தெய்வீக இல்லறம் தக்ஷிணேஸ்வரத்தில் அன்னை சாரதா தேவியின் தவ வாழ்க்கை தொடர்ந்தது. தோத்தாபுரியிடம் சந்யாசம் எடுத்துக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணர். உலகியலைப் பொறுத்தவரை அவர் ஒரு துறவி. ஆனால் மனைவி சாரதையோ உடன் வசித்து வந்தார். அவர்கள் நடத்தி வந்த இல்லறமோ தெய்வீக இல்லறமாக இருந்தது. அது சாதாரண மானுடர்களின் இல்லற வாழ்க்கையைப் போன்றதல்ல. சாரதா தேவியை மனைவியாக மட்டுமே கருதாமல், தான் வணங்கும் ஜகன்மாதாவாகவே ராமகிருஷ்ணர் கருதினார். சாரதா தேவியும் அதற்கான ஏற்பு நிலையில், உயரிய ஆன்மீக உணர்வில் இருந்தார். இருவருக்கும் சாதாரண மனிதர்களுக்கான தேவைகள் என எதுவுமே இருக்கவில்லை. அதனால் அவர்களால் அந்த உயர்ந்த தெய்வீக இல்லற வாழ்வை நடத்த முடிந்தது.
கணவராக மட்டுமல்லாமல், குருவாகவும் இருந்து வாழ்வின் உண்மைகளையும், மெய்ப்பொருள் தத்துவங்களையும் தொடர்ந்து சாரதா தேவிக்கு உபதேசித்தார் ராமகிருஷ்ணர். அதன் விளைவாகச் சாரதா தேவியும் ராமகிருஷ்ணரைப் போல அடிக்கடி சமாதிநிலை எய்தும் அளவிற்கு உயர்ந்தார்.
மனைவி என்ற முறையில் சாரதா தேவி குருதேவர் ராமகிருஷ்ணருக்குப் பணிவிடை செய்வது வழக்கம். அவ்வாறே ஒருநாள் குருதேவருக்குக் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அப்போது சாரதை குருதேவரிடம், "சுவாமி, தாங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு குருதேவர், "என்ன நினைப்பது? எந்த அன்னை இங்கு கோயிலில் எழுந்தருளியுள்ளாளோ, அவளே 'நக்பத்'திலும் எனக்குத் தாயாக இருக்கிறாள். இதோ என் முன்னால் அமர்ந்து கால்களையும் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறாள்" என்று கூறி வணங்கினார். இவ்வாறு மனைவியைத் தெய்வமாகப் பார்க்கும் அளவிற்கு அவர்கள் இல்லற வாழ்வு தெய்வீக இல்லற வாழ்வாகப் பக்குவப்பட்டிருந்தது.
சக்தி வழிபாடு பெண்ணை பாலாம்பிகையாக, குமரியாக, தேவியாக, காளியாக எனப் பல்வேறு ரூபங்களில் போற்றித் தொழுவது அம்பாள் வழிபாட்டில் ஒருவகை. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாரதாதேவியை இவ்வாறு வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். சாரதையை மலர்களால் அலங்கரித்து, பீடத்தில் எழுந்தருளச் செய்து, காளி அன்னையாகவே பாவித்து, மலர் சாற்றி, தூப தீபம் காட்டி அவ்வப்போது வழிபடுவார். இந்த வழிபாட்டின் மூலம் தன்னிடம் இருந்த மகத்தான சக்தியை சாரதையிடம் குடிகொள்ளும்படிச் செய்தார் அவர். தொடர்ந்து இவ்வாறான வழிபாடுகளின் மூலம் மிக உயந்த ஆன்மீக நிலைகளை எய்தினார் அன்னை ஸ்ரீ சாரதாதேவி.
அன்னையும் அண்ணலும் ஸ்ரீராமகிருஷ்ணரை நாடிச் சீடர்கள் பலர் வரத்தொடங்கினர். வந்தவர்களுக்கு அன்னையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார் ராமகிருஷ்ணர். ஸ்ரீ சாரதா தேவி தனக்கு எந்த விதத்திலும் குறைவானவளல்ல என்பதை அன்பர்கள் அனைவரும் உணரும் பொருட்டு, திரிகுணாதீதரை அன்னையிடமே மந்திர தீட்சை பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டார். இதன் மூலம் தான் வேறு, அன்னை வேறு அல்ல என்பதைச் சீடர்களுக்கு உணர்த்தினார். அதற்கேற்றவாறு ஆண் சீடர்கள் மட்டுமல்லாது பெண் சீடர்களும் போற்றிப் புகழுமாறு தூய தவ வாழ்வு வாழ்ந்தார் சாரதாதேவி.
சாரதையின் தீவிர யோக சாதனை அவரை முற்றிலும் ஆன்மீகத்தில் அமிழ்த்திவிடும் என்பதை உணர்ந்தார் ராமகிருஷ்ணர், விவேகானந்தருக்கு வேண்டிக்கொண்டது போலவே, காளி அன்னையிடம் சாரதாதேவியையும் மாயையில் கட்டிப் போடுமாறு வேண்டிக் கொண்டார். அதற்குக் காரணமும் இருந்தது. தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணர், தன் அந்திமகாலம் நெருங்கி வருவதை நன்கு உணர்ந்திருந்தார். தனது மறைவுக்குப் பின் சாரதாதேவி உயிர் தரிக்க மாட்டாள் என்பது அவருக்குப் புரிந்திருந்தது. ஆகவே, உலகியலிலான பற்றுக்கோடு ஒன்று அமைந்து அவர் வாழவேண்டும் என்றும், தனக்குப் பின்னும் சீடர்கள் செய்யும் சேவைகள் அன்னையின் வழிகாட்டலில் தொடர வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
ராமகிருஷ்ணர் சிரித்தார் ராமகிருஷ்ணரின் அந்திமகாலம் நெருங்கிவிட்டதை அறிந்த அன்னை மிகுந்த மன வருத்தமுற்றார். அவரை எப்படியாவது பிழைக்க வைக்கும்படி காளியிடம் வேண்டிக் கொண்டார். அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, உண்ணாமல், உறங்காமல் மூன்று நாள் தீவிர நிஷ்டையில் ஆழ்ந்தார். தியானத்தின் நிறைவில் அவர் மனதில், "யார் கணவன், யார் மனைவி, ஆண் யார், பெண் யார், சர்வம் பிரம்ம மயம்" என்பதான தெளிவு தோன்றியது. பானை உடைவது போன்ற உருக்காட்சியும் ஏற்பட்டது. மனத்தெளிவு பெற்ற சாரதை தன் இருப்பிடத்தை அடைந்தார்.
கட்டிலில் படுத்திருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர், "என்ன, எல்லாம் மாயை என்பதைத் தெரிந்து கொண்டாயா?" என்று சொல்லிச் சிரித்தார். முக்காலத்தையும் அறிந்த அவருக்கு, சாரதா தேவியின் அனுபவமா தெரியாது? குருதேவரின் பெருமையை முழுமையாக உணர்ந்துகொண்ட அன்னை, அவரை வணங்கினார்.
காளியும் அவரே, கணவரும் அவரே! மற்றுமொரு சமயம் அன்னை தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது அவருக்குக் காளி மாதாவின் காட்சி கிடைத்தது. ஆனால், மாதாவின் கழுத்து ஒருபுறமாக வளைந்திருந்தது. அதைக் கண்டு திகைத்த சாரதை அதற்கான காரணத்தை மாதாவிடம் கேட்டார். அதற்குக் காளிதேவி, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உருவத்தையும், அவருக்குத் தொண்டையில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோயையும் காட்டி, 'இதனால்தான் எனக்கும் கழுத்தில் இப்படி இருக்கிறது' என்று கூறி மறைந்தார். ஸ்ரீ காளி அன்னை வேறு, தன் கணவராக இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேறு அல்ல என்ற உண்மையை இது சாரதா தேவிக்கு உணர்த்தியது.
நாளடைவில் படுத்த படுக்கையானார் ராமகிருஷ்ணர். பிறர் உதவியில்லாமல் எந்தச் செயலையும் செய்யமுடியாத நிலை வந்தது. ஒருநாள் சாராதா தேவி தனது அறையில் ஏதோ வேலையாக இருந்தார். யதேச்சையாக அவர் குருதேவர் அறைப்பக்கம் பார்த்த பொழுது, குருதேவர் வேக வேகமாக எங்கோ போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தார். சாரதா தேவிக்கு இது மிக அதிசயமாக இருந்தது.. எழுந்திருக்கக்கூட முடியாதவர், இத்தனை வேகமாக எங்கோ செல்கிறாரே, எப்படிச் சாத்தியம், சென்றது குருதேவர்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே குருதேவரின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தார். குருதேவர் படுக்கையில் இல்லை. திகைத்துப் போனார் சாரதா தேவி.
சிறிதுநேரம் கழித்து மீண்டும் குருதேவரின் அறைக்குச் சென்று பார்த்தார் அன்னை. அங்கே குருதேவர் வழக்கம்போலக் களைப்புடன் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அன்னை, வியப்புடன், "இதற்கு முன் எங்கே வெளியே போய்விட்டு வந்தீர்கள்!" என்று கேட்டார். அதற்கு குருதேவர் நேரடியாகப் பதில் கூறாமல், "எங்கேயும் போகவில்லை. எல்லாம் கொதிப்படைந்த மூளையின் கற்பனையன்றி வேறென்ன?" என்றார்.
சாரதா தேவியும் தான் கண்ட காட்சி பற்றி விடாமல் வற்புறுத்திக் கேட்கவே, ராமகிருஷ்ணர், நிரஞ்சனும் இன்னும் சில சீடர்களும் பேரீச்சம்பழம் பறிக்கச் சென்றிருந்ததாகவும், அப்போது மரத்தில் மறைந்திருந்த பாம்பு ஒன்று நிரஞ்சனைக் கொத்த வந்ததாகவும், அவனைக் காப்பாற்றவே விரைந்து சென்றதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட அன்னை வியப்பில் ஆழ்ந்தார்.
படுத்த படுக்கையாக இருந்தாலும், தன்னைச் சரணடைந்த சீடரைக் காப்பது குருவின் கடமை என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது. மட்டுமல்ல; குருதேவர் ராமகிருஷ்ணர் சாதாரண உடல் தாங்கி இருந்தாலும், அந்த நிலையைவிட மிக மிக மேம்பட்டவர் என்ற உண்மையையும் அனைவருக்கும் உணர்த்தியது.
மஹாசமாதி 1886 ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாள், குருதேவர் ராமகிருஷ்ணர் மஹாசமாதி அடைந்தார். மறுநாள் காசிப்பூர் மயானத்தில் அவர் உடல் எரியூட்டப்பட்டது. அவரது சீடர்கள் குருதேவரது மறைவால் மனம் சோர்ந்து போயினர். சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலில் மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டனர். அன்னை சாரதாதேவியும் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானார். இந்துமத வழக்கப்படி தனது மங்கல அணிகளைத் துறந்த அவர், தான் அணிந்திருந்த கை வளையல்களைக் கழற்றினார். உடன் புடவையின் சிவப்புக் கரையையும் கிழிக்க முற்பட்டார்.
அப்போது குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் சூட்சும உருவில் அன்னை முன் தோன்றினார். "சாரதா நீ என்ன செய்கிறாய்? நான் எங்கே போய்விட்டேன் என்று நினைக்கிறாய்? ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குப் போயிருப்பது போல நான் போயிருக்கிறேன். அவ்வளவே" என்று கூறிவிட்டு மறைந்தார்.
பிறப்பு, இறப்பு எல்லாவற்றையும் கடந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்பதைப் புரிந்துகொண்ட அன்னை மனம் தேறினார். அதுமுதல், குருதேவரால் ஷோடஸி பூஜையின் போது தனக்கு அணிவிக்கப்பட்ட கை வளையல்களை அணிந்ததுடன், சிவப்புக் கரை போட்ட வெண்ணிறப் புடவை அணிய ஆரம்பித்தார்.
காட்சியும் கட்டளையும் காசி, மதுரா, பிருந்தாவனம் போன்ற இடங்களுக்கு யாத்திரை சென்றார் அன்னை. பிருந்தாவனத்தில் அவருக்கு ராமகிருஷ்ணரின் நினைவு மிகத் தீவிரமாக எழுந்தது. அவரது பிரிவை நினைத்து ஏங்கினார். கலங்கினார். கண்ணீர் விட்டு அழுதார்.
உடன் சாரதா தேவி முன் காட்சி அளித்த பரமஹம்சர், "நீ ஏன் இப்படி அழுது துடிக்கிறாய்? நான் இங்கேதானே இருக்கிறேன், எங்கே போய்விட்டேன். நான் ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குத் தானே சென்றிருக்கிறேன்." என்றார் மீண்டும்.
அதைக் கேட்ட சாரதா தேவி மனம் தேறினார். நாளடைவில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் எப்போதும் தன்னுடன் இருந்து வழிநடத்துவதை உணர்ந்தார். பல்வேறு ஆன்மீக அனுபவங்கள் வாய்க்கப் பெற்றார், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குள் தான் ஐக்கியமாகி விட்டதையும் உணர்ந்தார். சூட்சும உருவில் காட்சி தந்த ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கட்டளைப்படி சீடர் யோகானந்தருக்கு மந்திர தீக்ஷை அளித்தார்.
ப்ரஸீத மாதர் வினயேன யாசே நித்யம் பவ ஸ்னேஹவதீ ஸுதேஷு | ப்ரேமைக பிந்தும் சிரதக்த சித்தே விஷிஞ்ச சித்தம் குரு ந: ஸுசாந்தம் ||
அம்மா, உன்னிடம் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்! நீ என்றும் உன் குழந்தைகளிடம் அன்புடன் இருப்பாயாக! நெடுங்காலம் வெம்மையில் கிடக்கும் எமது உள்ளங்களில் உன் அன்புத் துளிகளைப் பெய்திடுவாயாக!
- சுவாமி அபேதானந்தர்
தவ வாழ்வு அன்னையின் தவ வாழ்வு தொடர்ந்தது. சிறிது காலம் தன் சொந்த ஊரான ஜெயராம்பாடியில் வசித்த அன்னை சாரதா தேவி, பின் கல்கத்தாவிற்கே நிரந்தரமாக சென்று தங்கினார். கோலாப்மா, யோகின்மா போன்ற பெண் சீடர்கள் அன்னை சாரதாதேவிக்கு உறுதுணையாக இருந்தனர்.
ஒருநாள் அன்னை தியானத்தின் போது ஒரு காட்சியைக் கண்டார். குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கங்கை நீரில் இறங்குகிறார். அப்படியே அவரது உடல் நதியில் கரைந்து விடுகிறது. உடனே கங்கையில் இறங்கிய சுவாமி விவேகானந்தர், அந்த கங்கை நீரைக் கைகளில் அள்ளி அள்ளி எல்லா பக்கமும் தெளிக்கிறார். இந்தக் காட்சி மூலம் குருதேவரின் கொள்கைகளை உலகம் முழுவதும் சுவாமி விவேகானந்தர் பரப்புவார் என்ற உண்மையை அன்னை புரிந்துகொண்டார். சீடர்களுக்கும் குருதேவருக்கும் ஓர் இணைப்புப் பாலமாகத் தான் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
பேலூர் மடம் 1888ல் அன்னை கயைக்குச் சென்றார். அங்கு சாதுக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் உணவுக்கூடங்கள் இருப்பதையும், அவர்கள் தங்குவதற்கு தனித்தனி மடங்கள் இருப்பதையும் கண்டார். அந்த வசதிகளை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துறவிச் சீடர்கள் இருந்த ஏழ்மை நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து மனம் வருந்தினார். சீடர்கள் உணவுக்கும், தங்கும் இடத்திற்கும் அலைந்து திரிவதைக் கண்டு, "பகவானே, உன் பெயரால் வீடு, வாசல் என அனைத்தையும் துறந்த என் குழந்தைகள் உணவிற்காக அலைவதை என்னால் தாங்க முடியவில்லை. உனக்காக யாரெல்லாம் உலகைத் துறக்கிறார்களோ அவர்கள் எல்லாம் உணவிற்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கும் துன்பப்படாமல் இருப்பார்களாக. அவர்கள் உனக்காக ஒன்றுகூடி ஓரிடத்தில் வசிக்க வேண்டும். துன்பத்தால் வாடும் மக்கள் அவர்களை நாடி உன் உபதேசம் பெற்று ஆறுதல் பெற வேண்டும். அதற்கு அருள் புரிவாயாக" என்று தினந்தோறும் பிரார்த்தித்து வந்தார்.
சிரத்தையான பிரார்த்தனை பலிக்காமல் போகுமா? பலித்தது. அதுவே ராமகிருஷ்ண மடங்களின் தலைமைச் செயலகமான பேலூர் மடம் உருவாகக் காரணமானது. கொடையாளர்களின் ஆதரவாலும் சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட சீடர்களின் அயராத முயற்சியாலும் அது உருவானது. குருதேவரின் ஆசிகளுடனும் அன்னை சாரதா தேவியின் உறுதுணையுடனும் சுவாமி விவேகானந்தர் தலைமையிலான சீடர்கள் ராமகிருஷ்ணரின் அருட்பணிகளை முன்னெடுத்தனர். 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்' உருவானது. 1899ல் அன்னையைக் கவனித்து வந்த சீடர் யோகானந்தர் மறைந்தார். அதன் பிறகு அன்னையைப் பாதுகாக்கும் பொறுப்பை சாரதானந்தர் ஏற்றுக் கொண்டார். 1902ல் சுவாமி விவேகானந்தரும் மஹாசமாதி அடைந்தார். அன்னை மிகவும் துயருற்றார். 1906ல் அன்னையின் தாய் சியாமா சுந்தரி மறைந்தார். மெல்ல மெல்ல இவற்றில் இருந்து மீண்டு வந்தார் அன்னை.
புனிதப் பயணங்கள் 1909ல் அன்னை வசிப்பதற்காக கொல்கத்தாவில் 'உத்போதன்' என்னும் தனி வீடு கட்டப்பட்டது. 1911ல் அன்னை சென்னைக்கு வந்தார். ஒரு மாத காலம் தங்கிப் பலருக்கும் தீட்சை அளித்தார். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த ராமகிருஷ்ணானந்தர் அன்னைக்கு உதவிகரமாக இருந்தார். பின் ராமேஸ்வரம் சென்று ராமநாதருக்குத் தன் கையால் அபிஷேகம் செய்து வழிபட்டார். பெங்களூர், ராஜமுந்திரி வழியாகக் கொல்கத்தா திரும்பினார். 1912ல் காசிக்குச் சென்று சுமார் மூன்று மாதம் தங்கினார்.
அக்காலகட்டத்தில் பலருக்கு மந்திர தீக்ஷை அளித்துச் சீடர்களாக ஏற்றுக் கொண்டார் அன்னை. அதில் ஆண், பெண், இளையோர், முதியோர், கற்றோர், கல்லாதோர் என எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை. அச்சீடர்களை அவர் தனது மகன் மற்றும் மகளாகவே கருதினார். அவர்களது உயர்வுக்காக அனுதினமும் பிரார்த்தித்தார். குருதேவர் மறைந்த நிலையில் அவரே அனைத்து சீடர்களுக்கும் குருதேவராகவும், தாயாகவும் இருந்து வழிநடத்தினார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அவதார லட்சியத்தை மிக நீண்ட காலம் வாழ்ந்து பூர்த்தி செய்தார் அன்னை.
அன்னை பிறந்த ஜெயராம்பாடி இல்லம்
அன்னை மஹாசமாதி 1919ன் இறுதியில் அன்னை சிலகாலம் சொந்த ஊரான ஜெயராம்பாடிக்குச் சென்று வசித்தார். அங்கு அவருக்கு அடிக்கடிக் காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. பின் அன்னை 1920ல் கல்கத்தாவிற்கு வந்து வசித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகவில்லை.
ஜூலை 20, 1920ல் அன்னை காலமானார். அவரது பூத உடல் பேலூர் மடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்குப் பின் கங்கைக் கரையில் எரியூட்டப்பட்டது. பின் மடத்தில் அவரது நினைவாக அவரது உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டு, அது கங்கைக் கரையைப் பார்த்திருக்கும் வகையில் சிறு கோயிலும் எழுப்பப்பட்டது. ஜெயராம்பாடியிலும் அவர் பிறந்த வீட்டில் அன்னைக்கு ஒரு நினைவாலயம் அமைக்கப்பட்டது.
அன்னையின் உபதேசங்கள் இறைவனை அடையத் தேவையானது உண்மையான அன்பே!
போதுமென்ற மனதுக்கு நிகரான செல்வம் வேறில்லை; பொறுமைக்குச் சமமான பண்பு வேறேதுமில்லை.
ஆன்மீக வாழ்க்கையில் சாதிப்பதற்கு அரிய எதையும் உண்மையான பக்தியின் மூலம் சாதிக்க முடியும்.
மன ஒருமைப்பாடின்றி பல மணி நேரம் பிரார்த்தனை, தியானம் செய்வதைவிட இரண்டு நிமிடங்கள் முழுமையான ஒருமைப்பட்ட மனத்துடன் பிரார்த்தனை, தியானம் செய்வது நல்லது.
துன்பங்கள் வாழ்க்கையில் தொடரத்தான் செய்யும். ஆனால், அவை நிலைத்து நிற்காது. பாலத்திற்கு அடியில் என்றும் ஓடிக் கொண்டிருக்கும் நீரைப்போல் அவையும் நில்லாமல் ஓடிவிடும். |