Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | அஞ்சலி | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
தொண்டரடிப்பொடியாழ்வார்
- பா.சு. ரமணன்|டிசம்பர் 2023|
Share:
"புலியின் கண்ணில் பட்ட இரை ஒருபோதும் தப்பாது" என்று கூறப்படுவது போல, ஆண்டவனின் அருள்நோக்கம் பெற்ற அடியவர்கள் என்றும் அவனால் காக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் வாழ்க்கை. இவரது இயற்பெயர் விப்ரநாராயணன். பன்னிரு ஆழ்வார்களில் இவர் பத்தாவது ஆழ்வார்.

தோற்றம்
விப்ரநாராயணர், சோழநாட்டில் திருமண்டங்குடியில் எட்டாம் நூற்றாண்டில் மார்கழி மாதத்துக் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். திருமணத்தில் விருப்பமற்று, திருமால்மீது அன்பு பூண்ட விப்ரநாராயணர், தலங்கள்தோறும் சென்று இறைவனை வணங்கி வந்தார். ஒரு சமயம் திருவரங்கம் சென்றவர், அரங்கநாதரின் அழகால் ஈர்க்கப்பட்டு அங்கேயே தங்கி விட்டார். அங்கு ஓர் அழகான நந்தவனத்தை அமைத்து இறைவனுக்குத் தொண்டு புரிந்துவந்தார். குறிப்பாக துளசிமாலை தொடுத்து அரங்கனுக்குச் சமர்ப்பிப்பதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.

கணிகையின் அடிமை
தேவதேவி என்பவள் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவள். அவள் ஒரு சமயம் அரசவையில் நாட்டியமாடிப் பரிசு பெற்றாள். அவள் விப்ரநாராயணரின் அழகால் கவரப்பட்டாள். அவரை எப்படியாவது தன்வசப்படுத்த எண்ணினாள். ஒருநாள் நந்தவனத்திற்குத் தொண்டு செய்வது போலச் சென்றாள். தொடர்ந்து இவ்வாறு வந்து விப்ரநாராயணரின் மனதைக் கவர முயன்றாள்.

ஒருநாள் கடும்மழை பெய்தது. மழையில் தேவதேவி நந்தவனத்திற்கு வந்து தொண்டு செய்வதுபோல் மழையில் நனைந்துகொண்டிருந்தாள். அவள் மழையில் நனைவதைப் பொறுக்காத விப்ரநாராயணர், அவளைத் தன் குடிலுக்குள் அழைத்தார். அவள் அழகில் வீழ்ந்தார். நாளடைவில், அவள் இல்லை என்றால் தான் இல்லை என்னும் அளவிற்கு அடிமையானார். அரங்கனையும், அவனுக்குச் செய்துவந்த திருத்தொண்டையும் மறந்து தேவதேவியின் அன்பனானார்.

தன் பொருளனைத்தையும் தேவதேவியிடம் இழந்தார். நாளடைவில் கைப்பொருள் ஏதும் இல்லாத நிலையில், அவள் விப்ரநாராயணரைக் கைவிட்டாள். அவரை முற்றிலும் ஒதுக்கினாள். ஆனால், விப்ரநாராயணர் தேவதேவியை மறக்க இயலாமல் துன்புற்றார். அவள் நினைவாகவே இருந்தார்.

இறைவனின் லீலை
விப்ரநாராயணரின் நிலைகண்டு இரங்கிய திருமகள், திருமாலிடம் முன்போல் விப்ரநாராயணரை பக்தனாக்கி அருள்புரிய வேண்டினாள். அதற்கு உடன்பட்ட திருமால், ஒரு சிறுவனாக மாறி, தன் சந்நிதியில் இருந்த பொன்வட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு, தேவதேவியின் வீட்டிற்குச் சென்றார். "நான் அழகிய மணவாளதாசன். விப்ரநாராயணர் தங்களிடம் இதை அளிக்கச் சொன்னார்" என்று கூறி, அந்தப் பொன்வட்டிலை அளித்தார். தேவதேவியும் மனம்மிக மகிழ்ந்து மறுபடி விப்ரநாராயணரைத் தன் இல்லத்திற்கு வர அனுமதித்தாள்.

