Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | முன்னோடி | அஞ்சலி | சமயம் | பொது
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
- பா.சு. ரமணன்|மே 2017|
Share:
வங்காளத்தில் உள்ள காமர்புகூர் எனும் சிற்றூரில் க்ஷுதிராம் சாட்டர்ஜி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சந்திரமணி தேவி. கணவரின் கருத்திற்கேற்ப நடக்கும் குணவதி. அவர்கள் தமது முதல் குழந்தைக்கு ராம்குமார் என்று பெயரிட்டனர். ராமேஸ்வர யாத்திரை சென்று வந்த பிறகு பிறந்த இரண்டாவது குழந்தைக்கு ராமேஸ்வர் என்று பெயர். மூன்றாவதாகப் பிறந்த பெண் மகவு பவதாரிணி.

ஒருநாள் தம்பதிகள் இருவரும் கயைக்குச் சென்று நீத்தார்கடனைச் செய்ய நினைத்தனர். கயையில் கதாதரரைத் தரிசித்தனர். அன்று இரவு ஆலயச் சத்திரத்தில் தங்கினர். உறக்கத்தின்போது க்ஷுதிராமின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு "அன்பனே! இந்த உலகைக் காக்க நான் மிக விரைவில் அவதரிக்கப் போகிறேன். அது உன் இல்லத்திலேயே நிகழும்" என்று கூறி மறைந்தார். விழித்தெழுந்த க்ஷுதிராம் மிகவும் மனம் மகிழ்ந்தார். மனைவியிடம் தாம் கண்ட கனவு பற்றித் தெரிவித்தவர், இறைவனின் கருணையை எண்ணி வியந்தார். குடும்பத்தில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெறத் துவங்கின.

ஒருமுறை காமர்புகூரில் உள்ள சிவாலயத்திற்குச் சந்திரமணி தேவி சென்றபோது அங்கிருந்த சிவலிங்கத்திலிருந்து தோன்றிய மிகப்பெரிய ஒளி ஒன்று அவரைச் சூழ்ந்தது. பின் அவரது வயிற்றினுள் புகுந்து மறைந்தது. சில நாட்களிலேயே சந்திரமணி தேவி கருவுற்றார். 1836ம் ஆண்டு, பிப்ரவரி 18 அன்று, உலகின் அஞ்ஞான இருளைப் போக்கும் ஞான சூரியனாக அவ்வருட் குழந்தை அவதரித்தது. கயாவில் உள்ள கதாதரப் பெருமானின் அருளால் பிறந்த குழந்தை என்பதால், 'கதாதரன்' என்றே அவனுக்குப் பெயர் சூட்டினர்.

குழந்தை கதாதரன் அருகிலிருந்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். சக மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு அருகில் உள்ள மாந்தோப்புக்குச் சென்று விளையாடிப் பொழுதுபோக்குவது அவனது வழக்கம். ஓவியம் வரைவதிலும் நல்ல ஆர்வம். களிமண்ணைக் கொண்டு அழகாக பொம்மைகள் செய்வான். படிப்பைவிட விளையாட்டு, ஓவியம், நாடகம் போன்ற விஷயங்களிலேயே அவனுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது.

ஒரு சிவராத்திரி. அன்று சிவபெருமானின் மகிமையை விளக்கும் நாடகம் ஒன்று நடந்தது. கதாதரன் சிவபெருமான் வேடம் பூண்டான். நாடகமேடையை நோக்கி நடந்தான். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. உடல் நடுங்கியது. சற்று நேரத்தில் சமாதி நிலைக்குச் சென்றுவிட்டான். மூச்சுப் பேச்சில்லாத அவன் நிலை கண்டு அனைவரும் பயந்தனர். மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தும் பயனில்லை. வெகுநேரம் கழித்தே நினைவு திரும்பியது. நாளாக நாளாக கதாதரனுக்கு இறைநாட்டம் அதிகரித்தது. கடவுள் பெயரை யாரேனும் உச்சரித்தால் போதும், ஆழ்ந்த சமாதிக்குள் சென்றுவிடுவான். வெகுநேரம் கழித்துத்தான் இயல்பு நிலைக்கு மீள்வான். ஆனால் அதைக் கண்ட மற்றவர்கள் அதனைப் பித்த மயக்கம் என்றும், உறக்கம் என்றும் தவறாகப் புரிந்துகொண்டனர்.

கதாதரனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது தந்தை க்ஷுதிராம் சாட்டர்ஜி திடீரென மரணமடைந்தார். அவரது மறைவு குடும்பத்தைப் பெரிதும் பாதித்தது. ஆதரிப்பார் யாருமில்லை. மூத்த மகன் ராம்குமார் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சிறுவன் கதாதரனை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து வளர்க்க ஆரம்பித்தார்.

காமர்புகூருக்கு அடிக்கடிப் பல சாதுக்கள் வருவர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வான் கதாதரன். அவர்களுடனேயே தங்குவான். பூஜைகள் செய்வான். பஜனைகளில் கலந்து கொள்வான். எங்கே அந்த சாதுக்களுடன் சேர்ந்து கதாதரனும் வீட்டைவிட்டுச் சென்று விடுவானோ என்று அன்னை அஞ்சினார். இதை அறிந்த சாதுக்களில் ஒருவர் சந்திரமணி தேவியை நாடி வந்து, கதாதரனைப் பற்றிக் கவலை கொள்ளவேண்டாம் என்றும், அவன் இந்த உலகத்தை உய்விக்க வந்திருக்கும் மகாபுருஷர்களுள் ஒருவன் என்றும் கூறினார். அதைக் கேட்ட அன்னை கொஞ்சம் கொஞ்சமாகக் கவலையிலிருந்து மீண்டார்.

தொடர்ந்த ஆண்டுகளில் அண்ணன் ராம்குமார், இளைய அண்ணன் ராமேஸ்வர் மற்றும் சகோதரிகளுக்குத் திருமணம் நடந்து முடிந்தது. சில மாதங்களிலேயே, அண்ணன் ராம்குமாரின் மனைவி, பிரசவத்தின்போது திடீரென மரணமடைந்தார். குடும்பம் உதவிக்கு யாருமில்லாமல் தத்தளித்தது. ஆறுதலுக்காகவும், பிழைப்புக்காகவும் கொல்கத்தா நகரத்துக்குப் போனார் ராம்குமார். வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்யும் பணியைச் செய்தார். தனக்கு உதவியாக கதாதரனையும் அழைத்துக் கொண்டு போனார்.

இளைஞரான கதாதரருக்கு கொல்கத்தா மிகவும் பிடித்துப் போயிற்று. அண்ணனுக்கு உதவியாக வீடுகளுக்குச் சென்று பூஜை செய்வதும், பூஜைக்கு உதவுவதுமான பணிகளைச் செய்தார். மிகவும் மனமுருகி, உண்மையான பக்தி பாவத்துடன், நீண்ட நேரம் பூஜை செய்வது அவரது வழக்கம். அதனால் பூஜைக்கு அழைப்பவர்கள் கதாதரரையே அழைக்க ஆரம்பித்தனர்.

ராணி ராசமணி தேவி என்பவர் சிறந்த காளி பக்தை. அவர் அன்னையின் திருவாக்கிற்கேற்ப கங்கை நதிக்கரையில் ஆலயம் ஒன்றை எழுப்பினார். ராம்குமார் அந்தக் காளி கோயிலின் பூஜாரியாக நியமிக்கப்பட்டார். உதவியாளராக கதாதரர் நியமிக்கப்பட்டார். ஒருமுறை ஒரு பூஜகரின் கவனக் குறைவால் ராதாகிருஷ்ண விக்ரகத்தின் கால் ஒன்று உடைந்து விட்டது. இதைப் பெரும் அபசகுனமாகக் கருதிய ராணி ராசமணி தேவி, அதற்குப் பதிலாக வேறொரு புதிய விக்ரகத்தை நிறுவி வழிபாடு செய்யுமாறு அர்ச்சகர்களைக் கேட்டுக்கொண்டாள். அப்போது அங்கே வந்த கதாதரர், "சரிதான், தன் மருமகனான மதுரநாதரின் கால் ஒன்று உடைந்து போய்விட்டால், ராணி, அவருக்குச் சிகிச்சை செய்வாரா, அல்லது வேறு மருமகனைத் தேடிக் கொள்வாரா?" என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வி அனைவரையும் சிந்திக்கவைத்தது. இறுதியில் முடிவெடுக்கும் பொறுப்பு கதாதரரிடமே விடப்பட்டது. கதாதரரும், உடைந்த அதே சிலையின் கால்களைச் செப்பனிட்டார். நாளடைவில் காளியன்னை ஆலயத்தின் பூசாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

