|
ஆத்ம சாந்தி (அத்தியாயம் - 8) |
|
- சந்திரமௌலி|டிசம்பர் 2014| |
|
|
|
|
திசை மாற்றம் இதுவரை: திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன, மத்தியவர்க்க இளைஞன் பரத் நிகழ்காலக் குடும்ப பாரத்தைச் சுமக்க தன் பெரிய எதிர்காலக் கனவுகளை இறக்கி வைத்துவிட்டு ஒரு சாதாரண வேலைக்குத் தயாராகிறான். அதிர்ஷ்டவசமாக கேந்திரா மோட்டார்சின் உரிமையாளர் மகள் கேந்திராவின் நட்பும், அதே கம்பெனியில் பிடித்த வேலையும் கிடைக்கிறது. இதே வேளையில், கேந்திரா மோட்டார்சின் நிர்வாகம் கேந்திராவின் தந்தை விஷ்வநாத்தால் சீரமைக்கப்பட்டு அவர் நண்பர் கோபால்ரத்னத்தின் பொறுப்புக்கு வருகிறது. கேந்திரா மோட்டார்சின் போட்டிக் கம்பெனியான கேடிகே மோட்டார்சின் சதிவலை இவர்களைச் சுற்றிப் பின்னப்படுகிறது. கேந்திரா மோட்டார்ஸ் என்ற சுதேசிக் கம்பெனி இந்த வியூகத்தைச் சமாளிக்கிறதா? வாசியுங்கள்...
*****
மறுநாள் கேந்திரா மோட்டார்சின் பங்குகளின் விலை ஒரு சதவிகிதம் குறைந்து, நாள் இறுதிக்குள் ஆறு சதவிகிதம் ஏறியது. எல்லா வர்த்தக ஊடகங்களிலும் கேந்திரா மோட்டார்சின் நிர்வாக மாற்றம் மற்றும் தொலைநோக்குத் திட்ட அறிவிப்புக்கள் கோட் சூட் போட்ட பங்குச்சந்தை அறிவுஜீவிகளால் துவைத்து, அலசிக் காயப்போடப் பட்டன. இந்த நிகழ்வுகளுக்கு அஸ்திவாரமாக அன்று காலை கேந்திரா மோட்டார்சின் தலைமை அலுவலகத்தில் போர்டு மீட்டிங் நடந்தது. கேந்திராவும், வினயும் தங்களின் திட்டங்களைச் சுருக்கமாக அந்தக் கூட்டத்தில் அளித்தனர். கேந்திராவின் திட்டம் தங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருந்ததால், விஷ்வநாத் கேந்திராவை துணை நிர்வாக அதிகாரியாக நியமிக்க முன்மொழிந்தார். கோபால்ரத்னம் இந்தத் தேர்வை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரிபடாமல், ஆனால் உள்ளுக்குள் ஒருவித கசப்புணர்வோடு அந்தத் தீர்மானத்தை வழிமொழிந்தார். வினய் விற்பனைத்துறை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டான். பெருங்காற்று எந்தப் பக்கம் வீசுகிறதோ அதே திசையில் சிறிய நாற்றுக்கள் தலை சாய்ந்து அசைவதுபோல், அந்த போர்டுரூமில் விஷ்வநாத் தீர்மானங்களை எடுத்துரைத்ததும் மறு பேச்சில்லாமல் அத்தனை டைரக்டர்களும் ஆமோதித்தனர்.
