Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம்-7)
- சந்திரமௌலி|அக்டோபர் 2014|
Share:
Click Here Enlarge"தவறி விழுபவர் தம்மையே-பெற்ற
தாயும் சிரித்தல் மரபன்றோ?"

கேந்திரா அரக்கப்பரக்க லிஃப்ட் கதவு முழுதும் திறக்குமுன்பே அதை விலக்கித் தன் பிரத்தியேக அலுவலகத்துக்குள் நுழைந்தாள். ஃப்ரெஞ்ச் சென்டின் நறுமணம் அவளது வருகையை இருப்புக்கொள்ளாமல் அங்கு உட்கார்ந்திருந்த பரத்துக்கு அறிவித்தது.

"சாரி ரொம்ப நேரம் காக்க வெச்சுட்டனா? ஒரு முக்கியமான போர்டு மீட்டிங்."

தன்னையறியாமல் படக்கென்று எழுந்து சினேகமான முகத்தோடு, "அப்பாடி வந்தீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பறதா இருந்தேன். நல்லவேளை வன்ட்டீங்க. என்னோட சர்டிபிகேட் ஃபைலை உங்க கார்ல மறந்துபோயி விட்டுட்டேன். அதைக் குடுத்தீங்கன்னா கெளம்பி போய்ட்டேயிருப்பேன்" என்றான் பரத்.

"ஓ அதுக்குதான் வந்தீங்களா?" கொஞ்சம் சுரத்துக் குறைந்து கேட்ட கேந்திரா சுதாரித்துக்கொண்டு தன் கையில் இருந்த மற்ற பளபளப்பான ஃபைல்களின் நடுவே இருந்து பரத்தின் ஓரம் மடங்கிய ஃபைலை எடுத்து "இந்தாங்க உங்க ஃபைல். சர்டிஃபிகேட் எல்லாம் பத்திரமா இருக்கானு பாத்துக்கங்க" என்றாள்.

"இதை யாருங்க எடுத்துக்கப் போறாங்க. யாரும் சீண்டமாட்டாங்க. ஆனா இது இல்லாம எனக்கு வேலை கெடைக்காது. அதுனால எனக்கு இது முக்கியம்."

"காஃபி, டீ ஏதாவது சாப்பிடறீங்களா?"

"எல்லாம் ஆச்சுங்க. அனேகமா இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க ஆபீசுல சாப்பிட்டதுதான் கடைசி காபியா இருக்கும்னு நெனைக்கிறேன்"

"ஏன் அப்படி சொல்றீங்க நல்லாயில்லையா?"

"சே சூப்பரா இருந்ததுங்க. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு இன்டர்வியூ மாட்டிச்சு. எப்படியாவது தேத்திட்டு, வேலை வாங்கிறலாம்னு நெனச்சேன். சர்டிஃபிகேட் கோட்டை விட்டதுல இன்டர்வியூ காலி ஆயிடுச்சு. இப்ப வீட்டுக்குப் போனா பொறுப்பில்லைனு மண்டகப்படி விழும். கொஞ்ச நாளைக்கு இடிசோறுதான்!"

"அய்யோ எங்களுக்கு ஹெல்ப் பண்ணப் போயிதானே உங்க இண்டர்வியூ மிஸ் பண்ணினீங்க. ஐ எம் ஸோ சாரி. ஆமா யாரு திட்டுவாங்க? நீங்க பேயிங் கெஸ்டா எங்கியாவது இருக்கீங்களா?"

"பேயிங் கெஸ்டா, இன்னும் வேலைக்கே வழியைக் காணும், நான் எங்க பே பண்றது? கிழே ரிசப்ஷனிஸ்ட் கிட்டயே இந்த ஃபைலை குடுத்து என்னை அனுப்பிடாம, உங்க பிசியான வேலை நேரத்துல உங்களுக்கு ஹெல்ப் பண்ணினேனு ஒரே காரணத்துக்காக உக்காத்தி வெச்சு பேசிட்டிருக்கீங்க. அதனாலே சுருக்கமா என்னப்பத்தி சொல்லிடறேன். அப்பா அம்மாவோட திருவல்லிக்கேணிலே இருக்கேன். புடிக்காத ஒரு படிப்பு வேற வழியில்லாம, உன்னைப்பிடி என்னைப்பிடினு பாஸ் பண்ணி லா டிகிரி வாங்கிட்டேன். உத்தியோகம் புருஷலட்சணம்னு யாரோ சொல்லிட்டு போயிட்டாங்கங்கறதாலே ஏதாவது ஒரு வேலை கிடைக்குமானு தேட ஆரம்பிச்சிருக்கேன். ஆரம்பமே ஊத்திக்கிச்சு."

பட்டாசுக்காய் தண்ணீரில் போட்டதும் படபடவென வெடிப்பது மாதிரி தன் கஷ்டம் நிறைந்த வாழ்க்கையையும் பரத் தமாஷாகச் சொல்லி முடித்தபோது கேந்திரா ஒரு நொடி எப்படி இவன் வாழ்க்கை தன் வாழ்க்கைக்கு நேரெதிராக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள். அம்மாவின் முகம் அவள் பார்த்ததேயில்லை. விஷ்வனாத் ஒரே மகள் என்று கையில் வைத்துத் தாங்கினாலும், நானி, போர்டிங் ஸ்கூல் பிறகு அமெரிக்காவில் மேல்படிப்பு இப்படி ஒரு உறவினால் பதப்படாத வாழ்க்கைதான் அவளுடையது. சிறு வயதிலிருந்தே தன் பிசினஸ் வாரிசாக மகளைப் பார்த்துப் பார்த்து, டைம்டேபிள் போட்டு ரேஸ் குதிரையைத் தயார்படுத்துவது மாதிரி அவள் பழக்கப்படுத்தப்பட்டாள். அவளோடு இதுவரை பழகிய எல்லாரும் அவளை ஒரு பெரிய தொழிலதிபரின், பணக்காரரின் வாரிசாகப் பார்த்து பயம்கலந்த மரியாதை என்ற திரையை விலக்காமலே இருந்தனர். பரத்மூலம் முதல் முறையாக அவள் வாழ்க்கையில், நினைவு தெரிந்து ஒரு உண்மை முகத்தை அவள் பார்த்தாள்.

"ஹலோ என்னங்க சைலண்ட் ஆயிட்டீங்க? என் கதையை ஒரு நிமிஷம் கேட்டதுக்கே தலை சுத்துதா?"

"இல்லை, ஆச்சரியமா இருந்தது. நான் அதிகம் படிச்சு வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவுல தான். அங்கெல்லாம் பதினெட்டு வயசாயி, படிப்பு முடிச்சுட்டா அப்பா, அம்மாவோடெல்லாம் இருக்கறது ஈனமா நெனப்பாங்க. பசங்க தனியா போயிடுவாங்க. அவங்களா போகாட்டி, பெத்தவங்களே தொரத்திடுவாங்க. அதனாலேதான் நீங்க அப்பா, அம்மாவோட இருக்கேன்னு சொன்னதும் ஆச்சரியமாயிருந்தது."

"குடியவே கெடுத்தீங்க போங்க. நல்ல வேளை இதெல்லாம் எங்க அப்பா அம்மாவுக்கு தெரியலை. அதுக்குள்ள ஒரு வேலையை தேடிக்கணும்.
"பரத், நான் ஏன் உங்களை வெயிட் பண்ணி என்னை பாக்க வெச்சேன்னா, எனக்கு ஹெல்ப் பண்ணப் போயிதான் உங்க இன்டர்வியூவுக்கு போகமுடியாம போச்சு. நீங்க எனக்கு உதவி பண்ணாமப் போயிருந்தா, இன்னிக்கு நான் என் முதல் போர்டு மீடிங்குலயே சறுக்கியிருப்பேன். ஸோ ஐ வான்ட் டு ஹெல்ப் யூ. நீங்க அஞ்சாவது மாடில ஹெச்ஆர் ஹெட் இருப்பாரு, அவரைப் போயி பாருங்க. எங்க லீகல் டிவிஷன்ல உங்களை வேலைக்கு எடுத்துக்க நான் சொல்லிடுறேன்."