கதாதரரின் பூஜை, பிற பூஜகர்கள் போல் கடமைக்காக அல்லாமல் ,ஆத்மார்த்தமாக இருக்கும். நேரம் போவதே தெரியாமல் பூஜை செய்வார். அன்னை நேரில் அமர்ந்து இருப்பதுபோல் நினைத்துப் பேசுவார். பாடுவார். சமயங்களில் எழுந்து கூத்தாடவும் செய்வார். சிலசமயம் தன்னை மறந்து சமாதியில் உட்கார்ந்திருப்பார். யார் அழைத்தாலும் எழமாட்டார். அவரது பக்திபாவம் முற்றிக் கொண்டே போனது. தூக்கத்தை இழந்தார். உணவை மறந்தார். எப்பொழுதும் அன்னையின் நினைவிலேயே இருக்கலானார். பார்ப்பவர்கள் இதனால் அவருக்குச் சித்தம் கலங்கி விட்டதோ என நினைக்குமாறு அவரது நடவடிக்கைகள் இருந்தன. பூஜை செய்துகொண்டே இருப்பார், தீபம் காட்ட மறந்து விடுவார். நைவேத்யம் செய்யாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். பக்தர்கள் கொண்டுவந்த பூக்களை அன்னைக்குச் சாற்றுவதற்குப் பதிலாகத் தன் தலையில் போட்டுக்கொண்டு விடுவார். சிலைபோல் அசையாமல், கண்களை இமைக்காமல் உட்கார்ந்திருப்பார். அன்னையைக் காண வேண்டும், காளி அன்னையின் தரிசனம் பெறவேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. நாளுக்குநாள் அது வலுப்பட்டது.

ஒருநாள்... பூஜை செய்து கொண்டிருந்தார் கதாதரர். திடீரென்று அவரது உள்ளம் பரவசமானது. "அம்மா, அம்மா உன்னை நான் எப்போது காண்பேன், ஐயோ இந்த வாழ்க்கை உன்னைக் காணாமல் வீணாய்க் கழிந்து கொண்டிருக்கிறதே, ராமப்பிரசாதர் போன்ற பக்தர்களுக்கெல்லாம் காட்சியளித்த தாயே, என்னைப் புறக்கணிப்பது ஏன்?, நான் அந்த அளவிற்குப் பாவியா என்ன?" என்று அழுது, அரற்றிக் கண்ணீர் சிந்தினார். காளிக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆடையின் ஒருமுனையைப் பற்றியவாறே சுற்றிச்சுற்றி வந்தார். முகத்தைத் தரையில் தேய்த்துக்கொண்டு புலம்பினார். திடீரென உணர்ச்சி வசப்பட்டவராய் "அம்மா, நீ காட்சி தரவில்லையென்றால் நான் இப்படியே மோதி என் உயிரை விட்டுவிடுவேன்" என்று கூறியவாறே, அருகில் உள்ள தூணில் போய் தலையைத் தொடர்ந்து முட்டிக்கொண்டார். அன்னையின் அருட்காட்சி அவருக்குக் கிடைக்கவில்லை.

நிலைகுலைந்து போனார் கதாதரர். "அம்மா, இதற்கும்கூட உன் திருவுள்ளம் இரங்கவில்லையா? இனியும் நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்?" என்று கூறியவாறே, ஆவேசத்துடன், பவதாரிணியின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி ஓங்கித் தன் தலையை வெட்டிக்கொள்ளப் போனார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
எந்த அன்னையின் காட்சிக்காக அவர் இவ்வளவையும் செய்தாரோ, எந்த அன்னையைக் காண முடியவில்லையே என்று தன் உயிரைத் தியாகம் செய்யப் போனாரோ, அந்த அன்னை, அழகிய திருக்கோலத்துடன் அன்பனின் முன் காட்சி தந்தாள். கலகலவென நகைத்தாள். அவ்வளவுதான் சுயநினைவை இழந்தார் கதாதரர். அப்படியே கீழே சாய்ந்தார்.

அன்னையின் தரிசனம் கண்ட அந்த நாள் முதல் அவரது வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. ஆன்மிகத்தின் உச்சம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். 'மதுர பாவனை' உட்படப் பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கையாண்டு அன்னையை வழிபடலானார். தன்னைப் பெண்ணாகவும், காளியன்னையைத் தன் அன்பிற்குரியவராகவும் நினைத்து வணங்கினார். பெண்களைப் போல் ஆடைகளை உடுத்திக் கொண்டார். பெண்கள் அணியும் ஆபரணங்களை அணிந்து கொண்டார். அவரது சிந்தனை, செயல் அனைத்துமே ஒரு பெண்ணைப் போன்று மாறிவிட்டன.

