|
|
|
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும், தீயவர்களை அழிக்கவும், சாதுக்களைக் காக்கவும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில். இவ்வாறு இறைவன் ராமராக, கிருஷ்ணராக தானே அவதாரம் எடுப்பதும் உண்டு. தன் சார்பாக உபதேவதைகளையும், ஆதிசேஷன், கருடன், விஷ்வக்சேனர், நாரதர், வியாசர் போன்ற மகாஞானிகளை அனுப்பி வைப்பதுமுண்டு. அப்படி, ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆக்ஞைப்படி, ஸ்ரீவைஷ்ணவ தர்மத்தைச் சிறப்பிப்பதற்காகவும், பக்தி இயக்கத்தை வளர்ப்பதற்காகவும் ஸ்ரீ ஆதிசேஷனின் அவதாரமாக பாரத தேசத்தில் எழுந்தருளிய மகான் ஸ்ரீமத் ராமாநுஜர்.
'நகரேஷு காஞ்சி' என்று புகழ்பெற்றது காஞ்சி மாநகர். 108 திவ்ய தேசங்களில், 18 இம்மாநகரத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இந்நகரை அடுத்த புண்ணியஸ்தலம் ஸ்ரீபெரும்புதூர். அங்கு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். அவ்வூரில் ஸ்ரீ கேசவ சோமயாஜி என்ற பெயர்கொண்ட மகாபண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சகலசாஸ்திர விற்பன்னர். அடக்கமே உருவானவர். காந்திமதியம்மாள் என்ற புனிதவதி அவரது மனைவி. அன்புவழியில் இல்லறம் நடத்திவந்த இத்தம்பதிகளுக்கு நீண்டநாள் ஆகியும் புத்திரப்பேறு வாய்க்கவில்லை. அவ்வூரில் இருந்த மற்றொரு பண்டிதரும், நண்பருமான திருக்கச்சி நம்பிகளின் ஆலோசனைப்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புத்திரபாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார் கேசவர். அந்த யாகத்தின் அருட்பிரசாதமாகப் பிறந்த குழந்தை ஸ்ரீமத் ராமாநுஜர். இவர், பிங்கள வருடம், சித்திரை மாதம், சுக்லபட்ச பஞ்சமியில், வியாழக்கிழமை, திருவாதிரை நட்சத்திரம் கூடிய நன்னாளில், பொது சகாப்தம் ஏப்ரல் 4, 1017 அன்று திருவவதாரம் செய்தார்.
குழந்தையின் முக தேஜஸையும், உடற்குறிகளையும் பார்த்து வியந்த மாமா பெரியதிருமலை நம்பி, குழந்தைக்கு லட்சுமணரைக் குறிக்கும் வகையில் இளையாழ்வான் என்று நாமகரணம் செய்தார். ஸ்ரீராமபிரானுக்கு அணுக்கத்தொண்டனாக இருந்தவன் என்பதைக் குறிக்கும் வகையில் 'ராமாநுஜன்' என்று அன்போடு அழைத்தார். அப்பெயரே குழந்தைக்கு நிலைத்தது. இளவயதிலேயே தெய்வீக தேஜஸ் பொருந்தியவராக இருந்தார் ராமாநுஜர். கூர்த்த அறிவும், எளிதில் எதனையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் கொண்டிருந்த இவருக்கு, உரிய காலத்தில் உபநயனம் நடைபெற்றது. தம் தந்தையாரிடமே ஆரம்பக்கல்வி பயின்றார். வேதம், ஸ்ருதி போன்றவற்றைக் கற்று ஞானவான் ஆனார். தந்தையின் நண்பரான திருக்கச்சி நம்பிகள், ராமாநுஜரை சிறுவன்தானே என்றெண்ணி ஒதுக்காமல் அன்பு காட்டினார். அந்த அன்புகண்டு உருகிப்போனார் ராமாநுஜர். பகவானுக்குப் பணி செய்துவரும் இவருக்குப் பணி செய்வதே தமக்கு மிகப்பெரும் பாக்கியமாகும் என்று கருதினார்.
ராமாநுஜருக்கு அக்கால வழக்கப்படி பதினாறாம் வயதில் தஞ்சமாம்பாள் என்கிற ரட்சகாம்பாளுடன் திருமணம் நிகழ்ந்தது. திருமணம் நடந்தேறிய ஒரு மாதத்திற்குள்ளேயே ராமாநுஜரின் தந்தை கேசவ சோமயாஜி பரமபதம் சேர்ந்தார். இதனால் மனவாட்டமுற்ற ராமாநுஜருக்கு, திருக்கச்சி நம்பிகள் தேற்றி ஆறுதல் கூறினார். அதுவரை ஸ்ரீபெரும்புதூரில் வசித்துவந்த ராமாநுஜர் காஞ்சிபுரத்திற்குக் குடியேறினார். தந்தையிடம் கற்றுவந்த அவர், கல்வியை மேலே தொடர விரும்பினார். திருப்புட்குழியில் பள்ளியொன்றை நடத்தி வந்த யாதவப்பிரகாசரை நாடினார். அவர் அத்வைத வேதாந்தி. அத்வைதியான குருவுக்கும், விசிஷ்டாத்வைதத்தில் நம்பிக்கை கொண்டிருந்த சீடருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அதனால் அவ்வப்போது பாடசாலையில் குருவின் விளக்கத்திற்கு எதிர்வாதமாக ராமாநுஜர் விளக்கம் கூறலானார்.
அது குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்தது. காசிக்குக் குரு மற்றும் பிற சீடர்களுடன் யாத்திரை சென்ற ராமாநுஜர், சகோதரர் கோவிந்தபட்டரின் உதவியால் தன்னைக் கொல்வதற்கான சதியிலிருந்து உயிர் தப்பினார். இறையருளால் விரைந்து காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு தனது வீட்டிலிருந்தவாறே வேத வேதாந்த ஆகமங்களைப் பயிலத் துவங்கினார்.
உரிய காலத்தில் காஞ்சி திரும்பிய யாதவப்பிரகாசர், ராமாநுஜர் தங்களுக்கு முன்னமேயே அங்கு வந்திருப்பது கண்டு அதிசயித்தார். ராமாநுஜர் தெய்வீக அருள் பெற்றவர் என்பதைப் புரிந்துகொண்டார். தமது தவறுகளுக்காக வருந்தினார். சீடர்களை அனுப்பி ராமாநுஜரை அழைத்து, முன்னைப்போல வந்து தம்மிடம் கற்றுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். ராமாநுஜருக்கு அதில் விருப்பமில்லை என்றாலும், குருவாக்கைத் தட்டமுடியாமல் அவ்வப்போது சென்று வந்தார். யாதவப்பிரகாசரால் சகோதரர் கோவிந்தபட்டர் அத்வைதியாக மாற்றப்பட்டதையும், அவர் திருக்காளத்தியில் வசித்து வருவதையும் அறிந்தார். அவரது மனதை மாற்றத் தனது மாமாவும் ஆசார்யர்களில் ஒருவருமான பெரிய திருமலை நம்பியிடம் வேண்டிக்கொண்டார். அவரது முயற்சியால் மீண்டும் ஸ்ரீவைஷ்ணவரான கோவிந்தபட்டர், நம்பிக்கே சீடராகி திருமலைக்குச் சென்று வசித்தார்.
திருக்கச்சி நம்பிகள் தனக்கு ஆசார்யன் எவருமில்லையே என வருந்திய ராமாநுஜர், காஞ்சிபூரணர் என்று அழைக்கப்பட்ட திருக்கச்சி நம்பிகளை அணுகி, சீடனாக ஏற்க வேண்டினார். யமுனைத்துறைவர் என்றும் யமுனாசார்யார் என்றும் போற்றப்படுபவர் ஆளவந்தார். நாதமுனிகளின் பேரனான அவரே திருக்கச்சி நம்பிகளின் குருவுமாவார். நம்பிகள் வைசிய குலத்தவர். அந்தணரான ராமாநுஜரைச் சீடனாக ஏற்கத் தயங்கினார். அதனால் தினந்தோறும் ஆலயத்திற்கு வந்து ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும், பெருந்தேவித் தாயாருக்கும் கைங்கர்யம் செய்துவரும்படி ராமாநுஜருக்கு ஆணையிட்டார். ராமாநுஜரும் அவரை குருவாகவே மனதுள் வரித்து, குருவாக்காகவே அதனை ஏற்று பணிசெய்தார். பெரும்பாலான நேரத்தைத் திருக்கச்சி நம்பிகளுடனே செலவிட்டார். குலப்பெருமை பாராட்டிய மனைவி தஞ்சமாம்பாளுக்கு இது பிடிக்கவில்லை.
ஒருநாள், ராமாநுஜர், குரு திருக்கச்சி நம்பியைத் தம் இல்லத்தில் விருந்துக்கு அழைத்தார். மனைவியிடம் தானும் குருவும் மதியம் வருவோம் என்று சொல்லிவிட்டு கோயிலில் மிக அவசரமான வேலை ஒன்றைச் செய்ய விரைந்து சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் பசித்துக் களைத்தவராகத் திருக்கச்சி நம்பிகள் அங்கு சென்று சேர்ந்தார். ராமாநுஜர் வெளியே போயிருப்பதை அறிந்து, அவர் வரும்வரை தன்னால் காத்திருக்க முடியாது, வேறு முக்கியமான வேலையாக உடனே திரும்பவேண்டும் என்று கூறினார். அதனால் தஞ்சமாம்பாள் அவருக்கு உணவு படைத்தார். அதை உண்டபின் நம்பிகள் விடைபெற்றுச் சென்றார். அவர் சென்றபின் அவர் சாப்பிட்ட இலையை ஒரு கம்பால் ஒதுக்கித் தள்ளிவிட்டு அந்த இடத்தைக் கோமியத்தால் சுத்தம் செய்து, பின்னர் தஞ்சமாம்பாள் தானும் நீராடினார். அந்தச் சமயத்தில் ராமாநுஜர் அங்கு வந்து சேர்ந்தார். "என்ன நிகழ்ந்தது, நம்பிகள் எங்கே?" என்று கேட்டார்.
தஞ்சமாம்பாள் நடந்ததைக் கூறினார். அதைக் கேட்டு மனம் வருந்தினார் ராமானுஜர். "நம்பி மிகப்பெரிய ஞானி. அவரிடம் சாதி வேறுபாடு பார்ப்பதைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை. இனி இம்மாதிரி நீ நடந்துகொண்டால் நான் கடுமையான முடிவை எடுக்கவேண்டி வரும்" என்று எச்சரித்தார். ஆனால் தஞ்சமாம்பாள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. |
|
|
மூன்று விரல்கள் இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் வசித்துவந்த ஆளவந்தார், தனக்குப் பிறகு தெய்வீகப் பணிகள் தொய்வின்றி நடக்கவேண்டும் என்று விரும்பினார். அதற்குத் தகுதியானவர் ராமாநுஜர்தான் என்பதை அவர் முன்னரே அறிந்திருந்தார். ஆனால், அப்போது ராமாநுஜர் யாதவப்பிரகாசரின் சீடராக இருந்தார். வேறொரு குருவிடம் பயிலும் சீடனை, அவரை விட்டுத் தன்னிடம் வரவேண்டுமென்று கேட்பது நாகரிகமன்று எனக் கருதி அப்போது பேசாமல் இருந்துவிட்டார். தற்போது யாதவப்பிரகாசரிடமிருந்து ராமாநுஜர் விலகியிருப்பதை அறிந்தார். ராமாநுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவருமாறு, தனது சீடர் பெரியநம்பியைக் காஞ்சிக்கு அனுப்பினார். அவரும் காஞ்சிக்கு வந்து திருக்கச்சி நம்பிகளைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார். திருக்கச்சி நம்பிகளும், "ஆளவந்தாருக்குப் பின் ஆசார்ய பீடத்தில் அமரும் தகுதி ஸ்ரீ ராமாநுஜருக்கே உரியது. அவ்வாறே நடக்கட்டும்" என்று ஆசி கூறினார்.
மறுநாள் பெரியநம்பி ராமாநுஜரைச் சந்தித்தார். ஆளவந்தார் இயற்றிய ஸ்தோத்திரங்களைச் சொல்லித் துதித்தார். இறைவனின் மீதான அந்த "ஸ்தோத்ர ரத்ன"ங்களைக் கேட்டு மனம் உருகினார் ராமாநுஜர். "இதனை இயற்றியவர் யாரோ அவரை வணங்குகிறேன்" என்றார் கண்ணில் நீர்பெருக. "இது என் குருவான ஆளவந்தார் இயற்றியது" என்று பெரியநம்பி சொல்லவே ஆளவந்தாரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார் ராமாநுஜர். பெரியநம்பியும், ஆளவந்தாரின் ஆக்ஞைப்படி ராமாநுஜரை அழைத்துச் செல்லவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார். மனமகிழ்ந்தார் ராமாநுஜர். திருக்கச்சி நம்பிகளின் ஆசிபெற்றுப் பெரியநம்பியுடன் ஸ்ரீரங்கத்துக்குப் புறப்பட்டார். ஆனால், அவர்கள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பே ஆளவந்தார் வைகுந்தநாடு சென்றுவிட்டார்.