இத்தனைக்கும் கேந்திராவையும், வினயையும்விட அனுபவம் வாய்ந்த, திறமை வாய்ந்த அதிகாரிகள் அந்தப் பொறுப்புகளுக்குத் தயாராக இருந்த போதிலும், என்றைக்கிருந்தாலும் இவர்கள் தலைமை ஏற்க வேண்டியவர்கள் தானே, இப்போதே அதன் பாதையைச் சீரமைத்துக்கொள்வதில் என்ன தவறு என்று சிலரும், இதை ஆட்சேபித்து விஷ்வநாத்தின் விரோதத்தை ஏன் சம்பாதிக்கவேண்டும் என்று சிலரும், கார்ப்பரேட்டாயிருந்தா என்ன, கட்சியாயிருந்தா என்ன, எங்கேயும் வாரிசுக்குத்தான் வாய்ப்பு என்று சிலரும் நினைத்து ரெடிமேடாக ஒட்டவைத்த சிரிப்போடு டிவியில் அடுத்த சீரியல் பார்க்கும் மன உணர்வோடு அந்த மீட்டிங் நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதுவரை நடந்தவை எதுவும் அவர்களுக்கு அதிர்ச்சி தரவில்லை. ஆனால் அடுத்து விஷ்வநாத், "டியர் ஃபெல்லோ டிரக்டர்ஸ்! இப்ப உங்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு. பார்டன் மீ ஃபார் கீப்பிங் இட் எ சீக்ரெட். உங்க எல்லாருக்கும் தெரியும், கடந்த சில வருஷங்களா நாம கடும்போட்டியை, குறிப்பா வெளிநாட்டிலிருந்து, கேடிகே மோட்டார்சுடைய போட்டியை சமாளிச்சுட்டிருக்கோம். இதுவரை நாம மார்க்கெட் ஷேர், இன்னொவேஷன் எல்லாத்துலேயும் முன்னணியில் இருக்கோம். ஆனா நம்ம இன்னும் ஆட்டோமொபில் இண்டஸ்ட்ரிலே, உலக அளவுல பெரிய எடத்தைப் பிடிக்கணும்னா புது யுக்தி, புதிய ப்ராடக்ட்ஸ் இதெல்லாம் தேவைப்படுது. அதற்கு நமக்கு நிறைய பணம், திறமையான தலைமை இதெல்லாம் தேவை. அதேநேரம் இருக்கறதை விட்டுட்டு பறக்கறதை பிடிக்கபோன கதையாவும் முடியக்கூடாது. இதையெல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டு நானும், இந்த கம்பெனியின் புதிய நிர்வாக அதிகாரியான என் பெஸ்ட் ஃப்ரெண்ட் கோபால்ரத்னமும்…." என்னும்போதே அவையில் பலத்த முணுமுணுப்பு.
"யெஸ்... யெஸ்.. இந்த நொடியிலிருந்து நான் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகுகிறேன். கோபால்ரத்னம் அந்தப் பதவியை இனிமேல் நிர்வகிப்பார். நான் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையை நேரடியாக கவனிப்பேன். மத்த நிர்வாகச் சுமை எல்லாம் கோபால்ரத்னமும், கேந்திராவும் கவனிச்சுக்குவாங்க."
"இது ஒரு துணிச்சலான முடிவு. ஆனால் பங்குச்சந்தை, இன்வெஸ்டர்ஸ் எப்படி எடுத்துக்குவாங்கனு தெரியலை. எப்படி நாம அதை எதிர்கொள்ளப் போறோம்?" ரத்தன்ராஜ் இன்னும் விஷ்வநாத்தின் அறிவுப்புக்களின் தாக்கத்தை முழுதும் ஜீரணிக்காதவராக, கவலையோடு கேட்டார்.
"நல்ல கேள்வி ரத்தன். இந்த அரேஞ்ச்மெண்ட் ஒரு தற்காலிக மாற்றம். இந்த நிறுவனமே இன்னும் ரெண்டு வருஷத்துல தலைகீழா மாறப்போகுது. டேக் மை வேர்ட். நம்ம புது ப்ராடக்ட் இந்த இண்டஸ்ட்ரியவே அடியோட புரட்டிப்போடும். இந்த கம்பெனி நாம கற்பனை பண்ணமுடியாத அளவு விஸ்வரூபம் எடுக்கப்போகுது. அப்ப நானோ, கோபால்ரத்னமோ அவ்வளவு பெரிய கார்ப்பரேஷனை நிர்வாகிக்க முடியுமானு தெரியாது. காலம் இந்தக் கம்பெனியோட எதிர்காலத் தலைமையை முடிவு செய்யும்" என்று சொன்னவாறு அவர் கேந்திரா மீது பார்வையைச் செலுத்தினார்.
அதாவது அவர் பார்வையைச் செலுத்தியதாக கோபால்ரத்னம் நினைத்தார். முன்தினம் சக்ரவர்த்தி தன்னிடம் எச்சரித்த விஷயங்களும், இப்போது தன் கண்முன்னே நடந்துவரும் நிகழ்ச்சிகளும் அவர் மனதை அலைக்கழித்தன. கோபால்ரத்னமும், கேந்திராவும் நிர்வாகத்தைப் பார்த்துப்பாங்க. இது தற்காலிக மாற்றம்தான். எதிர்காலத் தலைமையைக் காலம் முடிவு செய்யும். விஷ்வநாத்தின் ஒவ்வொரு வார்த்தையும், அவருக்குள்ளே விஷ்வநாத்தோடு கொண்டிருந்த நீண்டநாள் நட்பின் பிணைப்பை ரம்பம் போட்டு அறுத்துக்கொண்டிருந்தன.
விஷ்வநாத் தொடர்ந்தார் "பங்குசந்தை தெர்மாமீட்டர் மாதிரி. நம்ம கம்பெனியோட நிலைமையை ஒரு கோணத்தில்தான் பிரதிபலிக்கும். அதனால சில தொலைநோக்குத் திட்டங்களை நாம எடுத்துவைக்கும் போது தற்காலிகமா பங்குசந்தைல ஏற்ற இறக்கங்கள் வரலாம். அதற்கு நாம பயப்படக்கூடாது. வீ ஷுட் டூ வாட் வீ ஃபீல் ஹானஸ்ட்லி ரைட். நம்ம புது ப்ராடக்ட் டெவலப்மெண்டுக்கு நிறையப் பணம் தேவைப்படுது. அதனாலே நாம பங்குகளை பொதுமக்களுக்கு குடுக்கப்போறோம். யெஸ். வீ வில் கோ பப்ளிக், ஐ.பி.ஓ. வேதாந்தம், அவர் கம்பெனி செக்ரெடரி, வில் ஷேர் மோர் டீடெய்ல்ஸ். நான் அதிகம் பேசிட்டேன். ஐ ப்ராமிஸ் இதுதான் லாஸ்ட் அனவுன்ஸ்மெண்ட். இனிமே பேசறதைக் குறைச்சு, புது ப்ராடக்ட் டெவலப்மெண்ட்ல முனையப்போறேன். இந்த அனவுன்ஸ்மெண்ட் புது ப்ராடக்ட் பற்றி..."
"கோபால்ரத்னம் அதற்குமேல் பொறுக்கமுடியாமல், தொண்டையைச் செருமி "விஷ்வா எக்ஸ்க்யூஸ் மீ, மே ஐ ஹாவ் எ மினிட் வித் யூ?"
"ஐ எம் இன் அ ஃப்லோ. ஷால் ஐ இண்ட்ரட்யூஸ் தி நியூ ப்ராடக்ட் ஃபர்ஸ்ட்?"
"புது ப்ராடக்ட் பத்தி அனவுன்ஸ் பண்றதுக்கு முன்னால பேசணும்".
