அஸ்பாரகஸ் டிப் அஸ்பாரகஸ் வதக்கல் அஸ்பாரகஸ் உசிலியல் அஸ்பாரகஸ் காளான் கிரேவி வாசகர் கைவண்ணம் - கோதுமை மாவு சேவை
|
|
|
அஸ்பாரகஸின் விளைச்சல் வசந்த காலம் வருவதைக் குறிப்பதாகக் கூறினாலும் இப்போது இது வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய நல்ல காய்கறி ஆகும்.
அஸ்பாரகஸில் புற்று நோயை எதிர்க்கும் க்ளுடாதயான் உள்ளது. இதைச் சுருக்கமாக GSH என்பர் (Glutathione i.e., GSH is composed of three amino acids namely Cysteine, Glutamine and Glycine).
ஒரு அஸ்பாரகஸ் தண்டு தருவது 4 கலோரிக்கும் குறைவு. கொழுப்புச் சத்து கிடையாது. உப்புச் (Sodium) சத்து மிகக் குறைவு. ஆனால் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் நிறைய உள்ளன. நன்மை நல்கும் நார்ச் சத்துடன் (fibre) கூடியது. குறிப்பாகக் கூறினால் இது எல்லோருக்கும் ஏற்ற முழுமையான உணவுப் பொருளாக விளங்குகிறது.
செழிப்பாக, பசுமையுடன், தண்டுகள் துவளாமல் நேராக, நுனிகள் விரியாமல் அடர்த்தியுடன் கூடியதாக இருக்கும் அஸ்பாரகஸைப் பார்த்து வாங்கவேண்டும். இவைதான் புதிய அஸ்பாரகஸ் தண்டுகளின் (spears) அடையாளங்கள் ஆகும்.
அஸ்பாரகஸைச் சிறிது ஆலிவ் எண்ணெயில் வதக்கியோ, நுண்ணலையில் (மைக்ரோவேவ்) சமைத்தோ, நீ£ரில் வேகவைத்தோ உண்ணலாம்.
இதோ சில அஸ்பாரகஸ் தயாரிப்புகள்...
அஸ்பாரகஸ் சூப்
தேவையான பொருட்கள் அஸ்பாரகஸ் தண்டுகள் - 20 வெண்ணெய் - 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 2 பூண்டு பற்கள் - 2 தக்காளி - 3 உப்பு - தேவைக்கேற்ப மிளகுப் பொடி - தேவைக்கேற்ப பால் - 1 கிண்ணம் மக்காச்சோள மாவு (corn flour) - 2 தேக்கரண்டி இஞ்சி - 1 அங்குலத் துண்டு பச்சைக் கொத்துமல்லி - 1 கைப்பிடி பார்ஸ்லித் தழை (parsley) - 1 கைப்பிடி |
|
செய்முறை
வெங்காயத்தைத் தோல் நீக்கி நான்காக வகிர்ந்து கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ளவும். பூண்டைத் தோல் நீக்கிக் கொள்ளவும்.
அஸ்பாரகஸை அடியிலிருந்து ஓர் அங்குலம் வெட்டிவிட்டு. மீதி உள்ள பாகத்தை நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் வெண்ணெய், ஆலிவ் ஆயில் விட்டு அடுப்பில் வைக்கவும். இவை சற்றுக் காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, போட்டுச் சற்று வதங்கியபின்பு நறுக்கிய தக்காளி, அஸ்பாரகஸ் துண்டங்களையும் போட்டு வதக்கவும்.
எல்லாம் வதங்கிய பின்பு இரண்டு கிண்ணம் தண்ணீர் விட்டு, தேவையான உப்புச் சேர்த்து குக்கரை மூடி ஆவி வந்ததும் குக்கர் விசிலைப் (Weight) போடவும். குக்கர் முதல் சத்தம் வந்தபின் அடுப்பை மிகச் சிறியதாக எரிய விடவும்.
பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். குக்கரின் ஆவி தானாக அடங்கிய பின்னர் வெந்த இந்தக் கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு வடிகட்டியில் வடிகட்டவும். வடிகட்டிய சூப் கலவையை மறுபடி குக்கரில் ஊற்றி, பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.
சோள மாவில் கொஞ்சம் குளிர்ந்த நீர் விட்டுக் கரைத்து இதையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதித்த பின்பு மிளகுப் பொடி சேர்த்துக் கலக்கி, பச்சைக் கொத்துமல்லி, பார்ஸ்லி இலைகள் தூவி இறக்கவும்.
குறிப்பு: வெள்ளை மிளகுப் பொடி சேர்த்தால் அழகும், சுவையும் கூடும். பால்ஏடு (cream) சேர்த்தால் ருசி கூடும். உடல் எடையில் கவனம் உள்ளவர்கள் தவிர்க்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
அஸ்பாரகஸ் டிப் அஸ்பாரகஸ் வதக்கல் அஸ்பாரகஸ் உசிலியல் அஸ்பாரகஸ் காளான் கிரேவி வாசகர் கைவண்ணம் - கோதுமை மாவு சேவை
|
|
|
|
|
|
|