Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்மசாந்தி (அத்தியாயம்-5)
- சந்திரமௌலி|ஆகஸ்டு 2014|
Share:
Click Here Enlargeகாலமே மதியினுக்கோர் கருவியாம்
பரத் இண்டர்வியூவுக்காக நேர்த்தியாக அணிந்திருந்த ராசியான நீலநிற முழுக்கை சட்டையின் கைகளைச் சுருட்டிவிட்டு பானட்டின் அடியில் துழாவிக்கொண்டிருந்த கதிரேசனை முதுகில் தட்டி "அண்ணே என்ன பிரச்சனை கண்டுபிடிச்சிட்டீங்களா?" என்றான். திடுக்கிட்டுத் திரும்பிய கதிரேசன், வியர்த்து விறுவிறுத்து இருந்தார். சரியான நேரத்தில் கேந்திராவையும், வினயையும் அலுவலகத்துக்குக் கொண்டு சேர்க்காவிட்டால் தன் வேலைக்குக்கூட உலை வைக்கப்படலாம் என்ற கவலையில் இன்னும் பதட்டமானார். என்னதான் உண்மையாகப் பல ஆண்டுகள் உழைத்திருந்தாலும், இன்று ஒரு தவறு செய்தால் எந்த சகிப்புத்தன்மையும் இல்லாமல் தேவையில்லாத பொருளைத் தூக்கி எறிவதைப் போலத் தான் எறியப்படுவோம் என்ற உண்மை அவரை அலைக்கழித்தது.

நம்பிக்கையில்லாமல், "தெரிலை தம்பி, ரேடியேட்டர் சூடாயிருக்கு போலிருக்கு, தண்ணி ஊத்தணும்னு நெனைக்கிறேன். ஸ்பீடாலாம் போகலை. மெயின் ரோட்டுல நல்லா வந்திட்டிருந்தது. வேகத்தை குறைச்சு இந்த உள்ரோடுக்கு வந்ததும் மக்கார் பண்ணி ஆஃப் ஆயிடுச்சு. இன்னும் பத்து நிமிஷத்துல இவங்க ஆபீசுல இருக்கணும் இல்லைனா என் வேலை போயிடும்". கதிரேசன் திறமையான ஓட்டுனர்தான். அம்பாசிடர், ப்ரீமியர் பத்மினியிலிருந்து மாருதி, பிறகு வந்த ஜப்பானியக் கார்கள்வரை எந்தப் பிரச்சனையானாலும் தீர்க்கும் திறமை உடையவர்தான். ஆனால் நாளுக்கு ஒரு புது மாடல், வெளிநாட்டு இறக்குமதியில் வரும் ஐரோப்பிய படாடோப வண்டிகள் அவருக்கு அதிகம் பரிச்சயமில்லை. அவை தொழில்நுட்பத்திலும் மிகவும் சூட்சுமமானவையாக இருந்ததால் அவருக்கு அன்னியமாகவே இருந்தன.

"டென்ஷன் ஆவாதீங்க அண்ணே. வியர்வையைத் தொடைங்க, இந்தாங்க என் ஃபைலை பிடிங்க. நான் பாக்கறேன், நவுருங்க". அவர் அனுமதிக்குக் காத்திராமல் பரபரவென ரேடியேட்டரையும், எஞ்சின், குளிரூட்டும் விசிறியையும் சில நொடிகளில் சோதனை செய்தான். "அண்ணே, ஒரு நிமிஷம் வண்டியை நியூட்ரல்ல போட்டு, வண்டியை ஆன் பண்ணுங்க. நான் நெனச்சது சரின்னா, இன்னும் ஒரு நிமிஷத்துல வண்டியை எடுத்துறலாம்". இதைக் கேட்ட கதிரேசன் டபுள் பேட்டா கிடைத்தது போல பரத்தின் ஃபைலை வண்டிக்குள் போட்டுவிட்டு, சந்தோஷத்தோடு வண்டியை ஸ்டார்ட் செய்யப் போனார்.

இதற்குள் இன்னும் டென்ஷன் ஆன கேந்திராவும் வினயும் வண்டியிலிருந்து இறங்கி வந்தனர். கேந்திரா பரத்துக்கு கைகுலுக்கும் தூரத்தில் நின்று, "மிஸ்டர் பரத், ஐ அம் கேந்திரா, திஸ் இஸ் வினய். தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப். இஃப் யு டோண்ட் மைண்ட் உங்க செல்ஃபோன் குடுக்கறீங்களா? ஆபீசுக்கு ஃபோன் பண்ணி வேற வண்டி அனுப்பச் சொல்லணும். நாங்க அர்ஜண்டா ஒரு மீட்டிங் போகணும். எங்க செல்ஃபோன்ல டவர் எடுக்க மாட்டேங்குது" என்றாள். குனிந்திருந்த பரத், நிமிர்ந்து, "டோண்ட் ஒரி கேந்திரா, இன்னும் ஒன் ஆர் டூ மினிட்ஸ்ல ரெடி ஆயிடும். ரிலாக்ஸ்" என்றான். கேந்திராவை நேருக்குநேர் நெருக்கத்தில் இப்போது பார்த்தான். சற்றே பழுப்பு நிறக்கண்கள் என்று அவனையறியாமல் உள்ளே எதுவோ எதற்காகவோ குறித்து வைத்துக்கொண்டது. அந்தஸ்து மற்றும் ஆளை அடிக்கும் அழகுகொண்ட கேந்திராவை எந்த இளைஞனும் இதுவரை தயக்கமோ, எதிர்பார்ப்போ இன்றி அணுகியதில்லை. பேசியதும் இல்லை. வினய் இந்த லிஸ்டில் சேர்த்தியில்லை. எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னைப் பளிச்சென பெயர் சொல்லி பரத் அழைத்தது கேந்திராவுக்கு புது அனுபவமாக இருந்தது.

"எதுக்கு ரிஸ்க், உங்க ஃபோனை குடுங்க ப்ளீஸ்."

காதிலேயே வாங்காமல், "அண்ணே ஆன் பண்ணுங்க" என்றான். வண்டி ஆன் செய்யப்பட்டது. வினய்க்கு பரத்தின் அலட்சியம் பிடிக்கவில்லை. "இவ்வளவு அல்பமா இருக்க. வேணும்னா என்ன சார்ஜோ குடுத்துடறோம். ஜஸ்ட் கிவ் அஸ் யுவர் டாம் மொபைல். வீ ஆர் இன் அ ஹரி" என்று கத்தினான்.

"வினய், உன் ஃபோன்ல சிக்னல் இல்லை. என் ஃபோன்ல பேலன்ஸ் இல்லை. இண்டர்வியூவுக்கு இப்பத்தான் போறேன். வேலை கிடைச்சாதான் எனக்கு பேலன்ஸ் டாப் அப் பண்ண எங்க அப்பா காசு குடுப்பார். தொணதொணனு கேட்டு மானத்தை வாங்கற" பொரிந்து தள்ளினான் பரத். வினய் ஹாலிவுட் படத்தை தமிழ் டப்பிங்கில் பார்த்தது போல அதிர்ந்து முழித்தான். கேந்திராவுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அந்தக் காமெடி பெரும் சிரிப்பை வரவழைத்தது. "வினய், இவர் நமக்கு ஹெல்ப் பண்ண பாக்குறார். அன்ரீசனபிளா பாஸ் ஓவர் பண்ணாதே" என்று பரிந்து பேசினாள்.

"பீட்டராயிருப்பீங்கனு நெனச்சேன். பாரதி டாட்டர் மாதிரி தமிழ் நல்லாவே பேசறீங்க. ஐ லைக் இட்." வினய் இதை ரசிக்கவில்லை. "அண்ணே செக் இன்ஜின் சிம்பல்ல லைட் எரியுதா?" என்றான்.
"இல்லைப்பா" என்றார் கதிரேசன். "சரி வண்டியை ஆஃப் பண்ணிட்டு, 0.8 ஸ்பானர் டூல் பாக்ஸ்லேருந்து குடுங்க" கதிரேசன் இப்போது பதட்டம் தணிந்தவறாக அவன் சொன்னதை செய்தார். பரத் மீண்டும் பானட்டுக்கு அடியில் தலையைக் கொடுத்து ஸ்பானரால் உள்ளே நோண்டினான். திருப்தி அடைந்தவன் போல தலைய வெளியே எடுத்து பானட்டை மூடினான். கேந்திராவைப் பற்றிய எண்ணங்கள் பரத்தின் மனதில் விழுந்து படிந்ததற்கு போட்டி போடுவது போல, வியர்வையைத் துடைத்த வேகத்தில் அவன் கையில் இருந்த ரேடியேட்டர் அழுக்கு, வியர்வையோடு கலந்து அவன் நெற்றியிலும் பிறகு சில துளிகள் அவன் சட்டையிலும் விழுந்து படிந்தன. அதைப் பொருட்படுத்தாமல், "வண்டி இப்ப ஒழுங்கா போகும். ஆனா உங்க ஆபீசுக்குப் போனதும் ஃபைனல் ஸ்டேஜ் எலக்டிரிக் பாக்ஸை மாத்திருங்க." வண்டி மீண்டும் ஸ்டார்ட் செய்யப்பட்டது, உள்ளே ஏர் கண்டிஷன் குளிர்ச்சி ஸ்ஸ் என்றிருந்தது.