விஷ்வநாத் விளையாட்டாகத் தலையசைத்து கோபால்ரத்னத்தின் தோளில் கைபோட்டு அவரோடு நகர்ந்தவாறே, "சாரி ஃபார் தி கமர்ஷியல், சாரி எசன்ஷியல் பிரேக். ஐ நீட் டு கோ. பிகாஸ்" என்று கண்ணடித்து "ஹி இஸ் நவ் மை பாஸ்" என்று கிண்டல் அடித்தார். கோபால்ரத்னம் இதை எதையும் ரசிக்கவில்லை. |
|
வேதாந்தம் பொதுப்பங்கு விற்பனையைப் பற்றி விளக்கச் சொல்லிவிட்டு, விஷ்வநாத்தும் கோபால்ரத்னமும் போர்டுரூமை விட்டு வெளியே வந்தனர். கோபால்ரத்னம் தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, "விஷ்வா நீ புது ப்ராடக்ட் டெவலப்மெண்ட்டை நிர்வகிக்கப் போறதும், நான் மொத்த நிர்வாகத்தையும் ஏத்துக்கறதும் தானே நாம முடிவு பண்ணின விஷயங்கள். பொதுப்பங்கு வினியோகிக்கறது, இந்தத் தலைமை மாற்றம் தற்காலிகம் இதெல்லாம் நாம ஒண்ணுமே கலந்து பேசிக்கலையே. அதையும் விடு. எந்த நம்பிக்கையில இன்னும் ஒரு வருஷத்துல இண்டஸ்ட்ரிய தலைகீழா புரட்டிடுவோம்னு சொல்ற?"
"எல்லாம் நாம டெவலப் பண்ணப்போற புது எஞ்சின், எஞ்சின்னு கூட சொல்லமுடியாது, டோட்டல் வெஹிகிள் பேக்கேஜ் அதை வச்சுதான் இவ்வளவு தீர்மானமா சொன்னேன். என்கிட்ட விடு அதை. இதை இந்த அளவுக்காவது அறிவிக்கலைனா நம்ம கம்பெனி ஷேர் படுத்துரும். ஆனா இதைப்பத்தி இப்ப இவ்வளவுதான் வெளிப்படையா சொல்லமுடியும்."
"ஏன் என்னையே சந்தேகப்படறியா?"
"சேச்சே, ஏன் புரிஞ்சுக்காம பேசறே. இந்த டெக்னாலஜிகலி அட்வான்ஸ்ட் வேர்ல்டுல நாம பேசறது, செய்யறது எல்லாம் சீக்ரெட்டாவே இருக்கும்னு நினைக்கிறது முட்டாள்தனம். இப்ப நாம பேசறதைகூட ஸ்பை கேம்ல யாராவது கவனிச்சிட்டிருக்கலாம்."
"ஓகே ஓகே. இருந்தாலும் அந்தப் புது எஞ்சின் நாம ஸ்விட்சர்லாந்துல முடிவு பண்ணின V-9X எஞ்சின்தானே. அது நல்ல ப்ராடக்ட்தான் ஆனால் புரட்டிப்போடற அளவு ஒண்ணுமில்லை."
"லெட் அஸ் கோ பேக் டு த மீட்டிங். அங்க நான் உனக்கு விளக்கறேன். பை தி வே கன்க்ராடுலேஷன்ஸ் கோபால். எனக்கு நீ இந்தப் பதவிக்கு வந்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ஆல் தி பெஸ்ட்" உண்மையாகவே கண்கள் பனிக்க விஷ்வநாத் தன் நண்பனை வாழ்த்தினார்.
கோபால்ரத்னமும் ஒரு நிமிடம் அசந்துபோய், தன் பழைய நண்பன் விஷ்வநாத்தை அந்த கணம் பார்த்தார். தன் மகன் ஓரம் கட்டப்பட்டதையும், தனக்கு இந்தப்பதவி தற்காலிகம் என்று சொன்னதையும் அந்தக்கணம், அந்த ஒருகணம் மறந்துபோனார். "தேங்க்ஸ் விஷ்வா. இது நீ குடுத்த ஆப்பர்டுனிடி"
மீண்டும் போர்டுரூமுக்குள் இருவரும் நுழையவும், அதுவரை சலசலப்பாக இருந்த அறை மீண்டும் அமைதியானது. விஷ்வநாத் கணீர் குரலில், "நான் டெவலப் பண்ணப்போற புது எஞ்சின்" என்று சொல்லி ப்ரொஜெக்டரை இயக்கினார். திரையில் "V09+tblos" Technologically brilliant oil saver. என்று லேசர் வெளிச்சத்தில் பளிச்சிட்டது. நானும் கோபால்ரத்னமும் ஸ்விட்சர்லாந்துல புது ப்ராடக்ட் கான்சப்ட் டெவலப் பண்ணும்போது V09 எஞ்சின் பத்திப் பேசினோம். இந்த V09+ அதனோட அட்வான்ஸ்ட் வெர்ஷன். இது இன்னைக்கு சாதாரண, ஏன் ரொம்பக் கம்மியா எரிபொருள் உபயோகிக்கிற ஹைப்ரிட் எஞ்சின்களை விட நூத்துல ஒரு பங்கு எரிபொருள் மட்டுமே உபயோகிச்சு அதே தூரத்தைக் கடக்கும். இது பொதுமக்களுக்கு எளிதான விலையிலயும் கிடைக்கும்கிறது தான் இதோட இன்னொரு அதிசயம். இதைப்பத்தி இப்ப இவ்வளவுதான் சொல்லமுடியும். நிச்சயம் இது இந்த உலகத்துக்குப் பெரிய பலனைக் குடுக்கும். இதை ரொம்ப பாதுகாப்பா டெவலப் பண்ணனும்னுதான் நானே பொறுப்பு எடுத்துட்டிருக்கேன். இந்தப் பேடண்ட் நம்ம கம்பெனிக்கும், இந்தியாவுக்கும் சொந்தமாயிருக்கணும். ஐ நீட் யுவர் சப்போர்ட்." என்று சொல்லி அமர்ந்தார்.
ஒரு நொடி அமைதிக்குப் பிறகு, கேந்திராதான் முதலில் எழுந்து கைதட்டினாள். எல்லாரும் அவளோடு சேர்ந்துகொண்டார்கள். வினய் "பிரில்லியண்ட் ப்ளான் அங்கிள். ஆல் த பெஸ்ட். புது ப்ராடக்டை எப்படி லான்ச் பண்ணனும்னு இப்பவே நான் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்" என்றான்.
விஷ்வநாத்தின் புதிய எஞ்சின் தயாரிப்பு அறிவுப்புதான் அந்த நாளின் இறுதியில் பெரிய செய்தியானது. கோபால்ரத்னம் நிர்வாகப் பொறுபேற்ற விஷயம் ஓரங்கட்டப்பட்டது.
***** "ஏய் பரத், வேலை கிடைச்சதுக்கு வெறும் ஸ்வீட்தானா?" ஸ்வீட்பாக்ஸ் கொடுத்த பரத்தை ரேக்கினார் கனகராஜ்.
"என்ன ட்ரீட் வேணும் அங்கிள், குடுத்துட்டாபோச்சு. மனோ மட்டும் இருந்திருந்தா அவனை ட்ரீட் குடுக்க வெச்சிருப்பேன்."
"என்ன பெரிய வேலை, கலெக்டர் உத்தியோகமா? இல்லை உங்க மனோ மாதிரி வெளிநாட்டு வேலையா? ஊர்க்கோடில ஒரு சாதாரண வேலை. ஏதோ இதுவாவது கெடச்சுதேனு இருக்கோம். நீங்க வேற" கஸ்தூரி வழக்கம்போலத் தன் அலுப்பை வெளிப்படுத்தினாள்.
"என்ன அப்படி சொல்லிட்டீங்க! நம்ம பரத் கேந்திரா மோட்டார்ஸ் சேந்த உடனே கம்பெனி ஷேர் வெலை ராக்கெட் மாதிரி மேலே போயிடுச்சு. இப்படினு தெரிஞ்சிருந்தா நான் கொஞ்சம் ஷேர் வாங்கியிருப்பேன். நீங்க பாத்துட்டேயிருங்க, பரத் இந்தக் கம்பெனில பெரிய நிலைமைக்கு வருவான். வெளிநாடெல்லாம்.சர்வ சாதாரணமா போவான்" என்றார் கனகராஜ்.
இதெல்லாம் அப்போதே நடந்துவிட்டாற் போல் பரத்தின் அப்பா மோகன் கனவில் ஆழ்ந்துவிட்டார்.
சக்கரவர்த்தியும் கைலாஷும் தாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் உயர்தர ஹோட்டல் ரெஸ்டாரண்டில் மங்கிய ஒளியில் தங்கள் சதி ஆலோசனையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தனர்.
"என்ன சக்கி, இந்த விஷ்வநாத் அடங்க மாட்டேங்கிறான். ஷேர் ப்ரைஸ் பாத்தீங்க இல்ல, எகிறிட்டிருக்கு. அவன் மட்டும் நினைச்சமாதிரி இந்த ப்ராடக்டை முடிச்சிட்டா மொத்தமா நாம க்ளோஸ். பாஸ் என்னை புடிச்சு காய்ச்சறாரு. கோபால்ரத்னம் வழியா இந்த ப்ராடக்ட் டெவலப்மெண்ட்டை காலி பண்ணமுடியுமா? பேசினீங்களா அவர்கிட்ட?"
சக்கரவர்த்தி நெற்றியை நெறித்து, "அவசரப்படறீங்க கைலாஷ். இந்த ப்ராடக்ட் டெவலப் பண்ணவிடணும். இது பொன்முட்டை இடற வாத்து. முட்டை இட வெக்கணும். ஆனா அதை நாம கைப்பத்திடணும்."
"நீங்க சொல்றதை நான் ஒத்துக்கறேன். ஆனா இதுல கொஞ்சம் அசந்தாலும் எல்லாம் வாரிக்கிட்டு போயிடும். கொஞ்சமும் இதுல தப்பாகக்கூடாது. பக்காவா ப்ளான் இருக்கணும். இதை நாலு வழியில அப்ரோச் பண்ணனும்."
"நாலு வழியா?"
"ஆமாம். நாலு டீம் நாலு வழியில மடக்கணும். ஒண்ணு மிஸ் ஆனாலும், ஒண்ணு க்ளிக் ஆகும். முதல் டீம் கேந்திரா மோட்டார்ஸ் நிர்வாகத்தை ஒடைக்கறது. கோபால்ரத்னத்தை கைல போட்டுக்கிட்டு, V09 டெவலப் பண்ணினதும் விஷ்வநாத்தை கம்பெனிய விட்டு வெளியே தள்ளிட்டு, ப்ராடக்டை கைப்பத்தறது. ரெண்டாவது டீம் கேந்திரா மோட்டார்ஸ் ஷேர்சை நிறைய வாங்கி போர்டுல நுழையறது. அதோட கோபால்ரத்னத்தையும் கைல போட்டுக்கிட்டா நிர்வாகம் நம்ம கைல. மூணாவது டீம் விஷ்வநாத்தை நெருக்கமா தொடரணும். முடிஞ்சா அவரோட ரிசர்ச் டீம்ல சேந்து ரகசியத்தை அடையணும். இது கொஞ்சம் கஷ்டம். ஆனா செலவு கம்மியான வழி. நாலாவது ரொம்ப சிக்கலான வழி. பெட்ரோல், கேஸ் லாபியிஸ்ட்ஸ். இப்பவே விஷ்வநாத்தோட அறிவிப்புக்கு ரியாக்ஷன் ஆரம்பிச்சிருக்கும். இந்த ரூட் கடைசி வழியா வெச்சுக்கணும். இவங்க ஜெயிச்சிட்டா அந்த புது ப்ராடக்டை மொத்தமா அழிச்சிடுவாங்க."
"மொதல் டீம் வேலையை நான் பாத்துக்கறேன். மத்ததை நீ பாத்துக்க. நான் இப்ப கோபால்ரத்னத்து கிட்டப் பேசணும்."
(தொடரும்)
சந்திரமௌலி, ஹூஸ்டன் |
|
|
|
|
|
|
|
|