|
தென்றல் பேசுகிறது.... |
|
- |ஜூன் 2016||(1 Comment) |
|
|
|
|
நேரடியாகவே சொல்லிவிடுவோம். டொனால்ட் ட்ரம்பின் அசுரவளர்ச்சி அச்சம் தருவதாக இருக்கிறது. சராசரி அமெரிக்கனை ஈர்க்கிற விஷயங்களை, சராசரி அமெரிக்கனுக்குப் புரிகிற மொழியில் சொல்கிற ஒரே காரணத்தால் பிரைமரிகளில் ட்ரம்ப் அதிகாரபூர்வ வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். ஆனால் வெள்ளைமாளிகையில் இருந்துகொண்டு உலகின் மிகக்கலவையான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மக்களாட்சி அரசை நடத்துவதும், வசீகரமாக மேடையில் பேசுவதும் ஒன்றாகிவிடாது. இதுபோல ஜனரஞ்சகமாகப் பேசிய ஜார்ஜ் புஷ் போன்றவர்களின் தலைமையில் அமெரிக்கா அடைந்த நிலைமையையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டு பதவிக்காலம் நெடுகப் பல மாற்றங்களைக் கொண்டுவந்து நன்மை பல செய்துள்ள அதிபர் ஒபாமா போன்றவர்களை "என்னால் அடிக்கமுடியும்" என்பதுபோன்ற தெருச்சண்டை மொழியில் பேசும் ட்ரம்ப்பின் அரசியல் நாகரீகம் கேள்விக்குரியது. அத்துடன், முக்கியமாக ட்ரம்ப்புக்கு ஒரு சிறிய நகராட்சி அரசியலில்கூடத் தலைமையேற்ற அனுபவம் இல்லையென்பதை மறந்துவிடக்கூடாது. "ஒரு விமானத்தில் ஏறும்போது, அதன் பைலட்டுக்குப் பிளேன் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் பொதுவாழ்வில் நாம் 'முன்னரே அதைச் செய்தவர் வேண்டாம்' என்று நினைக்கிறோம்" என்று ஒபாமா கூறுவது மிகப் பொருள்பொதிந்தது. யோசிக்க வேண்டியது. உணர்ச்சி வசப்பட்டோ, சொல்வித்தையில் மயங்கியோ ஆட்சியைக் கொடுத்தால் அதன் விளைவுகள் நாட்டுக்கும் நமக்கும் நல்லதாக முடியாது.
கலிஃபோர்னிய அட்டர்னி ஜெனரல் திருமதி. கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட்டுக்கான பிரைமரியை ஜூன் 7ம் தேதி சந்திக்கிறார். அமெரிக்க காங்கிரஸுக்கு வேட்பாளராகும் வாய்ப்புக்காக ரோ கன்னா (ஜூன் 7) மற்றும் பிரமீளா ஜெயபால் (ஆகஸ்ட் 2) பிரைமரிகளை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அமெரிக்க அரசியல் வாழ்வில் உயர்ந்த நிலையில் தடம் பதிக்கப்போகும் இந்தியர்கள் என்ற வகையில் நாம் இவர்களை ஆதரிப்பது அவசியமாகிறது. இதை மறந்துவிடக்கூடாது.
*****
விளிம்புநிலை மாந்தர் என்பவர் எங்கோ கண்காணாமல் இருப்பவர்கள் அல்லர். கண்முன்னேயே இருந்தும்கூட நம்மால் கவனிக்கப்படாமல் இருப்பவர்கள். அத்தகையைதொரு முக்கியமான சமூகம், நாடோடிகளாகப் பிழைக்கும் நரிக்குறவர் சமூகமாகும். இவர்களை இப்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது இந்திய நடுவண் அரசு. அங்குமிங்குமாக ஒருவர் பொறியியல் பட்டம் பெறுவது, அரசுப்பணியில் சேர்வது என்று நடந்திருந்தாலும், நரிக்குறவர்களில் பெருவாரியானவர்கள் ஊசி, பாசி, மணி விற்று அன்றாடங்காய்ச்சி வாழ்க்கை வாழ்பவர்கள்தாம். பட்டியலில் சேர்த்ததோடு நில்லாமல், இவர்களுக்கென நல வாரியங்கள் அமைத்து, இவர்களது மேம்பாட்டைக் கண்காணிப்பது மிக அவசியம். திருநங்கை/திருநங்கையருக்கு வாழ்வாதாரத்துக்கான மசோதாவை நிறைவேற்றிய இந்திய அரசு நரிக்குறவர்கள் மீதும் தனது கவனத்தைத் திருப்பியிருப்பது முக்கியமானதும், வரவேற்கத் தக்கதுமான விஷயம்.
***** |
|
நமது வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்த முக்கியமானதும், நீடித்திருப்பதுமான ஆவணம் கோவில் கல்வெட்டுக்கள்தாம். அவற்றை நுணுகி ஆராய்ந்து, முன்னறியப்படாத பல அரிய தகவல்களைச் சேகரித்து உலகறியச் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறவர்களில் முனை. குடவாயில் பாலசுப்பிரமணியன் முக்கியமானவர். இவரது ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், ஏமாற்றங்கள், சாதனைகள் என்று பலவற்றைக் குறித்து நம்மோடு இந்த இதழில் மனந்திறந்து பேசியுள்ளார். தவிர, தமது நுட்பமான மதித் திறத்தால் கல்வி மற்றும் கலை ஆகிய களங்களில் சிறப்புகளைப் பெற்றுள்ள பிரணவ் கல்யாண், பவித்ரா நாகராஜன் பற்றிய செய்திகள் நெஞ்சை விம்மிதமடையச் செய்பவை. விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த 'ஆத்ம சாந்தி' இந்த இதழில் நிறைவடைகிறது. வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துக்களையும் எமக்கு எழுதுங்கள்.
தந்தையர் தின வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
ஜூன் 2016 |
|
|
|
|
|
|
|