Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
எனக்குப் பிடிச்சது
சென்னை தொலைக்காட்சி
எங்கள் குடியிருப்பு
கிரிவலம், குருவலம்
- எஸ். ராமன்|நவம்பர் 2009|
Share:
Click Here Enlarge1950களில், பள்ளி மாணவனாக இருந்தபோது, தனியே மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் இருந்தது. தெற்கு கோபுர வாசலின் எதிரே உள்ள சொக்கப்ப நாயக்கன் தெரு வழியே அடிக்கடி செல்வேன். அந்தத் தெருவில்தான் பால ரமணர் இருந்தார் என்பதோ, அங்குதான் 'அருணாசலம்' என்ற பெயரைக் கேட்டதுமே அவருக்கு ஓர் ஈர்ப்பு வந்தது என்பதையோ, அங்கிருந்து ஒருவழிப் பயணமாகத் திருவண்ணாமலை சென்றடைந்தார் என்பதோ எனக்கு அப்போது தெரியாது. தெரிய வந்தபோது, ரமணர் புழங்கிய இடங்களில் நானும் இருந்திருக்கிறேன் என்ற நினைப்பே பெரிய சந்தோஷம் தந்தது.

அம்மன் சந்நிதி வழியாகத்தான் கோவிலுக்குள் நுழைவேன். பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி வரும்போது, தெற்கு கோபுர வாசல் முனையில் ஒரு விபூதிப் பிள்ளையார் இருப்பார். அங்கிருந்து பார்த்தால் சில கோபுரங்கள் மிக அழகாகத் தெரியும். அந்த அழகை ரசித்துக்கொண்டே, சில படிகள் இறங்கிக் கால் கழுவிக்கொண்டு அம்மன் சந்நிதி நோக்கிச் செல்வேன். ஒருநாள் அந்தப் படிகளிலேயே உட்கார்ந்தபோது "ஒரு வேளை எனக்கு திடீரென்று மரணம் நேர்ந்தால், அம்மனிடம் என்ன வேண்டிக் கொள்வது?" என்ற ஒரு எண்ணம் தோன்றியது. அப்போது எனக்கு 11 வயதுதான். மரணம் பற்றிய எண்ணம் தோன்றுவதற்கு எத்தகைய முகாந்திரமும் கிடையாது, நான் என் தாத்தா, பாட்டியிடம் மதுரையில் வளர்ந்து வந்தேன். என் பெற்றோர்கள் வட இந்தியாவில் இருந்ததால், எப்போதாவதுதான் அவர்களைப் பார்ப்பேன். என் தாய் அருகில் இல்லாததாலோ, அவரை எப்போதோ பார்ப்பதாலோ, ஏதோ ஒரு காரணத்தால் எனக்கு அப்படி எண்ணம் தோன்றியதோ என்னவோ? அது தோன்றிய உடனேயே மனதில் 'அப்படி ஒரு வேளை நேர்ந்தால் தாயிடம் என்னைக் கொண்டு சேர்க்க வேண்டும்' என்று அம்மனிடம் வேண்டிக் கொள்ளத் தோன்றியது.

பகவான் ரமணருக்குச் சொக்கப்ப நாயக்கன் தெருவில் நேர்ந்த மரணானுபவம் பற்றி நான் படித்துப் பல நாட்கள் ஆகியும், எனக்கு நடந்த மேற்படி நிகழ்ச்சியைப் பற்றி ஞாபகம் வரவே இல்லை. பல வருடங்கள் கழித்து ரமணாஸ்ரமத்தில் சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஞாபகம் வந்தது.

நாங்கள் மதுரையிலிருந்து திருச்சிக்குக் குடிபெயர்ந்தோம். அங்கு கல்லூரிப் படிப்புக்குப் பின், தொழில்நுட்பப் படிப்பைத் தொடர பெங்களூர் சென்றேன். நான் படித்த இடத்திலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் முதன்முறையாக பகவான் ரமணரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். என்னுடன் தங்கியிருந்த நண்பனின் தந்தை ரமண பக்தர் என்றும், அவர்கள் திருச்சியிலிருந்து பெங்களூர் வரும் வழியில் ரமணரை தரிசனம் செய்வது வழக்கம் என்றும் அவன் சொல்லக் கேட்டேன்.

ரமணர் இருந்த இடத்திலிருந்தே அவர் இருக்கும் இடத்தை அடையவே ஒரு பெரிய வலம் எனக்குத் தேவைப்பட்டிருந்தாலும், இறுதியிலேனும் அடைந்ததே அவர் அருள்தான்.
அங்கிருந்த கடைசி வருடத்தில் 'செயற்கை அறிவு' துறையில் நாட்டம் வந்தது. அதனால் கணினி சம்பந்தப்பட்டவை தவிரத் தாவரவியல், சமூகவியல், மதம், தத்துவம் போன்ற பல மாறுபட்ட துறை நூல்களையும் ஓரளவு படித்து ஆராய வேண்டி வந்தது. அந்தச் சமயத்தில்தான் இந்துமதத் தத்துவ நூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போது என்னுடன் பணி புரிந்த முதிர்நிலை ஆசிரியர் ஒருவரிடம் 'பகவத் கீதை'யின் சாராம்சத்தைச் சுருக்கமாகக் கூறுமாறு கேட்க, அவர் "பணியில் கருத்தாய் இரு; அது அளிக்கும் பலன்களில் நாட்டம் கொள்ளாதே" என்பதுதான் அதன் மையக் கருத்து என்றார். அதை உடனே புரிந்துகொண்டேன் என்றோ, ஒத்துக்கொண்டேன் என்றோ என்னால் சொல்ல முடியாது. அப்போது உணர்ந்திராவிட்டாலும், அந்த கீதையின் கருத்து என்னை மேலும் படித்து அறிந்துகொள்ள உதவியது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்தப் பெரியவரிடம் நான் செய்த ஒரு பணிதான் என்னை சென்னையில் உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியர் பணியில் அமர வைத்தது. இப்படியாக நான் 1969-ல் சென்னைக்குக் குடி பெயர்ந்தேன் .

அந்த ஆண்டு விடுமுறையில் எனது ஊருக்குச் சென்றபோது என் தாய் எனக்குப் பிடிக்கும் என்று எடுத்து வைத்திருந்த 'அருணாசல மஹிமை' தொடரைக் காண்பித்தார். அதில்தான் வடதிருமுல்லைவாயிலில் உள்ள வைஷ்ணவி ஆலயம் பற்றி வந்திருந்தது. புது இடமான திருவண்ணாமலை செல்லும் தயக்கத்தினால் அருகே இருக்கும் இக்கோவிலுக்கு முதலில் சென்றுவரலாம் என்று தோன்றியது. ஒரு வார இதழில் பூர நட்சத்திரத்தன்று அம்மனுக்கு விசேஷ பூஜை என்று எழுதியிருந்தது. அந்த வாரம் நான் அலுவலகத்துக்கு போனால், எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. எனது மூத்த ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு வரும் வெள்ளிக்கிழமை மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒரு கல்விச் சுற்றுலா செல்லவேண்டும், எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது, அழைத்துச் செல்ல பஸ் நீங்கள் சொல்லும் இடத்திற்கு வரும் என்று சொன்னார். சுற்றுலா இடம் எங்கே என்றபோது அவர் வைஷ்ணவி ஆலயம் அருகே இருக்கும் ஓர் இடத்தைக் குறிப்பிட்டார். நானும் எனது எண்ணத்தைச் சொல்லி, சுற்றுலா முடிந்ததும் நான் அங்கு இறங்கிக் கொள்வதாகச் சொன்னேன். சுற்றுலா போன இடத்துக்கு எதிரிலேயே கோவில் இருந்ததைப் பார்க்க பிரமித்துப் போனேன். இப்படித்தான் நான் ரமணர் அடியார்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு முதன்முறையாகச் சென்றது.
பின்னர், கிரிவல மேன்மையை பகவான் பலருக்குச் சொல்லியதாகப் படித்தேன். கிரிவலம் போகும் நோக்கத்துடன் 1971ம் ஆண்டு திருவண்ணாமலை சென்றேன். கோவில் அருகே இருந்த ஒரு லாட்ஜில் தங்கினேன். காலையில் எழுந்து தயார் ஆனதும், அண்ணாமலையார் கோவில் கர்பக் கிருகத்தில் நுழைந்தேன். தனிமையில், ஏதும் அலங்காரம் செய்யப்படாத லிங்க வடிவில் அண்ணாமலையாரை திவ்ய தரிசனம் செய்தேன். அது போன்ற தரிசனம் வெகு நாட்கள் கழிந்தபின் தான் எனக்கு மறுமுறை கிடைத்தது. இரண்டு மணி நேரம் கடந்தபின் ரமணாஸ்ரமம் சென்றேன். காலை 11 மணிவாக்கில் ஆஸ்ரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு ரமணர் வெகுகாலம் வீற்றிருந்த "பழைய ஹால்" உள்ளே சென்று அமர்ந்து ரமணர் பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டு, கிரிவலம் செல்ல அது சரியான நேரம்தானா என்று யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். போகலாம் என்று தோன்றாததால், அன்று மதியமே சென்னை திரும்பிவிட்டேன்.

அந்த வருடமே டிசம்பர் மாதத்தில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி ரமண ஜெயந்தி வரும் என்று அறிந்து, முதலில் சிதம்பரம் சென்று தரிசனம் பார்த்துவிட்டு, அங்கிருந்து விழுப்புரம் வழியாகத் திருவண்ணாமலையை அடைந்தேன். அன்று காலையே ஜெயந்தி விழா முடிந்திருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு, ரயிலில் இருந்து இறங்கி குதிரை வண்டியில் ஏறும்போது, மறுநாள்தான் ஜெயந்தி என்று வண்டிக்காரர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. இரவில் நேரம் கழித்துச் சென்ற என்னை ஆஸ்ரமத்தில் இருந்த ஒருவர் 'அதிதிகள் தங்கும் அறை' ஒன்றைக் காட்டி அங்கு உறங்கச் சொன்னார். மறுநாள் அதிகாலை, அப்போதைய வழக்கப்படி விறகு அடுப்பு ஒன்றின்மேல் பெரிய தவலையில் கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை எடுத்துக் குளித்துவிட்டு, கிரிவலம் போவது பற்றி யோசித்துக்கொண்டே ஆஸ்ரமத்தின் வாசற்படியில் உட்கார்ந்தேன். அப்போது வாசலில் இருந்த பெரிய இலுப்பை மரத்தின் திசையிலிருந்து ஒரு பாம்பு நெளிந்து எனது வலப்புறமாகச் சென்றதைப் பார்த்தேன். என் மனதில் என்ன தோன்றியதோ, உடனே எழுந்து எனது முதல் கிரிவலத்தைத் தொடங்கினேன்.

என் தொடக்க நாட்களைத் திரும்பிப் பார்க்கும்போது, மதுரை, திருச்சி, பெங்களூர், சென்னை வழியாக திருவண்ணாமலையை அடைந்ததே ஒரு வலம் போன்று தோன்றுகிறது. அதிலும் ரமணர் இருந்த இடத்திலிருந்தே அவர் இருக்கும் இடத்தை அடையவே ஒரு பெரிய வலம் எனக்குத் தேவைப்பட்டிருந்தாலும், இறுதியிலேனும் அடைந்ததே அவர் அருள்தான் என்றால் என் வாழ்வில் நான் வேறு என்ன விழைய வேண்டும்?

எஸ். ராமன்,
சிகாகோ
More

சென்னை தொலைக்காட்சி
எங்கள் குடியிருப்பு
Share: 
© Copyright 2020 Tamilonline