|
|
|
வங்கத்தில் ஒரு பிள்ளைச் சூரியன் "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு; தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்யும் பாதபூஜை" என்று கூறி, அவ்வாறே வாழ்ந்தும் காட்டிய மகாபுருஷர் சுவாமி விவேகானந்தர். சிறந்த சீர்திருத்தவாதி, மனிதருள் வேறுபாடுகளைச் சாடிய ஆன்மீகவாதி, எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என எண்ணிய பொதுவுடைமைவாதி, இந்தியாவின் உயர்வு பற்றியே எப்போதும் சிந்தித்த சிந்தனாவாதி என எப்படி வர்ணித்தாலும் இவருக்குப் பொருத்தமானதே. இந்துமதத்தின் பெருமையை மீட்டெடுத்து அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டி, புத்தொளி பாய்ச்சி, உலகின் பார்வையை இந்தியாவின் மீது திரும்ப வைத்த உத்தம ஞானி. இவர், கல்கத்தாவில், ஜனவரி 12, 1863ம் நாளன்று விசுவநாத் தத்தா-புவனேஸ்வரி தேவி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. செல்லமாக நரேந்திரா, நரேன். வீரேசுவரன் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
பெயருக்கேற்றவாறு சிறு வயதிலேயே வீரமுடையவன், யாருக்கும், எதற்கும் அஞ்சாதவன் நரேந்திரன் சகோதரிகளிடம் குறும்பு செய்வதும், சக சிறுவர்களோடு வீர விளையாட்டுக்கள் விளையாடுவதுமாக வளர்ந்தான். தாய் மகாபாரதம், ராமாயணம் போன்ற புராண, இதிகாசக் கதைகளைக் கூறுவார். நரேன் மனமொன்றிக் கேட்பான். சிறுவயதிலேயே தியானம், ஜபம் போன்றவை இயல்பாகக் கைகூடின நரேனுக்கு. சிவன்முன் தியானம் செய்ய மிகவும் பிடிக்கும்.
நரேனின் தியானம் ஒருமுறை அவனும் அவனது நண்பனுமாகச் சேர்ந்து சீதா, ராமர் விக்கிரகம் ஒன்றை வாங்கினர். வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் மாடியில் தனது தனியறைக்கு அதை எடுத்துச் சென்றான் நரேன். அதற்கு பூமாலை சூட்டி, பூஜித்தான். பின் அறையைப் பூட்டிவிட்டு, கண்மூடி தியானத்தில் அமர்ந்தான். நேரம் ஓடியது. வெகு நேரமாக நரேந்திரனைக் காணாமல் வீட்டிலுள்ளவர்கள் தேட ஆரம்பித்தனர். பல இடங்களில் தேடியபின், மாடி அறையில்தான் இருக்கிறான் என்பதை உணர்ந்து, கதவைத் தட்டினர். நரேந்திரன் கண் விழிக்கவில்லை. தன்னை மறந்து இறையுணர்வில் ஒன்றியிருந்தான். உடனிருந்த நண்பன் பயந்துபோய், கதவைத் திறந்துவிட்டு ஓடிவிட்டான். ஆனால் நரேந்திரன் எதற்கும் கண்விழிக்கவில்லை. இது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. வெகுநேரம் கழித்தே அவன் கண்களைத் திறந்தான். இதைக் கண்டு அவர்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இல்லத்திலேயே நரேனுக்குக் கல்வி போதிக்கப்பட்டது. பின்னர் பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஆங்கிலம், வங்கமொழி இரண்டிலும் வல்லவனானான். துவக்கக் கல்வியை முடித்தபின் உயர்கல்விக்காக மெட்ரோபாலிடன் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். பின்னர் ஜெனரல் அசெம்பிளி கல்லூரியில் சேர்க்கப்பட்டான். மேலைநாட்டுத் தத்துவம், அறிவியல், வரலாறு, மனிதகுல வளர்ச்சி, நாகரிகம், பண்பாடு போன்றவற்றை விரிவாகக் கற்றான். நூலகத்தில் பல்வேறு சமய, தத்துவ நூல்களை வாசித்தான். அவனது அறிவு மேம்பட்டது, சிந்தனை விரிந்தது. அவனது பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் இருந்த ஹேஸ்டி அவனிடம் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவனது சந்தேகங்களுக்கு விடையளித்து ஊக்குவித்தார்.
கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் பிறந்து வளர்ந்த இல்லம்
கடவுள் எங்கே? கற்ற கல்வியும், வாசித்த நூல்களும் நரேந்திரனது சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. பகுத்தறிவுவாதம் தலை தூக்கியது. அவனது விஞ்ஞான அறிவு, கண்களால் காணாத எதையும் உண்மையென ஏற்க மறுத்தது. ஆரம்பத்தில் பிரம்ம சமாஜத்தின் கொள்கைகள் அவனை ஈர்த்தன. அதில் உறுப்பினரானான். அவர்கள் நடத்தும் தியான, யோகப் பயிற்சிகளில் பங்கேற்றான் என்றாலும் அது அவனுக்கு நிறைவைத் தரவில்லை. கேள்விகள், கேள்விகள்.... "கடவுள் இருக்கிறாரா? இருந்தால் ஏன் அவரைக் காண முடியவில்லை? அவரைக் காண நாம் என்ன செய்யவேண்டும்? அவர் இல்லை என்றால் ஏன் இத்தனை ஆலயங்கள், பூஜைகள்?" போன்ற கேள்விகள் மனதுள் எழுந்தன. பதிலைத் தேடிப் பல இடங்களுக்கும் அலைந்தான். பல மகான்களைச் சந்தித்தான். ஒரு பயனும் ஏற்படவில்லை. அவன் ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை யாருமே கூறவில்லை. அவனது தேடல் தொடர்ந்தது.
குருவைத் தேடி நரேந்திரனுக்கு ஒரு நண்பன் இருந்தான், பெயர் ராம்சந்திர தத்தா. நரேனின் ஆன்மத்தேடலை அறிந்துகொண்ட ராம்சந்திரா, தஷிணேசுவரத்தை அடுத்துள்ள காளிகோவிலில் ஒரு பூசாரி இருப்பதாகவும், அவர் பெயர் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்றும் அவரைப் பார்த்தால் அவன் கேள்விக்கு விடை கிடைக்கும் என்றும் அறிவுறுத்தினான். தன் ஆசிரியர் ஹேஸ்டி மூலம் ஏற்கனவே பரமஹம்சரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான் நரேன். தஷிணேசுவரத்தில் ஒரு மகா மனிதர் இருப்பதாகவும், அவர் அனைத்தும் அறிந்த மகான் என்றும் ஆசிரியர் சொல்லியிருந்தார். அதனால் அவரை உடனடியாகச் சென்று பார்க்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், ஏனோ அது கைகூடாமலேயே தள்ளிப் போயிற்று.
ஒருநாள், நண்பன் சுரேந்திரநாத்தின் வீட்டில் நடைபெற்ற ஒரு விழாவுக்குச் சென்றான் நரேன். அங்கே ராமகிருஷ்ண பரமஹம்சர் வந்திருந்தார். எளிய தோற்றம் கொண்டிருந்த அவரை அவனது மனம் ஏற்கவில்லை. அதனால் அவரிடம் பேச நாட்டமின்றி ஒதுங்கியே இருந்தான். அவரோ அவனையே உற்றுப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.
நரேந்திரனுக்கு இனிய குரல் வளம். நண்பன் கேட்கவே உள்ளமுருக ஒரு பாடலைப் பாடினான். அதனைக் கேட்டதும் பரமஹம்சரின் கண்களில் கண்ணீர் பெருகியது. உடல் துடித்தது. அப்படியே சமாதியில் ஆழ்ந்துவிட்டார். வெகுநேரம் கழித்தே இயல்புக்கு மீண்டார். நரேனின் கைகளைப் பற்றிக்கொண்டு, "அப்பா, நீ யாரென்பது உனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரிந்துவிட்டது. நீ என்னைச் சந்திக்க தஷிணேசுவரம் காளி கோவிலுக்கு வருவாயா?" என்று அன்புக் கண்ணீர் மல்கக் கேட்டார். நரேனும் தலையாட்டினான். அவர் விடைபெற்றுச் சென்றார்.
ஆனால், நரேன் உடனடியாகச் சென்று அவரைப் பார்க்க முற்படவில்லை. ஆங்கிலக் கல்வி பயின்ற தனக்கு, பள்ளிப் படிப்பைக் கூடச் சரிவர முடிக்காத அவரால் எப்படி உண்மையை விளக்கிக் கூற முடியும் என்ற ஐயம் அவன் மனதில் இருந்தது. அதனால் வெகுநாட்கள் அவரைச் சென்று சந்திப்பதைத் தவிர்த்தான்.
|
|
கடவுளைக் காட்டுவேன் ஒருநாள் நண்பன் ஒருவனுடன் தஷிணேசுவரம் காளி கோவிலுக்குச் சென்றான் நரேன். சீடர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், நரேந்திரனைப் பார்த்ததும் பரபரப்புடன் எழுந்து அருகில் வந்தார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. "வா, அப்பா! உனக்காக நான் எவ்வளவு நாளாகக் காத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?" என்று கூறி, அவனது கைகளைப் பற்றிக்கொண்டார். அப்படியே சமாதியில் ஆழ்ந்துவிட்டார்.
வெகுநேரம் கழித்துத்தான் கண்களைத் திறந்தார். உடனே நரேந்திரன் அவரிடம், "சுவாமி நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?" என்றான் ஆவலுடன். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், "சந்தேகமென்ன குழந்தாய், உன்னை எவ்வாறு காண்கிறேனோ, அதைவிடத் திடமாக நான் அவரைக் காண்கிறேன். உன்னோடு பேசுவதுபோல அவரோடு பேசியுமிருக்கிறேன். ஏன், வேண்டுமானால் உனக்கும்கூட அவரைக் காட்டமுடியும்" என்றார்.
நரேந்திரன் திகைத்துப் போனான். "நான் கடவுளைக் கண்டிருக்கிறேன், உனக்கும் காட்ட முடியும். நீயும் அவரைக் காணமுடியும்!" என்று இதுவரை அவன் சந்தித்த யாருமே அவனுக்கு உறுதியளிக்கவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சொல்லைக் கேட்டு, பதில் கூற முடியாமல் அப்படியே திகைத்து நின்றுவிட்டான். அவரோ தொடர்ந்து, "குழந்தாய், எப்படி ஒருவன் பொன், பொருளை இழந்தால் துக்கிக்கிறானோ, மனைவி, குழந்தைகள் இழப்பிற்காகக் கண்ணீர் விட்டுக் கதறுகிறானோ, அதைப்போல ஆண்டவனைக் காணவேண்டும், அவனை அடையவேண்டும் என்று ஒருவன் துக்கித்தால், கண்ணீர் விட்டுக் கதறினால் அவரை நிச்சயமாகக் காணமுடியும்" என்று கூறினார். அந்தப் பதில் நரேந்திரனின் உள்ளத்தில் புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும் தோற்றுவித்தது.
நாளடைவில் ராமகிருஷ்ணரின் போதனைகள் நரேந்திரரின் உள்ளத்தைத் திறந்தன. அவை நரேந்திரருக்குத் தெளிவை உண்டாக்கியதுடன், உண்மையான பரம்பொருள் எது என்ற உண்மையையும் விளக்கின. குருதேவர் ராமகிருஷ்ணர், நரேந்திரருக்கு குருவாக மட்டுமில்லாமல் ஞானத் தந்தையாகவும் விளங்கினார்.
முதல் சமாதி அனுபவம் ஒருமுறை நரேந்திரரோடு பேசிக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணர். அப்போது திடீரெனப் பரவச நிலையில் தனது வலது கரத்தை நரேந்திரரின் நெஞ்சின்மீது வைத்தார். அவ்வளவுதான். இனம்புரியாத சக்தி ஒன்று தன்னை ஆக்கிரமிப்பதையும், தான் எங்கேயோ ஆழமானதோர் இடத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதையும் உணர்ந்தார் நரேந்திரர். "ஐயோ, அம்மா, என்னை என்ன செய்கிறீர்கள்? எனக்குப் பெற்றோர் இருக்கிறார்கள், அவர்கள் என்னைத் தேடுவார்கள்" என்று கதறினார். பின் மயக்கமடைந்து விட்டார். குருதேவர் கரத்தை எடுத்த பிறகுதான் நரேந்திரரால் சகஜ நிலைக்குத் திரும்ப முடிந்தது. அது மயக்கம் அல்ல என்பதும், குருதேவரால் தனக்கு ஆசீர்வதிக்கப்பட்ட சமாதிநிலை என்பதும், பிற்காலத்தில் ஆன்மீகப் பக்குவம் பெற்ற பின்னரே நரேந்திரரால் உணரமுடிந்தது.
தனக்கென வேண்டாத் தகைமை குருதேவரிடம் ஆன்மீகத் தெளிவைப் பெற்ற நரேந்திரருக்கு அவ்வப்போது உலகியல் சோதனைகளும் தலைகாட்டத் துவங்கின. வீட்டார் அவரது திருமணப் பேச்சை எடுத்தபோது வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார். பெற்றோர் மிகவும் மனம் வருந்தினர். இந்நிலையில் திடீரென நரேந்திரரின் தந்தை காலமானார். நரேந்திரரால் அந்தச் சோகத்தைத் தாங்கவே முடியவில்லை. ஆண்பிள்ளை என்று இருந்தது அந்தக் குடும்பத்தில் அவர் ஒருவர்தான். அதனால் குடும்பப் பொறுப்பு முழுவதும் அவரே சுமக்க வேண்டி வந்தது. நாளடைவில் குடும்பம் வறுமையில் வாட ஆரம்பித்தது. பணத்தேவையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் தவித்தார். சகோதரிகளின் கல்வி, திருமணம் போன்ற வருங்கால நிகழ்வுகளை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் நரேந்திரர். உறவினர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராகச் சதி செய்தனர். தாயோ கண்ணீர் சிந்தினார். இதனால் கடவுளின் மீதுள்ள நம்பிக்கையையே இழந்து விடுவோமோ என்று அஞ்சினார் நரேந்திரர்.
குருதேவரிடம் சென்று தம் பிரச்னைகள் தீர ஆசிர்வதிக்குமாறும், அதற்காகக் காளி அன்னையிடம் வேண்டுமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு குருதேவரோ, "அன்னையிடம் நான் வேண்டுவதை விட நீயே வேண்டிக்கொள்வது தான் நல்லது" என்று கூறினார்.
உடன் ஆலயத்திற்குச் சென்றார் நரேந்திரர். அன்னைமுன் கைகூப்பினார். ஆனால், 'எனக்கு பொன்னும் பொருளும் தருக! குடும்பத்தின் துன்பத்தை நீக்குக!' என்றெல்லாம் அவரால் வேண்ட இயலவில்லை. ஆன்ம சக்தியும் இறையாற்றலும் தனக்கு மென்மேலும் பெருகவேண்டும் என்றே வேண்டிக்கொண்டார். மற்றுமொரு முறையும் சென்று அன்னையிடம் வேண்டிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார் பரமஹம்சர். ஆனால் நரேந்திரரால் மறுமுறையும் சுயநலமாக வேண்டிக் கொள்ள இயலவில்லை. அந்த அளவுக்கு அவர் மனப்பக்குவம் பெற்றிருந்தார்.
நாளடைவில் குருதேவரின் ஆசியாலும் காளி அன்னையின் அருளாலும் மெல்ல மெல்லப் பிரச்சனைகள் தீரத் தொடங்கின.
★★★★★
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
"நீ சாதாரண மனிதனல்ல!" குருதேவரை நாடியும், அவர் சன்னிதியில் தியானத்தில் ஆழ்ந்தும், அவருடன் விவாதித்தும் பல உண்மைகளை உணர்ந்து கொண்டார் நரேந்திரர். குருதேவர் இறைவனின் நாமத்தை உச்சரித்த உடனேயே பரவச நிலையை அடைவது சக பக்தர்களான மன்மோகனுக்கும், நித்திய கோபாலுக்கும் வழக்கமாக இருந்தது. ஆனால் நரேந்திரர் தனக்கு அப்படி ஆகவில்லை என்பது குறித்துக் கவலைப்பட்டார். குருதேவர் அதனை அறிந்தார். பின் நரேந்திரரை நோக்கி, "நரேந்திரா, கவலை வேண்டாம். ஒரு சிறிய குட்டைக்குள் பெரிய யானை புகுந்தால் அது கலங்கித்தான் போகும். ஆனால் பெரிய கங்கை நதிக்குள் யானை புகுந்தால், நதி அதனால் கலங்குவதில்லை. இவர்கள் எல்லாம் சிறு குட்டையைப் போன்றவர்கள். அதனால்தான் சக்தியின் ஒரு சிறு துளிகூட இவர்களை மயக்கிவிடுகிறது. ஆனால், நீயோ வற்றாத ஜீவநதியான கங்கையைப் போன்றவன். அதனால்தான் உன்னை எந்தச் சக்தியாலும் மயக்கமடைய வைக்க முடியவில்லை. கலங்காதே" என்று கூறித் தேற்றினார். குருதேவரின் ஆறுதல் மொழிகள் நரேந்திரருக்கு நிம்மதி கொடுத்தன.