அப்படியே விட்டால் சாமியாராக மாறிவிடுவாரோ என்றஞ்சிய கதாதரரின் தாய் சந்திரமணி தேவி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். அன்னையின் வாக்கை மறுக்கமாட்டாத கதாதரரும் உடன்பட்டார். 1859ம் ஆண்டு மே மாதத்தில், ஐந்து வயதுச் சிறுமியான சாரதாவுக்கும் இருபத்து மூன்று வயது வாலிபர் கதாரருக்கும் திருமணம் நிகழ்ந்தது. அக்காலத்தில் பால்ய விவாகம் சகஜம் என்பதால் வயது வித்தியாசத்துக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. திருமணம் முடிந்ததும் கதாதரர் வழக்கம்போலக் காளிகோவில் பூஜைக்காக தக்ஷிணேசுவரம் சென்றுவிட்டார். சாரதா சிறுமி என்பதால், அக்கால வழக்கப்படி திருமணத்திற்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்று வசித்தாள்.

தக்ஷிணேஸ்வரத்தில் கதாதரரின் வழிபாடு தொடர்ந்தது. பைரவி பிராம்மணி என்ற பெண்மணியிடமிருந்து தாந்திரீக வழிபாட்டு முறைகளை உபதேசமாகப் பெற்றார். பின்னர், தோதாபுரி என்ற குருவிடம் தீக்ஷை பெற்றார். 'ராமகிருஷ்ணர்' என்ற தீக்ஷா நாமமும் அவருக்கு வழங்கப்பட்டது. தீக்ஷை பெற்ற ராமகிருஷ்ணர் பலவித சோதனை முறைகளைக் கையாண்டு பலவித மதநெறிகளைப் பின்பற்றி வழிபாடுகளைச் செய்து பார்த்தார். "நதிகள் பலவாக இருந்தாலும் அவை போய்ச் சேருவது கடல் என்ற ஒன்றையே; அதுபோல சமயங்கள் பலவாறாக இருந்தாலும் அவை அனைத்தும் கடவுள் என்ற மூலத்தை அடையவே வழிகாட்டுகின்றன" என்பதை உணர்ந்தார். அதனையே தன்னை நாடி வந்தவர்களுக்கும் போதித்தார்.

இந்நிலையில் ராமகிருஷ்ணரைத் தேடி மனைவி சாரதாதேவி கொல்கத்தா வந்து சேர்ந்தார். மனைவியிடம், ராமகிருஷ்ணர், "நீ என்னை உலகியல் வாழ்விற்கு இழுக்கத்தான் இங்கு தேடி வந்திருக்கிறாயா?" என்று கவலையுடன் கேட்டார். அதற்கு சாரதையோ "இல்லை, உங்கள் ஆன்மிகப் பணிக்கு உதவுவதே என் லட்சியம். உங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்" என்று பதிலளித்தார். அது கேட்டு ராமகிருஷ்ணர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

ஒரு குருவாக இருந்து வாழ்க்கை உண்மைகளையும், மெய்ப்பொருள் தத்துவத்தையும் சாரதாதேவிக்கு உபதேசித்தார். அதன் விளைவால் விரைவிலேயே சாரதாதேவியும் அடிக்கடி சமாதிப் பரவச நிலையை அடையும் அளவிற்கு உயர்ந்தார். சாரதாதேவியை ராமகிருஷ்ணர் வெறும் மனைவியாக அல்லாமல், பவதாரிணியாக, தான் வழிபடும் காளியாகவே நினைத்தார். சமயங்களில் அவரை மலர்களால் அலங்கரித்து, பீடத்தில் எழுந்தருளச் செய்து, காளி அன்னையாகவே பாவித்து, மலர் சாற்றி, தூப, தீபம் காட்டி வழிபடுவார்.

நாளடைவில் குருதேவரின் ஆன்மிகப் பெருமையைக் கேள்விப்பட்டு ஒவ்வொரு அன்பராக வரத் தொடங்கினார்கள். 'ம' என்றறியப்படும் மகேந்திரநாத் குப்தா, சசிபூஷண் சக்கரவர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட சசி, காளிபிரசாத் சந்திரர் என்னும் சுவாமி அபேதானந்தர், சுரேந்திரநாத் மித்ரா, சுவாமி சாரதானந்தர். சுவாமி அத்வைதானந்தர் என்றழைக்கப்பட்ட பரமஹம்சரைவிட வயதில் மூத்தவராக இருந்தாலும், அவர் அருள்வழியை ஏற்றுக் கொண்ட மூத்த கோபால், சின்ன கோபால் எனப் பலரும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்கள் ஆகினர். இவர்களில் தலைமையானவராக நரேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர் விளங்கினார்.

