|
தென்றல் பேசுகிறது.... |
|
- |ஏப்ரல் 2019| |
|
|
|
|
சியாட்டிலில் கார்ப்பரேட் தலைமையகத்தைக் கொண்டு, 153,000 பணியாளர்களுக்கு மேல் கொண்டுள்ள 'போயிங் குழுமம்' அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனம் ஆகும். உலக அளவில் 5000 'போயிங் 737 மேக்ஸ் ஜெட்' விமானங்களை வாங்குவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வகை விமானங்கள் இரண்டு விழுந்து நொறுங்கியுள்ளது கவலை தருவதாக இருக்கிறது. முதலில் அக்டோபர் 29, 2018 அன்று லயன் ஏர் விமானமும், அடுத்து எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 10, 2019 அன்றும் விழுந்து நொறுங்கின. இரண்டும் விழக் காரணம் ஒன்றே: அதிலிருக்கும் கன்ட்ரோல் சிஸ்டம் விமானத்தின் முன்புறத்தைக் கீழ்நோக்கிச் செலுத்தியதால் தவிர்க்கவே முடியாமல் விமானம் கீழ்நோக்கிப் பாய்ந்து, மொத்தத்தில் 346 உயிர்களைக் காவு கொண்டது. இது மென்பொருள் கோளாறினால் ஏற்பட்டது. இந்த விபத்துக்களின் காரணமாக, மேலே கூறிய 5000 விமானங்களில், ஏற்றுமதி ஆகிவிட்ட சுமார் 370 விமானங்கள் பயன்படுத்தப்படாமல் நிற்கின்றன. சுமார் $100 மில்லியனுக்கு மேல் விலை கொடுத்து வாங்கி இவற்றை நிறுத்திவைத்தால் அந்த விமானக் கம்பெனிக்கு ஏற்படும் நஷ்டத்தை யோசித்துப் பாருங்கள். இதையெல்லாம் விடக் கவலை தருவது அமெரிக்காவின் கௌரவத்துக்கும், மிக அதிக வருமானம் ஈட்டித்தரும் ஒரு விமானத் தயாரிப்புக் குழுமத்தின் நம்பகத்தன்மைக்கும் ஏற்பட்டுள்ள இழுக்கு. இதை வெறும் மென்பொருள் தவறு எனக் கருதி அதைமட்டும் சரிசெய்தால் போதாது. பெரிய குழுமங்கள், அவற்றை நெறிப்படுத்தும் அமைப்புகள் (Regulatory bodies) மற்றும் அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடை இவற்றுக்கிடையே உள்ள சந்தேகத்துக்குரிய தொடர்பு ஆராயப்பட வேண்டும். இத்தகைய பெருங்குறைபாடு கொண்ட விமான ரகம் ஒன்று எப்படிப் பறக்கத்தக்கதாகச் சான்றிதழ் கொடுத்து அனுமதிக்கப்பட்டது என்பதன் பின்னணி ஆராயப்பட வேண்டும். ஒற்றைப் பிழையாகக் கருதிவிடாமல், ஒட்டுமொத்தமாக அலசி நெடுநோக்கோடு பரிந்துரைகள் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் நாட்டுக்குப் பெரும் ஏற்றுமதி வருவாயை ஈட்டித்தரும் முக்கியமான தொழில்துறை ஒன்று கேலிக்கூத்தாவதற்கு அரசின் புலனாய்வு அமைப்புகளே காரணமாகிவிடலாம். அதனால் நீடித்த பாதகம் ஏற்படலாம்.
*****
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மிகக்கவனமாக, பதிவு பெற்ற வாசகர்களை மட்டுமே கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மோதி அவர்களைப் பிரதமராகக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்று 83 சதவிகிதம் பேர் கூறியிருக்கிறார்கள். பணமதிப்புக் குறைப்பு மக்களுக்குச் சிரமத்தைக் கொடுத்ததாகப் பலர் கருதினாலும், வலுவான இந்தியா, ஏழைகளுக்குப் பயன்தரும் திட்டங்கள் என்கிற கோணங்களில் அவர்கள் மோதி அரசு சாதித்திருப்பதாகக் கருதுகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. பெரிதும் கிளை பரப்பவில்லை என்றாலும், ஆளும் அ.இ.அ.தி.மு.க.வுடன் இணைந்தது அதற்கு பலத்தைக் கொடுத்துள்ளது. கிராமத்து மக்களுக்கும் மோதி என்னும் பிரதமரைப்பற்றிய ஓரளவு செய்தி எட்டியுள்ளது. கூட்டிக்கழித்துப் பார்த்தால், அடுத்த மாதத் தென்றல் இதழ் வரும்போது மீண்டும் நரேந்திர தாமோதரதாஸ் மோதியின் தலைமையில் நடுவண் அரசு அமைந்திருக்கும் என்பதாகத் தோன்றுகிறது. பாரதத்துக்கு நல்லது நடக்கட்டும்.
***** |
|
முடிசூடா இளவரசியாகக் கனவு சாம்ராஜ்யத்தில் உலவுகின்ற 18 வயதில், தண்டுவடம் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழே செயலிழந்தார் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன். அப்போதே அவர் சராசரிப் பெண்ணல்ல. 18 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான தமிழகக் கிரிக்கெட் அணியின் கேப்டனாகத் தேசிய அளவில் மாநிலத்துக்கு வெற்றிபெற்றுத் தந்திருந்தார். நீச்சல் வீராங்கனை. விபத்துக்குப் பின்னும் அவர் சராசரிப் பெண்ணாக இருக்கச் சம்மதிக்காத நெஞ்சுரத்தை அவரது நேர்காணல் நமக்கு விவரிக்கிறது. 'அழகற்ற பறவை?' மற்றொரு பார்வைக் கோணத்தை நம்முன் வைக்கிறது. தென்றலுக்கே உரிய நெஞ்சைத்தொடும் சிறுகதைகளும் உங்களை வசீகரிக்கும்.
வாசகர்களுக்கு தமிழ் வருடப் பிறப்பு, ராமநவமி மற்றும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
தென்றல் குழு
ஏப்ரல் 2019 |
|
|
|
|
|
|
|