"நம்பவே முடியலைங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நீங்க உண்மைலேயே ரொம்ப பெரிய மனசு உள்ளவங்க. ஆனா ஒரு சின்ன ரிக்வெஸ்ட்."

"சொல்லுங்க."

"எனக்கு இந்த வேலை வேணாங்க."

"என்ன சொல்றீங்க? இப்பதான் வேலை உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு சொன்னீங்க. ஏன் சம்பளம் ஏதாவது கம்மியா தருவோம்னு நினைக்கறீங்களா?"

"சே சே, அதெல்லாம் இல்லை. உங்க சிபாரிசுல வேலைக்கு சேர சொல்றீங்க. ஃப்ராங்கா சொல்லணும்னா எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு படிப்பை முடிச்சு, வேற வழியில்லாம வேலைக்குப் போக நினைச்சேன். அந்த கம்பெனின்னா பரவாயில்லை. இஷ்டமில்லாம சரியா வேலை பண்ணாட்டியும் பரவாயில்லை. இங்க உங்க பேரு என்னால கெடக்கூடாது."

"உங்க கஷ்டத்திலேயும் நேர்மையா உள்ளதைச் சொல்ற உங்க குணம் எனக்குப் பிடிச்சிருக்கு. இப்ப இன்னும் அதிகமா உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுது. வேற எந்த தொழில்தான் உங்களுக்கு இன்டரஸ்ட். ஏன் பிடிக்காத ஒரு படிப்பை படிச்சீங்க?"

"ஈசியா கேட்டுடீங்க. ஷார்ட்டா சொல்லணும்னா பெக்கர்ஸ் ஹாவ் நோ சாய்ஸ். கிடைக்கறதைப் பிடிச்சுக்கிட்டு எப்படியோ கௌரவமா முன்னுக்கு வந்தாகணுங்கிற கட்டாயம். எனக்கு ஆட்டோமொபைல் மெகானிசம், டிசைன் இதுதான் பிடிக்கும். ஆனா அதை என் மனசுப்படி ஒரு லேமேன் மாதிரி கத்துக்கிட்டேன். எஞ்சினியரிங் படிக்க வசதியில்லை, மெரிட்ல குவாலிஃபை ஆகற அளவுக்கு மார்க் எடுக்கலை. எந்த குவாலிஃபிகேஷனும் இல்லாம அந்த ஃபீல்டுல எப்படி போறது? அதனாலே அது ஒரு ஹாபியா வெச்சுட்டிருக்கேன்."

"உங்ககிட்ட ஒரு பேஷன் இருக்கு. அது வெறும் பொழுதுபோக்கு மாதிரி தெரியலை. நிமிஷ நேரத்துல என்னோட ஃபாரின் கார்ல என்ன பிரச்சனைனு கண்டுபிடிச்சு எப்படி சரிபண்ணினீங்க?"