தான் பெற்ற அனுபவங்களை குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் தன்னை நாடி வருபவர்களுக்குப் போதித்தார் ராமகிருஷ்ண பரமஹம்சர். சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் தேர்ந்தவரான அவரது ஆன்மீகக் கருத்துக்கள் பக்தர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவின. பாரதத்தின் வளர்ச்சிக்கான புதிய இளைஞர் படையாக ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் குழாம் உருவானது.

ஒருநாள் தன்னைத் தனியாக வந்து பார்க்குமாறு விவேகானந்தரை அழைத்தார் பரமஹம்சர். அந்த அறையில் குருதேவரும், அவரும் மட்டுமே இருந்தனர். இருவரும் தீவிர ஆழ்நிலை தியானத்தில் மூழ்கினர். விவேகானந்தரைத் தம் அருகே வரவழைத்த குருதேவர், பரவசநிலையில் தன் கைகளை அவர் தலைமீது வைத்து ஆசிர்வதித்தார். ஒரு மிகப்பெரிய பேரொளி தன்னைச் சூழ்வதையும், ஒரு பெரும்சக்தி தன்னுள் புகுவதையும் விவேகானந்தர் உணர்ந்தார். சற்றுநேரத்தில் அந்த உணர்விலிருந்து விடுபட்டார். அவர்முன் கண்ணீர் சொரிந்தவராய் நின்ற ராமகிருஷ்ணர், "அப்பா, இந்தப் புவியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்கென நான் பெற்றிருந்த அனைத்து சக்திகளையும் உனக்குக் தந்துவிட்டேன். இன்று முதல் நான் ஒரு பக்கிரி. இந்தச் சக்தியைக் கொண்டு, இந்த உலகம் தழைக்க நீ பாடுபடுவாய்!" என்று ஆசிர்வதித்தார். அதைக் கேட்டுக் கலங்கிய கண்களுடன் குருவின் பாதம் பணிந்தார் விவேகானந்தர்.

நாளடைவில் பரமஹம்சரின் உடல்நலம் தொண்டைப் புற்றுநோயால் சீர்கேடடைந்தது. 1886, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாள். மிகவும் சோர்வுற்றிருந்தார் அவர். பகல் முழுக்க சமாதி நிலையிலேயே இருந்தார். நள்ளிரவாயிற்று. சமாதியிலிருந்து மீண்டு வந்தவர், 'மிகவும் பசிக்கிறது!' என்றார். உணவாக அளிக்கப்பட்ட ஒரு கோப்பைக் கஞ்சியை மிகவும் சிரமப்பட்டு அருந்தினார். நள்ளிரவு ஒரு மணி அளவில் 'அம்மா காளி', 'அம்மா காளி' என்று தொடர்ந்து சிலமுறை உச்சரித்தார். பின் படுக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டார். அவரது உடல் சிலிர்த்தது. வியர்த்தது. அவருடைய கண்கள் இமைக்காமல் மூக்கு நுனியில் பதிந்தன. அவ்வளவுதான். அதன்பின் உடலில் எந்தவித அசைவுமில்லை. ஆம். பாரதத்திற்கு ஆன்மீகப் புத்துயிர் ஊட்டவந்த பரமஹம்சர் என்னும் மகாபுருஷர் பிரம்மத்துடன் ஒன்றுகலந்தார்.

குருதேவரின் பரிபூரண ஆசிகளுடனும் அன்னை சாரதா தேவியின் உறுதுணையுடனும் சுவாமி விவேகானந்தர் தலைமையிலான அந்த இளைஞர் படை மகத்தான சாதனை புரிந்தது. பாரதத்தின் புதிய எழுச்சிக்கும், அதன் வீரிய மறுமலர்ச்சிக்கும் வித்திட்டது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் என்னும் அருட்கோபுரத்தின் உச்சியில் துலங்கும் சுவாமி விவேகானந்தர் என்னும் ஒளி இன்றைக்கும் பாரதத்திற்குக் கலங்கரை விளக்கமாக நிற்கின்றது.

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline