|
|
|
அமெரிக்காவுக்கு சுற்றுலாவரும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் லெகோலேண்ட். தென்கலிஃபோர்னிய மாகாணத்தின் சான் டியேகோ நகரில் உள்ள கார்ல் என்ற இடத்தில் 128 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. Lego என்பது கம்பெனியின் பெயர். இங்கே அவர்கள் லெகோலேண்டை அமைத்துப் பத்து ஆண்டுகள் ஆகின்றன.
இங்கு சிறிய பிளாஸ்டிக் கட்டைகள் பலவற்றால் ஆன வடிவமைக்கப்பட்ட உருவங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. மனதிற்கு இன்பத்தையும் கண்ணுக்கு நல்ல விருந்தையும் இவை அளிக்கின்றன. லெகோலேண்டின் சிறப்பு என்னவென்றால் சிறிய உருவம் முதல் பெரிய கட்டிடம் வரை அனைத்துமே பிளாஸ்டிக் கட்டைகளால் கட்டப்பட்டு இருப்பதுதான். இந்தச் சிறுசிறு பிளாஸ்டிக் கட்டைகளைக் குழந்தைகளே ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிப் பல வடிவங்களை உருவாக்கலாம். இவற்றை Dynoland, Explore village, Funtown, Pirate Shores, Castlehill, Lands of Adventure, Imagination Zone, Miniland USA என எட்டுப் பிரிவுகளாகப் பார்வைக்கு வைத்துள்ளனர்.
| நியூயார்க்கில் உள்ள லிபர்டி சிலை, லாஸ்வேகாஸ், வாஷிங்டன் டி.சி., லிங்கன் மெமோரியல், நியூயார்க் நகரம், புரூக்லின் பாலம், சிகாகோ, சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய வடிவங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. | |
சாதாரணமாக, சவாரி என்றால் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்று நினைப்போம். ஆனால் இங்குள்ள சவாரிகள் அனைத்தும் குழந்தைகளுடனே பெரியவர்களும் சென்று அனுபவிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நம் கவனத்தை ஈர்க்கும்படியான சவாரிகளும், பார்த்துக் களிக்க வேண்டிய பலவித வடிவமைப்புகளும் உள்ளன. தரைவாழ் விலங்குகள், நீர்வாழ் விலங்குகள், தீயணைப்பு வீரர்கள், கிணறு, கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எனப் பலவகை மாதிரிகளும் உள்ளன. பொதுவாக பெரிய சவாரிகளுக்குப் பெரிய வரிசை இருந்தால் குழந்தைகள் தங்கள் சுற்று வருவதற்குள் பெரும்பாலும் பொறுமையை இழந்து விடும். ஆனால் இங்கு அதற்குச் சந்தர்ப்பமே இல்லை. ஏனெனில் இங்கு வரிசையில் பெற்றோர்கள் நின்று கொண்டு குழந்தைகள் விளையாடுவதற்காக லெகோ பிளாக்ஸை அருகிலுள்ள விளையாட்டு இடத்தில் வைத்துள்ளனர். பெற்றோர்கள் வரிசையில் நிற்கும்போது குழந்தைகள் தங்கள் மனதில் தோன்றியபடிக் கட்டைகளால் வடிவமைத்துத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணரலாம். |
|
சிறுவர்கள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படகுச் சவாரி சென்று சிறுசிறு லெகோ கட்டைகளால் கட்டப்பட்ட தாஜ்மஹால், ஈஃபெல் கோபுரம் போன்றவற்றின் மிக அருகில் சென்று அவற்றைப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். நியூயார்க்கில் உள்ள லிபர்டி சிலை, லாஸ்வேகாஸ், வாஷிங்டன் டி.சி., லிங்கன் மெமோரியல், நியூயார்க் நகரம், புரூக்லின் பாலம், சிகாகோ, சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய வடிவங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தத்ரூபமாக இருக்கும் அவைகளை நாம் கண்டு களிக்காமல் இருக்கக்கூடாது. கைவேலைப்பாட்டுக்கும், கலைத்திறனுக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக விளங்கும் லெகோ லேண்டைப் பார்க்க கண்டிப்பாய் ஒருமுறை போய் வாருங்களேன்!
ராஜேஸ்வரி, சான் ஹோசே, கலிபோர்னியா |
|
|
|
|
|
|
|