இந்த ஆட்டோமொபில் எஞ்சின், மோட்டார் ரிப்பேரெல்லாம் சின்ன வயசுலேருந்து அத்துப்படி. வி8, 330ஐ எல்லாம் கண்ணைமூடிக்கிட்டு கழட்டி, அசெம்பிள் பண்ணிருவேன். இது ஜுஜுபி ரிப்பேர். எஞ்சின் சூடாகி ரிப்பேர் ஆச்சுன்னா ரேடியேட்டர், வாட்டர் பம்ப், தெர்மோஸ்டாட் இல்லை கூலிங் ஃபேன் எதாவதுதான் மக்கர் பண்ணியிருக்கணும். உங்க கார்ல ரேடியேட்டர் சூடாவலை. செக் எஞ்சின் லைட் எரியலை. வண்டியை ஸ்லோ பண்ணினதும் எஞ்சின் சூட்டாச்சுனு டிரைவர் அண்ணன் சொன்னாரு. அதை வெச்சுதான் கூலிங் பேன் பிரச்சனைனு கண்டுபிடிச்சு சரிபண்ணினேன்."

"தியரிடிகலா படிக்காமலே எப்படி இந்த எக்ஸ்பர்டிஸ் உங்களுக்கு வந்ததுனு ஆச்சரியமாயிருக்கு."

"இதுதாங்க நம்ம நாட்டுல பெரிய பிரச்சனை. பிராக்டிகலா அறிவை வளக்கற மாதிரி ஒரு எஜுகேஷன் சிஸ்டம் வெச்சுக்காம, சும்மா க்ளாஸ்ரூம்ல தியரில நெட்டுருபோட்டு நிறைய மார்க் வாங்கறதை வளர்க்கற மாதிரி சிஸ்டம் வெச்சுருக்காங்க. பாத்திருப்பீங்களே என் சர்டிஃபிகேட்ல மார்க் எல்லாம். அதெல்லாம் வெறும் மார்க் இல்லைங்க. கஜினி முகமது மாதிரி திரும்பத்திரும்ப எக்ஸாம் ஹாலுக்கு போயி எனக்கு கிடச்ச விழுப்புண்கள்."

"உங்களுக்கு நான் வேலை குடுக்கறதா தீர்மானம் பண்ணிட்டேன். நீங்க நிச்சயம் திறமைசாலிதான். இந்த ஃபீல்டுல ஒரு ரா எக்ஸ்பர்டைஸ் உங்ககிட்ட இருக்கு. கொஞ்சம் உங்களுக்கு ட்ரெயினிங் குடுத்தா நீங்க நிச்சயம் இதுல முன்னுக்கு வரலாம். நீங்க கீழே போங்க, உங்களை ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் டிவிஷன்ல ட்ரெயினியா சேத்துக்க சிபாரிசு பண்றேன். ஒரு இன்டர்வியூ இருக்கும் அதைமட்டும் சரியா பண்ணுங்க. மத்த குவாலிஃபிகேஷன் பத்தி நான் பாத்துக்கறேன்."

"நம்பவே முடியலைங்க. இப்ப நிஜமாவே ரொம்ப தேங்க்ஸ்ங்க. எங்க அம்மா கும்புட்ட ஆஞ்சனேயர் நிச்சயம் சக்தி வாய்ந்தவர்தான். எதிர்பாராம எனக்கு பிடிச்சமாதிரி ஒரு வேலை, அதுவும் கம்பெனி ஓனர் உங்க சிபாரிசோட கிடைக்குது. நிச்சயம் நான் சின்சியரா உழைச்சு என் நன்றியைக் காட்டுவேன்."

"அவசரப்படாதீங்க. இன்டர்வியூ அவ்வளவு ஈஸி கிடையாது. கேந்திரா எஞ்சின் அப்புறம் எங்க காம்படிடர் கேடிகேயோட எஞ்சின்ஸ் பத்தி உங்களுக்கு நாலெட்ஜ் இருக்கானு டெஸ்ட் பண்ணுவாங்க. ஆட்டோமொபில் இண்டஸ்ட்ரி குறிப்பா எஞ்சின் டெக்னாலஜில என்ன மாதிரி மாறியிருக்கு, இனிமே எப்படி மாறும் இதை பத்தியெல்லாம் கேப்பாங்க. நீங்க இன்டர்வ்யூ சரியா பண்ணலேனா நான் சிபாரிசு பண்ணினாலும் வேலைக்கு சேத்துக்க முடியாது. உங்களுக்கு ப்ரிபேர் பண்ண டைம் வேணும்னா சொல்லுங்க."

