|
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
|
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ. பிச்சை|செப்டம்பர் 2007| |
|
|
|
ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனைக் கற்றுக் கொண்டு, ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் தமது அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை ஆன்லைனில் எழுதி வருகிறார். அதிலிருந்து சில பகுதிகளைத் தென்றல் தருகிறது...
******
கிரண்பேடி. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரி. 1972-ல் அகாடமி பயிற்சியில் சேர்ந்தவர். அந்த ஆண்டு இந்திய காவல்துறை பணிக்கு மூன்று பெண்கள் தேர்வு பெற்றோம். நான், கிரண் மற்றும் ஒரு பெண். நான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் கலந்து கொண்டேன். ஆனால் ஐ.பி.எஸ். பணியை மூன்றவதாகத்தான் கேட்டிருந்தேன். மற்றொரு பெண் மத்திய அரசுப் பணியில் சேர்ந்து கொண்டார். ஆனால் கிரண் காவல்துறைப் பணியில்தான் சேர வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அதிகாரிகள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பும் இருந்தது. இதற்குமுன் இந்தப் பணிக்குத் தேர்வு பெற்ற பெண்கள், அதிகாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக மத்திய அரசுப் பணியை ஏற்றுக் கொள்ளும் படி ஆயிற்று. இந்தத் தடவையும் அப்படியே செய்யலாம் என அதிகாரிகள் நம்பிக்கை யுடனிருந்தனர். ஆனால் அது நடைபெற வில்லை.
தனது குறிக்கோளுக்காக அகாடமியின் பெண்கள் பகுதியில், கிரண் சத்தியா கிரகத்தைத் தொடங்கினார். அகாடமி யிலுள்ள ஆண்களைவிட கிரண் பலசாலி. உடல் ஆரோக்கியத்திலும் சிறந்தவர். ஆசிய டென்னிஸ் விளையாட்டில் வெற்றி பெற்று வீராங்கனை பரிசு பெற்றவர். இதுவரை இதில் வெற்றி கண்ட ஒரே இந்தியப் பெண்மணியும் கூட. மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் (சுமார் 26 மைல்) ஓடி இருக்கிறார். சிறப்பாக மலை ஏறிப் பழகியவர். ஆழ்ந்த கருத்துள்ளவர். சுலபத்தில் யாரிடமும் பழகாதவர், காரியத்தில் கண்ணாக இருப்பவர். வெட்டிப் பேச்சுகளில் ஈடு படமாட்டார். அவரது டென்னிஸ் சகாவான 'பிர்ஜி'யுடன் காதல் பூண்டிருந்தார். இமாலய மலையேறும் கழகத்தில் நாங்கள் இருவரும் இணைந்து உத்தரகாசியில் ஒரு மாதகாலம் பயிற்சி பெற்றபோதுதான், கிரண் பேடியை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. எங்களது கனவுகளை, ஆசைகளைப் பற்றி நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம்.
அவர் காவல்துறைப் பணியில் சேராமல் இருக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்தனர். மத்திய அரசில் அவர் விரும்பும் பணியைத் தருவதாகவும் கூறினர். ஆனால் கிரண் இதற்கெல்லாம் ஒத்துக் கொள்ள வில்லை. காவல்துறை அகாடமிப் பயிற்சியில் குதிரைச்சவாரி மற்றும் தேகப்பயிற்சிகள் மிகவும் கடினமானதாக இருக்குமென்றும் அதிகாரிகள் அச்சுறுத்திப் பார்த்தார்கள். (பல குதிரைச் சவாரிப் பந்தயங்களில் ஆண்களைத் தோற்கடித்து முதலாவதாக வந்தவர் கிரண்) மவுண்ட் ஆபுவில் உள்ள காவல்துறை அகாடமியில் பெண்களுக்கென்று தனியாகத் தங்கும் விடுதி இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர். அங்கு சுதா, கிரண், நான் மூவரும் ஆண்கள் விடுதியில் தங்கி இருந்தோம். இவ்வாறு அற்பச் செய்திகளை எல்லாம் பெரிதுபடுத்திப் பேசி வந்தனர்.
பின்னர், பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த போது அவரிடம் இதைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னோம். இதற்கான பெருமை அகாடமி இயக்குநர் சாத்தே அவர்களுக்கே சேர வேண்டும். அவர்தான் எங்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்து எங்களுக்காக வாதாடினார். இத்தனைக்குப் பிறகும் தொடர்ந்த எதிர்ப்புகள் யாவும் கிரணுக்குச் சாதகமாக இந்திராகாந்தியினால் நிராகரிக்கப்பட்டன. கிரண், இந்தியக் காவல்துறையின் முதல் பெண் அதிகாரியாக நியமனம் செய்யப் பட்டார்.
ஆயினும் கிரணுக்கு இது போராட்டத்தின் ஆரம்பம்தான். அவர் யூனியன் பிரதேசங்களான கோவாவுக்கும் டில்லிக்குமாக மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவருடைய கணவர் தொழில் செய்யும் பஞ்சாபுக்கு ஒருபோதும் மாற்றல் கிடைக்கவில்லை. எப்போதும் கணவரைப் பிரிந்தே அவர் வாழ வேண்டி இருந்தது. இதைத் தவிர்க்க முடிந்திருக்கும் என்றாலும், அவரது பொறுமையைச் சோதிக்கவே அனைவரும் இப்படிக் கடுமையாக நடந்துகொண்டார்கள் என்று எனக்குத் தோன்றியது. கடமைக்கும், பதவிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தன் சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்தார் கிரண். அதன்பின் அவருக்குக் கிடைத்த வெற்றிவாகைகளும் விருதுகளும் எல்லோரும் நன்கு அறிந்த வையே! தன் குடும்பவாழ்க்கையையும், சுதந்திரத்தையும் தியாகம் செய்து, இந்தியக் காவல்துறையில் பெண்களுக்கான ஒரு சிறப்பான இடத்தைப் படைத்தளித்தார் கிரண். இவர் 1972-ல் இந்திய காவல்துறைப் பணியில் சேர்ந்த பிறகு தான், தமிழ்நாட்டின் முதல் காவல்துறை பெண் அதிகாரியாக லத்திகா சரண் 1973-ல் பதவி ஏற்றார். நான் கடைசியாகக் கிரணைப் பார்த்துப் பல வருஷங்கள் ஆகிவிட்ட போதிலும், அவரது பிம்பம் என் இதயத்தில் அப்படியே பதிந்திருக்கிறது.
******
எனது ஏழு அல்லது எட்டாவது வயது முதலே தமிழ்நாட்டின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்படத் துவங்கியது. முதன்முதலாக பரதநாட்டிய நிகழ்ச்சியை டில்லியில் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனேன். எனது ஆவலைக்கண்ட நாட்டியப் பெண்மணி, தனது நாட்டிய வகுப்புக்கு வருமாறு என்னை அழைத்தார். எனது தாயார் இஸ்லாமிய தாக்கத்திற்கு உள்ளான காஷ்மீர குடும்பத்தைச் சேர்ந்தவர். இசையும் நாட்டியமும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை என்ற கருத்துடையவர். அவர்கள் பிறந்து வளர்ந்த சமூகம், நாட்டியப் பெண்கள் கீழ்மக்கள் என்ற கருத்தைக் கொண்டது. அதனால் எனது கோரிக்கை அவரது செவிகளில் ஏறவில்லை. பரதநாட்டியம் கற்றுக் கொள்ள அவர் அனுமதிக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. என்றாலும் பிற்காலத்தில் எனது மகள், டாக்டர் பத்மா சுப்ரமண்யத்திடம் முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்ததில் எனது நீண்டகால ஆவல் நிறைவேறியது. நான் இருபது வயதுக்கு உட்பட்டவளாக அப்போது இருந்ததால் நடனப்பெண்கள் போல கண்களுக்கு மை எழுதியும், கூந்தலில் மலர்சூடியும், குஞ்சலம் வைத்துச் சடை பின்னியும் மகிழ்வேன். கன்னியாகுமரி யிலிருந்து ராமேஸ்வரம் வரை மரச் சிற்பங்கள், செப்புச் சிலைகள், சந்தன குளியல் சோப், மஞ்சள் தூள், காஞ்சிபுரம் பட்டுப்புடவை, கோவில் திரு ஆபரணங்கள் எனத் தென்னிந்தியாவின் அனைத்து பண்பு களையும் நான் பெரிதும் விரும்பி நேசித்தேன்.
நான் ஒரு தென்னிந்தியரை மணம் புரிந்து கொள்வேன் என்று ஒருபோதும் நினைத்த தில்லை. ஆயினும் சென்னையிலிருந்து வந்திருந்த அந்த மனிதர், என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த போது நேரம் கடத்தாமல் 'சரி' என்று சொன்னேன். என்னுடைய பெற்றோர்கள் என் முடிவு குறித்து ஆச்சரியப்படவில்லை. இந்தியாவில், குறிப்பாக வெவ்வேறு மாநிலத்தவர் களுக்கிடையில், கலப்பு மணம் அக்காலத்தில் மிகவும் அபூர்வம். இருந்தும் என் பெற்றோர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் எங்கள் திருமணத்திறக்குச் சம்மதம் அளித்தனர். அதற்குள் இந்திய ஆட்சிப் பணிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டேன். நான் சென்னைக்கு அனுப்பப்படுவேன் என்று சிறிது கூட எனக்கு நம்பிக்கை இல்லை. நானும் என் கணவராக நிச்சயிக்கப்பட்டவரும் சென்னையில் எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விருப்பம் கொண்டிருந்தோம். நான் எந்த அளவுக்குத் தமிழ்நாட்டை நேசிக்கிறேன் என்பதையும், அங்கு குடும்பம் அமைத்துக் கொள்ள விரும்புவதையும், நான் மணம் செய்து கொள்ள இருந்த மருத்துவரான என் கணவர், தான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே தன் சேவையை அர்ப்பணித்துக் கொள்ள விரும்புவதையும், அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் தெரிவித்தேன். அதிகார வர்க்கம் முழுவதும் எனக்கு எதிராக இருந்தபோதிலும், இந்திராகாந்தி தமிழ்நாட்டுக்கே என்னை ஒதுக்கி உத்தரவிட்டார். அதுபற்றி தேசிய அகாடமிக்குச் செய்தி வந்த போது, நான் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன்.
தமிழக அதிகாரிகளிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. தமிழ்க்கலை, கலாசாரம், மொழி ஆகியவற்றை எனக்கு போதிக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே எனது ஆசிரியர்களாக நியமித்துக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதன்மையானவர் எங்கள் குழுவில் ஒருவரான காவல்துறை அதிகாரி ஆறுமுகம். உன்னதமான தமிழ்ப் பண்பாட்டில் எனக்குப் பயிற்சியளிக்க அவர் எதையும் விட்டு வைக்கவில்லை. ஓய்வுகிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வணக்கம் என்று ஆரம்பித்து எனக்கு மொழிப் பயிற்சி அளித்தார். ஒவ்வொரு வேளை உணவு அருந்தும் போதும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி தனியாகப் பாடம் நடத்தினார். கண்ணகி, கோவலன், ஒளவையார் ஆகியோர் பற்றிய கதைகளைச் சொல்லி எனது தமிழ் அறிவைச் செம்மைப்படுத்தினார். தேசிய காவல்துறை அகாடமிக்கு நான் புறப்பட்டபோது, அன்பளிப்பாக ஒரு திருக்குறள் நூலைக் கொடுத்து, திருக்குறளில் இந்தப் பன்னிரண்டு குறள்களை மனப்பாடம் செய்யாமல் தமிழ்நாட்டில் நுழையக்கூடாதென்று கூறி, அவற்றைச் சிகப்பு மையினா¡ல் குறித்திருந்தார்.
ரவியினால்தான், தமிழ்க் கலாசாரத்தையும், தமிழர்களின் தயாள குணத்தையும், விருந்தோம்பலையும் என்னால் பாராட்ட முடிந்தது. தமிழகத்தின் பெருமையை விளக்கும் நான் இரண்டு பிரசுரங்கள் தயாரித்தேன். அதில் ஒன்று 'தமிழ்நாட்டின் மேன்மை'. இதை மார்கோ நிறுவனம் வெளியிட்டது. மற்றொன்று 'தமிழ்நாடு இந்தியாவின் மேன்மைமிக்க தோற்றம்' இதை தமிழகச் சுற்றுலாத் துறை வெளியிட்டது. தமிழ்நாட்டைப் பற்றியும், அங்கு நடைபெறும் திருவிழாக்கள், பொருட்காட்சிகள், விளையாட்டுகள் பற்றியும் பதினைந்துக்கு மேற்பட்ட திரைப்படங்கள் தயாரித்தேன். சிதம்பரத்திலும் மாமல்லபுரத்திலும் நடந்து வந்த பரதநாட்டியவிழாவை மேலும் சிறப்பாக விரிவுபடுத்த உதவி செய்தேன். இன்னும் செய்யவேண்டியது நிறைய உள்ளது. நான் விட்ட இடத்திலிருந்து வேறு யாராவது தொடர்ந்து செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
****** |
|
ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பள்ளியாக தேசிய அகாடமி நெடுங்காலமாக இயங்கி வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு சிறிது காலம் ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. 1978 வரை கட்டுரை, பொது அறிவு, சுருக்கி எழுதுதல் என்று மூன்று தலைப்புகளில் ஆங்கிலத்தில் எழுதுவது கட்டாயமாக இருந்தது. மற்ற ஐந்து தலைப்புகளும்கூட ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத வேண்டும். இது போதிய அளவு ஆங்கிலப் பயிற்சி இல்லாத மாணவர்களுக்குப் பாதகமாக இருந்தது. எப்படியோ தேர்வில் வெற்றி பெற்றாலும், நேர்காணல் பெரும் சவாலாகவே இருந்தது. கோத்தாரி கமிஷன் அறிக்கை எண்பதுகளின் ஆரம்பத்தில் அமலுக்கு வந்த பிறகுதான் பிராந்திய மொழிகள் அனுமதிக்கப்பட்டு ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறைந்தது.
1972-ல் நாங்கள் அகாடமிக்குச் சென்றபோது எங்களில் பலருக்கும் இந்தியிலும் பிராந்திய மொழியிலும் நல்ல தேர்ச்சி இருந்தது. ஆயினும் அகாடமி ஆங்கிலக் கல்வியின் அரணாகவே இருந்தது. எனது குழுவில் ஒருவரும், தேர்தல் கமிஷனின் இணைக் கமிஷனருமான சுபாஷ் பாணி (ஒரு காலத்தில் டி.என். சேஷனின் வலதுகரமாக விளங்கியவர்) அகாடமியின் கலாசாரத்தை மாற்றி அமைக்க முனைந்து செயல்பட்டுக் கொண்டிந்தார். அவர் மதிநுட்பம் மிக்க இளைஞர். ஒரிசாவிலிருந்து வந்தவர். அகில இந்தியப் போட்டித் தேர்வில் மூன்றாவதாக வந்தவர். அவர் சிறந்த இசை ஞானம் உள்ளவர். கைதேர்ந்த நாட்டிய அமைப்பாளரும் நடிகரும் கூட. திடீரென ஒருநாள் அவர் அகாடமியில் ஓர் ஹிந்தி நாடகம் நடத்தப் போகிறோம் என்று அறிவித்தார். அகாடமியின் வரலாற்றில் ஹிந்தியில் நாடகம் நடைபெறும் என்று யாரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். இந்தியைத் துல்லியமாக உச்சரிக்கும் நடிகர்களைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை. அதனால் அவர் தானே நாடக இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டு, பாதல் சர்க்காரின் புகழ் பெற்ற 'பகி இதிஹாஸ்' என்ற நாடகத்தில் நடிக்க, குரல் சோதனைக்காக அனைவரும் வருமாறு அறிவித்திருந்தார். கடுமையான முயற்சிக்குப் பிறகு நசீம் அஹமத் என்பவரையும் (இவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்; தேவிலாலின் செயலராக இருந்தவர்) ஆர்.பி. சிங் என்பவரையும் (அயல்துறையைச் சேர்ந்தவர்) தேர்ந்தெடுத்தார். ஆனால் பெண் வேடத்துக்கு ஆள் கிடைப்பது பகீரத முயற்சியாக இருந்தது.
அவரது முதல் பார்வை என் மீது விழுந்தது. ஆனால் மூக்கால் பேசும் என் காஷ்மீர பாணிப் பேச்சின் காரணமாக நான் குரல் தேர்வில் தோல்வியடைந்தேன். இறுதியாக 'ஆத்மா' வேடத்துக்கு மஞ்சுளா வர்மா தேர்வு செய்யப்பட்டார். 'மனைவி' வேடத்துக்காக மீண்டும் எல்லாப் பெண்களுக்கும் ஒரு சுற்று குரல் சோதனை செய்து, அலுத்துப் போனார். மீண்டும் என்னிடமே வந்து, 'வேறு ஆள் இல்லை. நீங்கள் தான் அந்தப் பாத்திரத்தை ஏற்க வேண்டும்' என்றார். இப்படித்தான் தேசிய நிர்வாக அகாடமியில் முதன்முதலாக நடக்கும் ஆங்கிலம் அல்லாத நாடகத்தில் நான் நுழைந்தேன்.
பலரும் எங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி மாணவர்களுக்கு வங்காள இலக்கியம் தெரியாது. பாதல் சர்க்கார் எவ்வளவு சிறந்த இலக்கிய படைப்பாளி என்பதும் தெரியாது. மறுபக்கம், பாணி இந்த நாடகத்தை வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக்க விரும்பினார். பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பினார். நாடகத்தைத் தொடங்கி வைக்க பாதல் சர்க்காருக்கும் அழைப்பு விடுத்தார். அவர் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் வரமுடியவில்லை. மனம் நிறைந்த வாழ்த்துக்களை அனுப்பியிருந்தார். நாடகத்துக்கு அகாடமி இயக்குநர் சாத்தே ஐ.சி.எஸ். உட்பட எல்லோரும் வந்திருந்தனர். (சிலர் கிண்டலடிப்பதற்கு என்றே வந்திருந்தனர்). மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருந்த நாடகத்துக்கு எதிராக யாரும் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை. பாராட்டுகள் குவிந்தன. டெல்லியில் நாடகத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் நடத்திய நாடகங்களைவிட அகாடமியில் நடந்த இந்த நாடகம் மிகச் சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் எழுதினார்கள். முசோரி நகர மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் இரண்டு காட்சிகள் நடத்தப்பட்டன.
******
1973-ல் பயிற்சிக்காக நான் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தேன். அங்கு யாரையும் எனக்குத் தெரியாது. தமிழும் புரியாது. சில நாட்களை சுற்றுலா மாளிகையில் கழித்த பின், புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பில் எனக்கு வீடு ஒதுக்கப்பட்டது. முதல் மாடியில் ஒரே படுக்கையறை கொண்ட இடம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அதற்குத் தனியான நுழைவாயில். அங்கும் தனிமைதான். யாருடனாவது பேச நான் ஆசைப்பட்ட போதிலும் ஆண்கள் என்னுடன் பேசத் தயங்கினர். பெண்களுக்கு என்னுடன் பேசும் அளவுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கோ தமிழ் தெரியாது. ஒருநாள் இவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த போது வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்தால் அங்கு யாரும் இல்லை. ஆனால் சில குழந்தைகள் வேகமாகக் கீழே இறங்கிப் போவது தெரிந்தது. உடனே உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்த போது குழந்தைகள் அங்கிருந்து வேகமாக ஓடி விட்டார்கள். மூன்றாவது தடவை அவர்கள் கதவைத் தட்டும் போது, நான் கதவின் ஓரமாக நின்று கொண்டிருந்து திடீரென்று அவர்கள் முன் வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு விட்டேன். அவர்கள் குற்றால லிங்கம் என்பவரின் குழந்தைகள் என்று அறிந்து கொண்டேன்.
குற்றால லிங்கம் அடுத்த வீட்டில் வசிக்கும் கண்காணிப்புப் பொறியாளர். குழந்தைகள் இருவரும் பள்ளி அளவிலான ஆங்கிலம் அறிந்திருந்தனர். இதனால் சைகைகளாலும், தொட்டும் நாங்கள் அழகாக உரையாட முடிந்தது. நான் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தேன். அவர்கள் எனக்குத் தமிழ் கற்பித்தார்கள். கோவையில் அவர்கள்தான் எனது முதல் நண்பர்கள். அதுமட்டுமல்ல, உண்மையில் அவர்கள்தான் ஆரம்பப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களாகவும் இருந்தார்கள். உடல் உறுப்புகள், பூக்கள், பழங்கள், காய்கறிகள், பறவைகள், பிராணிகள் என எல்லாவற்றின் தமிழ்ப் பெயர்களையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தனர். அவர்கள் பள்ளி செல்வதற்கு முன் வணக்கம் தெரிவிக்க தினமும் என் வீட்டுக்கு வருவார்கள். மழலையர் பள்ளிப் பாடல்களைப் பாடி என்னுடன் விளையாடுவார்கள். மாடிப்படி கைப்பிடிச் சுவரிலிருந்து வழுக்கி இறங்கி மகிழ்வார்கள்.
அது நான் புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொண்ட ஆரம்ப காலம் என்பதால் எப்போதும் அவர்களைப் படம் எடுத்துக் கொண்டே இருப்பேன். அதில் இரண்டு படங்கள் காலத்தை வென்று நிலைத்து என் வசம் உள்ளது. நான் கோவையை விட்டு வந்தபிறகு அவர்களுடனான எனது தொடர்பு அறுந்துவிட்டது. யாராவது அவர்கள் இருக்கும் இடத்தை எனக்கு அறிவிக்க முடிந்தால் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன்.
(தொடரும்)
ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை |
|
|
|
|
|
|
|
|