|
தென்றல் பேசுகிறது.... |
|
- |நவம்பர் 2012||(1 Comment) |
|
|
|
|
|
அறிவிலே கூர்மை, பார்வையில் தெளிவு, செயலில் தேர்ச்சியும் நேர்த்தியும் என்று அமெரிக்கத் தமிழன் இந்த மண்ணில் வேர்பிடித்துத் தனிப்பட்ட அடையாளத்தோடு, அதே நேரத்தில் பொதுநீரோட்டத்தின் வேகத்தோடு ஐக்கியமாகிக் கொண்டிருக்கிற கால கட்டம் இது. இந்தப் புதிய இனத்தின் தேவைகளுக்கும், ஒருங்கிணைப்புக்கும், கருத்துப் பரிமாற்றத்துக்கும் மேடையாகவும், அவனது சாதனை வரலாற்றின் பொன்னேடாகவும், கற்பனையூற்றுக்குக் களமாகவும் தோன்றியது 'தென்றல்'. இந்த இதழோடு பன்னிரண்டு ஆண்டுகளை நிறைவு செய்வதில் இதன் குழுவினர் மட்டுமல்லாமல், எப்போது தென்றல் வரும் என்று ஆர்வத்தோடு காத்திருந்து வாசிக்கும் வாசகப் பெருமக்களும் நிச்சயம் பெருமிதமும் நிறைவும் அடைவார்கள். அமெரிக்காவின் 30 மாகாணங்களைச் சென்றடைகிறது தென்றல். பிரதிகளின் எண்ணிக்கையும் முன்னெப்போதுமில்லாத உயரத்தை அடைந்துள்ளது. தமிழகத்திலும் உலகின் பல நாடுகளிலும் இன்று தென்றல் இணைய இதழ் ஆர்வத்தோடு வாசிக்கப்படுகிறது.
இதைச் சாத்தியமாக்கியதில் விளம்பரதாரர்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இல்லையென்றால் இத்தகைய தரமான இதழ் மாதம் தவறாமல் வாசகர் கைகளை இலவசமாகச் சென்றடைய முடியாது. அதேபோல கதை மற்றும் கட்டுரை எழுத்தாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் என்று பல்வேறு படைப்பாளிகளின் கைவண்ணத்தில் தன்னிகரற்று மிளிர்கிறது தென்றல். 'நன்றி' என்ற ஒரே எளிய ஆனால் கனமான சொல்லை மட்டுமே இவர்களுக்கு நாங்கள் காணிக்கையாக்குகிறோம். இரண்டு உலகங்களை ஒரே அடியால் அளக்கும் வாமன அவதாரத்தின் சாதனை போன்றது தென்றலின் சாதனை. இந்த நீண்ட நெடிய பயணத்தில் நாம் ஒருங்கிணைந்து சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய உள்ளன.
*****
"கடவுள் மனிதனிடம் வைத்த நம்பிக்கையை இழந்துவிடவில்லை என்ற செய்தியை பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கொண்டு வருகிறது" என்று கூறினார் ரவீந்திரநாத தாகூர். அண்மையில் படித்த சில சம்பவங்கள் அவரது கூற்றை உறுதிப்படுத்துகின்றன. முதல் சம்பவத்தில் ஒரு சிறுவன், பத்தாம் வகுப்பில் படிப்பவன். ஒரு கல்யாண மண்டபத்தில் நுழைந்து ஒரு லட்ச ரூபாய் பணமிருந்த சூட்கேஸ் மற்றும் செல்ஃபோன்களை எடுத்துக்கொண்டு வெளியேறினான். அன்றிரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. மறுநாள் கல்யாண வேளையில் மீண்டும் அவற்றை எடுத்துக்கொண்டு உள்ளேன் போனான். பதற்றத்தில் இருந்த உரிமையாளர் ஓடிவந்து தனது பொருட்களைப் பிடுங்கிக்கொண்டார். போலீஸ் வந்தது. சிறுவன் கூறினான், "வறுமையினால்தான் திருடினேன். ஆனால் என் மனச்சாட்சி கேட்கவில்லை. திருப்பிக் கொடுக்க வந்தேன்" என்று. பொருளைக் களவு கொடுத்தவரின் மனம் களவு போனது. போலீஸிடம் முதல்நாள் கொடுத்திருந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டார். இது நடந்தது சென்னையில். அடுத்து சொல்லப்போகும் சம்பவம் நடந்தது கோவையில். தனது பத்து வயதுப் பெண்ணையும், 7 வயது மகனையும் கடத்திச் சென்று, பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதோடு இருவரையும் கொன்ற ஒருவருக்கு விசாரணை நீதிமன்றம் தந்துள்ள மரணதண்டனைக்கு மகிழ்ச்சியடையவில்லை என்கிறார் அந்தத் தந்தை. "கொலையைக் கொலையால் சரிசெய்ய முடியாது. இறந்த என் குழந்தைகள் திரும்பி வரப் போவதில்லை" என்பது சமணரான அவரது கருத்து. இப்படியும் அறவோர் இருக்கிறார்கள் என்பதே தாகூரின் வாக்குப் பொய்க்கவில்லை என்பதற்குச் சான்று.
***** |
|
அமெரிக்கத் தேர்தல் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டது. இரண்டு அணிகளும் தத்தமது கணக்கீடுகளில் தமக்கே வெற்றி என்று கூறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. முன்பு நடந்ததை மறப்பவர்கள் வருங்காலத்தில் அதே தவறால் வருந்துவதைத் தவிர்க்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. தேர்தலில் வாக்களிக்க மறக்காதீர்கள், அது நமது கடமை. உங்களை மீண்டும் சந்திக்கும்போது ஒபாமா மீண்டும் வெள்ளை மாளிகையிலும், அனு நடராஜன் அமெரிக்க நகரமொன்றின் முதல் தமிழ்-அமெரிக்க மேயராகவும் இருப்பர் என்று நம்புகிறோம்.
*****
தான் அடைய விரும்பும் இலக்கை மறக்காமல் உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் அதனை அடையத் தவறாமாட்டார்கள் என்று நம்புவதோடு, அதற்குத் தாமே ஒரு உதாரணமாகவும் இருக்கும் ராதா சுப்ரமணியம் (கிளியர் சேனல் என்டர்டெய்ன்மென்ட்) அவர்களோடான நேர்காணல் இந்த இதழின் மகுடம். எழும்பூர் ரயில்நிலையத்தில் நள்ளிரவில் போலீஸ்காரர் கொடுத்த அடிக்கு அஞ்சி ஓடி, இன்று வணிகம், கலை, பொதுச்சேவை என்று பலவற்றிலும் சாதனை படைத்திருக்கும் கலைமாமணி வீ.கே.டி. பாலன் அவர்களோடான மற்றொரு நேர்காணல் ஒரு நாவலைவிடச் சுவையானது. இளம் திரையிசைக் கலைஞர் ஹரீஷ் ராகவேந்த்ராவின் மினிநேர்காணல், சிறுகதைகள், வித்தியாசமானதொரு நூல் அறிமுகம், குறுக்கெழுத்துப் புதிர் என்று மீண்டும் ஒரு சூடான, சுவையான இதழ் உங்களை எட்டுகிறது, தீபாவளிக்குச் சுறுசுறுப்பூட்ட!
வாசகர்களுக்கு தீபாவளி, நன்றி நவிலல் நாள் வாழ்த்துக்கள்.
நவம்பர் 2012 |
|
|
|
|
|
|
|