|
தென்றல் பேசுகிறது |
|
- |ஆகஸ்டு 2020| |
|
|
|
|
திரும்பத் திரும்பக் கொரோனாவைப் பற்றியே படிக்கிறோமே என்று அலுப்புத் தட்டுவது உண்மைதான். ஆனால் அப்படி அலுத்துப்போய் அந்த வைரஸ் ஓடிவிடவில்லையே! உலக அளவில் அன்றாடம் பத்தாயிரக் கணக்கானோர் இன்னமும் அதனால் மரணத்தைத் தழுவிக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஆனால், முதன்முறையாக, இதை எழுதுகிற சமயத்தில், அமெரிக்காவில், இதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை (2,380,217) இந்த நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையை விட (2,275,441) அதிகமாக இருப்பதே மகிழ்ச்சியைத் தருகிறது. பாதிக்கப்படுவோரைவிட குணமடைவோர் அதிகம் என்பது இந்தக் கணத்தில் உண்மை. வளைகோட்டை நேராக்குவது (flattening the curve) என்பது கோவிட் விஷயத்தில் மிகவும் முக்கியம். பல நாடுகள் மிக இயல்பாக அல்லது எளிதாகவே இதைச் செய்துவிட்டன. ஆயினும் அரசு எந்திரம், மருத்துவநலச் செயல்முறைப் பிரச்சனைகள், மக்களின் அறியாமை அல்லது ஒத்துழையாமை என்பதாகப் பல காரணங்களால் நம்மால் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. புதுமைகளின் நாடு, அறிவியல் முன்னோடி, வளர்ந்த நாடுகளுக்குள் முன்னணியில் நிற்பது என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டிருந்த நமது இறுமாப்புக்கு இது பெரிய சவால்தான். ஆனால், ஆரம்பத்திலேயே கோட்டைவிட்டுவிட்ட, தவறுக்குமேல் தவறாகச் செய்து வருகிற, இன்றைய அரசு இதற்குப் பொறுப்பேற்கத்தான் வேண்டும். அந்தப் பாடத்தை மக்கள் கற்பிக்கவேண்டும். நல்லவேளை, தேர்தல் தொலைவில் இல்லை. இனியேனும் விழித்துக் கொள்வோம்.
★★★★★
நியூ யார்க் கவர்னர் ஆண்ட்ரூ க்வோமோ சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடவடிக்கைகளில் ஒன்றாக மின்சார வாகனங்களைத் தயாரிக்க, பராமரிக்க, அவற்றின் ஓடுதூரத்தை அதிகரிக்க, தேவையான மின்சாரம் நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எனப் பலமுனைத் திட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கது. மின்வாகனங்களுக்கான முதலீடு, ஊக்கத்தொகை, அவற்றை வாங்கப் பொதுமக்களுக்கு ஆதரவு ஆகியவை கொண்ட நல்ல திட்டத்தை அறிவித்துள்ளார். சுற்றுச்சூழல் என்று யோசித்தால், இந்த வாகனங்களால் கரியமில வாயு வெளியாவது குறையும். லித்தியம் மின்னணுவைத் தாண்டி யோசிப்பதும், இந்த மின்கலங்களையே அதிக மின்சேமிப்புத் திறன் கொண்டவையாக மாற்றுவதும் வாகனங்களின் ஓடுதூரத்தை அதிகரிக்கும் என்பதால் அவையும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில், சரியான நேரத்தில் தேவையான திட்டம்.
★★★★★ |
|
வியக்கத்தக்க மரச்சிற்பங்களைப் படைத்துத் தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் சிற்பி சாமிநாதனின் நேர்காணல் இந்த இதழின் மகுடம் என்றால், ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகளைப்பற்றிய கட்டுரை ஆன்மீக விருந்து. சிறுகதை மனதுக்கு விருந்தென்றால், பழுப்பரிசிப் பக்குவங்கள் நாவுக்கு விருந்தாக வருகின்றன. அழகிய கவிதைகளும் உண்டு. தென்றல் தரும் பல்சுவை விருந்தில் இது மற்றொரு சுவையான கதம்பம். வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்.
வாசகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் மற்றும் இந்திய சுதந்திர தின வாழ்த்துகள்.
தென்றல் ஆகஸ்டு 2020 |
|
|
|
|
|
|
|