|
தென்றல் பேசுகிறது.... |
|
- |ஏப்ரல் 2012| |
|
|
|
|
|
கடந்த ஓராண்டுக் காலத்தில் சிரியாவில் உள்நாட்டுக் கலவரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 9,100 பேர் என்கிறது ஒரு கணக்கு. மார்ச் 27 அன்று மட்டும் தலைநகர் டமாஸ்கஸில் நடந்த சண்டையில் இறந்தோர் 30 பேர், அதில் சாதாரணக் குடிமக்கள் 28 பேர். அதிபர் பாஷர் அல் அஸாதுக்குக் கெடு விதிக்கலாம் என்ற ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை ரஷ்யா ஆதரிக்காத காரணத்தால் தீர்மானம் திருத்தி எழுதப்படுகிறது. ஐ.நா. பொதுச்செயலர் பான் கி-மூன் சிரியாவில் பேச்சுவார்த்தைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளின் மூலமே பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
*****
உலக மக்கள் தொகையில் பாதியைத் தம்மில் கொண்டிருப்பதும், உலகின் மொத்த உற்பத்தியில் அதிகப் பங்கைத் தொடர்ந்து அளித்து வருவதுமான BRICS (பிரசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) நாடுகளின் கூட்டம் இந்தியத் தலைநகர் டெல்லியில் மார்ச்சு மாத இறுதியில் கூடின. அவையும் சிரியப் பிரச்சனைக்குப் பேச்சு வார்த்தையும் மனிதாபிமான உதவியுமே தீர்வு என்பதை உறுதி செய்துள்ளன. இந்த நாடுகள் தமக்கென்று ஒரு இணைந்த வளர்ச்சித்திட்ட வங்கி தொடங்குவதற்கான ஆலோசனைக் குழு அமைக்கவும் ஒப்பியுள்ளன. விரைந்து வளர்ச்சியடையும் பிரிக்ஸ் நாடுகளுக்கு உலகளாவிய விஷயங்களில் பேசுவதற்கான முன்னுரிமையை வளர்ந்த நாடுகள் தரவேண்டும் என்றும், தற்போதிருக்கும் நிலை மாறித் தமது செல்வாக்கு உலக அளவில் உயர வேண்டும் என்றும் இந்நாடுகளின் தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர். தமது நாடுகளுக்கிடையே தத்தமது செலாவணியிலே வணிகம் நடைபெறுவதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்துள்ளன. உலக வங்கி, IMF ஆகியவற்றில் வளரும் நாடுகளின் பிரஜைகள் தலைவர்களாவதற்கான வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதும் இவர்களின் எதிர்பார்ப்பில் அடங்கும். தற்போது மிகவும் வலுத்து வரும் கவலைகளில் ஒன்று இரானிய அணுவுலைகளை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்பதே. இதைத் தவிர்க்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் BRICS உச்ச மாநாடு பிரகடனம் செய்துள்ளது.
***** |
|
சென்னையில் ஒரு நாளைக்கு மின்வெட்டு 2 மணிநேரம். அது ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நான்கு மணி நேரமாகப் போகிறதே என்று சென்னை வாசிகள் கவலைப்படுகிறார்கள். அதுவே திண்டுக்கல்லில் 8 மணி நேரம், மேட்டுப்பாளையத்தில் 13 மணி நேரம் தினந்தோறும் மின்வெட்டு உள்ளது. சிறு தொழிற்சாலைகள் வைத்திருந்த பலர் அவற்றை இழுத்து மூட வேண்டிய கட்டாயம். வரும்நாட்களில் உற்பத்திக் குறைவும், பணி இழப்பும் தமிழ் நாட்டில் மிகப் பெரிய அளவில் ஏற்படப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கிவிட்டன. போதாக்குறைக்கு கோடையின் கொடூரம் வேறு! அதே வெய்யில் ஏராளமான மின் ஆற்றலைத் தரமுடியும், தமிழகத்தின் நீண்ட கடற்கரையில் அலைகளின் வேகம் மின்சக்தியாக மாற முடியும் என்று பலவாறாகப் படித்தமனம் அங்கலாய்க்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கும் சாத்தியம் தென்பட்டிருக்கிறது. 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற புலம்பல் மாறி, தமிழகத்தில் எங்கு சென்றாலும் வட நாட்டவர் வந்து பணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மின்சக்தி உற்பத்தி பெருகாவிட்டால் மீண்டும் இந்த நிலை தலைகீழாகி, தமிழகம் பலவகைகளிலும் பின்தங்கிவிட நேரும். அதைத் தவிர்க்க உதவுவது எல்லோரின் ஒருங்கிணைந்த கடமை. இதில் குறுகிய அரசியல் கூடாது.
*****
நல்ல தமிழிலக்கியப் பயிற்சி, தெளிவான சிந்தனை, தேர்ந்த சொல்லாற்றல் கொண்ட பேச்சாளர் டாக்டர் பர்வீன் சுல்தானா. தமிழ் நாடு அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் பேசுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு வரப் போகிறார். அவரது நேர்காணலை இந்த இதழில் படித்துச் சுவைக்கலாம். வரலாற்றைக் கூர்ந்து நோக்கி அதைச் சுவைபடப் புதினமாக்கும் விசாகப்பட்டினத்தின் திவாகர் 'எழுத்தாளர்' பகுதியை அலங்கரிக்கிறார். இந்த ஆண்டு சென்னைப் புத்தகச் சந்தையில் அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்று அவரது 'எஸ்.எம்.எஸ். எம்டன் 22-09-1914'. குறுநாவல் தொடர் 'சில மாற்றங்கள்' மேலும் விறுவிறுப்பாகத் தொடர்கிறது! அமெரிக்கத் தமிழ்ப் பள்ளியில் பயிலும் சிறாரைப் பற்றிய அழகான கவிதை ஒன்றும் உண்டு. படித்துப் பாருங்கள்.
வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு, மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி வாழ்த்துக்கள்.
ஏப்ரல் 2012 |
|
|
|
|
|
|
|