"இதெல்லாம் தூக்கத்துல கேட்டாகூட சொல்லுவேங்க. டெக்னாலஜில என்ன பண்ணனும்னு கேட்டா, பெட்ரோல், டீசல் எதுவேமே இல்லாம ஓடற மாதிரி வண்டி தயார் பண்ணனும். நுறு வருஷமா இந்த இண்டஸ்ட்ரில என்னென்னவோ மாற்றம் கொண்டு வந்துட்டாங்க, ஆனா இன்னும் அதே எண்ணைய எரிச்சு வண்டி ஓட்டறதுலேருந்து வெளியவே வரமுடியலை. யாரு சீப்பா, பெட்ரோல், டீசல் தேவையில்லாம ஓடற ஒரு எஞ்சின் கண்டுபிடிக்கறாங்களோ அடுத்த நூறு வருஷத்துக்கு அந்த கம்பெனிதான் நம்பர் ஒன்னா இருக்கும்ங்க. இண்டர்வ்யூல நிச்சயம் நான் ஜெயிச்சுடுவேன்."

கேந்திரா, தன்னம்பிக்கை தெரிக்க பேசிவிட்டு இண்டர்வியூவுக்கு கிளம்பிய பரத்தை அனுப்பிவிட்டு, ஹெச்ஆருக்குத் தகவல் சொல்லிவிட்டுத் தன் இருக்கையில் சாய்ந்தபோது தான் மறுநாள் தான் சமர்ப்பிக்கவேண்டிய ரிப்போர்ட் பற்றி ஞாபகம் வந்தது. கேந்திரா மோட்டார்சின் இலக்கு எதுவாக இருக்கவேண்டும்? பரத் இண்டர்வ்யூவில் தேறுவானா? 24 மணி நேரத்தில் போர்டுக்கு ரிப்போர்டை சமர்ப்பிக்க வேண்டும். அம்மா வேண்டிக்கிட்ட ஆஞ்சனேயர் கைவிடலைங்க. கம்பெனியின் அடுத்த வாரிசு நீதாம்மா. ஒரே குழப்பமாக இருந்தது. எண்ணங்கள் மாறிமாறி அலைக்கழித்தன.

கருமேகங்களிடையே ஒரு பளீர் மின்னல் மாதிரி, பரத்தின் வார்த்தைகள் அவள் மனதில் மறுபடி எதிரொலித்தன. "யாரு சீப்பா, பெட்ரோல், டீசல் தேவையில்லாம ஓடற ஒரு எஞ்சின் கண்டுபிடிக்கறாங்களோ அடுத்த நூறு வருஷத்துக்கு அந்த கம்பெனிதான் நம்பர் ஒன்னா இருக்கும்ங்க. இன்டர்வ்யூல நிச்சயம் நான் ஜெயிச்சுடுவேன்."

யெஸ் ஐ காட் இட். பாத் பிரேக்கிங், டெக்னலாஜிகலி அட்வான்ஸ்ட் நியூ எஞ்சின். ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் தான் நாம முனைப்பா இருக்கணும்.
எல்லாமே இப்போது பளிச்சென்று தெளிவானது கேந்திராவுக்கு. மறுநாள் தான் என்ன திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டாள். அப்பா நிச்சயம் இதைத்தான் நினைத்திருக்கவேண்டும். "தேங்க்யூ பரத்" மனதுக்குள் பரத்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டாள்.

