Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது
- |செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeடெமக்ரடிக் கட்சி வேட்பாளராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அந்தக் கட்சியில் நடக்கும் புதுமை என்றால், சாரா பேலின் ரிபப்ளிகன் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும்தான்! துணை அதிபர் நியமனங்களில் இரண்டு கட்சியினருமே அதிபர் வேட்பாளர்களின் குறைபாடுகளை (இளமை அல்லது அனுபவம்) நிறைவு செய்யுமாறு செயல்பட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது. ஆனால் பல மாநிலங்களில் பெரும் ஆதரவு பெற்ற ஹிலரியைத் துணையாகத் தேர்ந்தெடுக்காதது டெமக்ரட்டுகளுக்கு இழப்பாக அமையக்கூடும். அதிலும் சென்ற பில் கிளின்டன் ஆட்சிக்காலம் பொருளாதார ரீதியில் பொற்காலமாக அமைந்ததை யாரும் மறக்கமுடியாது. ஜோ பைடன் மிக அனுபவம் வாய்ந்த, முதிர்ந்த செனட்டர். இருவரும் துணை அதிபர் வேட்பாளர்களை அறிவித்து ஒரு வாரமாகிவிட்டது, அதனால் ஒபாமாவுக்கோ, மக்கெய்னுக்கோ பெரிதாக ஆதரவு கூடிவிட்டதாகத் தெரியவில்லை. திட்டவட்டமான வளர்ச்சிக் கொள்கைகளை அறிவிக்கட்டும் என்று மக்கள் காத்திருக்கிறார்களோ என்னமோ.

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் முடிந்துவிட்டது. பதக்க வேட்டையில் அமெரிக்கா இரண்டாவதாக வந்துள்ளது. ராஜ் பாவ்சர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ராஜு ராய் (பாட்மின்டன்) என்ற இரண்டு அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்கக் குழுவில் இடம் பெற்றிருந்தது நமக்கு நிறைவைத் தருகிறது. அதைவிட முக்கியமானது என்னவென்றால் இந்தியாவின் பதக்க வறட்சி நீங்கி ஒரு தங்கம், இரண்டு வெண்கலம் ஆகியவற்றைப் பெற்றது தான். வீரர்களும் அதிகாரிகளும் ஒலிம்பிக் நகரத்துக்கு இன்பச் சுற்றுலா சென்று வெறுங் கையோடு திரும்பி வருவது தான் பல ஆண்டுகளாக நடந்துவந்தது. அதில் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத்தக்கது, ஆனால் போதுமானதல்ல; இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமா? தனிநபர் உழைப்பா? மரபணுவைப் பழிப்பதை விட்டுவிட்டுப் பயிற்சியில் ஈடுபடும் மனப்பாங்கு வந்ததா? இந்த முறை பதக்கம் வென்றதற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், இதை ஒரு திருப்புமுனையாகக் கொண்டு, அடுத்த ஒலிம்பிக்ஸில் இந்த இந்தப் பிரிவுகளில் இத்தனை பதக்கங்கள் பெறுவோம் என்று இலக்கு நிர்ணயித்து அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுவது வீரர்கள் கடமை; அதை ஊக்குவிப்பது, வசதி செய்து தருவது வணிக நிறுவனங்களின், அரசுகளின் கடமை. இந்த முயற்சிகளுக்குத் தடையாகவாவது இல்லாமலிருப்பது விளையாட்டு வாரியங்களின் பொறுப்பு.

ஜம்மு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. காரணம் இதுதான்: வருடத்தில் சில மாதங்களே பக்தர்கள் ஜம்மு வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் அமர்நாத்தின் பனி லிங்கத்தை தரிசிக்கச் செல்கிறார்கள். செல்லும் வழியில் இரவில் தங்கிக் காலையில் கடன்களைக் கழித்துச் செல்வதற்காக ஒரு மைதானத்தில் கூடாரங்கள் அமைத்துக் கொள்ள இடம் உள்ளது. இந்த இடம் கடந்த 70 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அதே மாநில அரசின் மற்றொரு கரமான 'அமர்நாத் கோவில் வாரிய'த்துக்குக் கொடுக்க அரசு தீர்மானித்தது. இதை எதிர்த்து காஷ்மீரி முஸ்லீம்கள் கிளர்ந்தெழவே உடனடியாக இதை மாநில அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. 1979-ல் சுமார் 350,000 காஷ்மீரி இந்துக்கள் அங்கேயிருந்து வன்முறைகளால் துரத்தியடிக்கப்பட்டு வெளியேறி டெல்லி, ஜம்மு, உதம்பூர் என்று பல இடங்களிலும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத துணிக் கூடாரங்களில் அல்லல்பட்டு வருகிறார்கள். மத்திய மாநில அரசுகள் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்தப் பின்னணியில், இந்தச் சிறு இடத்தையும் தர மறுத்த அரசின் மீது ஜம்மு மக்களின் கோபம் வெடித்தெழுந்தது. போதாக் குறைக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் 'நாங்கள் மதத்தால் பாகிஸ்தானிகள். இந்தியர்களல்ல' என்று கூறுவதும் ஒற்றுமையை விரும்பும் எவருக்கும் அதிர்ச்சியைத் தரும். இலவசக் கல்வி, உணவு, மின்சாரம், சொத்துக்களை வாங்கப் பிற இந்தியர்களுக்கு உரிமை மறுப்பு என்று எண்ணற்ற சலுகைகளை (பிற இந்தியரின் வரிப்பணத்தில்) அனுபவித்து வரும் அவர்களை மேலும் கொஞ்சிக் கொண்டிருப்பது, இந்திய அரசின் முதுகெலும்பற்ற தன்மையையே காட்டுகிறது என்று கருதுவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதே நேரத்தில் அருந்ததி ராய் போன்ற மகா மேதாவிகளும் 'காஷ்மீரிலிருந்து இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கும் விடுதலை கொடுப்பதே நல்லது' என்று பேசத் தொடங்கியிருப்பதையும் கவனிக்க வேண்டும். ஜம்மு மக்கள் கோரும் நியாயமான உரிமைகளுக்கு ஆதரவு தராத இதே ஜோல்னாப்பை அறிவுஜீவிகள்தாம் நாளைக்கு வன்முறையாளர்களுக்கும் பிரிவினையாளர்களுக்கும் மனித உரிமை வேண்டிப் போராடுவார்கள்.
'ஒரே ஒரு இந்தியனின் முகம் தென்படாதா!' என்று அமெரிக்காவுக்கு வந்தவர்கள் தேடியலைந்த காலம் ஒன்று உண்டு. அத்தகைய காலத்தில் அமெரிக்காவுக்கு வந்து 31 ஆண்டுகளில் நூறு பரத நாட்டிய அரங்கேற்றங்களை நடத்திவிட்ட குரு விஷால் ரமணியின் நேர்காணல் இந்த இதழின் சிறப்பு அம்சம். வட அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து வேர்மண்ணின் வாசம் தேடிப் பதிவு செய்த ஆங்கில எழுத்தாளர் பத்மா விஸ்வநாதனின் நேர்காணலும் சுவையானதுதான். இந்த இதழில் இரண்டு நகைச்சுவைக் கதைகள். அதிலும் எல்லே சுவாமிநாதன் கதைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஹரிமொழி புதிய உச்சம் ஒன்றை இந்த இதழ்க் கட்டுரையில் தொடுகிறது. ஆஷ்ரயாவின் கருணையும் செயலூக்கமும் பெரியோர்களுக்கும் முன்னோடி! இதோ, இன்னும் ஒரு சுவையான கதம்பமாகத் தென்றல் உங்கள் கைகளில் தவழ்கிறது.

தென்றல் வாசகர்களுக்குப் பிள்ளையார் சதுர்த்தி, ஆசிரியர் தினம் மற்றும் ரமலான் வாழ்த்துக்கள்!


செப்டம்பர் 2008
Share: 
© Copyright 2020 Tamilonline