|
|
|
அக்காலத்தின் மிகச்சிறந்த இசைக் கலைஞர்களில் அவர் ஒருவர். ரசிகர்களால் அன்போடு பாகவதர் என்று அழைக்கப்பட்டார். அவர் பாடப்போகிறார் என்றாலே அரங்குகள் நிரம்பி வழியும். சக கலைஞர்கள் உட்படப் பலரும் முன் வரிசையில் அமர்ந்து பாடலைக் கேட்க விரும்புவர். ஒருமுறை 'எவரனி' என்ற கீர்த்தனையை அவர் பாடி இசைத்தட்டாக வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்கான ஒப்பந்தத்தை முடித்திருந்தார்.
இசைத்தட்டு வெளியிடும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள்... தற்செயலாகச் சில இசைத்தட்டுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த அவர், ஒரு குறிப்பிட்ட இசைத்தட்டைக் கேட்டதும் அப்படியே திகைத்துப் போய் அமர்ந்து விட்டார். அவர் சமீபத்தில் பாடிய அதே 'எவரனி' கீர்த்தனையை, அவரைவிட மிக அழகாக, அற்புதமாக, உள்ளத்தை உருக்கும் விதமாகப் பாடியிருந்தார் இன்னொரு இசைக்கலைஞர்.
கம்பீரமான அவரது குரலையும், அதன் பாவத்தையும், இசையையும் கேட்டு மயங்கிய பாகவதர், தான் பாடி ஒலிப்பதிவு செய்திருந்த இசைத்தட்டு வெளிவராமல் உடனடியாக நிறுத்திவிட்டார். அதற்காகத் தான் பெற்ற பணத்தையும் ஒலிப்பதிவு நிறுவனத்திடம் திரும்பக் கொடுத்துவிட்டார். தன் பாடல் வெளியானால், அது அந்த இசைக் கலைஞரின் குரலோடு ஒப்பு நோக்கப்படும், அது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று கருதியே அவ்வாறு செய்தார்.
அந்தக் கீர்த்தனையைத் தன்னைவிடச் சிறப்பாகப் பாடியிருந்த அந்தப் பாடகரை நேரில் சந்தித்து, 'நல்ல வேளை! ஆண்டவன் எங்களைக் காப்பாற்றினார். நீங்கள் மட்டும் நாடகத் துறைக்குள் நுழையாமல் சங்கீதத் துறைக்கு வந்திருந்தால் நாங்களெல்லாம் என்றோ கடையைக் கட்டியிருப்போம். என்ன அற்புதமான சாரீரம் உங்களுக்கு' என்று வியந்து பாராட்டினார்.
இப்படி போட்டி, பொறாமையின்றி சக கலைஞரை மனமுவந்து பாராட்டியவரும், அவ்வாறு பாராட்டுப் பெறுமளவுக்குத் திறமை பெற்று விளங்கியவரும் யார், யார் என்று தெரிகிறதா?
அரவிந்த் |
|
விடை
பாராட்டியவர்: ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்
பாராட்டுப் பெற்றவர்: நாடக வேந்தர் எஸ்.ஜி.கிட்டப்பா |
|
|
|
|
|
|
|