|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஆகஸ்டு 2008| |
|
|
|
ஆகஸ்ட் மாதம் என்றாலே பண்டிகைக் காலத்தின் தொடக்கம். மாதப்பிறப்பு, ஆடிப்பெருக்கு, வினாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் தேசத்தையும் தெய்வத்தையும் ஒன்றாக எண்ணிக் கொண்டாடும் உள்ளம் படைத்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் மற்றொரு நன்னாளும் நினைவுக்கு வரும். அதுதான் சுதந்திர தினம். சுதந்திரத்தைப் பெறுவதற்காக நமது முன்னோர்கள் சிந்திய ரத்தமும், வேர்வையும், கண்ணீரும், உயிர்களும் நினைவிலிருப்பது அவசியம். சுதந்திரத்தோடு வருகின்ற பொறுப்புகளை மதிக்காதவர்கள் சுதந்திரத்தை விரைவில் இழக்கிறார்கள். தொடர்ந்து நிகழும் வன்முறைகள் பாரதத்தின் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. மிகச் சமீபத்தில் முதலில் பெங்களூருவிலும் அடுத்தநாளே அஹமதாபாதிலும் நேர்ந்த தொடர்குண்டு வெடிப்புகளில் ஏராளமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். அதையடுத்து வைரநகரமான சூரத்தில் 18 இடங்களில் குண்டுகளைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்துள்ளனர். இதனால் சூரத் நகர மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவான IB லஷ்கர்-எ-தொய்பாவின் அடுத்த இலக்கு மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்' என்று எச்சரித்திருக்கிறது. இந்திய ராணுவம், மற்றொரு புலனாய்வுப் பிரிவான RAW ஆகியவை ஒட்டுக்கேட்டதில் இது தெரிய வந்திருக்கிறதாம். இது இத்தோடு முடிவதல்ல. இதற்கு இதுதான் காரணம் என்றும் சொல்வதற்கில்லை. ஒற்றை வன்செயலுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியும். தொடர் வன்முறை ஒரு வழக்கம், வெறியுணர்வு. காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது. 'இதெல்லாம் எல்லை தாண்டிய நிறுவனங்களின் செயல்' என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. வன்முறைச் செயலுக்குத் திட்டமிடும் மூளை வேண்டுமானால் எல்லைக்கு அப்பால் இருக்கலாம். கைகளும் கால்களும் இந்தியாவுக்குள்ளேதான் இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றை முடக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை. 'ஒரு முள்மரத்தைச் சிறியதாக இருக்கும்போதே பிடுங்கி எறியவேண்டும். வளர்ந்து வைரம் பாய்ந்துவிட்டால், அதைப் பிடுங்க முயல்பவரின் கையையே அது அகற்றிவிடும்' என்று வள்ளுவர் கூறும் எச்சரிக்கையையும் இங்கே நினைவுறுத்துகிறோம்.
*** நாம் பெற்ற சுதந்திரத்தைப் பற்றி மீண்டும் சிந்திப்பது இங்கே அவசியமாகிறது. தமிழ் தொலைக்காட்சிகள் நடிகர் நடிகைகளைக் காட்டாத அந்த மிகக் குறைவான காலத்தில் செய்திகள் என்று ஒன்று வரும். அதிலே எந்தப் பிரச்சனை ஆனாலும் உடனே 'இந்த அரசாங்கம் இதற்கு ஒன்றுமே நடவடிக்கை எடுக்கவில்லை, நாங்கள் தவிக்கிறோம்' என்று கூறுபவர்களைக் காட்டிவிடுகிறார்கள். ஆளும்கட்சிச் சார்புத் தொலைக்காட்சி என்றால் 'எங்களுக்கு இந்த வசதியை இந்த அரசாங்கம் செய்தது, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்று வரும். மொத்தத்தில் எல்லாவற்றுக்கும் அரசையே சார்ந்திருக்கிற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் தன்னைச் சார்ந்து இருக்க வேண்டும் என்றுதான் அரசுகளும் எதிர்பார்க்கின்றன. மக்களுக்குத் தாமாகவே வேலைகள் நடந்துவிட்டால் அதில் அரசியல் செல்வாக்கு, லஞ்சம் இவற்றுக்கு இடமில்லாமல் போய்விடுமே. பிறகு கட்சிக்காரர்கள் சம்பாதிப்பது எப்படி! இப்போதைய மக்களாட்சி, அரசியல்வாதிகளால் அரசியல்வாதிகளுக்காக அரசியல்வாதிகளே நடத்திக் கொள்ளும் ஆட்சியாகிவிட்டது. திரைத்துறையினர், இலக்கியவாதிகள் மற்றும் பிற துறையினர் தன்மானத்தை விட்டு அரசியல்வாதிகளைப் பணிந்தால் மட்டுமே விருதுகளும் அரசுப் பதவிகளும் கிடைக்கும். எங்கே போய்க்கொண்டிருக்கிறது சுதந்திரம்?
*** |
|
தமிழ்மீது கொண்ட பற்றினால் தனக்கு விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து 'இலக்கிய வீதி' என்ற அமைப்பை நெடுங்காலமாக நடத்திவரும் இனியவன் அவர்களின் நேர்காணல் இந்த இதழில் இடம்பெறுகிறது. டாக்டர் அருள் சின்னையன் சுக்கியப் புற்றுநோய் (Prostatic cancer) துறையில் செய்த ஆய்வுகளுக்காகப் பரிசுகள் பெற்றவர். அவரது நேர்காணலும் மிகச் சுவையானது. சாதனையாளர் ஹேமா முல்லூர் தொலைக்காட்சிச் செய்தியாளராகத் தடம் பதித்து வருகிறார். தாராபாரதியின் கவிதைகள் அற்புதப் பொக்கிஷங்கள். தென்றல் சிறுகதைகள் என்றுமே சோடை போனதில்லை. இவ்வாறு அற்புதமான உள்ளடக்கத்தோடு இந்த இதழ் உங்கள் கைகளை வந்தடைகிறது. சுவையுங்கள். சுவைத்ததை எங்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் படைப்புகளையும் தொடர்ந்து அனுப்பி வையுங்கள்.
அமெரிக்கா வாழ் தமிழர்களின் வீட்டு நிகழ்ச்சிகளையும் தென்றல் வெளியிடத் தீர்மானித்துள்ளது. உங்கள் வீட்டுத் திருமணம், குழந்தை பிறப்பு, பட்டம் பெற்றது, அல்லது மறைவு போன்ற செய்திகளைச் சுருக்கமாக, புகைப்படத்துடன் தென்றலுக்கு அனுப்புங்கள். முந்தைய மாதம் 20 தேதிக்குள் வருபவை மட்டுமே அம்மாத இதழில் இடம்பெறும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். தென்றல் வாசகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களும் பண்டிகைக்கால வாழ்த்துக்களும்.
ஆகஸ்டு 2008 |
|
|
|
|
|
|
|