|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஜூலை 2022||(1 Comment) |
|
|
|
|
அமெரிக்க உச்சநீதி மன்றம் "கருக்கலைப்பு, அரசியல் சாசனப்படியான அடிப்படை உரிமையல்ல" என்று தீர்ப்பு வழங்கி, அரை நூற்றாண்டுக் கால உரிமையைப் பறித்துள்ளது. இதன்மூலம் முன்னாள் Roe Vs Wade வழக்கின் தீர்ப்பை நிராகரித்துள்ளது. வேண்டுமானால் அந்தந்த மாநிலங்களே தமக்கான கருக்கலைப்பு உரிமைச் சட்டத்தை இயற்றிக்கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளது. இது மிகுந்த பிரிவினைக்கும் சச்சரவுகளுக்கும் எல்லாவற்றுக்கும் மேல் வழக்காடலுக்கும் வழி வகுப்பதாக உள்ளது. தவிர, பெண்களின் உடல்நலம் பேணலும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டிலும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் சுமார் 350,000 பேர் கருவுறுகிறார்கள், அதில் 31 சதவிகிதத்தினர், அதாவது 108500 பேர், கருக்கலைப்பை நாடுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இது தவிர ஏனைய வயதுக் குழுக்களில் உள்ள மகளிரின் விழைவில்லாக் கருவுறுதலையும் சேர்த்துக் கொள்வோம். அப்போதுதான் கருக்கலைப்பு உரிமை மறுத்தலின் பரிமாணங்களை அறிய முடியும். நாடு இப்போதிருக்கும் தளர்ந்த நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு நல்லதற்கு அல்ல என்பதை நம்மால் உணர முடிகிறது.
★★★★★
நாட்டின் முப்படைகளில் இளைஞர்கள் சேருவதை எளிதாக்கவென இந்திய அரசு 'அக்னிபத்' (அக்கினிப்பாதை) என்ற அருமையான திட்டமொன்றை அறிவித்துள்ளது. இதன்படி 17 முதல் 23 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 'அக்னி வீரர்'களாக, அருமையான சம்பளத் திட்டத்தின்படிச் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் ராணுவ அதிகாரிகள் ஆக்கப்படலாம் அல்லது ஓய்வு தரப்படலாம். எல்லா விவரங்களையும் இங்கு தருவது சாத்தியமில்லை. ஆனால், இதற்கான அறிவிப்பை வாயு சேனை வெளியிட்டதுமே 750,000 பேர் விண்ணப்பித்தனர் என்பதிலிருந்து இந்தத் திட்டத்தின் சிறப்பை ஊகிக்க முடியும். ராணுவத்தை இளமையாக்கி, இளைஞர்களுக்கு நாட்டுப்பணி செய்ய நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 'அக்கினிப் பாதை' நிச்சயம் வரவேற்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. அக்கினி வீரர்களுக்கு வாழ்த்துகள்.
★★★★★
மென்பொருள் துறையினர் பல்வேறு படைப்புத் துறைகளில் தடம் பதிப்பது இன்றைக்கு வாடிக்கை ஆகிவிட்டது. சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள கார்த்திக் பாலசுப்ரமணியனும் மென்பொருள் துறை சார்ந்தவர்தான். அவருடைய நேர்காணல் தவிர, ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள், பண்டிதை விசாலாக்ஷி அம்மாள் ஆகியோரின் வாழ்க்கைக் கட்டுரைகள் இவ்விதழை அணி செய்கின்றன. முருகப்பெருமானின் முற்பிறவி குறித்த காஞ்சி மகாபெரியவரின் அருட்குரலும் இதில் ஒலிக்கிறது. நெஞ்சை நெருடும் சிறுகதையும் உண்டு. வாருங்கள், வாசியுங்கள்.
வாசகர்களுக்கு அமெரிக்கச் சுதந்திர நாள் மற்றும் குருபூர்ணிமை வாழ்த்துகள்... |
|
தென்றல் ஜூலை 2022 |
|
|
|
|
|
|
|