மறுநாள் காலை, கோயிலில் அரங்கன் சந்நிதியில் பொன்வட்டிலைக் காணாமல், பட்டர் குழாம் அரசனிடம் முறையிட்டது. அரசன் ஆட்களை ஏவி நகர் முழுவதும் தேடச் செய்தான். இறுதியில் தேவதேவியின் வீட்டில் வட்டில் இருப்பதை அறிந்துகொண்டான். தேவதேவியிடம் விசாரிக்க, அவள் விப்ரநாராயணர் அளித்ததாக் கூறினாள். அதனால் அவரே அதனைத் திருடியவர் என்று நினைத்த மன்னன் அவரைச் சிறையில் அடைத்தான்.

அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ரங்கநாதர், அனைத்தும் தன் திருவிளையாடலே என்பதை உணர்த்தி, விப்ரநாராயணரை உடனே விடுதலை செய்யக் கட்டளையிட்டார். அரசனும் அவ்வாறே செய்தான்.

விப்ரநாராயணர் அரங்கனின் அருளை நினைத்து மனமுருகினார். இனித் தன் வாழ்நாள் முழுவதும் அரங்கனுக்கே ஆட்பட்டிருக்க உறுதி பூண்டார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆனார்
ஆனாலும், இறைத்தொண்டை மறந்து கணிகையின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததற்காக மிகவும் மனம் வருந்தினார். வைணவ குலப் பெரியோர்களை அணுகி, தமது இழிசெயலுக்குப் பிராயச்சித்தம் செய்து வைக்குமாறு வேண்டினார். பெரியோர்களும் பல நூற்பொருள்களை ஆராய்ந்து, "பாவங்கள் யாவும் நீங்குவதற்கேற்ற பிராயச்சித்தம், பாகவதர்களுடைய திருவடித் தீர்த்தத்தை உட்கொள்வதே" என்று கூறினர்.

விப்ரநாராயணரும் அதனை ஏற்று, பாகவதர்களின் பாத தீர்த்தத்தைப் பருகித் தூய்மையானார்.

வைணவர்களுடைய திருவடி தூளியாய், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து அடிமை பூண்டொழுகியதால் 'தொண்டரடிப்பொடி' என்ற திருநாமம் பெற்றார்.



பிரபந்தங்கள்
இறைவனையே அனுதினமும் துதித்துவந்த தொண்டரடிப்பொடியாழ்வார், இரண்டு பிரபந்தங்களை அருளிச்செய்துள்ளார். அவையாவன:
திருமாலை - 45 பாசுரங்கள்
திருப்பள்ளியெழுச்சி - 10 பாசுரங்கள்

திருமாலை
திருமாலையில் இறைவனின் பெருமையையும், சிறியேனான தனது நிலையினையும், இறைவனின் ஆட்கொள்ளலையும் பல பாடல்களில் சிறப்பாகப் பாடித் துதித்துள்ளார்.
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே!
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.


திருப்பள்ளியெழுச்சி
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள்போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!


பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டும், அவரது மகள் ஆண்டாள் அருளிய திருப்பாவையும் தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும் பெரும்பாலான வைணவத் திருக்கோயில்களில் விழாக்காலங்களில் தவறாது ஓதப்படுகின்றன.

மங்களாசாஸனம்
தொண்டரடிப்பொடியாழ்வார், இப்புவியில் உள்ள திருமால் மூர்த்தங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், திரு அயோத்தி ஸ்ரீ ராமரையும் மட்டுமே பாடிய ஆழ்வார் என்ற பெருமை பெற்றவர். (இவர், விண்ணுலகில் உள்ள திருப்பாற்கடல் நாதனையும் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்)

மறைவு
தொண்டரடிப்பொடியாழ்வார், திருவரங்கத்திலேயே இறைவனுக்கான திருத்தொண்டுகளைச் செய்து வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவெய்தினார்.

மன்னுமதிள் திருமண்டங்குடி வந்தோன் வாழியே
மார்கழியில் நல்கேட்டை வந்துதித்தான் வாழியே
தென்னரங்கரடியிணையே பற்றி நின்றான் வாழியே
திருமாலை ஐயொன்ப தருளினான் வாழியே
துன்னுபுகழ்த் திருப்பள்ளியெழுச்சி சொன்னான் வாழியே
தொல்புகழ் சேரன்பர்க்கே தொண்டுகொண்டான் வாழியே
தொன்னகரில் பொன்பாவைக் களித்தபிரான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணையடிகள் வாழியே!
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline