பி.வி. நரசிம்ம சுவாமி, சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் பக்தர்; அவர் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுத் தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், ஏனோ அவருக்கு அதை எழுதும் சூழல் அமையவில்லை. அதனால் தான் திரட்டிய செய்திகளை குழுமணி நாராயண சாஸ்திரிகளிடம் அளித்து விட்டார். பின்னர் நாராயண சாஸ்திரிகள், சேஷாத்ரி சுவாமிகளின் சரிதத்தை முழுமையாக எழுதி வெளியிட்டார்.
நரசிம்ம சுவாமிகளுக்கு அது பெரும் மனக்குறையாகவே இருந்தது. அதனால் பகவான் ரமண மகரிஷிகளின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். பகவானிடமிருந்தே பல விஷயங்களைத் திரட்டினார். பல இடங்களுக்குச் சென்று சாதுக்களை தரிசித்துத் தகவல் திரட்டினார். அவற்றைத் தொகுத்து 'Self-Realization -The Life and Teachings of Bhagavan Sri Ramana Maharshi' என்ற தலைப்பில் 1931ல் நூலாக வெளியிட்டார். பகவான் ரமணர் வாழ்ந்த காலத்திலேயே வெளியான பெருமையும், பகவான் வாய்மொழியாகச் சொன்ன பல தகவல்களை வைத்து எழுதப்பட்ட சிறப்பும் அந்த நூலுக்கு உண்டு.
ரமணரின் வரலாற்றை முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதி பகவானின் புகழை மேற்குலகம் அறியக் காரணமானார் பி.வி. நரசிம்ம சுவாமி. பின் அந்த நூல் தமிழிலும் வெளிவந்தது. நரசிம்ம சுவாமியின் ஆங்கில நூலைப் படித்துவிட்டுத்தான் ஹம்ப்ரீஸும், பால் பிரன்டனும் இன்னும் பல ஐரோப்பியர்களும் பகவான் ரமணரை நாடி வந்தனர். பால் பிரண்டன் மட்டுமல்ல; சுவாமி சுத்தானந்த பாரதியார், சுவாமி மாதவ தீர்த்தர், ப்ரபவானந்தார், கிருஷ்ண பிக்ஷு, சுவாமி சிவானந்தர், சுவாமி ராமதஸர் உள்ளிட்ட சாதுக்களும் பகவானைத் தேடி ரமணாச்ரமம் வருவதற்கும் நரசிம்ம சுவாமிகளின் நூலே காரணமாக அமைந்தது. இந்தியாவுக்கு அப்பால் உலகம் முழுவதும் பகவான் ரமணரின் புகழ் பரவக் காரணமாக அமைந்தார் பி.வி.நரசிம்ம சுவாமி.
பகவான் ரமணர் பற்றி இன்னும் பல புத்தகங்களை எழுதினார் நரசிம்ம சுவாமி. பகவான் ரமண மஹரிஷிகளின் தீவிர பக்தராக இருந்த நரசிம்ம சுவாமி, திடீரென்று ஒருநாள் ஆசிரமத்திலிருந்து வெளியேறினார். அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் சில ஆண்டுகளுக்கு யாருக்குமே தெரியவில்லை.
ஆமாம், யார் இந்த நரசிம்ம சுவாமி, அவர் ஏன் திடீரென்று ரமணாச்ரமத்தை விட்டுச் சென்றார், அதன் பின் என்ன ஆனார் என்பதை அறிய உங்களுக்கும் ஆவலாக இருக்கிறது தானே, வாருங்கள், அவரைப் பின்தொடர்வோம்.
★★★★★
ஈரோடு அருகே உள்ள ஊர் பவானி. காவேரி, பவானி மற்றும் குப்தகாமினி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம் அது. 'சங்ககிரி' என்றும், 'திரிவேணி சங்கமம்' என்றும் இத்தலம் அழைக்கப்பட்டது. இவ்வூரில் வாழ்ந்து வந்தவர் வெங்கடகிரி ஐயர். உயர்கல்வி கற்றிருந்த அவர் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். அவர் மனைவி அங்கச்சி அம்மாள். அவர்களுக்குத் திருமணமாகியும் வெகுநாட்களாகப் பிள்ளைப் பேறு இல்லை.
தோற்றம் ஒருநாள் வீட்டுக்கு வந்த வடநாட்டு சாது ஒருவர், சோளிங்கர் நரசிம்மப் பெருமானை வழிபட்டால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்று கூறி ஆசிர்வதித்தார். தம்பதியர் அவ்வாறே விரதம் இருந்து சோளிங்கருக்குச் சென்று யோக நரசிம்மப் பெருமானை வழிபட்டனர். வேண்டுதல் பலித்தது. ஆகஸ்ட் 21, 1874 அன்று அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குல வழக்கப்படி ராமநாதன் என்ற பெயரைச் சூட்டினார் தந்தை. நரசிம்மப் பெருமானின் அருளால் பிறந்ததால் அதை நினைவுகூரும் வகையில் 'நரசிம்மன்' என்ற பெயரைச் சூட்டினார் அன்னை. அந்தப் பெயரே நிலைத்தது.
கல்வி குழந்தை நரசிம்மன் வளர்ந்தான். சிறு வயதிலேயே துறுதுறுவென்று இருந்த அவன், தந்தையிடமிருந்து வேத, சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டான். மற்ற பாடங்கள் வீட்டிற்கு ஆசிரியர் வரவழைக்கப்பட்டு போதிக்கப்பட்டன. நேர்மை, உண்மை, சத்தியம், மனவுறுதி போன்ற குணங்களைக் கொண்டவனாக அவன் வளர்ந்தான்.
கண்டத்திலிருந்து தப்புதல் நரசிம்மனுக்குத் தம்பி ஒருவன் பிறந்தான். அவனுக்கு லக்ஷ்மணன் என்று பெயர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக திருடர்கள் நகைக்காகக் குழந்தை லக்ஷ்மணனைக் கடத்திக் கொண்டுபோய்க் கொன்றுவிட்டனர். குடும்பத்தைப் பெரும் சோகம் கவ்வியது. தாய் அங்கச்சி அம்மாள் நரசிம்மனை வெளியே அனுப்பவே பயந்தாள். ஒருமுறை பவானி நதிக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நரசிம்மன், கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். அங்கிருந்த ஒருவர் குழந்தையைக் காப்பாற்றினார்.
தொடரும் இம்மாதிரி நிகழ்வுகளைக் கண்டு வெங்கடகிரி ஐயர் வருந்தினார். ஜோதிடரைச் சந்தித்து ஆலோசித்தார். ஜோதிடரோ குழந்தைக்கு ஒரு கண்டம் இருந்து விலகிவிட்டது என்றும், அவன் ஜாதகம் சந்யாச ஜாதகம், இனி அவனுக்குத் தீர்க்காயுள் என்றும் கூறினார். மேலும், அவ்வூரில் இருக்க வேண்டாம் என்றும் ஆலோசனை சொன்னார்.
குழந்தைக்கு சந்யாச ஜாதகம் என்பதைக் கேட்டு பெற்றோர் வருந்தினர். சங்கமேஸ்வரரிடமும் பவானி தேவியிடமும் தங்கள் மகன் சந்யாசியாகப் போகக் கூடாது என்று வேண்டிக்கொண்ட அவர்கள், அதற்குப் பதிலாக தாங்கள் அன்று முதல் இல்லற தர்மத்தைத் துறந்து சந்யாச தர்மத்தை மேற்கொள்வதாகக் கோரிக்கை வைத்தனர்.
வெங்கடகிரி ஐயர், ஜோதிடரின் ஆலோசனைப்படி வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் சேலத்திற்குச் சென்று வசித்தார்.
★★★★★
பணிகள் நரசிம்மன் கல்வி கற்று இளைஞரானார். தந்தை வழியில் அவரும் சட்டம் படித்து சென்னையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றார். சென்னையின் புகழ் பெற்ற மனிதர்களுள் ஒருவரானார். பார் கவுன்சிலின் தலைவர் ஆனார். சேலம் விஜயராகவாச்சாரியார், சி. ராஜகோபாலச்சாரியார், நீதிபதி ஸ்ரீ சுந்தரம் செட்டி, விடுதலை வீரர் முத்துகிருஷ்ண ஐயர் உள்ளிட்ட பலர் நரசிம்மனுக்கு நண்பர்களாக இருந்தனர்.
அரசியல் வாழ்க்கை சில ஆண்டு சென்னை வாசத்திற்குப் பின், சேலத்திற்குச் சென்றார். 1902ம் ஆண்டில் நடந்த சேலம் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். சேலம் கூட்டுறவுத் சங்கத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி ஏற்றார். எளிமை, நேர்மை, சத்திய வழியில் நடந்த நரசிம்மனை மக்கள் விரும்பினர். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகப் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்ட நரசிம்மன், 1904 ஆம் ஆண்டு சேலம் நகரசபைத் தலைவரானார். பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து அப்பதவி வகித்தார். பின்னர் சேலம் கூட்டுறவு நிதி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
நரசிம்மன் காங்கிரஸ் இயக்க ஆதரவாளராகச் செயல்பட்டார். 1914ஆம் ஆண்டு சென்னை மாகாண கவுன்சிலில் சேலம்-நீலகிரி -கோயம்புத்தூர் நகரங்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டார். மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்த சபையின் அங்கத்தினராகவும் பணிபுரிந்தார். ஏழைகள் உயர்வுக்காகப் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்தார்.
நரசிம்மனுக்கு சீதாலக்ஷ்மியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு வெங்கடராமன், ராஜலஷ்மி, சாரதா, ஜெயராமன், சாவித்ரி என ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஜெயராமன், சாவித்ரியைத் தவிர மற்றவர்களுக்குத் தகுந்த வயதில் திருமணம் செய்து வைத்தார்.
ஆன்மிக வாழ்க்கை நரசிம்மன் சிறுவயது முதலே ஆன்மீக நாட்டம் கொண்டிருந்தார். தினசரி பூஜை, ஜப தபங்கள் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது ஆக ஆக அவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்தது. ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். சாதுக்களைத் தேடிச் சென்று தரிசித்தார். அடிக்கடி ஆந்திரா சென்று சுரைக்காய்ச் சித்தரைத் தரிசித்தார். அதுபோலத் தன் குலகுருவான சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளையும் அடிக்கடி தரிசிப்பது வழக்கமாக இருந்தது.
நரசிம்மன் சேலத்தில் தன் வீடருகில் இருந்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் கோயிலைப் புதுப்பித்தார். மாலையில் அங்கு சென்று பாராயணம் செய்வதையும், பஜனை பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தொடர் சோகங்கள் 1917-ல், நரசிம்மனின் தாயார் அங்கச்சி அம்மாள் ப்ளேக் நோய்க்குப் பலியானார். 1918-ல் தந்தை வெங்கடகிரி ஐயர் காலராவுக்குப் பலியானார். 1921-ல், நரசிம்மனின் குழந்தைகளான ஜெயராமன், சாவித்ரி இருவரும் வீட்டின் பின்னால் உள்ள கிணற்றில் கால் தவறி விழுந்து பலியாகினர். தொடர் சோகங்களால் நரசிம்மன் மிகவும் பாதிக்கப்பட்டார். மெல்ல அதிலிருந்து மீள முயற்சித்த நிலையில் நரசிம்மனின் மனைவி சீதாலக்ஷ்மி 1922-ல் காலமானார். தனிமரமானார் நரசிம்மன்.
தனக்கு நிகழ்ந்தவைகளைக் குறித்து ஏன் எதற்கு என்று சிந்தித்தார். தொடர் சிந்தனைகளின் விளைவால் ஞான வைராக்ய நிலையைப் பெற்றார். வழக்குரைஞர் தொழிலைத் துறந்தார். அரசியல் பணிகளிலிருந்து விலகினார். ஒரு துறவியாக, ஆன்மீக வாழ்க்கைக்கு ஒரு குருநாதரைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறினார்.
சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த சுவாமிகளைச் சந்தித்தார். அவர், நரசிம்மனை, திருவண்ணாமலையில் வாழும் மகாஞானி ஸ்ரீ ரமண மகரிஷியைத் தரிசிக்கும் படி ஆலோசனை கூறினார். அதன்படி நரசிம்மன் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்.
ஒருநாள் விடியற்காலை, ரமணாச்ரமம் சென்று பகவானை தரிசித்தார் நரசிம்மன். ரமணரின் எளிமையும் அவரது உபதேசங்களும் நரசிம்மனை மிகவும் கவர்ந்தன. அதுமுதல் அவர் திருவண்ணாமலையிலேயே தங்கி ரமணரை அனுதினமும் வழிபட்டு வந்தார். பகவான் முன்னிலையில் ஆன்மீக சாதனைகளை மேற்கொண்டார். ரமணரது வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி இறையருளால் பணிக்கப்பட்டார். ரமணர் வாழ்ந்த காலத்திலேயே வெளியான பெருமையும், பகவான் வாய்மொழியாகச் சொன்ன தகவல்களை வைத்து எழுதப்பட்ட பெருமையும் அந்த நூலுக்குக் கிடைத்தன.
ரமணாச்ரமத்தில் தங்கி, தொடர்ந்து ஆன்மீக சாதனைகள் செய்து வந்தாலும், பஜனை சம்பிரதாயப்படி ஆடிப்பாடி இறைவனைத் துதித்து வழிபடுவதைப் பெரிதும் விரும்பினார் நரசிம்ம சுவாமிகள். தான் தங்கியிருந்த இடத்தில் தினந்தோறும் அந்த பக்தி பாவனை பூஜையில் ஈடுபட்டு வந்தார். திடீரென ஒருநாள் அவர் ரமணாச்ரமத்தை விட்டு வெளியேறிச் சென்றார். அதன்பிறகு அவர் ஆச்ரமம் திரும்பவே இல்லை.
ரமணாச்ரமத்திலிருந்து நரசிம்ம சுவாமிகள் ஏன் வெளியேறினார்? எங்கே சென்றார்? என்ன செய்தார்?
தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்) |