிக்குப் புறப்பட்டுப் போய் அவன் சன்னிதானத்தில் நாக்கை அறுத்து இந்த தேகத்தை அவனுக்கே அர்ப்பணம் செய்து விடுவதாக பிரதிக்ஞை செய்தபடி, எழுதிக் காண்பித்து விட்டு படுக்கையில் படுத்துக் கொண்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை. கண்கள் உறங்கக் காரணம்தான் உண்டா? விழித்தபடியே படுத்திருந்தேன்.
எனக்கு நன்றாக நினைவிருந்தது. "சுந்தராம்பாள். சுந்தராம்பாள், சுந்தராம்பாள்.." என்று யாரோ கூப்பிடுவதுபோல் இருந்தது. இந்த இரவில் யார் நம்மைக் கூப்பிடுவது என்று எழுந்து பார்த்தேன். எனது ஞானபண்டிதன், கையில் வேலும், கழுத்தில் உருத்திராட்சமும் அணிந்து குழந்தை வடிவில் சிரித்துக்கொண்டு என் பக்கத்தில் வந்து "நாக்கை அறுத்து விடுவேன் என்று சொன்னாயே, அது உனக்குச் சொந்தமா?" என்று என்னிடம் மலர்ந்த முகத்தோடு கேட்க, "உன்னைப் பாடாத இந்த நாவு பயனில்லை" என்று நான் சொல்ல, "உன் வாயைத் திற" என்று அத்திருக்குழந்தை சொன்னது.
நான் வாயை மெல்லத் திறந்தவுடன், தனது கையில் இருக்கும், அடியாரைக் காக்கும் வேலால், இரண்டு பக்கமும் அந்தக் கட்டியைக் கரைத்து விட்டு, "இதற்காக இவ்வளவு வைராக்கியம் வேண்டாம். நாளை நாடகத்தை முடித்துக் கொண்டு கோவையில் ஏற்பாடு செய்திருக்கும் நாடகத்தையும் முடித்துக் கொண்டு, நேராகப் பழனிக்கு வந்து, எனக்குத் தேனபிஷேகம் செய்ய வேண்டும்" என்று உத்தரவு கொடுத்து, தன் கையாலேயே திருநீறை எனது நெற்றியில் அணிவித்து பார்த்துக் கொண்டிருக்கையிலே சென்றுவிட்டார்.
உடனே எனது மாமாவை "அண்ணா" என்று எனது இயற்கையான குரலால் கூப்பிட்டதும், அங்கு படுத்திருந்தவர்கள் மாமா உள்பட எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து, "படுக்கைக்குப் போகுமுன் ஜாடை காட்டினாயே! இப்போது எப்படி பேச முடிந்தது?" என்று கேட்டார்கள்.
உடனே நான், என் அப்பன் முருகன் வந்து என்னைக் காப்பாற்றிய விதத்தைச் சொன்னேன். அன்றையிலிருந்துதான் எனது மாமா அவர்களுக்கும் முருகனிடத்தில் பக்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது. இன்றைக்கும் பழனிக்குச் செல்வது என்றால் எனது மாமாவுக்கு பரம சந்தோஷந்தான். அதன் பிறகு கடலூருக்குப் பலதடவை நாடகத்திற்கும் கச்சேரிக்கும் சென்றிருக்கிறேன். நான் தந்த வாக்குப்படியே அன்பர்கள் அகமகிழ்ந்தார்கள். ஆசீர்வாதமும் அன்புடன் செய்தார்கள். அன்றிலிருந்து இன்று வரைக்கும் எனது சாரீர சம்பந்தமாக எந்த விதமான வைத்தியமும் செய்துகொள்ள முருகன் கைவிடவில்லை.
(மாதமணி தீபாவளி மலர் - 1947) |
|
கே.பி. சுந்தராம்பாள் |
|
|
|
|
|
|
|