*****


"உங்க சென்னை ட்ரிப் எப்படி இருந்தது? இந்த வருஷமும் கேந்திரா மோட்டார்ஸ் மார்கெட் ஷேர்ல கேடிகேயை முந்திட்டாங்க. சேர்மன் என்னை பிடிச்சு ப்ளாஸ்ட் பண்றாரு." பெங்களூரில் நகரைவிட்டுத் தள்ளி இருந்த ஒரு ரிசார்ட் ஹோட்டலின் இருண்ட ஒரு உணவு விடுதியில் உயர்தர வைனைப் பருகியவாறே கைலாஷ் சக்கரவர்த்தியைப் பார்த்துக் கேட்டான்.

"இதெல்லாம் அவசரப்பட்டா எப்படி? இனிமே இன்சைடர் இன்ஃபர்மேஷன், ப்ராடக்ட் சீக்ரெட் இதெல்லாம் பத்திக் கவலைப்படறதை விட்டுடணும். ஐ நவ் ஹாவ் கம் வித் எ மாஸ்டர் ப்ளான்" சக்கரவர்த்தி போதை ஏறிய கண்களோடு சொன்னார்.

என்ன சொல்லுங்க சக்கி? அவசரப்பட்டான் கைலாஷ். கைலாஷ் கேடிகே கம்பெனி சேர்மன் ஃப்ரெடரிக்கின் காரியதரிசி. அப்கிரேட் செய்யப்பட்ட அல்லக்கை என்றும் வைத்துக்கொள்ளலாம். கார்ப்பரேட் தர்ம நியாயங்களெல்லாம் அவன் அகராதியில் கெட்ட வார்த்தைகள். போட்டிக் கம்பெனிகளின் ரகசியங்களை எப்படியாவது வாங்குவது, கம்பெனிகளைக் கவிழ்ப்பது இதெல்லாம் கடந்த பத்து வருஷமாக வெற்றிகரமாக கேடிகேவுக்காகச் செய்துவருபவன். இப்போது அவன் குறிவைத்திருப்பது கேந்திரா மோட்டார்ஸ். மூன்று வருஷமாக கேந்திரா மோட்டார்ஸை அசைத்துவிடத் தலைகீழாக நின்று பார்த்தும் கைலாஷுக்குத் தோல்விதான். போனவருஷம் எப்படியோ சக்கரவர்த்தியை விலைக்கு வாங்கி அவர்மூலம் கம்பெனி ரகசியங்களைத் தெரிந்து கொண்டுவந்தான். ஆனாலும், கேந்திரா மோட்டார்சின் உயிர்நாடியான ரகசியங்கள் விஷ்வனாத் மற்றும் கோபால்ரத்னத்தைத் தாண்டி வெளியே தெரியாதாகையால், சக்கரவர்த்தி கொடுத்துவந்த தகவல்கள் ரொம்ப உபயோகப்படவில்லை.

"கோபாலை என் பிடிக்குள்ள கூடிய சீக்கிரம் கொண்டு வந்துட முடியும்னு நெனைக்கிறேன்."

"எக்சலண்ட். சாத்தியமா? கோபால் நம்ம கைக்கு வந்துட்டா, ப்ராடக்ட் ரகசியங்களை தெரிஞ்சிக்கலாம்."

"சே சே. என் திட்டமே வேற. கோபாலுக்கும் விஷ்வனாத்துக்கும் விரிசல் வந்துட்டா கம்பெனி நிர்வாகம் விரிசல் விட்டுரும். அப்ப பப்ளிக் ஷேர்சை நிறைய வாங்கி கோபாலுக்கு நாம ஆதரவு குடுத்தா கேந்திரா மோட்டார்ஸ் நிர்வாகமே நம்ம கைக்கு வந்துரும். விஷ்வனாத்தை டம்மி ஆக்கி கம்பெனி நிர்வாகத்துலேருந்து நாம தூக்கிரலாம். விஷ்வனாத் போயிட்டா கேந்திரா மோட்டார்ஸ் படுத்துரும். அப்ப அதை ஸ்வாகா பண்றது ரொம்ப ஈஸி."

"பிரில்லியன்ட், இதை மட்டும் நீங்க சாதிச்சுட்டா கேடிகே போர்டுல நீங்க ஒரு டைரக்டர். கேந்திரா மோட்டார்சுல உங்களுக்கு இருக்கிற ஷேர்சோட இன்னி மதிப்புக்கு பத்து மடங்கு வெலை குடுக்க நான் ஏற்பாடு பண்றேன். ஆனா, கோபால் எப்படி உங்ககிட்ட சிக்குவார்? அவர் விஷ்வனாத்தோட நெருங்கின நண்பராச்சே. அதுவும் அவர் பையன் விஷ்வனாத்தோட டாட்டரை கல்யாணம் பண்ணப்போறதா வேற பேச்சு அடிபடுதே."

"கோபாலுக்கு விஷ்வனாத் மேலே சந்தேகம் வந்துருச்சு. அதாவது வர வெச்சுட்டேன். விஷ்வனாத் கேந்திரா மோட்டார்சோட அடுத்த வாரிசை நாளைக்கு அறிவிக்கப் போறார். என் கணக்கு சரியாயிருந்தா நிச்சயம் அவர் பொண்ணைத்தான் அந்த போஸ்டுக்குத் தேர்ந்தெடுப்பார். கோபால் விஷ்வனாத்துக்கு ரெண்டாவது நிலைலயே இருந்து பழகிட்டார். ஆனா அவர் பையனை விஷ்வனாத்தோட பொண்ணு முந்திகிட்டா நிச்சயம் தாங்கமாட்டாரு. தாங்கவிடக்கூடாதுனு சில விஷயங்களை அவர் மனசுல விதைச்சிருக்கேன்."

கடைசி பெக்கை காலி செய்துவிட்டு இருவரும் இருட்டிலேயே மறைந்தனர்.

அன்று இரவு கேந்திரா மோட்டார்சோடு சம்பந்தப்பட்ட ஐந்து பேர் தூங்கவில்லை. பரத் இண்ட்ர்வியூவில் தேறி, ஜாக்பாட் அடித்த மாதிரி, மனசுக்குப் பிடித்த வேலை, பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளம் என்று பெரும் சந்தோஷத்தில் மொட்டை மாடியில் படுத்திருந்தான். இதையெல்லாம் விட கேந்திராவின் சிபாரிசு, அவளுடைய நம்பிக்கையைச் சம்பாதித்தது அவனுக்கு ஒரு இனம்புரியாத சந்தோஷத்தை ஏற்படுத்தி தூக்கத்தைக் கெடுத்தது.

கேந்திரா தான் மறுநாள் சமர்ப்பிக்க வேண்டிய ரிப்போர்ட்டை விடியவிடிய விழித்திருந்து மாங்குமாங்கென்று தயார் பண்ணிக் கொண்டிருந்தாள்.

விஷ்வனாத் தன் புதுப் பொறுப்புக்களைப் பற்றியும், தன் மகளின் எதிர்காலம் பற்றியும், அனலிஸ்டுகள் தன்னைக் குடைந்து குடைந்து கேட்கப்போகும் கேள்விகளுக்கான விடைகள் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தார்.

கோபால்ரத்னம் தனக்கு வரப்போகும் தலைமைப் பொறுப்பு பற்றியும், வினயின் எதிர்காலம் பற்றியும், விஷ்வனாத் தன்னை ஏமாற்றுகிறாரோ என்பது பற்றியும் யோசித்தவாறே தூக்கம் வராமல் தவித்தார்.

சக்கரவர்த்தி தன் கணக்கு தவறக்கூடாதே என்று கவலைப்பட்டதோடு, அடுத்து கோபால்ரத்னத்தை எப்படி தன் பிடிக்குள் கொண்டு வருவது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

எல்லாரையும் எப்படியாவது தங்கள் நோக்கம் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் வாட்டியது. எல்லார் கேள்விகளுக்கும் விடை மறுநாளில் ஒளிந்திருந்தது.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline