|
தென்றல் பேசுகிறது |
|
- |ஜூலை 2008| |
|
|
|
எரிபொருளைப் பொறுத்தவரையில் எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது உலகம். சூரிய ஒளி, மின்சாரம், கலவை எரிபொருள் என்று எதையெல்லாமோ வைத்து வாகனங்களை ஓட்ட முயற்சிக்கிறது. ஆனாலும் நமது வாகனங்கள் கேஸைக் குடித்துப் பழகி விட்டன. சீனா, இந்தியா போன்ற விரைந்து பொருளாதார முன்னேற்றம் காணும் நாடுகளிலும் தானியங்கி வாகனங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் 'பெட்ரோலியம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள்' (OPEC) கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையை ஏற்றுவது பல நாடுகளில் அபாயகரமான பொருளாதாரச் சூழலை ஏற்படுத்தியுள்ளது. சீறி ஏறும் விலைவாசி, பணவீக்கம், உயரும் வட்டி வீதம் என்று இந்த விஷச் சுழலில் சிக்கி அவை திணறுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை. இதனால் ஏற்படும் சமுதாய அழுத்தங்களும் பல விரிசல்களை ஏற்படுத்தும். குற்றங்கள் அதிகரிக்கும். வலுத்த நாடுகள் ஒன்றுசேர்ந்து கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு வழி செய்தே ஆக வேண்டும். அதே சமயத்தில் மாற்று எரிபொருளுக்கான தேடலை விரைவுபடுத்தி ஆகவேண்டும். அருணாசலப் பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்ததைச் சீனா ஆட்சேபித்தது. அது சீனப் பிரதேசமாம்! இப்போது சிக்கிமுக்குள் சீனப்படை ஊடுருவியிருக்கிறது. பாகிஸ்தானோ சீனாவின் தோழமை நாடுதான். நேபாளத்தில் மன்னராட்சி அகற்றப்பட்டிருக்கிறதே தவிர ஜனநாயகம் ஒன்றும் வந்துவிடவில்லை. அங்கே ஆளும் மாவோயிஸ்ட்டுகள் 'இந்தியாவை தூரத்தில் வைத்துக் கொள்வோம்' என்றுதான் சொல்கிறார்களே தவிர நட்புப் பாராட்டவில்லை. பங்களாதேஷ் விடுதலையில் நம் படைகள் சென்று உதவிய போதும், இன்றைக்கு நாம் அதன் நட்புநாடு அல்ல. நாம் கொடுத்த கச்சத்தீவை வாங்கிக் கொண்டு, இன்று கச்சத்தீவின் அருகே செல்லும் தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா தாக்குகிறது. கச்சத்தீவைக் கொடுக்கும்போது எழுதிய ஒப்பந்தத்தில் இந்த உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டித் தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியிருக்கிறார். ஆக, நம்மைச் சுற்றியிருக்கும் எந்த நாடுமே நட்புநாடு அல்ல என்பது மிக வியப்பான சோகம். தனது ஆதிக்க புத்தியைத் தொடர்ந்து காட்டித் தன்னைச் சுற்றிய நாடுகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வரும் சீனாவுக்கோ பல நண்பர்கள்! இதைப்பற்றி இந்தியா சிந்தித்தே ஆகவேண்டும். நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாக இருப்பதும் இந்தக் காலகட்டத்தில் அவசியம் என்பதை உணர வேண்டும். இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. |
|
அச்சு நூல்களில்லாத காலத்தில் செவியால் கேட்டே எவ்வளவு பெரிய நூலையும் மனதில் நிறுத்திய இந்தியரின் அறிவுத் திறன் இன்னும் மங்கவில்லை. அது வெறும் மனனத் திறனல்ல. காரணகாரிய தர்க்கத் திறனும் அதில் இருந்தது. அதனால்தான் இன்றும் இந்தியரின் கணித அறிவு சிறந்து நிற்கிறது. இந்த உன்னதப் பாரம்பரியத்தை வெளிக்காட்டியது அக்ஷய் ராஜகோபால் என்னும் பதினோரு வயதுச் சிறுவர் 'நேஷனல் ஜியக்ராபிக் மேகசின்' நடத்திய 'புவியியல் தேனீ' போட்டியில் பெற்ற அப்பழுக்கற்ற வெற்றி. 'அப்பழுக்கற்ற' என்று சொல்லக் காரணம், அவர் இறுதிவரை ஒரு கேள்விக்குக் கூடத் தவறான விடை சொல்லவில்லை என்பதால். பன்னாட்டு அளவிலான போட்டியிலும் வெற்றி பெற அவரைத் தென்றல் பெருமிதத்தோடு வாழ்த்துகிறது. ஆசியப் பெண்ணுக்கு ஒப்பந்தப் பணி தருவதில் சம உரிமை வேண்டும் என்று போராடிப் பெற்ற நிஷா பவர்ஸ் குறித்தும் ஒரு கட்டுரை உள்ளது. கவிஞர், பேச்சாளர், தாவரவியலாளர், நாட்டிய நாடக ஆசிரியர், இசைப்பாடல் எழுத்தாளர், சுயமேம்பாட்டுப் பயிற்சியாளர் எனப் பன்முகங்கள் கொண்ட டாக்டர் வ.வே.சு. அவர்களின் நேர்காணல் இந்த இதழின் சிறப்பு அம்சம். சுவையுங்கள். சுவைத்ததை எங்களுக்கு எழுதுங்கள்.
தமிழ்ச் சங்கங்களின் பேரவையும் தமிழ்நாடு அறக்கட்டளையும் நடத்தும் தமிழர் விழாக்கள் வெற்றி பெற தென்றல் வாழ்த்துகிறது. வாசகர்களுக்கு அமெரிக்கச் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்.
ஜூலை 2008 |
|
|
|
|
|
|
|