ஆளவந்தாரின் உடலில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியிருப்பதைக் கண்டு அத்ற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என்று ஊகித்து அங்கிருந்தவர்களிடம் அதுகுறித்து விசாரித்தார். "ஸ்ரீ ஆளவந்தார் வியாசர், பராசரர், நம்மாழ்வார் ஆகியோர்மீது மிகுந்த அன்பு பூண்டவர். அவர்களது கொள்கைகளுக்கேற்ப விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுத வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் உடல் தளர்ச்சியால் அது முடியாமல் போனது. தனது கடைசி ஆசையைச் குறிக்கவே அவரது விரல்கள் மடங்கியிருக்கின்றன" என்று அங்குள்ள சீடர்கள் கூறினர். ராமாநுஜர், தனக்கு உடல்நலமும் இருந்து இறையருளும் கூட்டுவித்தால் ஆளவந்தாரின் இறுதி விருப்பத்தைத் தாம் நிறைவேற்றுவதாக அறிவித்தார். உடனேயே மடங்கியிருந்த விரல்கள் அனைவரும் அதிசயிக்கும்படி நீண்டன. ஆளவந்தாரின் இறுதிக் காரியங்கள் நிகழ்ந்த பின்னர் காஞ்சி திரும்பினார் ராமாநுஜர்.
வழியெல்லாம் ஆளவந்தாரைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காமல் போய்விட்டதை எண்ணி ஏங்கினார். காஞ்சியில் திருக்கச்சி நம்பியைச் சந்தித்து ஸ்ரீரங்கத்தில் நடந்தவற்றை விளக்கிச் சொன்னார். பின் ஆளவந்தார் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில், ராமாநுஜருக்கு, தமது குரு ஆளவந்தாரிடம் கற்ற அனைத்தையும் போதித்தார் திருக்கச்சி நம்பிகள். இப்படிச் சிலகாலம் கடந்தபின், ஒருநாள் நம்பிகள், ராமாநுஜரை அழைத்து ஆறு உபதேசங்களைத் தந்தருளினார். அவற்றில் ஆறாவது உபதேசமாக "பெரியநம்பியை குருவாகக் கொள்" என்று கூறியிருந்தார். திருக்கச்சி நம்பிகள், தன்னைச் சீடராக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர் தமது ஆசார்யர்களில் ஒருவர் என்பதை ராமாநுஜர் மறக்கவில்லை. அவரை வணங்கி, பெரிய நம்பியைத் தரிசிக்க ஸ்ரீரங்கம் புறப்பட்டார். அதே சமயம் இவரைச் சந்திக்க, பெரியநம்பி தன் மனைவியுடன் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். இருவரும் மதுராந்தகம் ஆலயத்தில் சந்தித்துக்கொண்டனர். பின், பிரகாரத்தில் இருந்த மகிழ மரத்தினடியில் ராமாநுஜரைச் சீடராக ஏற்றுக்கொண்ட பெரிய நம்பி, முதலில் அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குரிய பஞ்ச சம்ஸ்காரத்தைச் செய்துவைத்தார். பின் திருநாமமிட்டு, தாசநாமம் சூட்டி, மந்திரோபதேசம் செய்தார். ராமாநுஜர் தன் குரு மற்றும் குருபத்தினியை அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்று, அவர்களைத் தன் இல்லத்திலேயே தங்கவைத்தார்.
ராமாநுஜர் அவர்களை மிகவும் போற்றி மதித்தபோதிலும், அவரது மனைவி தஞ்சமாம்பாள், அவர்களுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒருசமயம் வீட்டின் பின்புறக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு பெரிய நம்பியின் மனைவி விஜயாம்பாளும், தஞ்சமாம்பாளும் வந்து கொண்டிருந்தனர். அப்போது விஜயாம்பாளின் குடத்து நீர் தளும்பி, தஞ்சமாம்பாளின் குடத்தில் தெறித்துவிட்டது. இதற்காகத் தஞ்சமாம்பாள், நம்பியின் மனைவியிடம் சண்டையிட்டதுடன், அவரை மிகவும் இகழ்ந்து பேசினார். ஆனால், விஜயாம்பாள் பதிலுக்குச் சண்டையிடாமல் அமைதி காத்தார். அது ராமாநுஜரோ, பெரியநம்பியோ வீட்டில் இல்லாத நேரம். பெரியநம்பி வந்ததும் அவரிடம் விஷயத்தைத் தெரிவித்தாள் விஜயாம்பாள். "இனியும் இங்கிருப்பது சரியில்லை" என்று முடிவுசெய்த பெரியநம்பி, ராமாநுஜர் வருவதற்குக்கூடக் காத்திராமல் மனைவியுடன் வீட்டைவிட்டு உடனடியாக வெளியேறினார்.
யதிராஜர் ஆனது வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த ராமாநுஜர், ஆசார்யன் இல்லாதது கண்டு திகைத்தார். மனைவியிடம் விசாரித்தார். மனைவி சரியாகப் பதில் சொல்லாததால் அக்கம்பக்கத்தில் விசாரித்தார். நடந்த விஷயம் தெரியவந்தது. மனம் பதைத்தார். இத்தகைய மனைவியுடன் இனி எங்ஙனம் வாழ்வது என்று பரிதவித்தார். மனைவியைத் துறப்பது, குடும்பத்தை விட்டுவிடுவது, சன்னியாசம் பூணுவது என்று முடிவெடுத்தார். அதற்கேற்றாற்போல் அந்தச் சமயத்தில் மனைவியின் உறவினர்கள் தம் வீட்டுத் திருமணத்தில் பங்கேற்க அழைத்தனர். வரமறுத்த ராமாநுஜர், மனைவியை அனுப்பச் சம்மதித்தார். தஞ்சமாம்பாள் பிறந்தகம் சென்றார். உடன் வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் சென்ற ராமாநுஜர், தனக்கு சந்நியாசவரம் தந்தருளுமாறு பெருமாளிடம் யாசித்தார். பின் ஆலயத்திற்கு எதிரே உள்ள குளக்கரையில் யாகம் வளர்த்து, இல்லற ஆசைகளை அதில் ஆகுதியாக அளித்தார். காவியுடை பூண்டு, மனம், வாக்கு, காயம் இவற்றைக் கட்டுப்படுத்தியதன் அடையாளமான திரிதண்டத்தைக் (முக்கோல்) கையில் ஏந்தி, ராமாநுஜ முனியானார். நிகழ்ந்ததைக் கேள்விப்பட்டு அங்கே வந்த திருக்கச்சி நம்பிகளும், ராமாநுஜரின் கோலத்தைக் கண்டு, "யதிராஜரே!" (துறவிகளுக்கெல்லாம் அரசரே) என்று அழைத்து ஆசிர்வதித்தார்.
அதன்பின் காஞ்சியில் மடம் ஒன்றில் தங்கித் திருப்பணியைத் தொடர்ந்தார் ராமாநுஜர். அவ்வப்போது சமயப் பிரசங்கம், பாகவத உபன்யாசம் செய்து வந்தார். ஒன்றுவிட்ட சகோதரனான முதலியாண்டான் அவரது சீடரானார். அடுத்து ராமாநுஜரைத் தெய்வமாகவே வழிபட்டு வந்த கூரேசர் என அழைக்கப்படும் கூரத்தாழ்வாரும், அவருக்குச் சீடரானர். குரு யாதவப்பிரகாசர் ராமாநுஜருக்குச் செய்ய முற்பட்ட தீச்செயல்களை நினைத்து வருந்தினார். ஸ்ரீ ராமாநுஜரை நாடி வலம்வந்து கால்களில் வீழ்ந்து வணங்கினார். ராமாநுஜர், தான் அவரிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை என்று சொல்லி ஆறுதல் கூறினார். யாதவப்பிரகாசரின் வேண்டுகோளின்படி அவரையும் தமது சீடர்களுள் ஒருவராக ஆக்கிக்கொண்டார். கோவிந்த ஜீயர் என்ற திருநாமம் அவருக்கு அளிக்கப் பெற்றது.
ஸ்ரீரங்கத்திலிருந்த ஆளவந்தார் திருமடத்திலிருந்து ராமானுஜருக்கு அதன் குருபீடத்தை ஏற்கக் கோரி அழைப்பு வந்தது. இதற்காக திருவரங்கப் பெருமாள் அரையரை அவர்கள் அனுப்பி வைத்தனர். அழைப்பை ஏற்ற ராமாநுஜர், ஸ்ரீவரதராஜப் பெருமாளின் ஆசியுடனும், திருக்கச்சி நம்பிகளின் அனுமதியுடனும் புறப்பட்டார். ஸ்ரீரங்கம் சென்று ஆளவந்தார் மடத்தின் முதன்மை ஆசார்யராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ரங்கநாதனின் அருளாசியோடு 'உடையவர்' என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது. பிரபஞ்சத்தையே தன்னுள் உடையவர் ஸ்ரீரங்கநாதர். அந்த ஸ்ரீரங்கநாதருக்கே 'உடையவர்' ஆனார் ஸ்ரீராமாநுஜர். அதுமுதல் அவர் "உடையவர்" என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
(தொடரும்)
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|