கதிரேசன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். "எப்படி ஒரு ஃபாரின் கார்ல இருக்கிற ப்ராப்ளத்தை இவ்வளவு சீக்கிரமா சரிபண்ணினீங்க? நீங்க என்ஜினியரா?" ஆச்சர்யம் விலகாமல் கேட்டாள் கேந்திரா. இப்போதுதான் அவள் பிரச்சனையின் சூட்டிலிருந்து விலகி முதல்முறையாக பரத்தை கவனித்தாள். கத்தி போல கூர்மையான இளைஞன். பரத்தின் கண்களும் அவள் கவனிப்பதை உணர்ந்து அவளை இமை கொட்டாமல் பார்க்கவே, தன் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு ஆண்மகனின் பார்வையை நேருக்குநேர் சந்திக்கமுடியாமல், கேந்திரா தன் பார்வையை பெண்மைக்கே உரிய நாணத்தோடு இயல்பாகத் தாழ்த்தினாள்.

"ஆ.. என்ன கேட்டீங்க" ஒரு நொடி கவனக்கலைப்பில் எங்கோ போன மனத்தை நிகழ்காலத்துக்கு பரத் கொண்டுவந்து " இஞ்சினியரும் இல்லை, சுக்கு நீரும் இல்லை. நான் ஒரு சட்டத்துறை பட்டதாரி. அதுவே முக்கிமுக்கித்தான் பாஸ் பண்ணுனேன்". சொல்லி முடிப்பதற்குள் பஸ் வந்தது. பரத் "ஏதோ முக்கியமான வேலை, பத்து நிமிஷத்துல போகணும்னு சொன்னீங்களே. ஆல் தி பெஸ்ட். நான் வரேன்" என்று குதித்தோடும் ஆஸ்திரேலியா கங்காரு போல பதிலுக்குக்கூடக் காத்திராமல் ஓடி, ரன்னிங்கில் பஸ்ஸைப் பிடித்துவிட்டான். அம்மா கேண்டீனில் சாப்பிடும் அவரத்தில் இருந்த பஸ் டிரைவர் டபுள் விசிலுக்குக்கூடக் காத்திராமல் வண்டியை டாப் கியரில் தூக்கினார். "தேங்க்யூ ஸோ மச் பரத். ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் இண்டர்வ்யூ" கையை ஆட்டி ஃபுட்போர்டில் நின்றவாறே தன்னைக் கடந்த பரத்துக்கு தன் முத்துப்பல் ஃப்ளாஷ் லைட்டில் நன்றி செலுத்தினாள் கேந்திரா.

"வீ ஆர் லேட் கேந்திரா, கெட் இன். தேங்க் காட்" என்று அவளை அவசரப்படுத்தினான் வினய். வண்டி இப்போது சீராகச் சென்றது. தற்செயலாக முன்சீட்டில் கண்களை மேயவிட்ட கேந்திரா "கதிரேசண்ணே என்ன புதுசா ஃபைல் வண்டிக்குள்ள?"

"அய்யோ அவசரத்துல இதை வாங்க மறந்துடுச்சு அந்த தம்பி. அதோட ஃபைல் தான். ரிப்பேர் பாக்கும்போது என்னை வெச்சுக்க சொல்லிச்சு"

"கடவுளே, ஏதோ இண்டர்வ்யூவுக்கு போறேனு சொன்னாரு. ஃபைல்ல சர்டிஃபிகேட்லாம் இருக்கும். நமக்கு ஹெல்ப் பண்ணப் போயி, அவரோட இண்டர்வியூக்கு ப்ராப்ளம் வந்துருச்சே. அண்ணே அந்த பஸ்ஸை பிடிக்கமுடியுமா?"

"இல்லமா, இது கப்பி ரோடு, பஸ் அப்பவே பறந்துடுச்சு. தவிர நமக்கு நேரமாகுது."

"அந்த ஃபைல குடுங்க. இண்டர்வியூ லெட்டர் இருந்துச்சுனா எந்த கம்பெனினு தெரியும். எங்களை ஆஃபீசுல விட்டுட்டு நீங்க போயி குடுத்துடலாம்." நீட்டப்பட்ட ஃபைலைப் புரட்டினாள். ‘எம். பரத்வாஜ், பி.எல். திருவல்லிக்கேணி’ அவன் பர்த் சர்டிஃபிகேட்டிலிருந்து, எத்தனை செமெஸ்டர் எத்தனை அரியர் என்ற விவரம்வரை அதில் இருந்தது. இண்டர்வியூ லெட்டர் மட்டும் அது வந்த கவரோடு பரத்தின் பேண்ட்பேக்கெட்டில் இருந்ததால், கேந்திராவுக்கு அது கிடைக்கவில்லை. "கேந்திரா, லீவ் திஸ் அசைட். நாம ஆஃபீஸ் வந்துட்டோம். ரிமெம்பர் திஸ் இஸ் என் இம்பார்டண்ட் டே இன் அவர் லைஃப். இப்ப டிஸ்ட்ராக்ட் ஆகாதே. அதான் அவன் டீடெய்ல்ஸ் இந்த ஃபைல்ல இருக்கே. அவன் அட்ரசுக்கு இதை அனுப்பிட்டு, ஏதாவது காம்பன்சேஷன் குடுத்துடலாம். சிம்பிள்" என்றான் வினய்.

வினய் ஒரு யதார்த்தவாதி. அவனுடைய பிரச்சனைகள் அவனுக்கு எப்போதும் பெரிது. மற்றவர்களுடைய பிரச்சனைகளுக்கு அலட்டிக்கொள்ளாமல் யதார்த்தமான தீர்வு சொல்வது அவனுக்குப் பழக்கம். கேந்திரா அவனை சுயநலவாதி என்று விமரிசித்தாலும், அவன் தன்னை யதார்த்தவாதி என்றே சொல்லிக்கொள்வான். அவன் உலகில் எதற்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைச் சரியாக நிர்ணயம் செய்கிறவர்கள் ஜெயித்தவர்கள். மற்றவர்கள் தோத்தாங்குளிகள். பரத் செய்த உதவிக்கும் ஒரு விலையை நிர்ணயிப்பதில் அவனுக்கு உடன்பாடுதான். ஆனால் கேந்திரா இதை நினைத்து மருகினால் போர்ட் மீட்டிங்க்கில் பங்கேற்பதில் இடையூறாக இருக்கும். பரத்தின் உதவி அந்த அளவுக்குத் தகுதியானதல்ல என்று எண்ணினான். காரைவிட்டு இறங்கி, கொரியன் கிராஸ், செயற்கை நீருற்று பாவலாக்களைக் கடந்து ரிசப்ஷனுக்கு வந்ததும், கேந்திரா ஏதோ தோன்றியவளாக, "பரத்னு ஒருத்தர் என்னைப் பாக்கணும்னு வருவார், உடனே என் கேபினுக்கு அனுப்புங்க. இன்னும் ஒன் அவர் போர்ட் ரூம்ல இருப்பேன். அவரை வெயிட் பண்ணச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு, வினயுடன் பதினெட்டாவது மாடிக்கு எலிவேட்டரில் பயணித்தாள். வினய் புரியாமல் விழித்தவாறே அவளைத் தொடர்ந்தான்.

இரண்டு அடுக்கு செக்யூரிட்டி, வெளியே சர்வீலென்ஸ் கேமெரா பொருத்தப்பட்டு நிசப்தமாக இருந்தது அந்தப் பதினெட்டாவது மாடியில் இருந்த கேந்திரா மோட்டார்ஸின் போர்டு அறை. சுவற்றில் ஒருபுறம் பலதேச காலங்களைக் காட்டும் கடிகாரங்கள், இன்னொரு புறம் ஆட்டோமொபைல் தொழிலின் பிதாமகர்கள் போர்ஷ், கார்ல் பென்ஸ், ஹென்றி ஃபோர்டு இவர்களின் புகைப்படங்கள், அருகே விஸ்வனாத் சேம்பர் ஆஃப் காமர்ஸின் விருதுபெறும் படம். அவற்றின் கீழ் கேந்திரா மோட்டார்சின் ஆரம்பகால கே-2-5 என்ஜின் மாதிரிகள், அறையின் நடுவே துளியும் துணி விலகாமல் கன்னிப்பெண்ணைப் போலப் போர்த்திவைக்கப்பட்ட நீள்வட்ட மேசை, அதைச் சுற்றி இருபது பேர் உட்கார்ந்து பேசும் வண்ணம் சிம்மாசன நாற்காலிகள். கட்சி மீட்டிங் என்றால் சோடா, இதுபோல பெரிய இடத்து மீட்டிங்க் என்றால் வறுத்த முந்திரி என்று எவன் கண்டுபிடித்தானோ, என்று நொந்துபோன மாதிரி அந்த மேசைமேல் சுற்றி வறுத்த முந்திரி, பிஸ்லெரி தண்ணீர் பாட்டில்கள். இந்த அறைக்கு வெளியே உணவுண்ணும் அறை, இரண்டு சிறிய அறைகள் அதற்கு வெளியே வண்டலூர் உயிரியல் பூங்காவையும், மலையையும் நோக்கித் திறந்தவெளி பால்கனி. விஸ்வநாத் பார்த்துப்பார்த்து செதுக்கிய அலுவலகம், அதிலும் அதன் தலைமைச் செயலகம் போன்ற இந்த பதினெட்டாவது மாடி அறைக்குள் நுழையும்போது அவருக்கு மூன்றடி உயரம் அதிகமானது போல ஒரு பெருமிதம் தலைக்கேறும்.

சாதாரணமாகவே இப்படி என்றால், இன்று தன் ஒரே செல்லமகள் தனக்குச் சமமாக தான் வளர்த்த கம்பெனியில் டைரக்டராகப் பொறுப்பேற்கப் போகிறாள் என்பது அவரைத் திரிவிக்கிரமன் போல உணரச்செய்தது. வினயும், கேந்திராவும் வருவதில் தாமதம் ஆனதில் கொஞ்சம் பதட்டமானவர், மகளைக் கண்டதும் நிம்மதி ஆனார். இவர்கள் போர்டு மீட்டிங்குக்குப் போவதற்கு முன் கேந்திரா மோட்டார்சைப் பற்றி ஒரு அறிமுகம்.

கேந்திரா மோட்டார்ஸ் ஒரு பொது நிறுவனம். என்.எஸ்.ஈ. தவிர நான்கு ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் அதன் பங்குகள் வியாபாரம் ஆகிக்கொண்டிருந்தன. பெயருக்குத்தான் பொது நிறுவனமே தவிர, எழுபது சதவிகித பங்குகள் இதோ இந்த போர்டு ரூமில் இருக்கும் எட்டு டைரக்டர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. மீதம் முப்பது சதவிகிதப் பங்குகளே பொதுமக்களால் வாங்கி, விற்கப்பட்டு வந்தன. பெரும்பான்மை பங்குகள் பெற்றிருந்ததால், கம்பெனியின் போக்கையும், அதன் முதலீட்டு முடிவுகளையும் பெரிய தடைகளின்றி டைரக்டர்களால் நிர்ணயிக்க முடிந்தது. அதிலும், விஸ்வநாத் 30 சதவிகித பங்குகளையும், 20 சதவிகித பங்குகளை அவரது நண்பரும், வினயின் தந்தை கோபால்ரத்னமும் வைத்திருந்ததால் போர்டு முடிவுகளிலும் இவர்கள் இருவரின் ஆதிக்கமும், பேச்சுமே எடுபட்டது. கம்பெனியின் காரணகர்த்தாக்கள், அதை இதுவரை நல்லபடி முன்னுக்குக் கொண்டுவந்து லாபம் ஈட்டுபவர்கள் என்பதால் யாருக்கும் இதில் பெரிய குறை ஏதும் இல்லை. மற்ற ஆறு டைரக்டர்களும் சமூகத்தில் பெரிய அந்தஸ்து உடையவர்கள். கேந்திரா மோட்டார்சின் எக்ஸ்போர்ட் மற்றும் கிழக்கு இந்தியா வினியோக உரிமை, இதைத்தவிர துணி ஏற்றுமதி வியாபாரம் எல்லாம் வைத்திருக்கும் சக்கரவர்த்தி மூன்று சதவிகித பங்குகள் வைத்திருந்தார். மற்ற எல்லாரும் இரண்டு சதவிகிதமும் அதற்குக் குறைவான பங்குகளும் தனித்தனியே வைத்திருந்தனர்.

போர்டு மீட்டிங்கை கம்பெனி செக்ரடரி வேதாந்தம் முறையாகத் தொடங்கி, கேந்திராவையும், வினயையும் டைரக்டர்களாக்கும் தீர்மானத்தை முன்வைத்தார். விஸ்வநாத்தும், கோபால்ரத்னமும் உறவுமுறை காரணமாக அந்தத் தீர்மானத்தில் பங்கேற்கமுடியாது என்றும், மற்ற டைரக்டர்களே தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்றும் கூறினார். எதிர்பார்த்தபடியே மறுபேச்சு பேசாமல் எல்லாரும் அந்தத் தீர்மானத்துக்கு ஆமோதித்தனர். சக்ரவர்த்தி ஆமோதிக்கும் போது, "இப்ப போர்டுல பத்து பேர் இருக்கோம். நீங்களும், கோபால்ரத்னமும் சம்பந்தி ஆகிட்டீங்கனா நாலு பேரு உங்க குடும்பத்து ஆட்களே போர்டுல இருப்பாங்க. இப்பவே நீங்க எது சொன்னாலும் தலை ஆட்டுறதை தவிர வேற ஒண்ணும் செய்யறதில்லை நாங்க. இதுக்கப்புறம் அதுக்குக்கூட அவசியம் இருக்காது" என்று நைசாக ஊசி ஏத்தினார். விஸ்வநாத், "சக்கி, இட் இஸ் நாட் ஃபன்னி. உங்களுக்கு விருப்பம் இல்லைனா வோட் பண்ணவேணாம். வீ ஹாவ் சம் சீரியஸ் அஜெண்டா டு டிஸ்கஸ் ஃபர்தர்" என்றார். தான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்ட திருப்தியோடு அதை அத்தோடு மூட்டை கட்டும் நோக்கில், "ஐ வாஸ் ஜஸ்ட் ஜோக்கிங். அஃப்கோர்ஸ் தே ஆர் வெல் குவாலிஃபைட். ஆல் தி பெஸ்ட்" என்று போலியாகக் கைதட்டி கேந்திராவுக்கும், வினய்க்கும் கை கொடுத்தார்.

விஸ்வநாத் சற்றே கடுமை தளர்ந்த முகபாவத்தோடு, "ஜெண்டில்மென், நம்ம கம்பெனி நல்ல லாபத்துல போயிட்டிருக்கு. இந்தியாவுல, ஏன் சவுத் ஏஷியாவுல நம்ம எஞ்சின், மோட்டார்ஸ் ஆட்டோமொபில் இண்டஸ்ட்ரில நம்பர் ஒன்னா இருக்கு. ஆனா காம்படிஷன் ரொம்ப அதிகமாயிருக்கு. எஸ்பெஷலி கே.டி.கே, ஜெர்மன் கம்பெனி நம்ம ப்ரைம் காம்படிடர் இண்டியன் மார்க்கெட்டை முழுசா பிடிக்க பெரிய முயற்சி பண்றாங்க. தே ஆர் ஃபயரிங்க் இன் ஆல் சிலிண்டர்ஸ். இதுவரை நாம எப்படியோ தாக்குபிடிச்சுட்டோம். இனியும் நம்ம பொசிஷனை தக்கவெச்சுக்க புதிய சிந்தனை தேவைப்படுது. அதுனாலதான் கேந்திராவையும், வினயையும் போர்டுல சேத்திருக்கோம். இதுல நெபோடிசம், ஃபேவரெடிசம் கிடையாது. டு பீ ஃபேர், இவங்க தங்களை ப்ரூவ் பண்ணிக்க உங்க அனுமதியோட ஒரு வருஷம் குடுக்கப்போறேன். நௌ, கேந்திரா, வினய், இந்த கம்பெனி இன்னும் பத்து வருஷத்துல எப்படி இருக்கணும், அதுக்கு இந்த போர்டு என்ன பண்ணனுங்கிற உங்க ப்ரபோசலை எனக்கு நீங்க குடுக்கணும். அதை அலசிட்டு உங்க ரெண்டு பேருக்கும் என்ன பொறுப்பு குடுக்கறதுனு இந்த போர்டு தீர்மானிக்கும். வெல்கம் டு தி ப்ரஸ்டீஜியஸ் போர்டு ஆஃப் கேந்திரா மோட்டார்ஸ்".

அனைவரும் கைதட்டினார்கள். விஸ்வநாத்தைப் பற்றி நன்கு அறிந்தவள் ஆனதால், கேந்திரா தொண்டையை செருமிக்கொண்டு, "தேங்க்ஸ் எம்.டி. சார் அண்ட் போர்ட் ஆஃப் டிரக்டர்ஸ். இந்த ப்ரபோசலுக்கு டெட்லைன் என்னனு தெரிஞ்சுக்கலாமா?"

"குட் கொஸ்டின். உங்க ரெண்டு பேருக்கும் 24 மணி நேரம் டயம் தரேன். நாளைக்கு இதே நேரம், இந்த போர்ட் ரூம்ல உங்க ப்ரபோசலை நீங்க ப்ரசெண்ட் பண்ணனும். இதுக்கு மேல உங்க பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பலை. லெட் அஸ் ப்ரேக் ஃபார் லஞ்ச். அண்ட் அட்ஜர்ன் அவர் மீட்டிங் டு டுமாரோ" என்று சொல்லி, பதிலுக்குக் காத்திராமல் எழுந்தார். கேந்திராவுக்கு அவள் காதுகளை நம்ப முடியவில்லை, வினயிடம் சன்னமாக "24 அவர்ஸ்?" என்று கேட்க, அவனும், கையைக் கத்தி மாதிரி கழுத்துக்கு நேரே காட்டி "எஸ் மை டியர்" என்று சொல்லி, நாக்கை வெளியே நீட்டி, தலையைத் தொங்கப்போடுவது போல பாசாங்கு காட்டினான். கேந்திராவுக்கு 24 மணி நேரத்தில் ப்ரபோசல் கொடுக்கவேண்டுமே என்ற கவலையைவிட, பரத் தன்னைத்தேடி வந்திருப்பானா, அவன் இண்டர்வியூ என்ன ஆயிருக்கும் என்ற கவலை பெரிதாயிருந்தது. அவன் வராவிடில், அவளே திருவல்லிக்கேணிக்கு அவன் வீட்டுக்குப்போய் அவன் சர்டிஃபிகேட்டுகளைத் தர நினைத்திருந்தாள். அப்பா கொடுத்த கெடுவினால், அது இப்போது முடியாது என்பது அவளுக்கு பெரும்போராட்டமாக மனதில் உருவெடுத்தது.

பஸ்ஸிலிருந்து இறங்கும்வரை கேந்திராவை பற்றியே நினைத்துக்கொண்டிருந்த பரத், அப்போதுதான் தன் கையில் சர்டிஃபிகேட் ஃபைல் இல்லை என்பதை கவனித்தான். கதிரேசனிடமிருந்து ஃபைலை வாங்காமல் பஸ் ஏறியது அப்போது நினைவுக்கு வந்தாலும், அவர்களது அலுவலகப் பேரோ, விலாசமோ வாங்கிக்கொள்ளாததால் இந்தப் பரந்த தொழிற்பேட்டையில் எங்குபோய் அவர்களைத் தேடுவது என்று மலைத்தான். ஃபைல் இல்லாமல் இண்டர்வியூ போகமுடியாது, ஆக வந்த வேலை கோவிந்தா என்று முடிவுகட்டினான். அதே நேரம், இந்த ஃபைலை தேடிக் கண்டுபிடிக்கும் சாக்கில் மறுபடி கேந்திராவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அவன் கவலை பறந்துவிட்டது. "கேந்திரா, கேந்திரா" - ஒருவேளை இவளுக்கும் கேந்திரா மோட்டார்சுக்கும் சம்மந்தம் இருக்குமோ? முயற்சி செய்வதில் தப்பில்லை என்று நினைத்து, கேந்திரா மோட்டார்ஸ் வளாகத்தில் நுழைந்தான் பரத்.

சந்திரமௌலி,
ஹூஸ்டன்

(தொடரும்)
Share: 




© Copyright 2020 Tamilonline