|
|
|
இலக்கியத்தில் நான் படித்து ரசித்த பகுதிகளை, மேற்கோள்கள், கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைபது என் வழக்கம். "எல்லாம் தமிழ்" என்ற கி.வா.ஜ.வின் நூலிலிருந்து சுவையான ஒரு பகுதி:
திருச்செந்தூர் கோவிலுக்கு புது மானேஜர் வந்தார். அவர் நெற்றி நிறையத் திருநீறு பூசி, கழுத்தில் ஆறுமுக ருத்திராட்சம் கட்டி பார்ப்பதற்கு சிவப்பழமாகக் காட்சி அளித்தார். ஆனால் அவர் வாயிலிருந்து வரும் சொற்கள் தோற்றத்திற்கு ஏற்றபடி இருக்காது. எந்தச் சமயத்திலும் கடுகடு முகமும், சுடுகின்ற சொல்லுமாக இருந்தார். வருகின்ற அடியார்களிடம் அன்பாகப் பேசி, வேண்டிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது அவருடைய கடமை. ஆனால் அப்படியில்லாமல் வாயில் வேட்டை நாயைக் கட்டியது போன்றிருந்தது அவர் நிலை. தரிசனத்துக்கு வருபவர்கள், கோயில் ஊழியர்கள், பக்தர்கள், ஆண்டிகள் யாவரும் இவரைக் கண்டு மன வருத்தம் அடைந்தார்கள். மானேஜர் கடுமையான சொல்லால் மட்டுமின்றி வரும்படியில் கொள்ளை, பொய்க்கணக்கு, படித் தரங்களைக் குறைப்பது, வீணாக அபராதம் விதிப்பது என்ற செயல்களையெல்லாம் வேறு செய்துவந்தார். இந்த மகா மாயையும் தெய்வம் பார்த்துக் கொண்டு இருக்கிறதே என்று நல்லோர் வயிறெரிந்தனர்.
அடியவர்களுக்கு உற்சாகம் இல்லை. திருட்டுத்தனமும் அதிகமாயிற்று. வந்த காணிக்கை அவ்வளவும் கணக்குக்குப் போவதில்லை. கோயிலுக்கு இரண்டு யானைகள் இருந்தன. அவற்றிற்கு போதிய உணவு இல்லாததால் இளைத்து விட்டன.
நாளடைவில் திருச்செந்தூரில் நடைபெறும் அக்கிரமங்கள் மேலதிகாரிகளுக்கு எட்டின. என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணி மேலதிகாரி ஒருவர் திருச்செந்தூருக்கு வந்தார்.
அவர் வருகையை அறிந்த மானேஜர் எல்லாம் ஒழுங்காக நடப்பது போலக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்து கணக்கையும் ஒழுங்குபடுத்தி வந்தார்.
அதிகாரி வந்தார். கோயிலைப் பார்வையிட்டார். அவருக்கு ஒரு குறையும் தென்படவில்லை. சிலரை விசாரித்தார். மானேஜருக்குப் பயந்து யாரும் உண்மையை ஒழுங்காகச் சொல்லவில்லை. எல்லாம் சரிவர நடப்பதாகக் கூறினார்களே தவிர குறைகளை உருவரும் கூறவில்லை.
அந்தக் கோவிலில் இருந்த பரதேசி ஒருவருக்கு இதனைக் கண்டு மிகவும் கோபம் வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் மேலதிகாரிக்குக் கோவிலில் நடப்பதை உணர்த்துவது கஷ்டம் என்று அறிந்த அவர், எப்பாடுபட்டாவது உண்மையை உணர்த்தத் துணிந்தார். அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது.
அன்று மாலையில் மேலதிகாரி சுவாமி தரிசனம் செய்கையில் பரதேசி சன்னதிக்கு அருகில் நின்று கொண்டு இனிமையாகத் திருப்புகழ் பாடினார். பாடல் உருக்கமாக இருக்கவே மேலதிகாரி பாடலைக் கவனித்துக் கேட்டார். தான் பாடும் பாடல் மேலதிகாரியின் காதில் விழுகிறது என்று அறிந்து கொண்ட பரதேசி,
கொட்டை கட்டி மானேஜர் செங்கடுவாய் வந்த பின்பு சுத்த வட்டை ஆனதென்ன சொல்லாய் குருபரனே
என்று பாடினார். அங்கிருந்த அத்தனை பேரும் கவனித்துக் கேட்டார்கள். அதிகாரியும் கேட்டார். முதலில் கவனிக்காத மானேஜரும், இரண்டாவது தடவை அதே கண்ணியைத் திருப்பிப் பாடுகையில் கேட்டார். அதற்குள் |
|
வேலவர்க்கு முன்னிற்கும் வீரபாகுத் தேவருக்குச் சாயரட்சைப் புட்டு தவிடோ பராபரனே
என்று இரண்டாம் கண்ணி வந்தது. அடியவர்கள் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்தார்கள். மானேஜரின் முகத்தில் கடுகு வெடித்தது. ஈயாடவில்லை. உடம்பெல்லாம் வியர்வை வெள்ளம்.
அதிகாரி பரதேசியின் சாமர்த்தியத்தை வியந்து நின்றார். பரதேசி அதோடு நிற்காமல் மானேஜரின் அக்கிரமத்துக்குக் கண்கண்ட சாட்சியான யானைகள் இளைத்துப் போனதையும் பாட்டிலே வைத்தார். மானேஜர் யானைகள் வெளியே போயுள்ளன என்று அதிகாரிக்கு சாக்குக் கூறியுள்ளதைப் பொய் என்பதை எடுத்துக் காட்டும் வகையில்
மாநிலத்தில் காய் கிழங்கு வற்றலுண்டு; செந்தூரில் - இரண்டு ஆனை வற்றல் ஆனதென்ன ஐயா குருபரனே"
என்று பாடினார். இந்த மூன்றாவது கண்ணி மற்ற இரண்டையும் விட செந்தூரின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியது. மக்கள் ஆரவாரித்து தங்கள் மகிழ்ச்சியைக் காட்டினார்கள்.
அதிகாரியும் உண்மையை உணர்ந்து கொண்டார். பரதேசியின் உபாயம் பலித்தது. பிறகு..... அதையுமா சொல்ல வேண்டும்?
சுபத்ரா பெருமாள், கூபர்டினோ, கலிபோனியா |
|
|
|
|
|
|
|