பேசிக்கொண்டிருக்கும் போதே பரவச நிலைக்குச் செல்வது குருதேவரின் வழக்கம். தானும் அந்த நிலையை அனுபவிக்க விரும்பினார் நரேந்திரர். அடிக்கடி குருதேவரிடம் இதுபற்றி நச்சரிப்பார். ஒருநாள் நரேந்திரரை அழைத்த குருதேவர் அவரது நெஞ்சில் கையை வைத்தார், அவ்வளவுதான்! சமாதி நிலைக்குப் போய் விட்டார் நரேந்திரர். வெகுநேரம் கழித்துதான் அவரால் தன்னுணர்வைப் பெற முடிந்தது. பின் அவர் குருதேவரிடம், தான் அந்த நிலையிலேயே இருக்க விரும்புவதாகவும், அதற்கு குருதேவர் அருளவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். அதற்கு குருதேவர் "நரேந்திரா, நீ இப்படிச் சுயநலம் கொண்டவனாக இருக்கக்கூடாது. இந்தப் பூமியில் உன்னால் பல காரியங்கள் ஆகவேண்டி இருக்கின்றன. ஆகவே அந்தக் காரியங்கள் நிறைவேறும் வரை நீ இந்த நிலையில் நீடிக்கமுடியாது. நீ ஒரு கப்பலைப் போன்றவன். நிர்விகல்ப சமாதி என்னும் பெட்டி இப்போது உன்னிடம் இருக்கலாம். ஆனால் அதற்கான சாவி என்னிடம்தான் இருக்கிறது. உன்னால் இந்த உலகுக்குச் சில பணிகள் ஆகவேண்டியது உள்ளது. அதுவரை நீ அந்த நிலைக்கு முழுமையாகச் செல்லமுடியாது" என்று கூறினார்.
குருதேவர் ராமகிருஷ்ணர், நரேந்திரன் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். அது ஒரு குழந்தையின் மீது தாய் வைக்கும் பாசத்தைப் போன்றதாக இருந்தது. அடிக்கடி நரேந்திரனைப் பாடச் சொல்லிக் கேட்பார். அவர் பாடும்பொழுது தன்னை மறந்து சமாதியில் ஆழ்ந்து விடுவார். நரேந்திரனைச் சுட்டிக் காட்டி மற்ற பக்தர்களிடம், "நான் சக்தியின் அம்சம். நரேந்திரன் சிவனின் அம்சம்" என்பார். சமயங்களில் ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறே நரேந்திரனிடம், "அப்பா, நீ யாரென்று உனக்குத் தெரியாது! நீ சாதாரண மனிதன் அல்ல. மனிதகுலம் உயர்வதற்காக ஈசன் உன்னை அனுப்பியிருக்கிறான். நீ தெய்வ மஹிமை உடையவன். உன்னால் இந்த உலகத்துக்கு மிகப்பெரிய நன்மை உண்டாகப் போகிறது!" என்று தழுதழுத்துக் கூறுவார். சீடர்களிடம், "இவன் சாட்சாத் இறைவனின் அம்சம். இவனுடைய உள்ளம், உடல், ஆத்மா என அனைத்தும் மிகத் தூய்மையானவை. இவ்வுலகுக்கு மிகப் பெரிய பணியாற்றவே இவன் வந்திருக்கிறான்" என்பார்.
(தொடரும்)
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|