வாழ்க்கையில் நினைப்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை. அதற்கான காலம் வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மகான்களும் ஞானிகளும்கூட அதற்கு விதிவிலக்கில்லை. சாயி மாதா பிருந்தாதேவியின் வாழ்விலும் அப்படித்தான். துறவியாக வேண்டுமென அவர் விரும்பினார். நாளுக்கு நாள் அந்த ஆசை வளர்ந்துகொண்டே வந்தது. ஆனால், அது விரைந்து நிறைவேறவில்லை. அதற்கான காலம் வரவேண்டுமல்லவா? அதுவும் வந்தது.
ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் ஆசி புதுக்கோட்டையில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தை நிர்மாணித்தவரான சத்குரு ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள், தாம் நிர்மாணித்துள்ள ஸ்கந்தகிரி ஸ்கந்தன் கும்பாபிஷேகத்திற்கு வருமாறு சாயி மாதா பிருந்தாதேவியை அழைத்தார். ஏற்கனவே சாந்தானந்த சுவாமிகளிடம் குரு உபதேசம் பெற்றிருந்த அம்மையார் பெருவிருப்புடன் ஆலய நிகழ்வுக்குச் சென்று கலந்துகொண்டார். பின் சுவாமிகளிடம் தன் உள்ளத்தவிப்பு பற்றிக் கூறினார். அதற்கு சுவாமிகள் "விரைவில் உன் எண்ணம் ஈடேறும்" என்று கூறி ஆசிர்வதித்தார்.
ஸ்ரீ விபூதி சாயிபாபா சுவாமிகள் ஒரு சமயம் சாயிமாதாவின் பக்தரான ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஐயர் என்பவர் வீட்டிற்கு பம்பாயிலிருந்து ஸ்ரீ விபூதி சாயிபாபா சுவாமிகள் வந்திருப்பதாக சாயிமாதா அறிந்தார். தெரிந்தவர்கள் சிலரது அழைப்பை ஏற்று ஸ்ரீ விபூதி சாயிபாபா சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றார் சாயிமாதா.
சாயி மாதாவைப் பார்த்ததுமே ஸ்ரீ சுவாமிகள், "எனக்கு இவளை ரொம்ப நாளாகத் தெரியும். எல்லாம் ஜன்மாந்த்ர வாசனைதான். உனக்கென்னம்மா வேண்டும்?" என்று கேட்டார்.
சுவாமிகளை வணங்கிய அம்மையார், "எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை சுவாமி! மனம் என்னவோ தவிக்கின்றது. காணாத ஒன்றைக் காணவும், கேளாத ஒன்றைக் கேட்கவும் ஆசையுறுகிறது. இது எதனால் என்பதும் தெரியவில்லை" என்றார் பணிவுடன்.
உடனே சுவாமிகள் குறுநகையுடன், "சரிதான். இரு பெரிய மகான்கள் சொல்லியுமா உனக்குப் புரியவில்லை! நீ தயாரா?" என்று கேட்டார்.
உடனே சாயிமாதா சுவாமிகளை வணங்கி, "இப்போதே தயார்" என்று பதில் சொன்னார்.
துறவு உடன் தனியறைக்குச் சென்றுவிட்டு சிறிதுநேரம் கழித்து வந்த ஸ்ரீவிபூதி சாயிபாபா, சாயிமாதா பிருந்தாதேவிக்குத் துறவளிக்கச் சம்மதித்தார்.
அதற்கான நல்ல நாள் குறிக்கப்பட்டது. அதன்படி 1971ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பகல் 11.15 மணிக்கு, குரு ஹோரையில், ஸ்ரீவிபூதி பாபாவால் சாயிமாதா பிருந்தாதேவிக்கு சந்யாச தீட்சை அளிக்கப்பட்து. சாயிமாதா பிருந்தா தேவி, அன்னை ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தா தேவி என்ற தீட்சா நாமம் பெற்றார்.
ஆன்மிகப் பணிகள் அன்னை ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தா தேவி அதன்பின் நாடெங்கும் பல பயணங்களை மேற்கொண்டார். பல ஆன்மீக நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். பல ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1975ல் புதுக்கோட்டை ஜீவா நகர் விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகத்தைப் பொறுப்பேற்று நடத்தினார். மதமாற்றத்திற்கு எதிராகவும், இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் மாநாடு ஒன்றை நடத்தினார். பிரயாகை, காசி, கயா போன்ற புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்துவிட்டு வந்தார்.
அமெரிக்கப் பயணம் ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தா தேவி 1978ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு சமயப் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டார். சென்னையில் கே. சாவித்திரி அம்மாள் தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எஸ். அம்புஜம் அம்மாள், சரோஜினி வரதப்பன், வசுமதி ராமசாமி, ருக்மணி திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அமெரிக்காவில் பிரபல எழுத்தாளரும், தத்துவப் பேராசிரியருமான டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் இல்லத்தில் தங்கினார். பல ஆலய நிகழ்வுகளிலும், தமிழ்ச் சங்க நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
முதல் பெண் ஆதினம் அடியவர்கள் பலரும் ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தா தேவியை ஆதீனம் ஒன்றைத் தோற்றுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். முதலில் தயங்கிய அம்மையார், கிருபானந்த வாரியார் உள்ளிட்ட பலரது ஆலோசனைகளைப் பெற்று, 1983ல், புதுக்கோட்டையில் திலகவதியார் திருவருள் ஆதீன மடத்தைத் தோற்றுவித்தார். ஜூன் 30, 1983 வியாழக்கிழமை நடைபெற்ற அந்நிகழ்வில் பன்னிரு திருமுறை வேள்வியுடன் திருமடங்களின் குருமகா சந்நிதானங்கள் தொண்டைமண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், பேரூர் ஆதீனம் கயிலை மாமுனிவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிவரை ஆதீனம் சுந்தரம் சுவாமிகள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீனகர்த்தராக அருளாட்சியை ஏற்றுக் கொண்டார்.
மாநாடுகளும் பயணங்களும் கோவையில் உலக இந்து சமய மகளிர் மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தினார். உலக மாநாடுகள் பலவற்றிலும் பங்கேற்றுச் சைவத்தின் பெருமையையும் தமிழின் பெருமையையும் பலரறியச் செய்தார். 1977ல், மதுரையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் கூட்டிய உலக சமய தத்துவ கலாச்சார மாநாட்டில் கலந்துகொண்டு சைவ சித்தாந்தம், வேதாந்தம் ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினார். 1976ல், சென்னை தமிழிசை மன்றப் பண் ஆராய்ச்சி 26வது மாநாட்டைத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார். 1985ல், அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்ற உலக சமய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 1985-ல், மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இரண்டாவது உலக இந்து மகளிர் மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தினார். 1986ல் அப்போதைய மேற்கு ஜெர்மனியில் இருண்த பேடுநாகிம் (Bad Nauheim) நகரில் நடைபெற்ற உலக அமைதிக்கான மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
புதுக்கோட்டையில் உலக இந்து மகளிர் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பதை சாயிமாதா ஸ்ரீ சிவபிருந்தா தேவி தனது லட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்கான அடிக்கல்லும் நிறுவப்பட்டது. ஆனால், அவர் காலத்தில் அது நிறைவேறவில்லை.
நூல்கள் அன்னை ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தா தேவி எழுதிய முதல் நூலான, 'மனிதன் எங்கேயோ போகிறான்' 1975-ல் ஆத்ம ஜோதி நிலையத்தாரால் கொழும்பில் வெளியிடப்பட்டது. இவர் எழுதிய பகவதி அம்மன் அஷ்டகம், கன்யாகுமரி ஆலயக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. 'க்ஷேத்ராடனம்' என்ற யாத்திரை நுால் இளையாற்றங்குடியில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வெளியிடப்பட்டது.
பிற நூல்கள்: கவிதை: குருவருளும், திருவருளும்; கோகர்ண பஞ்சகம்; ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டகம். கதைத் தொகுப்பு: விரும்பிய பரிசு பாட நூல்கள்: 1 வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை (1955-1960) நாடகம்: இது எது? ஆன்மீக, சமய, தத்துவ நூல்கள்: மனிதன் எங்கேயோ போகிறான்; இந்துமதம்; மனிதனும் தெய்வமாகலாம் பயணக்கட்டுரை நூல்: க்ஷேத்ராடனம் மொழி பெயர்ப்பு நுால்: Man at the Cross Roads
விருதுகள் சைவத்தமிழ்மணி, தவநெறிச் செல்வியார், அருள் வள்ளல், சித்தாந்த செல்வமணி, செம்மொழிச் செல்வி, செந்தமிழ் அரசி, செல்வத்தமிழ்மணி, கருணைக்கடல், மங்கையர்க்கரசி, திருப்பணிச் செந்திரு, அருளாசி, மாதர்குலமாமணி
தனது காலத்திற்குப் பின் ஒரு பெண் மட்டுமே இந்த ஆதீனத்திற்குத் தலைமை தாங்க வேண்டும் என்று அன்னை ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தா தேவி விரும்பினார். அதற்காக கடலூர், பழனி, பொன்னமராவதி போன்ற இடங்களில் இருந்து சில பெண்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்றுவித்தார். ஆனால், ஏனோ அது நிறைவேறவில்லை.
மறைவு சமயம், ஆன்மீகம், சமூகம் என்று தனது திலகவதியார் திருவருள் ஆதீனம் மூலம் பல நற்பணிகளைச் செய்துவந்த அன்னை ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தா தேவி, நவம்பர் 27, 1998ல் காலமானார்.
மறைவுக்குப் பின் அன்னை ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தா தேவியின் மறைவுக்குப் பின் அவரது வளர்ப்பு மகனான தயானந்த சந்திரசேகர சுவாமிகள் ஆதீனத்தைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். பல்வேறு ஆன்மீக, சமூக நற்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் நினைவாக, ஆன்மீகம் மற்றும் இலக்கியத்தில் சிறப்பாகச் சேவைபுரிபவர்களுக்கு சாயிமாதா சிவபிருந்தா தேவி பொற்கிழி விருது 2000 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
முகவரி திலகவதியார் திருவருள் ஆதீனம் 1120, தஞ்சாவூர் சாலை, மச்சுவாடி, புதுக்கோட்டை- 622001.
ஆன்மீக, இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர், சமூக சேவகர், அரசியல் தொண்டர், இசை ஆசிரியர், கல்வியாளர் எனப் பன்முகங்களுடன் திகழ்ந்த அன்னை ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தா தேவி, தமிழகத்தின் முதல் பெண் ஆதீனகர்த்தர் என்ற சிறப்புக்கு உரியவர். |