Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது
Tamil Unicode / English Search
எனக்குப் பிடிச்சது
அம்பாளும் நானும்
- அழகப்பன் அண்ணாமலை|பிப்ரவரி 2016||(1 Comment)
Share:
Click Here Enlargeதியான வகுப்புகளுக்குச் செல்லும்போது "உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான இடத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டிக் கடைசியாகச் சென்று சேருவது, என் சொந்த ஊரிலுள்ள உலகநாயகி அம்மன் கோவில் வாசலுக்குத்தான். உலகின் மிக அழகான இடம் எனக்கு அதுதான். பெரிய வேப்பமரம், அருகில் குளம், குளத்தைச் சுற்றித் தென்னை மரங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தக் கோவில் சொந்தமண்ணின் மேலுள்ள பந்தத்திற்கு மேலாகப் பாசம் பதிந்த இடம். இந்த அம்பாள் என்னோடு பல பாத்திரங்களில் பயணித்தவள்.

ஆரம்பத்தில் அம்பாள் என்னைப் பயமுறுத்தும் பூச்சாண்டியாகவே அறிமுகமானாள். சின்னவயதில் பொய்சொன்னால், திருடினால், விளையாட்டில் கள்ளாட்டம் ஆடினால், அம்மா சுட்டுவைத்த பலகாரத்தைத் தொட்டால் என் கண்ணைக் குத்திவிடுவாள் என்று சொன்னார்கள். அம்மன்கோவில் வேப்பமரத்தின் வேர் சிவன்கோவில் வரைக்கும் போகிறது என்றார்கள். எத்தனை எத்தனை கதைகள்! அத்தனையும் அம்மனின் பிம்பத்தை ஒரு பிரம்மாண்ட சக்தியாகவே காட்டின. நான் தவறு செய்யும்போதெல்லாம் என்னை மீறிய சக்தி தண்டிக்கும் என்பதே என்னை நல்வழியில் செல்லத் தூண்டியது. சில வருடத்தில் அம்பாள் மீதான பயம் போனது. ஆனால் பயம் போகும்போது நான் அதுவரை சரியான வழியென்று தேர்ந்தெடுத்த எதுவும் என்னை விட்டுப் போகவில்லை. நான் தவறென்று தெரிந்து செய்வதை எவ்வளவுதான் நியாயப்படுத்தினாலும், எத்தனை பேரைத் திருப்திப்படுத்தினாலும் எனது சொந்த மனசாட்சி ஒத்துக்கொள்வதில்லை. நீ ஏமாற்றுகிறாய் என்று என்னைப் பார்த்துக் கேலியாய்ச் சிரிக்கும். அது எப்படி எனக்குள்ளேயே எனக்கெதிராய்க் கருத்துக்கொண்டவன் தோன்றினான்? ஒருவேளை யாரும் இந்த அம்பாள் பேரைச் சொல்லிப் பயமுறுத்தவில்லையெனில் எனது மனச்சாட்சிக்கு எது நல்லது எது கெட்டது என்றே தெரியாமலே போயிருக்கலாம்.

என்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்த அம்பாளுக்குப் புதிய உத்தியோகம் கொடுத்தேன். அவள் பூச்சாண்டியிலிருந்து எனக்குக் காவல் தெய்வமானாள். தவறு செய்கிறவர்களையெல்லாம் அம்பாள் தண்டிப்பாள் என்ற எண்ணம், எனெக்கெதிராய் நடப்பவர்களையெல்லாம் குறித்துக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் தூண்டியது. "இதென்ன முட்டாள்தனம்? உனெக்கெதிராய்ச் செயல்படுபவர்களிடம் நேரடியாய்ச் சண்டையிட்டு ஒன்றுமில்லாமல் செய்வதுதானே வீரத்திற்கு அழகு. அதைவிட்டுவிட்டு அம்பாளிடம் முறையிடுவதில் என்ன பயன்?" என்று நீங்கள் கேட்கலாம். எப்படிச் சட்டத்தை நம் கைகளில் எடுத்துக்கொள்ள முடியாதோ அதுபோல தர்மமும் நம் கைகளில் எடுத்துக்கொள்ள முடியாத ஒன்று. அம்பாளிடம் முறையிட்டால் என்றாவது ஒருநாள் அவள் நியாயம் கேட்பாள் என்பதே நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் ஒட்டுமொத்த உலகத்தையும் தர்மத்தின் பேரால் நேரடியாகச் சண்டையிட்டுச் மடிந்துபோகாமல் இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

காவலாளியாக இருந்தவளுக்கு அடுத்த பதவி உயர்வுக்கான காலமும் வந்துவிட்டது. பதவியுயர்வு என்றால் வேலைப்பளு கூடுவதும் உலக இயற்கைதானே!

ஆமாம். அவளுக்கு இப்போது நான் கேட்டதெல்லாம் கொடுப்பதே வேலை. அது கிரிக்கெட் விளையாடும் மட்டையாக இருக்கலாம்; கின்னஸ் சாதனையில் என் பெயர் இடம்பெறுவதாகக்கூட இருக்கலாம். எது கேட்டாலும் அவள் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால் ஏதோ என்னால் முடிந்ததைக் காணிக்கையாக, பிரார்த்தனையாகத் திருப்பிக் கொடுப்பேன். இன்று மேலாண்மைக் கோட்பாடுகள் உலகிற்குச் சொல்லித்தருவது, எந்தவொரு வெற்றிக்கும் இலக்கு அவசியம் என்பதே. அந்த இலக்கை நிர்ணயித்துக்கொள்ளப் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நமது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரிடம் நமது இலக்கைச் சொல்லிவிட்டு அதை அடைய நேர்வழியில் முயற்சித்தால் போதும். அந்த முயற்சி தானாகவே வெற்றியை ஈட்டித்தரும். இதை எனக்குச் சொல்லாமல் சொல்லித் தந்தவள் இந்த உலகநாயகி அம்மைதான்.

சில நேரங்களில் எனது இலக்கில் நியாயம் இருப்பதில்லை அல்லது இலக்கை வெகு சீக்கிரமாகக் குறுக்குவழியில் அடையவேண்டுமென்று நினைத்தேன். அப்போதும் நான் கேட்டதெல்லாம் அம்பாள் தரவேண்டுமென்று நினைத்தேன். அம்பாள் மீதான இந்த எதிர்பார்ப்பு கேட்டதையெல்லாம் தராதபோதும், கேட்காத துன்பத்தைத் தந்தபோதும் கோபத்தை ஏற்படுத்தியது. கோபத்தால் ஒரு பயனும் இல்லாதபோதும் கோபம் அம்பாளுக்கும் எனக்குமான உறவைப் பலப்படுத்தியது. அவளிடம் என்னையறியாமல் எனக்கோர் உரிமை வந்தது. இதுவரை பூச்சாண்டியாக, காவல்தெய்வமாக, கேட்டதைக் கொடுப்பவளாய், துயர் துடைப்பவளாய் இருந்தவள், எனக்கு முதன்முறையாகத் தாயார்போலத் தோன்றினாள்.
இப்போது அவள் என்னிடமிருந்து எந்தச் சடங்கையும் எதிர்பார்ப்பதில்லை. எனக்கும் எந்தச் சடங்கும் தேவையாகத் தோன்றவில்லை. நானும் இதைக்கொடு, அதைக்கொடு என்று இப்போது கேட்பதில்லை. தாய்க்குத் தெரியாதா? பிள்ளைக்கு எப்போது எதைத் தருவதென்று! நான் எப்போதெல்லாம் பிறருக்கு மனதால்கூடத் தீங்கு நினையாமல் இருக்கிறேனோ, அப்போதெல்லாம் என்னுடனேயே பயணிப்பாள். எப்போதெல்லாம் நான் தடம் மாறினேனோ, அப்போதெல்லாம் என்னைவிட்டு விலகிவிடுவாள். விலகி விடும்போது அவளை வலுக்கட்டாயமாகத் திருப்தி செய்யவே சடங்குகள் தேவைப்படுகின்றன. அவளையா ஏமாற்ற முடியும்? ஒவ்வொரு முறையும் இவன் உண்மையாகத்தான் மன்னிப்புக் கேட்கிறானா இல்லையா என்று அளந்துவிடுவாள். உலகநாயகியை ஏமாற்றமுடியாது.

இப்போது அம்பாள் எனக்கு இன்னொரு தாய் என்ற பெருமிதமே எனக்குள் ஆணவத்தைக் குடியேற்றியது. இன்னும் பயத்தில், ஆசையில், கோபத்தில், துயரத்தில் அவளை அணுகுகிறவர்களைப் பார்க்கும்போது ஏளனமாக நினைத்தேன். "ஏன் இவர்கள் இந்தச் சடங்குகளையே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்னிடம் வந்தால் நானே கடவுள் யாரென்று சொல்லமாட்டேனா?" என்று அங்கலாய்த்தேன். அம்பாள் என்னைப் பார்த்து, "நீ வந்தவழியை நீயே அலட்சியம் செய்யலாமா? உன் மகனிடமோ அல்லது மகளிடமோ, அம்பாள் உனக்குத் தாயென்று சொல்லிப்பார். அவர்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள். என்னிடம் வந்துசேர உன்னைப்போல எந்த இடைத்தரகர்களும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களும் என்னை முதலில் பயத்தில்தான் அணுகவேண்டும். பின்பு தானாய் என் பாசவலைக்குள் வந்துவிடுவார்கள். அதற்குத்தான் இந்தச் சிலைவடிவமும் அத்தனை வழிபாடுகளும். இந்த யாத்திரை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தனித்தனியானது" என்றாள். இப்போது தெளிந்தேன். அபிஷேகங்களும், ஆராதனைகளும், தேர்த்திருவிழாக்களும், குடமுழுக்குகளும் இந்த யாத்திரைக்கான அச்சாரம்தான்.

இப்போது எனக்கு அம்பாளிடம் பயமுமில்லை, கோபமுமில்லை. அவளோ எனது ஆணவத்தையும், ஆசையையும் கொஞ்சம் கொஞ்சமாக வேரறுத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது எனக்கும் அம்பாளுக்கும் இடையே மிஞ்சியிருப்பது தூய அன்பு ஒன்றுதான். அந்த அன்போடுதான் அவள் கோவிலுக்கு ஓடுவேன். அங்கே போய் அவளுடைய முகத்தில் சின்னப் புன்னகையைக் கண்டுவிட்டால் போதும். உள்ளமெல்லாம் குளிர்ந்துவிடும். அந்தப் புன்னகையைக் காணாவிட்டால், அதற்காக அங்கேயே காத்திருப்பேன் அல்லது அவள் வாசலுக்கு மீண்டும் மீண்டும் போவேன். அவளிடம் நான் கேட்டுக்கொண்டதெல்லாம் "இன்பமோ, துன்பமோ எந்த நிலையில் நானிருந்தாலும் என்னோடு வா" என்பதுதான்.

அவளோ. "நீ எப்போதெல்லாம் பேராசைப் படவில்லையோ, எனக்குத்தான் எல்லாம் தெரியுமென்று ஆணவம் கொள்ளவில்லையோ, பிறருக்கு மனதால்கூடத் தீங்கு விளைவிக்கவில்லையோ, பிறரைப்பற்றி அவதூறு பேசவில்லையோ அப்போதெல்லாம் நான் உன்னுடனேயே இருப்பேன்" என்கிறாள். அவளை என்னுடனேயே தக்கவைத்துக்கொள்ளும் பெருமுயற்சியில் இருக்கிறேன். என்றாவது ஒருநாள் வெற்றி நிச்சயம்!

அழகப்பன் அண்ணாமலை,
பெடலுமா, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline